Tag: தேமொழி

  • வாழ்க்கை நலம் – 54

    குன்றக்குடி அடிகள்

    54. எளிய வாழ்வியல் உண்மை!

    ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

    பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

    திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

    ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது குறள்.

    பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

    ஆதலால் திருவள்ளுவர் “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

    இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? “தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!” என்று வள்ளுவர் கூறுகின்றார்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்” – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். “அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது” பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

    “எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 53

    குன்றக்குடி அடிகள்

    53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

    இன்று “மானுடம்” உலகமகா உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம். சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகலைக் கடந்து மானுடம் “ஓருலகம்” என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

    ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

    மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.

    இங்கனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள் – அடிமை முறை தோன்றியது.
    இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

    தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

    இங்ஙனம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டுமல்ல, மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

    மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செயத வரலாற்றை ஓர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

    பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை. மதம் இல்லை. உடைமை இல்லை, தொழில் இல்லை. பெருமை இல்லை. சிறுமை இல்லை. வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக் கூடாது.

    சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (திருக்குறள் – 972) என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

    பிறப்பின் அடிப்படையில் தொழில் இல்லை. தொழிலால் ஏற்படும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும், சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

    சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி அப்படி இருந்தால்தான் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்களையும் சிய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரி பெறுவதை – அடைவதை “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 52

    குன்றக்குடி அடிகள்

    52. உழைத்து உண்க!

    இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.

    இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர்களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம். உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.

    துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.

    மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. ‘உண்டி முதற்றே உலகு’ என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை “உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார் அண்ணல் காந்தியடிகள்.

    நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.

    “A ‘m the sweet of the fere shalt than cat Bread” என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.

    “Nothing is free” என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு – படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! – நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.

    “தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்” (திருக்குறள் – 1065)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • எதிர்க்கட்சிக் கூட்டணியின் திருப்தியும் திருப்பதி லட்டும்

    தேமொழி

    வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோமானால் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைகளில் ஒன்றாக இருப்பது சரியான ஒரு தேசிய எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமல் போவது.  இதுநாள் வரை ஆளும்கட்சியின் அபத்தங்களை தட்டிக் கேட்க தகுதி நிறைந்த எதிர்க் கட்சி ஒன்று இல்லை நமது இந்திய அரசியலில். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் இந்தியாவிற்குத் தேவை சிறந்த எதிரணி, இந்தியாவின் பற்பல கட்சிகள் மக்களாட்சிக்கு உதவவில்லை என்றுக் குறிப்பிட்டார்.  இவ்வாறு தேர்தல் காலங்களில் அடித்துப் பிடித்து கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தாலும், யார் பிரதமர் என்றக் குழப்படி கூட்டணியைச் சிதற அடிக்கிறது. பிறகு ஏதோ சாமாதானதில் விட்டுக் கொடுத்து கூட்டணி உதவியுடன் நடக்கும் ஆட்சியும் எத்தனை நாள்தான் நிலைக்க முடியும் என்ற நிலையில்லாமையில் வீழ்கிறது. இந்தியாவில் நாட்டின் நலனிற்காக என்னும் ஒரு பொதுக் கொள்கையைக் கட்டிக் காக்கும் ஒரு எதிரணி தேவை.  ஆளும் கட்சி அராஜகம் செய்யவே அச்சமுறும் வகையில் பலம் கொண்ட எதிரணி வேண்டும், செய்யும் தவறுகள் அடுத்த தேர்தலில் தங்களை பதவியிழக்கச் செய்யும் என்ற எண்ணம் ஆளும் கட்சிக்கு என்றும் அடிமனதில் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்ற பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தேவை.

    தேர்தல் காலங்களில் காங்கிரசிற்கு எதிராக அவசர அவசரமாக உருவாகும் எதிர் அணிகளும் இதுவரை கொண்டிருக்கும் “எதிரணிக் கட்சிக்கொள்கை” காங்கிரசை விரட்டிவிட்டு அங்கு தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே.  இன்றுவரை இதுதான் கொள்கை என்ற வகையிலேயே தங்களை முன்னிறுத்தி வந்திருக்கின்றன எதிரணிக்கட்சிகள்.  எதிரணிக்கட்சிகள் யாவும் பெரும்பாலும் சக்தி வாய்ந்த வட்டாரக் கட்சிகளின் கூட்டணி.  இக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே சக்தி வாய்ந்த தலைவர் பதிவியில் தங்கள் கட்சியை வழி நடத்திச் செல்லுபவர்கள். இவர்கள் கனவு பிரதமர் பதவி, தனக்கு இருக்கும் திறமைக்கு தான்தான் பிரத மந்திரியாக வேண்டும் என்ற எண்ணம்.  வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவிக்குப் போட்டி இவர்களிடையே தோன்றும். திருப்தி அடையாதவர்களால் எதிர்க்கட்சி கூட்டணி உடையும். வெற்றி பெற்றாலும் எதிரணியினருக்கு நாட்டிற்குப் பணி செய்வதை விட, தங்கள் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்றுவதில்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பது வரலாறு காட்டிய பாடம்.

    சுதந்தரம் அடைந்த இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே இந்த நிலைதான்.  சுதந்தரத்திற்குப் பிறகு 1977 இல் ஏர் உழவன் சின்னத்துடன் ஜனதா கட்சி எதிர் அணியாக உருவெடுத்த பொழுதே யாரைப் பிரதமாராக்குவது என்ற உட்கட்சிப் பூசலும் உடன் பிறந்தது. பிரதமர், துணைப்பிரதமருடன் கொஞ்ச காலம் இந்திய அரசு வண்டியும் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. மக்கள் அவர்கள் அடித்தக் கூத்தைக் கண்டு வெறுத்துப் போய், இந்த ஆட்களுக்கு நெருக்கடிநிலையை அமல்படுத்திய ‘மிசா’ இந்திராவே மேல் என்று எண்ணி, உடனடியாக தாயே வருக, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிடுக என்று அழைக்க வேண்டிய நிலையில் அடிதடி சண்டைகள் கேவலமாக இருந்தது.

    சுதந்தரத்திற்குப் பின்னர் 30 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்த தவறான “நெருக்கடி நிலை அமல்படுத்தலே” அக்கட்சியை வீழ்த்தியது. எதிரணி முயன்று  காங்கிரசை வீழ்த்தவில்லை. தொடர்ந்து வந்த ஜனதாவால் ஓராண்டு தாக்குப் பிடிப்பதே சிரமமாக இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்த நாற்பது ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை.  தலைவர் காணாது போனால் கட்சியும் காணாமல் போகும் என்ற நிலையே இந்தியாவில் பல கட்சிகளில் நிலவுகிறது.  இந்நிலைக் காட்டுவது நாட்டு நலத்திற்கான கொள்கையற்ற கட்சிகள் அவை என்பதையே. தலைவர் பதவிக்காக கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு, தங்கள் ஆதரவாளர்களின் சக்தியால் தலைவராக இருந்த தலைவர் மறைந்ததும் கட்சியும் தானே மறைவது, அல்லது அதற்குப் பிறகு மீண்டும் தலைவர் பதவிக்காகத் தோன்றும் உட்கட்சிப் பூசலில் கட்சி பிளவுபட்டுப் போவது, இதுவே கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும், அழிவும் என்ற நிலை. இந்த அவல நிலை நாடு முழுவது தொடர்ந்து நடப்பதால், அவரவர் தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தும் அடிதடி சண்டையில், நாட்டு நலன் காற்றோடு போவதும், இதை ஆதாயமாகக் கொண்டு காங்கிரஸ் தொடர்ந்து பிழைப்பதுமாகவே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சாதனை என்ற நோக்கில் பார்த்தால் காங்கிரசும் நாட்டிற்காக ஒன்றும்பெரிதாக இதுவரை சாதித்துவிடவில்லை.  நாட்டுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று அன்றைய நாளில் தேசிய நீரோட்டமாக அமைந்துவிட்டிருந்த உணர்சிக் கொள்கையை, இந்தியர் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு கொள்கையை வைத்து தோன்றிய ஒரு தேசிய கட்சியின் பெயரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் தங்கள் கட்சியின் ஒற்றுமைக்காகவும் ஒன்றும் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை.  சுதந்தரத்திற்காக உழைத்த தலைவரின் குடும்பத்தைத் தந்திரமாக தலைமைப் பொறுப்பில் வைத்து கட்சி ஒற்றுமையைக் காக்கிறது. சுதந்தரம் வேண்டி, சென்ற நூற்றாண்டில் நாட்டு மக்களை இணைத்த ஒரு பொதுக் கொள்கையை இன்றுவரை வைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறது பற்பல ஊழல்களின் வழியாக…. போபர்ஸ் ஊழல், ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற காங்கிரசின் புகழ் வாய்ந்த ஊழல்கள் என தினமும் ஒரு ஊழல் தினசரி செய்திகளில் ஒன்றாகிப் போனதால், இவற்றையெல்லாம் நினைவும் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

