நிர்மலா ராகவன்

புகழ்ச்சிக்கு மயங்கினால்…

கலைவிமர்சராக ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

புகழ்பெற்ற அக்கலைஞர் எனக்குத் தெரிந்தவர் என்றதால், மறுநாள் காலை அவரை அழைத்து, எந்தெந்த அம்சங்கள் சிறப்பாக இருந்தன என்று விவரிக்க ஆரம்பித்தேன்.

அவர் உடனே என்னைத் தடுத்து, “எந்த இடம் சரியாக இல்லை என்று மட்டும் கூறுங்கள்,” என்றார்!

அவர் முன்னேற்றம் அடைந்ததன் காரணம் புரிந்ததா?

குறையை ஏற்காதவர்கள்

`நான் தவறே செய்யமாட்டேன். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தெரியுமோ?’ என்பதுபோல்தான் பலரும் பேசுகிறார்கள்.

இத்தகையினர் ஓரளவு உயர்ந்தபின், கர்வத்தால் அங்கேயே நிலையாக நின்றுவிடுவார்கள். பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

இவர்களுக்குத் தம்மைப் புகழ்கிறவர்களைத்தான் பிடிக்கும். அவர்களே உற்ற நண்பர்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

ஆணோ, பெண்ணோ, எந்த வயதினராக இருந்தாலும், அவர்களைப் புகழ்ந்தால் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது பலரது அனுபவம்.

சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால், `நல்ல பிள்ளை, புத்திசாலி’ என்று பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அதன்மூலம் தன்னம்பிக்கை வளரும்.

அதற்காக, ஒரேயடியாகப் புகழ்ந்தாலும் விளைவு எதிர்மாறாக அமைந்துவிடும்.

கதை

நான் உத்தியோகம் பார்த்த பள்ளி ஒன்றில், படிப்பில் கீழ்த்தங்கிய மாணவிகள் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். அங்கு பலரும் அழகாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகப் போயிற்று எனக்கு.

வகுப்பில் கவனம் செலுத்தாமல், பென்சிலைக் கூர்செய்யும் சிறு சாதனத்தின் பின்புறம் இருந்த கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டார்கள் அந்த பதின்ம வயதுப் பெண்கள்.

`ஏன் இப்படி?’ என்று யோசித்தேன்.

`நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்று சிறு குழந்தையாக இருந்தபோது பாராட்டி இருப்பார்கள் பெற்றவளும் பிறரும். குழந்தையின் முகம் மலர்வதைக் கண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி எழுந்திருக்கும்.

வேறு எந்த குணமோ, திறமையோ முக்கியமில்லை என்பதுபோல் ஓயாமல் இதையே சொல்லிக்கொண்டு இருந்தால், பெரியவர்களானபின்பும், அழகைத் தக்க வைத்துக்கொள்வதைத் தவிர வேறு எதிலும் மனம் போகாது.

தம் அழகைப் பாராட்டுகிறவர் நல்லவர்தானா, அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அப்படிச் செய்கிறாரா என்றெல்லாம் யோசனை போகாது.

பெண்களை வசப்படுத்த புகழ்ச்சி ஒரு வழி என்று கண்டுகொண்டு, அநேக ஆண்கள் இம்முறையைப் பின்பற்றுவது உண்டு.

தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆண்களைப்பற்றிய பேச்சு வந்தபோது, “உங்களிடம் முதலில் என்ன சொல்வார்கள்?” என்று என் மாணவிகளில் சிலரைக் கேட்டேன்.

“அழகா இருக்கே!” இதையே பலவிதங்களில் கூறினார்கள், சற்று வியப்புடன். லேசான சிரிப்பும் கலந்து வந்தது.

வீண்புகழ்ச்சியை நம்பினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது இதற்கு இது ஓர் உதாரணம்.

அது மட்டுமா! புகழ்ச்சியை மட்டுமே சந்தித்தவர்கள் தம்மை யாரேனும் சற்றே திட்டினாலும் இடிந்துபோய்விடுவார்கள். பெரியவர்களாகப் போனதும், தம்மீது குறை காண்பவர்களின்மீது ஆத்திரம் எழும்.

புகழவே கூடாதா?

பாராட்டும்படியாக ஏதாவது இருந்தால், ஓரளவோடு புகழலாம். ஆனால், முகஸ்துதி செய்பவர்களை, அல்லது வெகுவாகப் புகழ்கிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். மிகப் பணிவாக நடந்துகொள்பவர்களும் இதே ரகம்தான். நம்ப முடியாது.

எவ்வளவு புகழலாம்?

“புகழ்ச்சி என்பது தேன் போன்றது. சிறிதளவு இனிமையாக இருக்கும். அளவுக்கு அதிகமாகப்போனால், வயிற்றைக் கெடுத்துவிடும்,” என்கிறார் ஒருவர். புகழ்ச்சிக்கு அடிமையாகி, இவர் எதையெல்லாம் இழந்தாரோ!

கதை

பிரபல நடிகர் நடித்த நீண்ட படம் அது.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சிங்கப்பூர் ரசிகர்களைக் கேட்டார்கள்: “படம் எப்படி இருந்தது?”

அனேகமாக எல்லாரும், “சூப்பர்!” என்று பாராட்டினார்கள்.

ஒருவர் மட்டும், “பல கோடி செலவழித்து, இரண்டு வருடங்கள் தயாரித்து வெளியிட அப்படி இதில் என்ன இருக்கிறது?”

சொன்னவர் வைரத்தைத் தரம் பார்க்கிறவர்.

அது ஏன் மற்றவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள்?

பிரபல நடிகர் என்பதால் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.

தங்கள் நேரம் வீணாகிவிட்டதென ஒத்துக்கொள்ள விரும்பாது, அதைப் பிறரும் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கமாகக்கூட இருக்கலாம்.

சாண்ட்விச் திட்டு

சமையலில் அதிக அனுபவமில்லாத ஒரு பெண் சமைத்துவைத்ததைச் சாப்பிட்டபின், “இன்று பொரியல் நன்றாக இருந்தது. உப்பு, காரம் எல்லாம் அளவோடு இருந்தது,” என்று ஆரம்பித்தால் மகிழ்ந்துவிடுவாள்.

அடுத்து, “எண்ணையைக் கொஞ்சம் குறைத்துவிடு. இல்லாவிட்டால், கடைசியில், ஓட்ஸ் சேர்த்து லேசாக வறுக்கலாம்,” என்று மெள்ளக் கூறினால், அக்குறை அவளைப் பெரிதாகப் பாதிக்காது.

அடுத்த முறை, அதிக அக்கறையுடன் சமைப்பாள்.

வளரும் குழந்தைகளிடம் குற்றம் கண்டுபிடிக்கும்போது, இம்முறை பயனளிக்கும்.

இந்த நியதியைத் தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு.

கதை

மலாய் ஆசிரியை ஜலீலாவுக்கு அவள் வீட்டுத் தோட்டக்காரர், மற்ற கடைநிலைத் தொழிலாளிகள் ஆகியோரின் இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவி சுனந்தா அழகாகவும், புத்திகூர்மையானவளாகவும் இருந்தது எரிச்சலை ஊட்டியது.

”உன் கண் அழகாக இருக்கிறது. மூக்கும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?” என்று கேட்டுக் கேட்டு அவளை வதைத்தாள்.

மூக்கிற்கும் கையெழுத்திற்கும் என்ன சம்பந்தம்?

ஏழு வயதுக் குழந்தைக்கு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசினால் என்ன புரியும்? குழப்பம் உண்டாக, கையெழுத்து இன்னும் மோசமாகிற்று.

`ஏன் தினமும் அதையே சொல்கிறாள்? டீச்சருக்குப் பைத்தியமோ?’ சந்தேகத்தைத் தாயுடன் பகிர்ந்து கொண்டாள்.

ஆதரவாகப் பதில் வந்தது. “நீ பெரியவளானதும், காசோலையில் மட்டும்தான் உன் கையெழுத்து இருக்கும். நீ மிகவும் புத்திசாலி! அதுதான் பலருக்கும் உன்னைப் பிடிப்பதில்லை”.

அவள் வாக்கு பலித்தது. கணினி நடைமுறைக்கு வந்தபின், கையெழுத்து எப்படி இருந்தால் என்ன! அந்த ஆசிரியையைவிட மிக மிக உயர்ந்த நிலைக்குப் போனாள் சுனந்தா.

நம்மிடம் ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும்போது ஆத்திரம் எழும். குழப்பமும் எழக்கூடும். அது இயற்கை.

அந்த உணர்ச்சிகளுக்கு பெருமதிப்பு கொடுக்காது, நாம் மதிக்கும் ஒருவர் நம் குறையைச் சுட்டிக்காட்டும்போது, அது நியாயமாக இருக்கிறது என்று தோன்றி திருத்திக்கொண்டால் உயரலாம். அதைத்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடனக் கலைஞர் செய்தார்.

பலருக்கும் புகழை ஏற்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.

தெரியாத்தனமாக, ஆரம்பகாலக் கலைஞர் ஒருவரை நான் பாராட்டிவிட்டேன்.

அடுத்த நாள் அதே நிகழ்ச்சியில், நாட்டியத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தாது அவர் ஆடியதைப் பார்த்து நான் கற்றேன்: அளவோடு புகழவேண்டும். அதுவும், தகுதி இருந்தால்தான். இல்லாவிட்டால், தலைக்கனம் கூடிவிடும்.

இதைத்தான் என் தாய் தினமும் சொல்லி வந்திருக்கிறாள்: “`தான்’ அப்படின்னு ஜம்பமா இருந்தா, சாமி தலையிலே பட்டுனு போட்டுடும்!”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *