இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

-மேகலா இராமமூர்த்தி

உலக வாழ்க்கை குறித்து மேனாட்டு நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்கள் என்பார். பயணங்களிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவரும், சீர்திருத்தச் சிந்தனையாளரும், இந்தி(ய)ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ’மகா பண்டிதர்’ இராகுல் சாங்கிருத்தியாயனைக் கேட்டால் ”உலக வாழ்க்கையே பயணங்களின் முடிவில்லா நெடுஞ்சாலை; அதில் அனைவருமே பயணிகள்” என்று சொல்லக்கூடும்.

உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கர் (Azamgarh) மாவட்டத்திலுள்ள பாந்தகா என்ற கிராமத்தில் கோவர்தன் பாண்டே, குலவந்தி தேவி இணையருக்கு மகனாக, கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயரில் 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தார் இராகுல் சாங்கிருத்தியாயன். தம்முடைய பௌத்தமதப் பற்று காரணமாகப் பின்னாளில் தம் பெயரை அவர் இராகுல் சாங்கிருத்தியாயன் என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிகின்றது.

1898 நவம்பரில் மதர்சா என்றழைக்கப்பட்ட ஓர் ஆரம்பப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார், அங்குதான் உருது எழுத்துக்களுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இராகுலின் தாயும் அவருடைய ஒரே சகோதரியும் துரதிர்ஷ்டவசமாக அவருடை குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோயினர்.

தம்முடைய பத்தாவது வயதில் ஒருமுறை வீட்டைவிட்டுக் காசிக்குச் சென்று திரும்பினார் இராகுல். மீண்டும் பதினாலாவது வயதில் கொல்கத்தா செல்வதற்காக வீட்டைத் துறந்தார். பரந்த உலகத்தைக் காணவேண்டும்; உலக அறிவு பெறவேண்டும் என்ற ஆசையின் உந்துதலே தம்மை வீட்டைவிட்டு அத்துணைச் சிறிய வயதில் வெளியேற்றியது என்கிறார் அவர். ஆனால் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் அவரால் வெகுநாட்கள் தனியே தாக்குப்பிடிக்க இயலவில்லை. எனவே மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கின்றார்.

1910 வாக்கில் சாதுக்களுடன் சேரவிரும்பி மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறினார் இராகுல். சாதுக்களின் சகவாசம் அவரைக் குருட்டு மூடநம்பிக்கைகளின் கடும் விமர்சகராக மாற்றியது. முடிவில் அவர் ஒரு தீர்க்கமான உலகாயதவாதியானார். ஆயினும், இந்த விழிப்புணர்வை அடைய அவர் மேற்கொண்ட தத்துவப் பயணம் நெடிதாகவே இருந்தது.
1915 ஜனவரியில் ஆக்ரா சென்ற இராகுல் சாங்கிருத்தியாயன், ஆர்ய முஸாஃபிர் வித்யாலயாவில் சேர்ந்தார். இரண்டாண்டு காலம் சமஸ்கிருதம், அரபு மொழி, பல்வேறு மத நூல்கள், தேசிய வரலாற்று நூல்கள் ஆகியவற்றைக் கற்றார். ஆக்ராவிலிருந்து வெளிவந்த முஸாஃபிர் பத்திரிகைக்கு உருது மொழியில் கட்டுரைகள் எழுதினார்.

நாடோடியாகக் காலங்கழித்துவந்த இராகுலை மீண்டும் சொந்த கிராமத்துக்கு அழைத்துவர வேண்டும், நில புலன்களைக் கவனித்துக்கொள்ளச் செய்யவேண்டும் என்று விவசாயியான அவர் தந்தையார் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. ஐம்பது ஆண்டு முடிகின்றவரை சொந்த கிராமமான ஆசம்கருக்குத் திரும்பக்கூடாது என்பதில் இராகுல் உறுதியாகவே இருந்திருக்கின்றார்.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட நாட்டுப்பற்றாளராகவும் விளங்கிய இராகுல், தம்முடைய அரசியல் பணிகளை ’அரசியலில் நுழைவு’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தம்முடைய முதல் அரசியல் பேச்சு, 1921இல் காண்ட்வா (khandwa) என்ற இடத்தில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தாம் பேசியது என்று நினைவுகூருகின்றார் அவர்.