    இவையாவும் உறுதியான எதிரணி அமையாதததையே உறுதிப் படுத்துகிறது.  பற்பல பின்னணிகளின் இருப்பிடமான இந்தியாவில் அனைத்து மக்களையும் இணைக்கும் பொதுவான  கொள்கை  எது?
    சிங்கம் எதிர்த்தால் பிரிந்திருந்த மாடுகள் ஒன்றுகூடி எதிர்த்துத் துரத்தும் கதையில் படித்த ஒற்றுமையின் வலிமையை எப்படி வட்டாரக் கட்சிகளாகவே இருந்துவிடும் எதிரணிகளிடம் கொண்டு வருவது?
    நமது நாட்டுக்குத் தேவை நல்ல பலம் வாய்ந்த ஓர் எதிர்க்கட்சி; இந்தியர் அனைவரும் தன்னை அதனுடன் இணைத்துத் தங்களை அடையாளம் காண உதவும் ஓர்  எதிர்க்கட்சி.

    இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை தேசியக் கட்சி என்று வரையறுக்க வைத்திருக்கும் விதிமுறைகள் சில உள்ளன.     அவை:

    • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை (அல்லது லோக் சபா) தேர்தலில் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து 2% (அல்லது 11) இடங்களில் வென்றிருக்க வேண்டும்
    • மக்களவைக்கான பொதுத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் மக்களவையில் நான்கு இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்
    • நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் வட்டாரக் கட்சியாகவும் அறியப்பட வேண்டும்
    • மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் இந்தத் தகுதிகள் இருந்து வரவேண்டும்

    இத்தகுதிகள் பெற்றாலே ஒரு கட்சி இந்தியாவின் தேசியக் கட்சியாகக் கருதப்படும்.

    இதன் அடிப்படையில், காங்கிரசைத் தவிர்த்து  இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாரதீய ஜனதாக் கட்சி (தோற்றம்1980), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1925), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (1964), தேசியவாத காங்கிரஸ் கட்சி (1999), பகுஜன் சமாஜ் கட்சி (1984) போன்ற கட்சிகள் ஒரு சில காலக் கட்டத்திலாவது தேசியக் கட்சிகள் என அறியப்பட்டுள்ளன. அவ்வாறு அறியப்பட்டாலும் இவை யாவும் இதுவரை சக்தி வாய்ந்த எதிர் கட்சிகளாக இல்லாமலே இருந்து வந்திருக்கிறது.

    ethirani

    சுதந்தர இந்தியாவில்  67 ஆண்டுகளில் இன்றுவரை 81% காலம் நாடாளுமன்றத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான், ஐந்தில் ஒருபகுதி கூட இல்லாத 19% கால ஆட்சிகாலத்தில் ஆட்சியமைத்த கட்சிகளின் எண்ணிக்கை 5 (ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா கட்சி [கூட்டணி], ஜனதா தளம் [கூட்டணி], சமாஜ்வாதி ஜனதா கட்சி [கூட்டணி], பாரதிய ஜனதா கட்சி [கூட்டணி]). இவையாவும் கூட்டணி இன்றி ஆட்சியமைக்க முடியாத நிலையில் தடுமாறியவை.  தொங்கு நாடாளுமன்றம் என்றால் அது எப்படி இருக்கும் என உணர்த்தியவை.

    சுதந்தர இந்தியாவின் 67 ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவைகள் மொத்தம் 20.  இதில் எதிர்கட்சிகள் கூட்டணி கொண்டு ஆட்சி நடத்திய ஆட்சிகாலத்தில், 12 ஆண்டுகளில் 9 அமைச்சரவைகள் (7, 8, 11, 12, 14, 15, 16, 17, 18 அமைச்சரவைகள்) மாற்றம் நிகழ்ந்திருகிறது.  ஆட்சி அமைத்து தாக்குபிடித்த காலங்கள் இரண்டு வாரங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் என்பதே அதிக அளவு காலக்கட்டம் என்ற நிலைமையில் இருப்பது இந்தியாவின் எதிரணியின் நிலை. இதில் தாங்களும் ஊழலுக்கு சளைத்தவர்கள் அல்ல என மாட்டுத் தீவன ஊழல் என்று போட்டி போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலும்  ஊழல் அரசையும் நடத்திக் காண்பிக்கப்பட்டது இந்திய மக்கள் எதிர் கொண்ட மற்றொரு அநீதி.

    தேர்தல் காலங்களில் ஒரு கட்சியுடன் சேர்ந்து எதிரணியாக உருவாகும் வட்டாரக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் அக்கட்சி தங்களுக்கு எதிராகவே உருவாகிவிட இடம் அளிப்பதில்லை என்று கவனத்துடன் செயல்படுவதிலும் தவறில்லை.  அவ்வாறு அனுமதிப்பது  அவர்களது கட்சியின் நோக்கத்திற்கே எதிரானதுதான். இவ்வாறு பிரிந்து பிரிந்து சேரும் விதம் விதமான எதிரணிகளுடன் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் அடிப்படைத் தகுதி அந்த எதிரணி தோன்றிய முறையின் காரணத்தினாலேயே இல்லாமலும் போய்விடுகிறது.

    ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை நட்சத்திரமாக கொள்கை அளவில் இந்தியர் அனைவரையும் இணைக்குமோ என்று தோன்றியது.  ஆனால் அதன்  கட்சியின் பெயர் வேற்றுமொழியில் அந்நியமாகித் தெரிகிறது.  ஆங்கிலத்தில் பெயர்கொண்டு  Progressive Movement of India / Progressive  party என்று இருந்திருந்தால் அதனுடன் தேசிய அளவில் ஓர்  ஒட்டுறவு தோன்றியிருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது. அதுவும் ஒரு வட்டாரக் கட்சியாகவே நின்றுவிடும் போலிருக்கிறது.  எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் தேசிய ஆதரவு எதிர் பார்க்க முடியாதோ அது போலவேதான் ஆம் ஆத்மி என்பதும் இந்தியா முழுவதையும் இணைக்க வேண்டிய தேவையின் சாரம் இழந்து நிற்கிறது.

