நிர்மலா ராகவன்

தனிமை விரும்பிகள்

“ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால், ஆண்களுக்குப் பிடிக்காது”.

சில குடும்பங்களில் மூத்தவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், தம் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்கிறார்கள் பல பெண்கள்.

அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தாள் ரேணு.

`உன்னால் ஏன் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை?’

`பிறர் என்ன சொல்வார்கள் என்று யோசித்துத்தான் எதையும் செய்ய வேண்டும்’.

சிறு வயதிலிருந்தே பலவாறாகக் கண்டிக்கப்பட்டிருந்தாள்.

தவறு அவள்மேல் இல்லை. சராசரி மனிதர்களைவிட அவளுக்குப் புத்திசாலித்தனம் மிக அதிகம் என்பதுதான் உண்மை.

பிறர் ஏன் தன்னைப்பற்றி அப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து, தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வர் அவளைப் போன்ற சிலர்.

வேறு சிலரோ, நிறையக் கண்டனத்திற்கு ஆளாகித் தவிப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, என்றாவது தம்மைப்போன்ற ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால்தான் தெளிவு கிடைக்கும்.

மௌனம் ஏன்?

மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்களோ, இல்லையோ, `எனக்கு நிறையத் தெரியும்!’ என்று காட்டிக்கொள்வதைப்போல் பேசும் வழக்கம் ரேணுவைப்போன்ற அதிபுத்திசாலிகளுக்குக் கிடையாது. அதனால், நிறைய பேர் இருக்கும் இடத்தில் அதிகம் பேசமாட்டார்கள்.

எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தாலும், தனக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளியிடாது, பிறர் கேட்டால் மட்டும் பதிலளிப்பார்கள் இத்தகையவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் மௌனமாக, ஆனால் தம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம், கவனித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான போக்கு பிடிபடாது, `கர்வி,’ `முட்டாள்’ என்று பிறர் கருதக்கூடும்.

அது மட்டுமா!

இவர்களது கருத்துக்களைப் பலராலும் ஏற்க முடியாது. மனம் வெதும்பி, `நீ பிறர் மனத்தை நோகடிக்கிறாய்!’ என்று வீண்விவாதம் செய்வார்கள்.

அலுப்பு எழ, இப்படிப்பட்டவர்களுடன் பேசுவானேன் என்று தோன்றிப்போகும்.

`என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்களேன்!’ என்ற எண்ணம் எழ, இவர்கள் தனிமையை நாடுவதில் என்ன ஆச்சரியம்!

சுயமாகவே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவதால், பிறரது குறுக்கீடு இல்லாமல் விரைவில் ஒரு காரியத்தைச் செம்மையாகச் செய்து முடிப்பார்கள். தனிமையில் செயல்பட இதுவும் ஒரு காரணமாகிறது.

என்றும் எதிர்நீச்சல்தான்

பலரும் ஒரு திசையில் போக, தாம் மட்டும் எதிர்த்திசையில் பயணிக்கும் துணிச்சல் இருப்பதாலேயே இவர்கள் தனித்து நிற்கிறார்கள். யோசித்து, நிதானமாகப் பேசுவது இவர்களது குணம்.

இவ்வளவெல்லாம் இருந்தும், தன்னால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று (அனுமனைப்போல்) தெரிவதில்லை. ஊக்குவிக்க ஓரிரு உறவினரோ, நண்பர்களோ அவசியமாகிறது.

முதலில் இவர்களைப் பழித்தவர்கள் இவர்கள் முன்னேறியதும் புகழ்வார்கள். இது புரிந்து, புகழ், இகழ் இரண்டும் தம்மை வெகுவாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

எதற்கு அநாவசியமான பயம்?

தமக்குத் தெரியாததை `தெரியும்’ என்று சொல்லாமல், அவற்றைப் பிறரிடமிருந்து கற்பது புத்திசாலித்தனத்துக்குச் சான்று.

பிறர் மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இல்லாவிட்டால் பலவற்றைக் கற்க முடியுமே!

`எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புரிந்து வைத்திருப்பார்கள். ஆகையால், புதிய இடங்களுக்குப் போகையில், பலவற்றையும் அறியும் ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பார்கள்.

இத்தன்மையால், `இதென்ன தொந்தரவு!’ என்று பிறரை அலுக்கச் செய்வதும் உண்டு!

உணர்ச்சிபூர்வமாகவும் புத்திசாலித்தனம் அமைந்திருக்க, புதிய மனிதர்களைக் கண்டு மிரளாமல், அவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள் இப்படிப்பட்டவர்கள்.

புத்திசாலிகள் தவறே செய்யமாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

அவ்வாறு செய்யாதிருக்க அவர்கள் என்ன கடவுளா? ஆனால், தவற்றை ஒத்துக்கொள்ளும் நேர்மை உண்டு.

