வாழ்க்கை நலம் – 53

0

குன்றக்குடி அடிகள்

53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

இன்று “மானுடம்” உலகமகா உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம். சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகலைக் கடந்து மானுடம் “ஓருலகம்” என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.

இங்கனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள் – அடிமை முறை தோன்றியது.
இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

இங்ஙனம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டுமல்ல, மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செயத வரலாற்றை ஓர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை. மதம் இல்லை. உடைமை இல்லை, தொழில் இல்லை. பெருமை இல்லை. சிறுமை இல்லை. வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக் கூடாது.

சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (திருக்குறள் – 972) என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

பிறப்பின் அடிப்படையில் தொழில் இல்லை. தொழிலால் ஏற்படும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும், சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி அப்படி இருந்தால்தான் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்களையும் சிய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரி பெறுவதை – அடைவதை “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.