துறவியாகத் தாம் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் தம் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றையும் இராகுல் பதிவுசெய்திருக்கின்றார். மூடபக்தி கொண்ட பக்தர்கள் சிலர் தெய்வீக மாந்தர் என்று தம்மை அழைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு விலங்குகளைப் பலியிடுவது, கஞ்சா, மதுபானம் ஆகியவற்றை படைப்பது போன்ற பழக்கங்களைக் கைவிடாது பின்பற்றிவந்ததைக் கண்ட இராகுல், ஒருநாள் தம்மீது காந்தி என்ற சாமி வந்திருப்பதாக நடித்தார். மூடபக்தகோடிகளைப் பார்த்து, ”இப்போது எல்லாக் கடவுள்களும் காந்திபாபா கூடத்தான் இருக்கிறார்கள்; அவர்களுக்கு யாரெல்லாம் கஞ்சா மது வைப்பது, மிருக பலி கொடுப்பது போன்றவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் அழிந்துபோவார்கள் என்று நான் சபிக்கிறேன்” எனக் கூச்சலிட்டார். அவ்வளவுதான்…பக்தர்கள் அனைவரும் பயந்துபோனார்கள்; தாம் செய்யக்கருதிய மூடத்தனங்களைச் செய்யாமல் விட்டார்கள் என்கிறார் இராகுல்.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து மக்கள் மத்தியில் போஜ்புரி மொழியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் இராகுல் சாங்கிருத்தியாயன். அதனால் 1922 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் அவர் ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். சிறையில், ட்ராட்ஸ்கியின் ’போல்ஷ்விசமும் உலகப்புரட்சியும்’ என்ற நூலை படிக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியது இராகுலுக்கு. அது அவரின் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

சிறையில் இருந்தபோது இராகுல் தம் குற்றத்தை வெள்ளையரிடம் ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஆறு மாதச் சாதாரணச் சிறைத் தண்டனையே கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்தபின்பு 1922 அக்டோபர் 29இல் அவர் ஜில்லா காங்கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், சிறிது காலத்திலேயே அவருக்குக் கம்யூனிசச் சித்தாந்தங்களின்மீது பிடிப்பு ஏற்பட்டு அந்தத் தத்துவங்களின்பால் செல்லத் தொடங்கிவிட்டார்.

இராகுலுடைய வீர சாகசம் மிக்க பயணங்கள் 1926இல் திபெத்திய எல்லையில் தொடங்கின. பயணத்தின்போது அவர் வழியில்கண்டு
உடன் அழைத்துச் சென்ற செங்-துக் (seng tuk)என்ற திபெத்திய நாய் வழியிலேயே மரணித்தது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
”என் அருமைப் பெற்றோரின் மரணத்தின்போதோ, அன்புக்குரிய பாட்டன்மார்களின் மரணத்தின்போதோகூட நீரைச் சுரக்காத என் கண்கள், இந்தச் செல்ல நாயின் சாவினால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குக் கண்ணீர் சிந்துகின்றன” என்று குறிப்பிடும் இராகுல், அந்த நாய்க்கு எட்டுப் பாடல்கள் அடங்கிய இரங்கற்பா ஒன்றையும் ”செங் துக்கே! த்வத் பிரயாணே!” என்று முடியும் வகையில் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கின்றார்.

1927 மே 16இல் இராகுல் இலங்கைக்குச் சென்றார். பத்தொன்பது மாதங்கள் அங்கே தங்கி புத்தமத நூல்கள் பலவற்றைக் கற்றார். இந்தியக் கலாசாரம், வரலாறு குறித்த தம் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.
சர் டி.வி. ஜெயதிலகே என்பவர் இராகுலுக்குத் தேவைப்பட்ட புத்தகங்கள் அனைத்தையும் வாங்கித்தந்து உதவினார். இராகுல் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் பரிணமித்ததும் இந்தக் காலக்கட்டத்தில்தான். அலகாபாத்திலிருந்து வெளிவந்த ’சரஸ்வதி’ என்ற இந்தி மாத இதழில் இலங்கை பற்றிய கட்டுரைகளை அவர் எழுதினார்.