    இந்த 16 வது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஒன்பது கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடந்து, வாக்கு எண்ணிக்கை மே 16 இல் நடக்கவிருக்கிறது. பலம் வாய்ந்த தேசியக் கட்சியான காங்கிரஸ் வந்தால் நிலையான ஆட்சி அமையும். நாற்பது  இடங்களில் வெற்றி பெற்றாலே கூட்டணியில் இருப்பதால் பிரதமாரகலாம் என்ற கனவுகளும் மலர்கிறது வட்டாரக் கட்சித் தலைவர்களுக்கு. இந்த தேர்தலிலும் துண்டு துண்டுகளாக பூந்திகளாக இருக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்து லட்டாக உருமாறுகிறது. பார்க்கவும் கேட்கவும் இனிப்பாக இருக்கிறது. அளவிலும், உறுதியிலும் பௌலிங் பந்து போல பலமாக இருக்கும் காங்கிரஸ் மோதி உடைத்து மீண்டும் அனைத்துக் கட்சிகளும் பூந்திகளாக சிதறிப் போகாமல் இருக்க இக்கட்சிகளை இணைக்கும் நல்லதொரு பொதுக் கொள்கை தேவை.

    அந்த பொதுக் கொள்கை நாட்டின் நலன் என்பதாக இருக்க வேண்டுமே ஒழிய,   காங்கிரசை ஆட்சியில் இருந்து விரட்டுவது என்பதாக மட்டும் இருந்தால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். நாம் யாவரும் இந்தியர் என்ற பொதுக் கொள்கையும், நாம் செய்ய விரும்புவது நாட்டு மக்களுக்கு நல்லதொரு தொண்டு என்ற பொதுக் கொள்கையும் இல்லாமல், வென்றால் எனக்குப் பிரதமர் பதவி என்று ஒவ்வொரு குட்டிக் குட்டிக் கட்சியின் தலைவர்களும் கொண்டிருக்கும் பொதுக் கொள்கை சரியான எதிர்க் கட்சியை, காங்கிரசை எதிர்த்து நிலைத்து நிற்கும் கட்சியை உருவாக்காது. அவ்வாறு சிறுகட்சிகள் இணைந்து கொண்டுவரும் எதிரணி வெற்றிபெற்றால்,  வரலாறு மீண்டும் திரும்புகிறதோ மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலைதானோ என்ற அச்சமும் வந்துவிடுகிறது இந்தியர்களுக்கு.

    கார்கில் போர் நிகழ்ந்த காலத்தில் தேசப்பற்று இந்தியரை ஒருங்கிணைத்தது. ஆங்கிலயர்களை எதிர்த்து வெளியேறச் செய்ய காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைத்து போல, தேர்தல் சதுரங்க விளையாட்டின் செக்பாயிண்ட் செய்யும் வலிமை மிகுந்த எதிர்கட்சியை நாட்டின் முன்னேற்றதிற்காக உருவாக்க அதே ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கிரிக்கெட் விளையாட்டினால் ஒருகால் முடியலாம். ஏனெனில் நாமறிந்த வகையில் போரற்ற அமைதி காலத்தில் தற்கால இந்தியர் அனைவரையும் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே. மக்கள் விரும்பும் கிரிக்கெட் வீரர் எவராவது எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கினால் இளைஞர்களை தம் பக்கம் இழுத்து ஒருங்கிணைத்து ஒரு சக்தி வாய்ந்த தேசிய எதிர்கட்சியை உருவாக்க இயலக்கூடும்.

    Share
  • வாழ்க்கை நலம் – 51

    குன்றக்குடி அடிகள்

    51. நடுவு நிலைமை

    நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

    நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவு நிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.
    மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர் தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன்முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வார்.

    நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதை துலாக்கோலை – நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும். நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக்கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.

    அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும் – பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.

    நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தை காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விலையும்; நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்துவிட்டதாக உணர்வர். இது வரவேற்கத்தக்கதல்ல.

    ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்வது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” (திருக்குறள் – 118)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

    தேமொழி

    மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.

    ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.

    அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.

    இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.

    இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என  அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.

    தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.

    என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.

    பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.

    சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.

    இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்களும் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.

    Share
  • கைவிளக்கை உருவாக்கிய காரிகை

    தேமொழி

    கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

    இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.

    இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

    சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

    பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.

    இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை,கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பை சமர்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்கானப் பிரிவில் இவரது கண்டுபிடுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

    இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையானக்  கட்டமைப்பும், அத்துடன் இந்த கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

    Thermoelectric Flashlight

    Peltier Tilesஇவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுபுறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிர பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு வெப்பமின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்பமின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெட்லியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறைமின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்படிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்போழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.

    பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஒரு அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள பெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கி குறைமின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்பமின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்குக்ம் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

    பலருக்கு பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.

      தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php

    Share
  • வாழ்க்கை நலம் – 50

    குன்றக்குடி அடிகள்

    50. நன்றி பாராட்டுக!

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று”
    (திருக்குறள் –  108)

    என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப்பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு மேலோங்கி நிற்கிறது.

    இன்று எந்த நிகழ்ச்சியானாலும் “நன்றி கூறல்” என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ‘நல்லது’ என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

    ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

    ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

    பொருளைவிட, நல்லறிவு கொள்ளுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும்.  ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

    புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாக பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

    ஆதலால், நற்பன்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மாக்கரீனா….. மாக்கரீனா…..

    தேமொழி

    மாக்கரீனா (Macarena) என்ற நடனம் 1990 களில் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிய நடனம். ஸ்பானிஷ் மொழியில் முதலில் வெளியான ‘ரும்பா’ (rumba) வகையில் அமைந்த இப்பாடல், 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த பிறகு ஒரு ஆண்டுக்கு எங்கு திரும்பினாலும் இதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இப்பாடல் யாரையும், எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வெளிநாட்டுப் பாடல் அமெரிக்கர்களை அந்த அளவிற்குக் கவர்ந்ததன் காரணம் அதன் எளிய இடை அசைவு கொண்ட நடன பாணியும், ஆடத் தூண்டும் இசையும்தான் (Macarena: a dance performed with exaggerated hip motion to a fast Latin rhythm). முழுப்பாடலையும் 16 நடன அசைவுகளில் ஆடிவிடலாம், அத்துடன் 10 நொடிகள் மட்டும் வரும் இந்த அங்க அசைவுகளை இரண்டு வினாடிகளுக்குள் கற்றும் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.

    சரியாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் இருந்த இந்த நடனம் விளையாட்டு போட்டிகள், அலுவலகக்  கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், பள்ளி விழாக்களை மட்டுமல்ல தேசிய அளவில் நடந்த தேர்தலையும் இந்தப் பாடல் விட்டு வைக்கவில்லை. பிறகு அமெரிக்கர்கள் கொடுத்த கவனிப்பால் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.

    ஸ்பெயினைச் சேர்ந்த ‘லாஸ் டெல் ரியோ’ (Los Del Río) என்ற ஸ்பானிஷ் பாப்பிசை இரட்டையர்களான ‘அந்தோணியோ ரோமிரோ மாங்கே’ என்பவரும் அவரது தோழர் ‘ராஃபியல் ரூயிஸ்’ (Antonio Romero Monge and Rafael Ruiz, Pop duo) என்பவரும் 1962 ஆம் ஆண்டிலிருந்து பாப்பிசையில் பற்பல பாடல்கள் பாடி வந்தவர்கள். ‘லாஸ் டெல் ரியோ’ என்றால் ‘ஆற்றின் மக்கள்’ (மண்ணின் மைந்தர்கள் என்பது போல) எனப் பொருள் கொள்ளலாம். அவர்களை ‘ஸ்பானிஷ் ஃப்லேமன்கோ’ (Spanish flamenco) பாப்பிசைக்குழு என்றும் சொல்வார்கள். இவர்கள் தாங்கள் பாடத்தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது நடுத்தர வயதை அடைந்த பிறகு தங்களுக்கு உலகளாவிய புகழ் வரும் என்று கனவும் கண்டிருக்க மாட்டார்கள்.

    அந்தோணியோவும் ராஃபியலும் வெனிசுலா (Venezuela) நாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சென்றார்கள். அந்த நாட்டின் மொழியும் ஸ்பானிஷ்தான். அங்கு ‘டயானா பாட்ரிஷியா குபில்லன்’ (Diana Patricia Cubillan) என்ற 25 வயது நடனமாடும் பெண்ணை ஒரு விழாவில் நடனமாடுகையில் பார்த்தார்கள். அவரது அழகும் ஆடும் திறமையும் இப்பாடகர்களைக் கவர உடனே அங்கேயே அவரைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடினார்கள். இப்பாடல் தோன்றக் காரணமானவரே டயானாதான். பிறகு ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் டயானாவை சந்திக்க நேர்ந்தபொழுது, அந்தோணியோவும் ராஃபியலும் தங்கள் பாடலுக்கு அன்று உணவு விடுதியில் நடனமாட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே அவரும் ஒப்புக் கொண்டார். உயர முடிந்த கொண்டையும், அதில் ஒரு பூவும் செருகி, குதிகால் செருப்பும், இறுகத் தழுவிய நடன ஆடையும் அணியும் டயானா அன்று சாதாரண கால்சராய் சட்டையுடன்தான் வந்திருந்தார். ஆனாலும் நடன ஒப்பனைகள் இல்லாததைப் பொருட்படுத்தாது மிகவும் ஆர்வத்துடன் ஆடி முடித்தார். இப்பாடல் தோன்றக் காரணமான இவரே பிறகு ‘மாக்கரீனா; என்றும் அழைக்கப் பாடலானார். இவருக்கும் பிறகு பல வாய்ப்புகள் குவிந்தன.

    இப்பாடலில் முதலில் ‘மேக்டலினா’ (Magdalena) என்று அன்னை மேக்டலினாவைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தி இருந்தனர். பிறகு ஏற்கனவே  மேக்டலினா என்ற ஒரு பாடலும் இருந்ததால், ‘லாஸ் டெல் ரியோ’ இசைக் குழுவினர் “மாக்கரீனா” (Macarena is a female name which means “Mother of God”)என்று தாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் வகையில் சொல்லை மாற்றினர். முதலில் “நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் உடலை நாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம், நம் உடலைப் போற்றுவோம்” என்ற பொருளில் இப்பாடல் எழுதப்பட்டது. பிறகு, தன்னைப் பிரிந்த காதலன் மேல் ஒரு பெண் ஊடல் கொண்ட பாணியிலும் பின்னர் பல பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலை ஸ்பானிஷ் இசைநிறுவனம் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.

    அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் அதிகம் உள்ள ஃப்ளோரிடா மாநில வானொலி நிலையமொன்றின் நிகழ்ச்சித்  தொகுப்பாளருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. இப்பாடலை தங்கள் வானொலி நிலையத்தின் வழி ஒலி பரப்ப  விரும்பினார். ஆனால் பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பும் கொள்கையை ஏனோ அந்த வானொலி நிலையம் கொண்டிருக்கவில்லை. எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தானே ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ‘பேசைட் பாய்ஸ்’ இசைக்குழுவுடன் இணைந்து ஆங்கில வரிகளில் (Bayside Boys, Macarena English-language remix or Bayside Boys Mix) இப்பாடலை உருவாக்கி அமெரிக்க ‘பி ஜி எம்’ (BGM) நிறுவனம் மூலம் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த இப்பாடலுக்கு ராயல்டி தொகையின் மூலமே நல்ல வருமானம் ‘லாஸ் டெல் ரியோ’ இசைக்குழுவிற்கு கிடைத்தது. இதுவல்லவோ கனகதாரா சோஸ்திரம். பத்தாண்டுகளில் இப்பாடல் கொணர்ந்த வருமானம் 250,000 அமெரிக்க டாலர்கள். இப்பாடல் தந்த புகழின் காரணமாக அந்த ஊரின் மாநகராட்சியின் நடன அரங்கிற்கும் அப்பெயர் சூட்டி கெளரவிக்கப்பட்டது.

    பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் பெரிய இசைகுழுவினர்கள், நடன நிகழ்சிகள் என எங்கும் இப்பாடல் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. ஒருமுறை புகழ் பெற்ற அமெரிக்க யான்கீ (Yankee) பேஸ்பால் விளையாட்டரங்கில் விளையாட்டிற்கு இடையில் 50,000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  பாடல் ஒலித்தவுடன் எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.

    காணொளி: Macarena dance record set at Yankee Stadium: http://youtu.be/0NpscLUEx0Y

    விடாது கருப்பு! என்பது போல நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், கொண்டாட்டமும் இப்பாடல் இன்றி நடக்காது என்ற நிலைக்குப் போனது.

    காணொளி: National Down Syndrome Congress: http://youtu.be/gpu–VdIF78

    1996 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்காகத் தயாரான டெமாக்ரட் கட்சியின் கருத்தரங்கில் இப்பாடல் பாடி ஆடப்பட்டது. பில் கிளிண்டனும், அல்கோரும் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வாக்காளர்களைக் கவர முயற்சி செய்த கருத்தரங்கம் அது. அப்பாடலுக்கு ஹில்லாரி கிளிண்டன் நடனமாடியும், எப்பொழுதும் கலகலப்பின்றி இருக்கும் அல்கோர் ‘நானும் கூட மாக்கரீனா ஆடுவேனே’ என்று கூறி அசையாது சிறிது நேரம் சிலை போன்று நின்றுவிட்டு ‘மீண்டும் ஒருமுறை என் நடத்தைப் பார்க்க விருப்பமா?’ எனக் கேட்டு நகைச்சுவையுடன் கலாய்த்து மக்களைக் கவர முற்பட்டனர்.
    காணொளி: Delegates were shown dancing the Macarena on the convention floor: http://www.c-span.org/video/?74656-1/delegates-macarena-dance

    இப்பாடலின் முதல் மூன்று வரிகள் மிகவும் புகழ் பெற்றது.

    ஒலி வடிவில்: http://upload.wikimedia.org/wikipedia/en/5/50/Macarena_%28Bayside_Boys_Mix%29_sample.ogg

    Dale a tu cuerpo alegría Macarena
    Que tu cuerpo es pa’ darle alegría y cosas buenas
    Dale a tu cuerpo alegría Macarena
    ¡Eh,… Macarena! Aaay!


    காணொளி: Macarena: http://youtu.be/i1im74-XgYA
    “Dale a tu cuerpo alegria, que tu cuerpo es para darle alegria y cosas buenas, Macarena! Aaay” — என்றால் ஆங்கிலத்தில்

    “Give your body joy, because your body is for giving happiness and good things, Hey, Macarena! என்று பொருள்.

    இப்பாடலின் ஆங்கில வரிகள் …

    Give happiness to your body Macarena
    ’cause your body is for giving happiness and nice things to
    Give happiness to your body Macarena
    Heeey,… Macarena! Aaay!

    இந்தியாவில் பாலிவுட் வழியாக நுழைந்த இப்பாடலின் வரிகள்….

    Are Baba Are Baba, Kare Kya Diwana
    Ladka Jab Bhi Ladki Dekhe Gaye Yahi Gana
    Dil Deke Dena, Dil Le Le Lena


    காணொளி: Dil Le Le Lena (Macarena Song): http://youtu.be/0cMfviJD24I

    குஷி (2000) திரைபடத்தில் விஜய்யும் ஷில்பா ஷெட்டியும் “மாக்கரீனா….. மாக்கரீனா…..” என்று பாடி ஆடிய ஆட்டத்தில் மாக்கரீனா என்ற பெயரைத் தவிர அசல் மாக்கரீனா பாடலின் மெட்டும், நடன அசைவுகளும் இல்லை.

    http://youtu.be/04L4itcCc4Y
    காணொளி: Kushi (2000) movie: http://youtu.be/04L4itcCc4Y

    எனவே என் சொந்த முயற்சியாக …

    நல்லது ஒன்றையே நினைவில்வை
    நன்மைகள் செய்வதையே கருத்தில்வை
    நல்லது ஒன்றையே நினைவில்வை
    ஹே…மக்களே …

    என்று புனைந்துள்ளேன்.
    பாடல் வரிகளும், எப்படி ஆடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. அடுத்த கட்ட முயற்சியாக நாமே எப்படி ஆடலாம் எனப் பார்ப்போம். படிப்படியாக ஒவ்வொரு அசைவுகளும் பற்றியக் குறிப்பு கீழே:

    Dancing the macarena requires you to move with the 16 beats of the music. Here’s what to do:

    Beat 1: Put your right arm straight in front of you with your palm down.
    Beat 2: Put your left arm straight in front of you with your palm down.
    Beat 3: Put your right arm straight in front of you with your palm up.
    Beat 4: Put your left arm straight in front of you with your palm up.
    Beat 5: Grab the inside of your left elbow.
    Beat 6: Grab the inside of your right elbow.
    Beat 7: Grab the back of your neck with your right hand.
    Beat 8: Grab the back of your neck with your left hand.
    Beat 9: Put you right hand on your left front pocket.
    Beat 10: Put your left hand on your right front pocket.
    Beat 11: Put your right hand on your right rear pocket.
    Beat 12: Put your left hand on your left rear pocket.
    Beat 13: Move your bottom to the left.
    Beat 14: Move your bottom to the right.
    Beat 15: Move your bottom to the left again.
    Beat 16: Clap and turn to the right.

    கணினியை கற்றுக் கொள்ள செயல்முறைப் புத்தகங்கள் எப்படி சுலபமான வழியில்லையோ, அது போன்றேதான் நடனமும், நேரே களத்தில் இறங்க வேண்டியதுதான் சரியான முறை.

    அதற்கு உதவியாக இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள நல்ல காணொளி ஒன்றும் உண்டு…
    (எச்சரிக்கை: சுட்டியைச் சொடுக்கி காணொளி மூலம் நடனம் கற்றுக் கொள்ளும் முன், முதல் படியாக அறைக்கதைத் தாழிடவும். கணினியை விட்டு எழுந்து திடீரென ஆடத் தொடங்கினால், அருகில் உள்ளவர்கள் அரண்டு போய் உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று அவசர உதவி செய்தால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பழி என் மேல் விழுந்து… சட்டம் என் மேல் பாயக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கைதான் இந்த வேண்டுகோளுக்குக் காரணம்)


    காணொளி: How To Dance Macarena – http://youtu.be/OzV63IRR8BQ

    சிறுவயதில் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் செய்தது போலவே இருக்கிறதே என்று தோன்றினால் தவறு கிடையாது. அதுவேதான்….அதே அசைவுகள்தான். கொஞ்சம் அப்படி, இப்படி இடையை ஒடித்து, ஒடித்து, அசைத்து நளினமாக செய்தால் அது மாக்கரீனா நடனம். சிறுவர்களுக்கும் நல்வழி என்று கருதி கற்றுக் கொடுக்கலாம். பெரும்பாலும் அவர்கள்தான் நமக்கு இந்த நடனத்தைச்  சரியாக ஆடக் கற்றுக் கொடுப்பார்கள்.

    காலையில் உடல் நலம் மேம்பட சுக்குக் காப்பி குடிப்பீர்களோ, இல்லை சூரிய நமஸ்காரம்தான் செய்வீர்களோ அது தனிப்பட்டவர் விருப்பம். ஆனால் “நல்லது ஒன்றையே நினைவில்வை, நன்மைகள் செய்வதையே கருத்தில்வை, நல்லது ஒன்றையே நினைவில்வை,ஹே…மக்களே … ” என்று பாடி ஆடினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லதோர் பயிற்சிதான். எனவே……

    அனைவரும் “மாக்கரீனா” நடனம் ஆடி மகிழவும்.

    அடியோஸ் அமிகோஸ், ஹஸ்டா லாவிஸ்டா!!!
    (Adios Amigos, hasta lavista)

    தகவல் மற்றும் படங்கள் சேகரித்த இடங்கள்:
    Macarena Dance: https://en.wikipedia.org/wiki/Macarena_%28dance%29#Dance, http://en.wikipedia.org/wiki/Macarena_(song)

    “The Macarena” begins its reign atop the U.S. pop charts: http://www.history.com/this-day-in-history/quotthe-macarenaquot-begins-its-reign-atop-the-us-pop-charts

    The woman who inspired ‘La Macarena’: http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/19960909/LIFE/309099959

    Song facts – Macarena: http://www.songfacts.com/detail.php?id=2402

    Macarena: http://macarena.com/

    How to do the macarena: http://www.cnn.com/SHOWBIZ/9608/22/macarena/lessons.html

    Share
  • வாழ்க்கை நலம் – 49

    குன்றக்குடி அடிகள்

    49. இன்னா செய்யாமை

    திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின்மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

    நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும்.  ஆதலால்,  யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நமக்குத் தீங்கு செய்தாருக்குங்க்கூட நாம் திரும்பச் செய்யக் கூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமை தொடர் வரலாறாகிவிடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

    எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல. பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும்; அமைதிக்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

    பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகூட வேலை செய்யாது. ஆத்திரம் மட்டுமே வேலை செய்யும்; புத்தி முடங்கிப் போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம், சட்டங்களின் (அறத்தின் – அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்கு கூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவகமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

    ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள்  யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள்.  “நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நம்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக” என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.

    பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை – அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந்தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தணிக்கும் பணியே.

    எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொணாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல் முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு.

    முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடையதாகும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்”
    (திருக்குறள் –  314)

    என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் “ஒறுத்தல்” “அவர்நாண” என்ற சொற்கள் உடன்பாட்டுச் சொற்கள்.  இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

    அவனுடைய சினம் தணியும் . பழிவாங்கும் மனப்போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான – இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 48

    குன்றக்குடி அடிகள்

    48. கோபமா? வேண்டாம்!

    வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்து விடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

    ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாக கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

    இந்த இலகில் அனைவருமே தங்கள் மீது அதிக அசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள் மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

    ஆம்! நீண்டநாட்கள் வாழ வேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள்! கோபம் மரணத்தின் வாயில்! அதனால் இதயத் துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும்!

    ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதானத்தை இழக்கச் செய்யும்! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும்! கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

    மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா?  அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அது போலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும்! யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

    “எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்” என்றார் லூயிஸ்டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப் போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத்துடிப்பு உடையவராக விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.

    ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம்! ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்பட மாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 47

    குன்றக்குடி அடிகள்

    47. காத்துக் கொள்ளும் வழி

    வாழும் மனிதர்களில் யாருக்குத்தான் தற்காப்பு உணர்வு இல்லை! நூற்றுக்கு நூறு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்புபவர்கள் தாம்! ஆனால் வாழ்வியலறிவு பெறாததால் பலர் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பின்மையையே பெறுகிறார்கள்.

    பலர் எவற்றைப் பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அவையே அவர்களுக்குப் பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்து விடுவதை வாழ்க்கைப் போக்கில் காணலாம்.  சொத்து, பெருமை, புகழ் ஆகியன பாதுகாப்பு என்று தேடினாலும் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும்போது அவை பாதுகாப்பு தருவதில்லை.

    தான் நினைத்தவாறு நடக்காதபோது மனிதனுக்குக் கோபம் வருகிறது. கோபம் வெகுளி என்றும் கூறப்படும். கோபம் வந்தால் இதயத் துடிப்புக் கூடுகிறது; இரத்த ஓட்டம் கூடுகிறது. அது மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.  இதனால் இதயப் பாதிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; உடல் நலம் கெடுகிறது. உடல் நலக் கேட்டின் வழி மன நலம் கெடுகிறது.

    உடலும் மனமும் கெட்டால் அறிவு வேலை செய்யுமா? ஒரு போதும் செய்யாது, ஆதலால் கோபம் எதையோ காப்பாற்றிக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தோன்றுவது போலத் தெரிகிறது. ஆனால் அது உண்மையன்று. கோபத்தினால் இழப்பே ஏற்படுகிறது.

    கோபப்படுவதற்கு மாறாகத் திகைப்பும் படபடப்பும் அச்சமும் இல்லாமலிருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. எல்லாம் நன்றாக நடக்கும்; பாதுகாப்பும் இருக்கும். அடக்கப்பட்ட கோபம் ஆற்றலாக மாறும்! பொறுப்புணர்ச்சியைக்  கூட்டும்! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு!

    சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றன. பல ஆண்டுகள் வாழலாம். நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

    இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் கோபத்தை அடக்குதல் எளிதன்று? கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் காத்திருக்க வேண்டும்.

    கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியதுதான்! பிளேட்டோவைப் போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மௌனமாக இருக்கக் கற்றுக் கொள்வோம்! கோபத்தை வென்றுவிடலாம்.

    “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம்”
    (திருக்குறள் –  305)

    தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக!

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 46

    குன்றக்குடி அடிகள்

    46. வேண்டாம் சினம்!

    சினம் – கோபம் தீமையுள்  தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால்  இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை? எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

    காலம் காட்டும் கருவி – கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

    எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒரு பொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு  அடக்கி வைக்கப் பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப் போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.

    பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

    திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

    ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

    வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம்.  அதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
    (திருக்குறள் –  303)

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்.
    (திருக்குறள் –  309)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வரலாற்றின் வரலாறு – புத்தக மதிப்புரை

    மதிப்பு​ரை – தேமொழி 

     

    rasamaanikkanaar

     

    நூல்குறிப்பு:
    நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
    ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
    புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
    பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
    சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
    தில்லைநகர் மேற்கு
    திருச்சிராப்ப்பள்ளி – 620 018
    பதிப்பு: முதற் பதிப்பு
    பதிப்பு ஆண்டு: 2006
    மொத்தப் பக்கங்கள்: 160
    விலை: 100 ரூபாய்

    __________________________________

     

    முன்னுரை:

    தன்னிகரில்லாத் தமிழினம் பெற்ற
    தகையவர் கோடி இந்நாட்டில்
    அன்னவருள்ளும் அறிஞருக்கறிஞர்
    ஆயிரத்தொருவரே ஏட்டில்
    என்னிவன் பெருமை எனப் புவி வியக்க
    எண்ணிடும் சிலரிடை வந்து
    மன்னிய புகழில் வாழ்ந்தவர் எங்கள்
    ‘மா. ரா.’ எனும் புகழ்க் கோவே!
    – – கவியரசர் கண்ணதாசன்

    எனக் கவியரசர் பாராட்டியது போன்றே, தமிழ்மொழி பெருமைப் படும் வகையில் தமிழ்த் தொண்டாற்றியப் பல்வேறு அறிஞர்களுள் தனித்தன்மை வாய்ந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இன்றியமையாத இவரது சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், கால ஆராய்ச்சி, மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழ்மொழி இலக்கிய வரலாறு போன்ற வரலாற்றாராய்ச்சி நூல்கள் வரலாற்றுக் கோணத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பங்களிப்பினைப் பறை சாற்றும்.

    ஆசிரியர் குறிப்பு:
    பொதுவாக சாதனையாளராகக் கருதும் எந்த ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அறிந்து அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனைக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்க விழைவது சராசரி மனித இயல்பு. தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் வரிசையில் சிறப்பான இடம் பிடித்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm) அவர்களைப் பற்றி சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றியத் தகவல்களோ, அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளின் முக்கியத்துவமோ அதிகம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை. அக்குறையை நீக்க இந்நூலை எழுதியவர் அவரது அன்பு மகனார், திருச்சியில் புகழ் பெற்ற கண் மருத்துவராய்ப் பணியாற்றும் முனைவர். மருத்துவர். இரா. கலைக்கோவன் அவர்கள்.

    முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர் ஒருவர் நேர்முகக் காணல்கள், நூலாராய்ச்சிகள் போன்ற பல வழிகளிலும் தகவல் சேகரித்து வாய்வழியாகக் கேட்டறிந்த செய்திகளை வாழ்கை வரலாறாக அறியத் தருவதைக் காட்டிலும், குடும்பத்தினர் தாங்களே நேரே கண்டுணர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்து தகவல்களைச் சரிபார்த்து வழங்கும் வாழ்க்கை வரலாறு முழுமையானதாகும். இரா. கலைக்கோவன் அவர்கள் நூலை எழுத்து வடிவத்தில் அளித்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை மற்ற சகோதர சகோதரிகள் அளித்து தங்கள் தந்தையின் தமிழ்த் தொண்டு அனைத்தையும் பிழையின்றி, எந்த ஒரு தகவலும் விட்டுப் போகாதவாறு ஆவணப்படுத்த உதவியதாக நூலாசிரியர் கூறுகிறார்.

    நூல் வழங்கும் செய்திகள்:
    நூலின் உள்ளுறையில்; வரலாற்றின் வரலாறு, இலக்கிய ஆய்வில் முத்திரைப் பதிவுகள், சைவ சமயப் பகலவன், வரலாற்றுத் தடங்களில், திருக்கோயில் ஆய்வுகளும் கல்வெட்டுப் புலமையும், இளையோரின் இனிய நண்பர், மனிதரில் தலையாய மனிதரே என்ற ஏழு அத்தியாயங்களின் மூலம் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமுற மிக எளிய நடையில் சுவையுற வழங்கியுள்ளார் ஆசிரியர். அத்துடன் சுவை சேர்க்கும் மேலதிகத் தகவல்களாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், குடும்பம், இராசமாணிக்கனாரின் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி இராசமாணிக்கனாரின் நூல்கள், துணை நூற்பட்டியல், ஒளிப்படங்கள் ஆகிய இணைப்புகளும் தமிழறிஞரின் மறுபக்கத்தையும், அவரது படைப்புகள் அனைத்தையம் கொடுப்பதன் மூலமும் சிறப்பாக நிறைவு பெற்று அமைகிறது.

    வரலாற்றின் வரலாறு / டாக்டர் மா. இராசமாணிக்கனார் வாழ்க்கை வரலாறு:
    நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மாணிக்கம் என்பாருக்கும், தாயாரம்மாளுக்கும் கடைசி மகனாக கர்நூலில், 1907 ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் பிறந்தவர் இராசமாணிக்கனார். தந்தையின் தொழில் காரணமாக ஆந்திரா பகுதியில் பற்பல ஊர்களில் வாழ நேரிட்டதால் பிற்காலத்தில் தமிழறிஞகராக மாறிய இவர் நான்காம் வகுப்புவரை படித்தது என்னவோ தெலுங்குதான். பிறகு அவரது தந்தையாருக்கு மதுரைக்கு மாற்றல் ஏற்பட்ட பொழுது தீவிரமாக முயன்று தமிழ் கற்றுக் கொண்டார். தனது பத்து வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து தஞ்சையில் வசித்த அண்ணன் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி தடைபட்டு தடைப்பட்டுத் தொடர, இடையில் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார். பள்ளி படிப்பு முடிந்து இருபதாவது வயதில் சென்னை தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியறாகப் பணியைத் துவக்கினார்.

    தொடர்ந்து வித்துவான் பட்டம், பி. ஓ.எல், பட்டம், எல். டி பட்டம், எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பெரியபுராண ஆராய்ச்சியை ஆய்வு செய்து எம். ஓ.எல் பட்டம் பெற்றார். தனது நாற்பதாவது வயதில் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார். “சைவ சமய வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1959 ஆண்டு முதல் சென்னைப் பல்கலை கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்று, தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில் (26.5.1967) இதயநோயால் மரணமடையும் வரை அங்கு பணியாற்றினார். தனது வாழ்நாளில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நூற்றினைத் தாண்டுகிறது. அத்துடன் பாட நூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என இவருடைய பற்பலப் படைப்புகளின் பட்டியலை நூலின் பின் இணைப்பில் காணலாம். அப்படைப்புகளின் தலைப்புகளைப் படிக்குங்கால் இந்த அறிஞரின் பரந்துபட்ட அறிவினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நூலாசிரியர் சிரத்தையுடன் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது நூலின் இந்த இணைப்புப் பகுதி.

    வரலாற்றுத் தடங்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார்:
    தமிழிலக்கியம் பயின்று, தமிழாசிரியராக வளர்ந்து, தமிழறிஞராக மலர்ந்த போதும் இராசமாணிக்கனாரின் படைப்புகள் பெரும்பான்மையும் வரலாற்று நோக்கில் அமைந்தவை. நூற்றுக்கும் அதிகமாக இவர் எழுதிய நூல்களில் நாற்பத்து மூன்று நூல்கள் வராலாற்றைப் பொருளாகவும், மற்றுமொரு பதொனொரு இலக்கிய நூல்கள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். இப்பணியே இவரை தமிழறிஞர்கள் வரிசையில் தனித்துக் காட்டுவது. சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாற்பெரும் வள்ளல்கள்’ என்ற தலைப்பில் 1930 இல் வெளிவந்த இவரது முதல் நூலே வரலாற்று நூல்தான்.

    டாக்டர் மா. இராசமாணிக்கனாரது ‘மொஹெஞ்சொதரோ – அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூல் ஏழுமுறை மறுபதிப்பு செய்யப்பட்ட நூலாகும். மற்றறொரு சிறப்புமிக்க நூல் ‘பல்லவர் வரலாறு’. இந்நூலிற்காகக் களஆய்வுகள் பல மேற்கொண்டார். அறுபத்தாறு நூல்கள், இருபத்திமூன்று கல்வெட்டுத் தொகுதிகள், ஆராய்ச்சி இதழ்கள், திங்கள் இதழ்கள் எனப் பலப் பின்புலத் தகவல்களின் தொகுப்பாக உருவான நூலாகும் இவருடைய பல்லவர் வரலாறு. பல்லவர் நகரங்களை நேரிடையாகப் பார்வையிட்டு, கல்வெட்டுகளை ஆராய இவர் சென்ற ஊர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், வல்லம், மண்டகப்பட்டு, பாகூர், திருச்சி, திருவதிகை போன்றவைகளாகும். இந்நூலிற்காக அறிஞர்களால் பெரிதும் போற்றபட்டார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இந்நூலை ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் காட்ட, அவர் அதனை படிக்க எடுத்துச் சென்றுவிட்டாராம் . பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் இந்நூல் என்னிடமே இருக்கட்டும், ‘சிவகாமியின் சபதம் ‘எழுதத் தேவைப்படுகிறது, நீங்கள் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாவும் நூலாசிரியர் தகவல் கூறுகிறார்.

    கடிகை என்று தமிழிலும், கடிகா என்றும் அழைக்கப்படும் கடிகாசலம் உண்மையில் காஞ்சி அல்ல. கடிகா என்பது கல்லூரியையும் அது இருந்த ஊரையும் குறிக்கும். இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள கடிகாசலம் என்னும் சோழசிங்கபுரமே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து கூறியத் தகவல். இதற்கு இவர் கல்வெட்டு மற்றும் இலகியச் சான்றுகளையும் ஒப்பிட்டு வரையறுத்தார். இலக்கியம், கல்வெட்டு இரண்டையும் உரியவாறு ஒப்பிட்டு நோக்கினால் அவை இரண்டும் ஒன்றுபடும் இடங்கள் மிகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியமுடியும். ஆனால், இதற்கு இவ்விரு துறைகளிலும் ஆழ்ந்த பயிற்சி தேவை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவ்வாறு இருதுறைகளிலும் சிறந்து இருந்தது தமிழக வரலாற்றைப் பற்றியப் பல அறிய செய்திகளை நாம் அறிய பெரும் உதவியாக இருந்தது.

    பல்லவர் வரலாற்றைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘சோழ வரலாறு’ நூலுக்கு கோயில்களின் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டார். தமிழ்நாடு வரலாற்றாசிரியர்கள் எவரும் கருதாத இப்புதிய சிந்தனைக் கோணத்தினால் மிகவும் பாராட்டப் பெற்றார். பிற்காலச் சோழ வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்தது, வரலாற்று மூலமாக அமைந்தது, தமிழக கோயில்களே எனவும் இராசமாணிக்கனார் கூறினார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு 1943 இல் களஆய்வுக்கு சென்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார், எங்கெங்கு தோண்டினும் கிடைப்பது பழைய செங்கற்கள், மட்பாண்ட சிதைவுகள் எனக் குறிப்பிட்டதுடன், அவற்றுள் சில அருகாமையில் உள்ள புதுவை அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்திருந்ததையும், பத்தடி ஆழத்தில் கிடைத்த செங்கல்லின் அளவினையும் (நீளம் 9 அங்குலம், அகலம் 6 அங்குலம், கனம் ஒன்றரை அங்குலம் எனவும்) குறிப்பெழுதி வைத்துள்ளார். அத்துடன் சோழர் வரலாற்றை முழுமையாகக் கொண்ட இந்நூலில் இவர் நாயன்மார்களில் ஒருவராக சமயப் போர்வையில் சிக்கியிருந்த கோச்செங்கட்ச்சோழரை சோழ மன்னராகவும், பல்லவ அரசரான புத்தவர்மனுடன் போரிட்டவரே இந்த கோச்செங்கணான் எனவும் தெளிவுபடுத்தினார்.

    சுதந்திர இந்தியாவில் தமிழகமும் ஆந்திரமும் பிரிவினையால் எல்லைத் தகராறு பற்றிய விவாதங்கள் நிகழ்ந்த காலத்தில், ஆராய்ச்சி அடிப்படையில் ‘தமிழ்நாட்டு வட எல்லை’ என்ற நூலை எழுதினர். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், சென்னை மேலவை மற்றும் கீழவை உறுபினர்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது. கால ஆராய்ச்சி, தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், தமிழக வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்பன போன்ற நூல்கள் பலவற்றையும் வரலாற்று நோக்கில் எழுதினர். தமிழகத்துக் கோயில்கள் (கோயில்களின் விமானம் என்பதைக் குறிக்க இறையிடம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்தினார்), தமிழ் நூல்களில் சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள், கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும், வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும், தமிழ் நூற்செய்திகளும் கல்வெட்டுகளும், பற்பல ஊர்ப்பெயராய்வுகள் எனக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.

    இவருடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி எனும் இரண்டு ஆய்வு நூல்களும் தமிழ்நாட்டு கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. இதன் மூலம் ஒரு சமயத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கல்வெட்டுகளின் பின்னணியில் உருவாக்கித் தந்த ஒரே தமிழறிஞர் என்ற பெருமையையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெறுகிறார். வெகுக் குறைவான அளவிலேயே கல்வெட்டாய்வு,கோயிற்கலை ஆய்வில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழறிஞர்கள் ஈடுபடிருந்தனர். அவர்களில் களஆய்வு மேற்கொண்டோரும் குறைவு. அவர்களிலும் தமிழிலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்து தமிழக, இலக்கிய வரலாற்றினை எழுதப் போந்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவிர வேறொருவர் இருந்திருக்கவில்லை என்பதனை உறுதிபட உரைக்கலாம். ஆயினும் இவ்வாறு கல்வெட்டு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களஆய்வுகள் பலவும் மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி எடுத்தார், எங்கனம் அக்கலையைக் கற்றார் என அறியக்கூடவில்லை என்று அவர் மகனாராம் இந்நூலாசிரியர் இரா. கலைக்கோவன் வியப்புறுகிறார்.

    வரலாற்றின் வரலாறு பற்றி நூலாசிரியர் கருத்து:
    தனது விரிவான முன்னுரையில் தனது அன்புத் தந்தையார் பற்றியும் அவரது அன்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார் இரா. கலைக்கோவன். அத்துடன் நூலாசிரியர் இரா. கலைக்கோவன் தனது புகுமுக வகுப்பில் அவருடைய வரலாற்று ஆசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தாவின் பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, மருத்துவம் பயில்வதைக் குறிக்கோளாகக் கொண்ட தான் வரலாற்றில்தான் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அறிவியலைவிட அதிக மதிப்பெண்கள் வரலாற்றிலா என வியந்து கேட்டோருக்கெல்லாம் இராசமாணிக்கனார் தனது மகன் அவருடைய வரலாற்று ஆசிரியரின் தாக்கத்தால் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் மா. இராசமாணிக்கனார் அப்பொழுது தனது மகனின் அறிவுத் தேடலில் தானே கொண்டிருந்த தாக்கத்தை அன்று சற்றும் அறிந்திருக்கவில்லை போலும்.

    மருத்துவராக மாறிய பின்னரும் தனது தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றியே தமிழில் முனைவர் பட்டமும், தனது தந்தையின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் விதமாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நூலாசிரியர். தந்தையைப் போலவே கல்வெட்டுகள் காணுமிடமெல்லாம் சென்று அவற்றைப் பற்றியத் தகவல்களையும் சேகரித்து வருகிறார், அதன் மூலம் தமிழுக்கும் தமிழக வரலாற்றிற்கும் தனது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றார். தாம் அறிந்துகொண்டவற்றை வரலாறு.காம் (http://www.varalaaru.com) என்ற தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு அவற்றைப் பற்றியக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் கொண்ட இதழ்கள் மூலம் அத்தளத்தில் நாம் பல தவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்.

    “ஒரு மகனாய் அவரைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு வரலாற்று மாணவனாய் மாறியபோதுதான் அந்த மனிதரின் பாடுகள் புரிந்தது. எவ்வளவு குழப்பமான காலப் படப்பிடிப்புகள். காழ்ப்புணர்ச்சியும் கயமையும், மொழி, இனம், நாடு எனக் கோடுகள் கிழித்துக் கொண்டு, குழுச் சேர்த்து குதூகலிக்கும் சிறுமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில் நேர்மையும் துணிவும் மட்டுமே கருவிகளாய்ப் பயணப்பட்ட அந்த மனிதர் எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்பார்! எவ்வளவு துன்பங்களை, ஏளனங்களைச் சுமந்திருப்பார்! இருந்தபோதும் ‘இதுதான் வாழ்க்கை’ என்ற முடிவுடன்தானே அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவரை மாணவர்கள் மறக்கலாம்! வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கலாம்! ஏன் தமிழ் கூட மறக்கலாம்! ஆனால் காலம் மறக்காது. உழைப்பாளிகளைக் காலம் என்றென்றும் மதித்தே வந்திருக்கிறது”, என்று வியந்து தனது தந்தையின் கடின உழைப்பைப் போற்றும்  முகமாக “வரலாற்றின் வரலாறு” என்னும் நூலாக இராசமாணிக்கனாரின் வாழ்வைப் பதிவு செய்ததாகவும் பகர்கின்றார் நூலாசிரியர். இது ஒரு ஆய்வறிஞரைப் பற்றி ஓர் ஆய்வாளர் எழுதிய நூல் என்பது படிப்போருக்கும் விளங்கும். அத்துடன் நூலுக்குக் என்ன ஒரு பொருத்தமான தலைப்பினையும் இரா. கலைக்கோவன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

    நூல் வழங்கும் பாடம்:
    தனது தந்தையின் வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது, இராசமாணிக்கனாரின் வழிகாட்டியாக விளங்கிய திண்டுக்கல் ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் இராசமாணிக்கனாரை திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டைக்கு அழைத்துச் சென்றதையும், “படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப் பற்றி அறிய வேண்டும். இந்த அறிவு வேண்டற்பாலது. பலர் இவவற்றைக் கவனிப்பதே இல்லை” என்று கூறிய அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

    கல்வெட்டுகள் வழி வரலாற்றை அறிவது போலவே, இந்த வரலாற்று நூலைப் படிக்கும் பொழுதும், இராசமாணிக்கனாரும், அவர் மகனாரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்களே முக்கியக் காரணம் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். இதனால் ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டிகளுக்குள்ள பொறுப்பை நூலாசிரியர் குறிப்பிடாமலே நாம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வழியே இச்சான்றோர்களின் பணியினால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் தமிழுக்கும், தமிழின் வரலாற்றிக்கும், தமிழகத்தின் வரலாற்றிற்கும் தங்கள் பணியைத் தொடர வழிவகுக்கும் வகையில் இந்த நூல் பங்காற்ற வேண்டும் என்பதே என் போன்ற வாசகர் பலரின் விருப்பமாகவும் இருக்கும்.

    “மாணவர் தென்னிந்திய வரலாற்றையும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுகளையும் படித்துத் தம் தாய்நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பட்டதன் நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார் இராசமாணிக்கனார் தனது ‘ஆற்றங்கறரை நாகரிகம்’ என்ற நூலின் முன்னுரையில். அவருடைய இக்கனவு அவரது மகனாரின் ‘வரலாற்றின் வரலாறு’ நூல் படிபவர்களால் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வோம்.

    வரலாற்றின் வரலாறு நூலின் முதல் அத்தியாயத்தை மட்டும் ஐந்து பகுதிகளாகக் கீழ் காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்…
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=319
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=337
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=353
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=382
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=407

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 45

    குன்றக்குடி அடிகள்

    45. வாய்மையே பேசுக!

    சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. “சத்” என்ற சொல்லுக்குப் பொருள் “உள்ளது” என்பது.  உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

    உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincerely) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது, கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

    எனவேதான் “சத்தியமே கடவுள்” என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செலவழித்தார்.

    உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙனம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை.  மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

    உள்ளதை உள்ளவாறே  கூறுதல் பற்றி, மகாவீரர், “நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம்.  அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்” என்று கூறுவதை அறிக.

    ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் “வாய்மை” என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.

    வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

    ஒருவர் பிறிதொருவரைபற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

    “வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை யிலாத சொலல்”
    (திருக்குறள் –  291)
    என்று கூறுகிறது.

    வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

    நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளிய வேண்டும்.  செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல.  ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

    வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களையே கூறுக.

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share