டி.விப்ரநாராயணன்

24-3-2014

அன்புள்ள சகோதரி மணி மொழிக்கு

நலம் உன் நலத்தை அறிய ஆவலாயுள்ளேன், சென்ற  கடிதத்தில் நலம் பற்றிக் குறிப்பிடாமல் கடிதத்தைத் தொடங்கிவிட்டாய். எப்படியிருக்கிறார்கள் சரவணனும் அருணாவும். பேரன் இளங்கோ நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறானா? உன் கணவர் மஸ்கட்டிலிருந்து வந்து விட்டாரா? இங்கு செந்தில் கனடா போயிருக்கிறான். அதனால் குழந்தையுடன் லக்ஷ்மி அவள் தாய் வீட்டிற்குச் சென்று இருக்கிறாள். அம்மாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார்.

சென்ற கடிதத்தில் தாய்மையைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தாய். நன்றாக இருந்தது. நானும் நம் நாடு “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதினேன். என் நண்பர் பாலாவிடம் காண்பித்தேன். நன்றாக இருக்கிறது என்று சொன்னார். கீழே அந்தக் கவிதையை தந்திருக்கிறேன். படித்துப் பார். உன் கருத்தைத் தெரிவி. உன் வீட்டு வேலைகளின் நடுவில் கவிதை, கட்டுரை என்று எழுதுகிறாய். உன்னைப் பாராட்டத்தான் வேண்டும். அம்மாவும் அப்பாவும் உன்னைப் பார்க்க அடுத்தமாதம் வரலாம் என்று நினைக்கிறார்கள். உன் கருத்தைத் தெரிவி.

இப்படிக்கு

உன் பிரியமுள்ள அண்ணன்

தமிழ்ச் செல்வன்

நம்நாடு அன்றும் இன்றும்

பாரத நாடு பழம்பெரும் நாடு

பாரினிலே அது சிறந்த நாடு

ஏரெடுத்து வாழும் மக்கள்

பேரெடுத்த  அருமை நாடு,

வேதங்கள் தோன்றிய நாடு – மன

வேதனைகள் நிறைந்த நாடு – பல

சோதனைகள் கண்ட நாடு – பல

சாதனைகள் படைத்த நாடு.

ஆலைகள் அமைந்த நாடு — கல்விச்

சாலைகள் உள்ள  நாடு – அழகுச்

சோலைகள் மல்கிய  நாடு – மனச்

சோலைகள்  இல்லா நாடு.

மக்கள் அதிகம் உள்ள நாடு

ஏக்கங்கள் நிறைந்த நாடு

ஊக்கங்கள்  குறைந்த நாடு – அதனால்

தாக்கங்கள் விளைந்த நாடு

சிற்பத்திற்குச் சிறந்த நாடு

வெற்பால் சூழ்ந்த நாடு

கற்பிற்கோர்  சிறந்த நாடு— ஆனால் பலர்

கற்பைச் சூறையாடிய நாடு.

மதங்கள் பல கண்ட நாடு

மதச் சண்டைகளும் காணும் நாடு

சாதிகள்  ஆயிரம் உள்ள நாடு

சாதிச் சண்டையும் மலிந்த நாடு

புனிதர்கள் தோன்றிய நாடு – பல

முனிவர்கள் வாழ்ந்த நாடு

மனிதத் தன்மை குறைந்த நாடு—அதனால்

புனிதத்  தன்மையும் குறைந்த நாடு

புண்ணியத் தலங்கள் உள்ள நாடு —  ஆனால்

புண்ணியம் இல்லாத நாடு

பெண்ணியம் குலைந்த நாடு—மனத்

திண்ணியம் இல்லாத நாடு

விழாக்கள் கொண்டாடும் நாடு – அதன்

விளைவையும் சந்திக்கும் நாடு

விளைநிலங்கள் அதிகம் உள்ள நாடு – அவற்றை

விளையாத நிலமாக மாற்றிய நாடு.

ஆன்றோர்கள் பிறந்த நாடு

சான்றோர்கள் வாழ்ந்த நாடு – நாட்டை

வென்றோர்கள்  இருந்த நாடு—ஆனால்  மனத்தை

வென்றோர்கள் இல்லாத நாடு.

நாட்டுப் பற்றை வளர்த்த நாடு

வீட்டுப் பற்றை ஒழித்த நாடு—இன்றோ

நாட்டுப் பற்று குறைந்த நாடு – தன்

வீட்டுப் பற்றை வளர்க்கும் நாடு

ஏற்றங்கள் நிறைந்த நாடு

குற்றங்கள் மலிந்த நாடு – கட்சிச்

சீற்றங்கள் காணும் நாடு—ஆனால் பல

மாற்றங்கள் கொணர்ந்த  நாடு

உண்மைக்குப் பெயர் பெற்ற நாடு

உண்மையைப் பெயர்த்தெடுத்த நாடு

வண்மைக்குச் சிறந்த  நாடு — ஆனால்

வன்மைக்கும் உள்ளாகும் நாடு

ஆட்சிகள் பல கண்ட நாடு

கட்சிகளும் பல கண்ட நாடு– மாட்சிமிக்க

ஆட்சி யில்லாத நாடு – மனச்

சாட்சி யில்லா நாடு

உழவர்கள் நிறைந்த நாடு

ஊழல்கள்  மலிந்த நாடு

உழைப்பாளிகளை மதிக்காத நாடு

உழைப்பையும் மதிக்காத நாடு

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க