யார் புத்திசாலி?

ஒருவர் இரண்டு அல்லது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். அதனால் மட்டுமே அவர் புத்திசாலி என்பதில்லை.

வெகு சிலரே பெரும்பான்மையானவர்களைவிட புத்திசாலியாக இருப்பார்கள். இது கல்வியால் வருவதல்ல.

தகுதி இல்லாதவர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே புரிந்து வைத்திருப்பவரே புத்திசாலி.

அறிவு மட்டும் இருந்தால் போதுமா? கருணையும் சேர்ந்திருந்தால்தான் அதற்கு மதிப்பு.

கைமேல் பலன்

கதை

காவேரி ஒரு வீட்டில் வேலை செய்பவள். பதினைந்து வயதுதான். கிராமத்திலிருந்து அவளை அழைத்து வந்த அத்தை, தான் செய்யும் வேலைகளில் அவளையும் பழக்கினாள்.

உணவும், தங்க இருப்பிடமும் – அது குடிசையே ஆனாலும் – கிடைத்த திருப்தி காவேரிக்கு. அத்துடன், ஒவ்வொரு முறை சம்பளம் கிடைத்தபோதும் ஒரு திரைப்படம்!

ஒரு வீட்டு அம்மாள், `இவ்வளவு சின்னப்பெண் இப்படித் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறாளே!’ என்ற கரிசனத்துடன், அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

மரியாதைக்காக ஓரிரு முறை பொறுத்துப்போன அச்சிறுமி, “வேணாம்மா. போரடிக்குது,” என்று மறுத்துவிட்டாள்.

எந்த ஒரு காரியம் செய்தாலும் உடனே பலனை எதிர்பார்ப்பவர்கள் வாழ்வில் கீழ்மட்டதிலேயேதான் இருக்க நேரிடும்.

காவேரியும் ரேணுவும் இரு வெவ்வேறு துருவங்கள்.

ரேணுவோ, ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னர் திட்டம் போடுவாள். இதை இப்படிச் செய்யலாமா, வேறு எப்படிச் செய்தால் கூடுதலான பலன் கிடைக்கும், இதனால் வேண்டாத விளைவுகள் என்னென்ன எழும் என்று பலவாறாக யோசித்தபின்னர், நிதானமாக செயல்படத் தொடங்குவாள்.

கதை

ஒரு நாள் பெரிய மழை கொட்ட, வேலை செய்துகொண்டிருந்த காவேரி பெரிதாக அலறினாள்.

ஒரேயடியாகப் பயந்து, வீட்டு அம்மாள் ஓடி வந்தாள்.

பேச நாவெழாது, காவேரி மேலே சுட்டினாள். கூரையில் ஒரு சிறிய ஓட்டை. அதன்வழி மழை வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.

“இவ்வளவுதானே! இப்போது பாத்திரங்களை அதனடியில் வை. நாளைக்கு ரிப்பேர் செய்யலாம்,” என்று வழி கூறிய அம்மாள் தன்னை அடக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனம் நிறைந்தவள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வாள். சூழ்நிலையையும் மாற்றுவாள்.

“நல்லாத்தான் அலறினே, போ! பாம்போ, தேளோ ஒன்னைக் கடிச்சிடுச்சாக்கும்னு பயந்தே போயிட்டேன்!” என்று அவள் சிரித்தபோது, காவேரியும் சேர்ந்து சிரித்தாள்.

நகைச்சுவை உணர்வு

கதை

புக்ககத்திலிருந்த சுசி, வெளியூரிலிருந்த தன் இளைய சகோதரியின் உடல்நிலை மிகுந்த சீர்கேடு அடைந்திருப்பதாக அறிந்தாள்.

அவள் மூச்சு இரு நிமிடங்கள் அடங்கிப்போக, `இறந்துவிட்டாள்!’ என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதன்பின், உயிர் பிழைத்தாள் என்ற தகவல் பின்னர் கிடைத்தது.

சகோதரிக்குச் உடல்நிலை சற்றே சீரானதும், தங்கையை அழைத்தாள் சுசி.

“என்ன நீ! செத்துச் செத்துப் பிழைக்கிறாயாமே!” என்று ஆரம்பித்தாள்.

`கொஞ்சங்கூட பச்சாதாபமே கிடையாதா இவளுக்கு!’ என்று முதலில் அதிர்ந்த தங்கை, கேலி புரிந்து, அவளுடைய சிரிப்பில் கலந்துகொண்டாள்.

ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, தேறியபின்னரும் கடந்ததைப் பற்றியே பேசுவது எதற்கு?

அப்படிச் செய்வதுதான் முறை என்றால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.