மீண்டும் திபெத்துக்குச் செல்லவேண்டும் எனும் ஆவலோடு இந்தியா திரும்பிய இராகுல், 1929, 1934, 1936, 1938 ஆகிய ஆண்டுகளில் நான்குமுறை திபெத்திற்குச் சென்றார். அங்குள்ள மடங்களிலிருந்து அபூர்வமான பொருட்கள் சிலவற்றைச் சேகரித்து இந்தியாவுக்கு எடுத்துவந்தார்.
முதல் திபெத்திய இலக்கணத்தையும் மூன்று ஆரம்பப் பாடநூல்களையும் சமஸ்கிருதத்தில் எழுதினார். தர்மகீர்த்தி, சுபந்து, அசங்கா போன்ற பௌத்தத் தர்க்க ஞானிகளின் நூல்களைப் புதுப்பிப்பது, பாதுகாப்பது ஆகிய பணிகளில் முன்னோடி வேலைகளைச் செய்தார் அவர். திபெத்திய இந்தி அகராதி ஒன்றையும் தொகுத்தார்.

1932-33இல் அவர் ஐரோப்பாவில் ஓராண்டு கழித்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்குச் சென்றார். 1933இல் ஜப்பான், கொரியா, மன்சூரியா நாடுகளில் பல மாதங்கள் தங்கினார். 1935இல் மன்சூரியா வழியாக இரயிலில் சோவியத் ரஷியா சென்றார். அங்குள்ள மாஸ்கோவிலிருந்து இரயிலில் புறப்பட்டு பாக்கூ (Baku) என்ற இடத்திற்குச் சென்று தீக் கோயிலை (Fire temple) கண்டார். அதனை ’ஜ்வாலாமாய்’ என்று அவர் குறிப்பிடுகின்றார். அங்கிருந்து ஈரானுக்குக் கப்பலில் பயணமானார். அங்குப் பல இடங்களைப் பார்வையிட்டபின் இரயிலில் லாகூர் வந்து சேர்ந்தார்; பிறகு மீண்டும் அரசியலில் தீவிரப் பங்கேற்றார்.

1940 பிப்ரவரி 24, 25 தேதிகளில் நடைபெற்ற உழவர்கள் மாநாட்டிற்குத் தலைமையேற்றதன் விளைவாக வெள்ளை அரசால் கைதுசெய்யப்பட்டார். 29 மாதங்கள் ஹசாரிபாக், தேவாலி சிறைகளில் இருந்தார். 847 பக்கங்களைக் கொண்ட தர்ஷன் -திக்தர்ஷன் (Darshan-Digdarshan) போன்ற மகத்தான நூல்களை எழுதுவதில் இத்தண்டனைக் காலத்தை அவர் செலவழித்தார். கிரேக்க, இஸ்லாமிய, ஐரோப்பிய, இந்தியத் தத்துவமுறைகளை விமர்சன ரீதியில் ஆய்வுசெய்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவற்றிற்கு விளக்கவுரை தரும் முயற்சியை அவர் இந்நூலில் மேற்கொண்டார். மூவாயிரமாண்டு மூத்த தத்துவச் சிந்தனைகளை ஒரு புதிய பகுத்தறிவுவாத மனிதநேயக் கண்ணோட்டத்தில் ஆராயும் மிகப்பெரிய படைப்பு தர்ஷன் -திக்தர்ஷன்.

சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் தமது சொந்த ஊருக்குச் சென்றார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கே போனதை மிக உணர்ச்சிகரமாக விவரித்திருக்கின்றார். ஊரில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன; சில மாறாமலும் இருந்தன. அவரது குழந்தைப் பருவத்தில் அவருக்கு அறிமுகமானவர்கள் சிலர் அவரை மிகுந்த அன்போடு வரவேற்றார்கள்.

1942 முதல் 1944 வரை இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார் இராகுல். அவற்றில் சில அரசியல் பயணங்கள்; சில இலக்கியச் சந்திப்புகளுக்காக நிகழ்த்தப்பட்ட பயணங்கள். அவருடைய நாட்குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் பயண விவரங்களைப் படிக்கின்றவர்கள் உண்மையிலேயே ஓர் விசித்தர உணர்வுக்கு ஆட்படுவார்கள். அவற்றில் ஓரிடத்தில் 18 வகையான நேப்பாளி பேய் பிசாசுகளின் பட்டியல் தரப்படுகின்றது. மற்றோர் இடத்தில் பதினொரு வகையான திபெத்தியப் பிசாசுகள் விவரிக்கப்படுகின்றன. பயணங்கள் மேற்கொள்வதிலுள்ள சிரமங்கள், அரசியல் நெருக்கடிகள், தொல்பொருளியல், மத வரலாறு எனப் பல்வேறு தரவுகளை ஒன்றாகத் தருகின்ற தகவல் களஞ்சியங்களாக அவரின் பயண நூல்கள் திகழ்வதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வர். எனினும், சுவையான எளிய மக்கள்மொழியில் அவை அமைந்துள்ளதால் வாசகருக்கு அலுப்புத் தட்டுவதில்லை.

1944 முதல் 47வரை சோவியத் ரஷ்யாவிலுள்ள லெனின் கிராட் பல்கலைக்கழத்தில் (Leningrad University) பௌத்த மதச் சித்தாந்தங்களைக் கற்பிக்கும் பேராசிரியராக அவர் பணியாற்றினார். அப்போது லோலா என்ற மங்கோலியப் பெண்ணை மணந்தார். இவர்களுக்கு இகோர் என்ற மகன் பிறந்தான். இவ் இணையர் சேர்ந்தவாழ்ந்த காலம் மிகச் சொற்பமே. பின்பு நேபாளத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை மணந்தார். இந்த இணையருக்கு ஜெயா, ஜேடா என்ற குழந்தைகள் இருந்தனர். இவ்விரு திருமணங்களையும் மிகவும் காலதாமதமாகவே புரிந்துகொண்டார் இராகுல்.

முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை இராகுல் அறிந்திருந்தபோதிலும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும்தான் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர் பயன்படுத்தினார். சாதாரண வாசகனை நினைவில்கொண்டே அவர் தம் படைப்புகளை உருவாக்கியதால் அவை மிகவும் எளிய நடையில் அமைந்திருந்தன.

1927இல் தம்முடைய முப்பத்து நான்காவது வயதில் எழுதத்தொடங்கியவர் 1961இல் கடுமையாக நோய்வாய்ப்படுகின்ற வரையில் எழுதிக்கொண்டிருந்தார். அந்த 34 ஆண்டுக் காலத்தில் அவர் 50000 பக்கங்கள் பிரசுரித்திருந்தார். எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டிருந்த ஒருவர் இத்தனை பக்கங்கள் எழுதியது மகத்தான சாதனையே!

இச்சாதனையை அவர் நிகழ்த்தமுடிந்ததற்குக் காரணம், எழுதுவதற்கேற்ற மனநிலை, சூழ்நிலை போன்றவற்றை அவர் எப்போதுமே தேடிக்கொண்டிருந்ததில்லை. வீட்டிலிருக்கும்போதும், இரயிலிலும் கப்பலிலும் பயணிக்கின்றபோதும், சத்திரம் சாவடிகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கின்றபோதும் சிறைவாசத்தின்போதும் அவரால் எழுதமுடிந்தது.

இராகுல் சாங்கிருத்தியாயனுக்கு நிரந்தப் புகழைத் தேடித்தந்த சிறுகதைத் தொகுதி ’வால்காவிலிருந்து கங்கை வரை’ (வால்கா ஸே கங்கா) என்ற பெயரில் அவரெழுதிய புனைகதைகளே. வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து இன்றைய இந்தியாவின் 1944ஆம் ஆண்டு வரையிலான மாந்தரின் சமூக வாழ்வியலை விளக்கும் 20 கதைகள் இதில் இருக்கின்றன. இவற்றில் 14 கதைகள் பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா பற்றியவை. 15வது கதையிலிருந்து இந்தியாவில் இசுலாமிய ஆட்சி, ஆங்கிலேய ஆட்சி ஆகியவற்றின் பின்னணி ஆரம்பிக்கின்றது. வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான கற்பனைச் சம்பவத்தைப் புதிதாகப் படைத்து அதனை இயங்கியல் பொருள்முதல்வாத (Dialectical materialism) கண்ணோட்டத்துடன் ஆய்வுசெய்ய இதில் இராகுல் முயன்றிருக்கின்றார்.
இந்தியில் எழுதப்பட்ட இராகுலின் இந்தப் படைப்பை தற்கால இந்தி எழுத்து, இந்திய முற்போக்கு இலக்கியத்துக்கு அளித்துள்ள பெருங்கொடையென்றே கூறலாம்.

அவரது படைப்பிலக்கியத்தின் மற்றொரு பகுதி பரந்த அளவில் அவர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவ விவரிப்புகள் ஆகும்.
மேரி லடாக் யாத்ரா, லங்கா, மேரி யூரோப் யாத்ரா, மேரி திபெத் யாத்ரா உள்ளிட்ட பல நூல்களை அவர் இவ்வகையில் இயற்றியுள்ளார். கூமக்கட் ஷாஸ்திரா (ஊர்சுற்றிப் புராணம்/ treatise for roamers) என்ற அவருடைய நூல் எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டே இருக்க விரும்புவோர்க்குக் கையேடாக உதவும் சுவையான புத்தகமாகும்.

இலக்கியத் தரம்வாய்ந்த இவருடைய இதர படைப்புக்களில் வரலாறு பற்றி எழுதிய நூல்களும் அடங்கும். மத்திய ஆசியாவின் வரலாறு பற்றி இராகுல் எழுதிய ’மத்திய ஆசியா கா இதிஹாஸ்’ என்ற நூலுக்கு 1958இல் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

கற்பனைப் படைப்புகள் என்ற வகையில் 13 நூல்களை இராகுல் உருவாக்கியுள்ளார். விஸ்மிரித் யாத்ரி, திவோதாஸ், மாதுர் ஸ்வப்னா எனும் வரலாற்றுப் புதினங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அயரா உழைப்பு, ஓய்வற்ற நீண்ட பயணங்கள் அவற்றோடு சொந்தக் கவலைகளும் சேர்ந்து இராகுலை நோய்க்கு இரையாக்கின. கடுமையான நீரழிவு நோயால் அவர் பீடிக்கப்பட்டார். வருந்தத்தக்க வகையில் திசம்பர் 1961இல் அவர் தம்முடைய நினைவாற்றலை இழந்தார். ’மகாபண்டிதர்’ என்று இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டவரான இராகுல் சாங்கிருத்தியாயன் மறதிநோயின் தாக்கத்தல் தம் சொந்தப் பெயரைக் கூட வாசிக்கமுடியாமலும் தொடர்ச்சியாகப் பேச முடியாமலும் போன கொடுமையை விதி செய்த சதி என்பதைத் தவிர வேறெவ்வாறு சொல்வது?

இவ்வாறு அவர் மறதிநோயால் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு ’பத்ம பூஷன்’ விருதை அரசு அளித்தது. ஆனால் அதை உணர்ந்து மகிழும் நிலையில் அவர் இல்லை.

1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் தம்முடைய மறதிநோய் குணமாகாமலேயே இறந்தார் இராகுல் சாங்கிருத்தியாயன். முறையான கல்வி என்று எதனையும் பெரிதாகப் பெறாத ஒருவர், தம்முடைய முயற்சியாலேயே பல மொழிகளைக் கற்று பன்மொழி வித்தகரானதும், பல்வேறு சமயங்களின் சித்தாந்தங்களையும், பன்னாட்டுத் தத்துவங்களையும் அறிந்து அவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கும் ஆசிரிய நிலைக்கு உயர்ந்ததும் வியத்தகு செயல்களே!

அறிவைத் தலையை அழுத்தும் சுமையாகக் கருதாமல் சிறு பயணத்துக்குப் பயன்படும் படகாகக் கருதியவர் இராகுல் சாங்கிருத்தியாயன். உருவத்தால் மட்டுமல்லாது உள்ளத்தாலும் உயர்ந்த மனிதராகத் திகழ்ந்த இராகுல் சாங்கிருத்தியாயனின் நூல்களைக் கற்போர் அவரைப் போலவே விசாலப் பார்வை பெற்று, யாவரும் கேளிர் எனும் எண்ணமுடையோராய் அனைத்துலக மாந்தரையும் நேசிக்கும் உயர்பண்பைப் பெறுவர் என்பது திண்ணம்.

*****

கட்டுரைக்கு உதவியவை:

1. இந்திய இலக்கியச் சிற்பிகள் – ராகுல் சாங்கிருத்யாயன் – ஆங்கில மூலம் – பிரபாகர் மாச்வே; தமிழில் வல்லிக்கண்ணன், சாகித்திய அக்காதெமி வெளியீடு.
2. https://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan
3. https://www.thehindu.com/society/a-forgotten-genius/article18162862.ece

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *