வரலாற்றின் வரலாறு – புத்தக மதிப்புரை
மதிப்புரை – தேமொழி
நூல்குறிப்பு:
நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
தில்லைநகர் மேற்கு
திருச்சிராப்ப்பள்ளி – 620 018
பதிப்பு: முதற் பதிப்பு
பதிப்பு ஆண்டு: 2006
மொத்தப் பக்கங்கள்: 160
விலை: 100 ரூபாய்
__________________________________
முன்னுரை:
தன்னிகரில்லாத் தமிழினம் பெற்ற
தகையவர் கோடி இந்நாட்டில்
அன்னவருள்ளும் அறிஞருக்கறிஞர்
ஆயிரத்தொருவரே ஏட்டில்
என்னிவன் பெருமை எனப் புவி வியக்க
எண்ணிடும் சிலரிடை வந்து
மன்னிய புகழில் வாழ்ந்தவர் எங்கள்
‘மா. ரா.’ எனும் புகழ்க் கோவே!
– – கவியரசர் கண்ணதாசன்
எனக் கவியரசர் பாராட்டியது போன்றே, தமிழ்மொழி பெருமைப் படும் வகையில் தமிழ்த் தொண்டாற்றியப் பல்வேறு அறிஞர்களுள் தனித்தன்மை வாய்ந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இன்றியமையாத இவரது சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், கால ஆராய்ச்சி, மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழ்மொழி இலக்கிய வரலாறு போன்ற வரலாற்றாராய்ச்சி நூல்கள் வரலாற்றுக் கோணத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பங்களிப்பினைப் பறை சாற்றும்.
ஆசிரியர் குறிப்பு:
பொதுவாக சாதனையாளராகக் கருதும் எந்த ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அறிந்து அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனைக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்க விழைவது சராசரி மனித இயல்பு. தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் வரிசையில் சிறப்பான இடம் பிடித்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm) அவர்களைப் பற்றி சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றியத் தகவல்களோ, அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளின் முக்கியத்துவமோ அதிகம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை. அக்குறையை நீக்க இந்நூலை எழுதியவர் அவரது அன்பு மகனார், திருச்சியில் புகழ் பெற்ற கண் மருத்துவராய்ப் பணியாற்றும் முனைவர். மருத்துவர். இரா. கலைக்கோவன் அவர்கள்.
முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர் ஒருவர் நேர்முகக் காணல்கள், நூலாராய்ச்சிகள் போன்ற பல வழிகளிலும் தகவல் சேகரித்து வாய்வழியாகக் கேட்டறிந்த செய்திகளை வாழ்கை வரலாறாக அறியத் தருவதைக் காட்டிலும், குடும்பத்தினர் தாங்களே நேரே கண்டுணர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்து தகவல்களைச் சரிபார்த்து வழங்கும் வாழ்க்கை வரலாறு முழுமையானதாகும். இரா. கலைக்கோவன் அவர்கள் நூலை எழுத்து வடிவத்தில் அளித்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை மற்ற சகோதர சகோதரிகள் அளித்து தங்கள் தந்தையின் தமிழ்த் தொண்டு அனைத்தையும் பிழையின்றி, எந்த ஒரு தகவலும் விட்டுப் போகாதவாறு ஆவணப்படுத்த உதவியதாக நூலாசிரியர் கூறுகிறார்.
நூல் வழங்கும் செய்திகள்:
நூலின் உள்ளுறையில்; வரலாற்றின் வரலாறு, இலக்கிய ஆய்வில் முத்திரைப் பதிவுகள், சைவ சமயப் பகலவன், வரலாற்றுத் தடங்களில், திருக்கோயில் ஆய்வுகளும் கல்வெட்டுப் புலமையும், இளையோரின் இனிய நண்பர், மனிதரில் தலையாய மனிதரே என்ற ஏழு அத்தியாயங்களின் மூலம் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமுற மிக எளிய நடையில் சுவையுற வழங்கியுள்ளார் ஆசிரியர். அத்துடன் சுவை சேர்க்கும் மேலதிகத் தகவல்களாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், குடும்பம், இராசமாணிக்கனாரின் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி இராசமாணிக்கனாரின் நூல்கள், துணை நூற்பட்டியல், ஒளிப்படங்கள் ஆகிய இணைப்புகளும் தமிழறிஞரின் மறுபக்கத்தையும், அவரது படைப்புகள் அனைத்தையம் கொடுப்பதன் மூலமும் சிறப்பாக நிறைவு பெற்று அமைகிறது.
வரலாற்றின் வரலாறு / டாக்டர் மா. இராசமாணிக்கனார் வாழ்க்கை வரலாறு:
நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மாணிக்கம் என்பாருக்கும், தாயாரம்மாளுக்கும் கடைசி மகனாக கர்நூலில், 1907 ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் பிறந்தவர் இராசமாணிக்கனார். தந்தையின் தொழில் காரணமாக ஆந்திரா பகுதியில் பற்பல ஊர்களில் வாழ நேரிட்டதால் பிற்காலத்தில் தமிழறிஞகராக மாறிய இவர் நான்காம் வகுப்புவரை படித்தது என்னவோ தெலுங்குதான். பிறகு அவரது தந்தையாருக்கு மதுரைக்கு மாற்றல் ஏற்பட்ட பொழுது தீவிரமாக முயன்று தமிழ் கற்றுக் கொண்டார். தனது பத்து வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து தஞ்சையில் வசித்த அண்ணன் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி தடைபட்டு தடைப்பட்டுத் தொடர, இடையில் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார். பள்ளி படிப்பு முடிந்து இருபதாவது வயதில் சென்னை தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியறாகப் பணியைத் துவக்கினார்.
தொடர்ந்து வித்துவான் பட்டம், பி. ஓ.எல், பட்டம், எல். டி பட்டம், எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பெரியபுராண ஆராய்ச்சியை ஆய்வு செய்து எம். ஓ.எல் பட்டம் பெற்றார். தனது நாற்பதாவது வயதில் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார். “சைவ சமய வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1959 ஆண்டு முதல் சென்னைப் பல்கலை கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்று, தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில் (26.5.1967) இதயநோயால் மரணமடையும் வரை அங்கு பணியாற்றினார். தனது வாழ்நாளில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நூற்றினைத் தாண்டுகிறது. அத்துடன் பாட நூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என இவருடைய பற்பலப் படைப்புகளின் பட்டியலை நூலின் பின் இணைப்பில் காணலாம். அப்படைப்புகளின் தலைப்புகளைப் படிக்குங்கால் இந்த அறிஞரின் பரந்துபட்ட அறிவினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நூலாசிரியர் சிரத்தையுடன் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது நூலின் இந்த இணைப்புப் பகுதி.
வரலாற்றுத் தடங்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார்:
தமிழிலக்கியம் பயின்று, தமிழாசிரியராக வளர்ந்து, தமிழறிஞராக மலர்ந்த போதும் இராசமாணிக்கனாரின் படைப்புகள் பெரும்பான்மையும் வரலாற்று நோக்கில் அமைந்தவை. நூற்றுக்கும் அதிகமாக இவர் எழுதிய நூல்களில் நாற்பத்து மூன்று நூல்கள் வராலாற்றைப் பொருளாகவும், மற்றுமொரு பதொனொரு இலக்கிய நூல்கள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். இப்பணியே இவரை தமிழறிஞர்கள் வரிசையில் தனித்துக் காட்டுவது. சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாற்பெரும் வள்ளல்கள்’ என்ற தலைப்பில் 1930 இல் வெளிவந்த இவரது முதல் நூலே வரலாற்று நூல்தான்.
டாக்டர் மா. இராசமாணிக்கனாரது ‘மொஹெஞ்சொதரோ – அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூல் ஏழுமுறை மறுபதிப்பு செய்யப்பட்ட நூலாகும். மற்றறொரு சிறப்புமிக்க நூல் ‘பல்லவர் வரலாறு’. இந்நூலிற்காகக் களஆய்வுகள் பல மேற்கொண்டார். அறுபத்தாறு நூல்கள், இருபத்திமூன்று கல்வெட்டுத் தொகுதிகள், ஆராய்ச்சி இதழ்கள், திங்கள் இதழ்கள் எனப் பலப் பின்புலத் தகவல்களின் தொகுப்பாக உருவான நூலாகும் இவருடைய பல்லவர் வரலாறு. பல்லவர் நகரங்களை நேரிடையாகப் பார்வையிட்டு, கல்வெட்டுகளை ஆராய இவர் சென்ற ஊர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், வல்லம், மண்டகப்பட்டு, பாகூர், திருச்சி, திருவதிகை போன்றவைகளாகும். இந்நூலிற்காக அறிஞர்களால் பெரிதும் போற்றபட்டார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இந்நூலை ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் காட்ட, அவர் அதனை படிக்க எடுத்துச் சென்றுவிட்டாராம் . பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் இந்நூல் என்னிடமே இருக்கட்டும், ‘சிவகாமியின் சபதம் ‘எழுதத் தேவைப்படுகிறது, நீங்கள் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாவும் நூலாசிரியர் தகவல் கூறுகிறார்.
கடிகை என்று தமிழிலும், கடிகா என்றும் அழைக்கப்படும் கடிகாசலம் உண்மையில் காஞ்சி அல்ல. கடிகா என்பது கல்லூரியையும் அது இருந்த ஊரையும் குறிக்கும். இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள கடிகாசலம் என்னும் சோழசிங்கபுரமே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து கூறியத் தகவல். இதற்கு இவர் கல்வெட்டு மற்றும் இலகியச் சான்றுகளையும் ஒப்பிட்டு வரையறுத்தார். இலக்கியம், கல்வெட்டு இரண்டையும் உரியவாறு ஒப்பிட்டு நோக்கினால் அவை இரண்டும் ஒன்றுபடும் இடங்கள் மிகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியமுடியும். ஆனால், இதற்கு இவ்விரு துறைகளிலும் ஆழ்ந்த பயிற்சி தேவை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவ்வாறு இருதுறைகளிலும் சிறந்து இருந்தது தமிழக வரலாற்றைப் பற்றியப் பல அறிய செய்திகளை நாம் அறிய பெரும் உதவியாக இருந்தது.
பல்லவர் வரலாற்றைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘சோழ வரலாறு’ நூலுக்கு கோயில்களின் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டார். தமிழ்நாடு வரலாற்றாசிரியர்கள் எவரும் கருதாத இப்புதிய சிந்தனைக் கோணத்தினால் மிகவும் பாராட்டப் பெற்றார். பிற்காலச் சோழ வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்தது, வரலாற்று மூலமாக அமைந்தது, தமிழக கோயில்களே எனவும் இராசமாணிக்கனார் கூறினார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு 1943 இல் களஆய்வுக்கு சென்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார், எங்கெங்கு தோண்டினும் கிடைப்பது பழைய செங்கற்கள், மட்பாண்ட சிதைவுகள் எனக் குறிப்பிட்டதுடன், அவற்றுள் சில அருகாமையில் உள்ள புதுவை அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்திருந்ததையும், பத்தடி ஆழத்தில் கிடைத்த செங்கல்லின் அளவினையும் (நீளம் 9 அங்குலம், அகலம் 6 அங்குலம், கனம் ஒன்றரை அங்குலம் எனவும்) குறிப்பெழுதி வைத்துள்ளார். அத்துடன் சோழர் வரலாற்றை முழுமையாகக் கொண்ட இந்நூலில் இவர் நாயன்மார்களில் ஒருவராக சமயப் போர்வையில் சிக்கியிருந்த கோச்செங்கட்ச்சோழரை சோழ மன்னராகவும், பல்லவ அரசரான புத்தவர்மனுடன் போரிட்டவரே இந்த கோச்செங்கணான் எனவும் தெளிவுபடுத்தினார்.
சுதந்திர இந்தியாவில் தமிழகமும் ஆந்திரமும் பிரிவினையால் எல்லைத் தகராறு பற்றிய விவாதங்கள் நிகழ்ந்த காலத்தில், ஆராய்ச்சி அடிப்படையில் ‘தமிழ்நாட்டு வட எல்லை’ என்ற நூலை எழுதினர். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், சென்னை மேலவை மற்றும் கீழவை உறுபினர்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது. கால ஆராய்ச்சி, தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், தமிழக வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்பன போன்ற நூல்கள் பலவற்றையும் வரலாற்று நோக்கில் எழுதினர். தமிழகத்துக் கோயில்கள் (கோயில்களின் விமானம் என்பதைக் குறிக்க இறையிடம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்தினார்), தமிழ் நூல்களில் சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள், கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும், வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும், தமிழ் நூற்செய்திகளும் கல்வெட்டுகளும், பற்பல ஊர்ப்பெயராய்வுகள் எனக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.
இவருடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி எனும் இரண்டு ஆய்வு நூல்களும் தமிழ்நாட்டு கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. இதன் மூலம் ஒரு சமயத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கல்வெட்டுகளின் பின்னணியில் உருவாக்கித் தந்த ஒரே தமிழறிஞர் என்ற பெருமையையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெறுகிறார். வெகுக் குறைவான அளவிலேயே கல்வெட்டாய்வு,கோயிற்கலை ஆய்வில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழறிஞர்கள் ஈடுபடிருந்தனர். அவர்களில் களஆய்வு மேற்கொண்டோரும் குறைவு. அவர்களிலும் தமிழிலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்து தமிழக, இலக்கிய வரலாற்றினை எழுதப் போந்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவிர வேறொருவர் இருந்திருக்கவில்லை என்பதனை உறுதிபட உரைக்கலாம். ஆயினும் இவ்வாறு கல்வெட்டு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களஆய்வுகள் பலவும் மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி எடுத்தார், எங்கனம் அக்கலையைக் கற்றார் என அறியக்கூடவில்லை என்று அவர் மகனாராம் இந்நூலாசிரியர் இரா. கலைக்கோவன் வியப்புறுகிறார்.
வரலாற்றின் வரலாறு பற்றி நூலாசிரியர் கருத்து:
தனது விரிவான முன்னுரையில் தனது அன்புத் தந்தையார் பற்றியும் அவரது அன்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார் இரா. கலைக்கோவன். அத்துடன் நூலாசிரியர் இரா. கலைக்கோவன் தனது புகுமுக வகுப்பில் அவருடைய வரலாற்று ஆசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தாவின் பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, மருத்துவம் பயில்வதைக் குறிக்கோளாகக் கொண்ட தான் வரலாற்றில்தான் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அறிவியலைவிட அதிக மதிப்பெண்கள் வரலாற்றிலா என வியந்து கேட்டோருக்கெல்லாம் இராசமாணிக்கனார் தனது மகன் அவருடைய வரலாற்று ஆசிரியரின் தாக்கத்தால் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் மா. இராசமாணிக்கனார் அப்பொழுது தனது மகனின் அறிவுத் தேடலில் தானே கொண்டிருந்த தாக்கத்தை அன்று சற்றும் அறிந்திருக்கவில்லை போலும்.
மருத்துவராக மாறிய பின்னரும் தனது தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றியே தமிழில் முனைவர் பட்டமும், தனது தந்தையின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் விதமாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நூலாசிரியர். தந்தையைப் போலவே கல்வெட்டுகள் காணுமிடமெல்லாம் சென்று அவற்றைப் பற்றியத் தகவல்களையும் சேகரித்து வருகிறார், அதன் மூலம் தமிழுக்கும் தமிழக வரலாற்றிற்கும் தனது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றார். தாம் அறிந்துகொண்டவற்றை வரலாறு.காம் (http://www.varalaaru.com) என்ற தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு அவற்றைப் பற்றியக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் கொண்ட இதழ்கள் மூலம் அத்தளத்தில் நாம் பல தவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்.
“ஒரு மகனாய் அவரைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு வரலாற்று மாணவனாய் மாறியபோதுதான் அந்த மனிதரின் பாடுகள் புரிந்தது. எவ்வளவு குழப்பமான காலப் படப்பிடிப்புகள். காழ்ப்புணர்ச்சியும் கயமையும், மொழி, இனம், நாடு எனக் கோடுகள் கிழித்துக் கொண்டு, குழுச் சேர்த்து குதூகலிக்கும் சிறுமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில் நேர்மையும் துணிவும் மட்டுமே கருவிகளாய்ப் பயணப்பட்ட அந்த மனிதர் எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்பார்! எவ்வளவு துன்பங்களை, ஏளனங்களைச் சுமந்திருப்பார்! இருந்தபோதும் ‘இதுதான் வாழ்க்கை’ என்ற முடிவுடன்தானே அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவரை மாணவர்கள் மறக்கலாம்! வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கலாம்! ஏன் தமிழ் கூட மறக்கலாம்! ஆனால் காலம் மறக்காது. உழைப்பாளிகளைக் காலம் என்றென்றும் மதித்தே வந்திருக்கிறது”, என்று வியந்து தனது தந்தையின் கடின உழைப்பைப் போற்றும் முகமாக “வரலாற்றின் வரலாறு” என்னும் நூலாக இராசமாணிக்கனாரின் வாழ்வைப் பதிவு செய்ததாகவும் பகர்கின்றார் நூலாசிரியர். இது ஒரு ஆய்வறிஞரைப் பற்றி ஓர் ஆய்வாளர் எழுதிய நூல் என்பது படிப்போருக்கும் விளங்கும். அத்துடன் நூலுக்குக் என்ன ஒரு பொருத்தமான தலைப்பினையும் இரா. கலைக்கோவன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.
நூல் வழங்கும் பாடம்:
தனது தந்தையின் வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது, இராசமாணிக்கனாரின் வழிகாட்டியாக விளங்கிய திண்டுக்கல் ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் இராசமாணிக்கனாரை திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டைக்கு அழைத்துச் சென்றதையும், “படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப் பற்றி அறிய வேண்டும். இந்த அறிவு வேண்டற்பாலது. பலர் இவவற்றைக் கவனிப்பதே இல்லை” என்று கூறிய அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
கல்வெட்டுகள் வழி வரலாற்றை அறிவது போலவே, இந்த வரலாற்று நூலைப் படிக்கும் பொழுதும், இராசமாணிக்கனாரும், அவர் மகனாரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்களே முக்கியக் காரணம் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். இதனால் ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டிகளுக்குள்ள பொறுப்பை நூலாசிரியர் குறிப்பிடாமலே நாம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வழியே இச்சான்றோர்களின் பணியினால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் தமிழுக்கும், தமிழின் வரலாற்றிக்கும், தமிழகத்தின் வரலாற்றிற்கும் தங்கள் பணியைத் தொடர வழிவகுக்கும் வகையில் இந்த நூல் பங்காற்ற வேண்டும் என்பதே என் போன்ற வாசகர் பலரின் விருப்பமாகவும் இருக்கும்.
“மாணவர் தென்னிந்திய வரலாற்றையும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுகளையும் படித்துத் தம் தாய்நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பட்டதன் நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார் இராசமாணிக்கனார் தனது ‘ஆற்றங்கறரை நாகரிகம்’ என்ற நூலின் முன்னுரையில். அவருடைய இக்கனவு அவரது மகனாரின் ‘வரலாற்றின் வரலாறு’ நூல் படிபவர்களால் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வோம்.
வரலாற்றின் வரலாறு நூலின் முதல் அத்தியாயத்தை மட்டும் ஐந்து பகுதிகளாகக் கீழ் காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்…
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=319
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=337
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=353
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=382
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=407
தற்காப்பு கேள்வியில் என்னை மடக்கும் ‘வல்லமை’ மெதுவாக படி என்று ஏன் விரட்டுகிறது, ஆசிரியரே? எனக்கு ‘கிடு கிடு’ என்று படித்துத்தான் வழக்கம் தயை செய்து இத்தனை பாதுகாப்பு வேண்டாம். கண் வலிக்கிறது. இது நிற்க.
‘சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும்,..’ வாஸ்தவம். எங்க ஆசிரியராக்கும். விவேகானந்தா காலேஜில் படிக்கும் வகுப்பு, பிரிவு யாதாயினும் நாங்கள் யாவரும் மா.ரா. அவர்களிடமும் ஜெகன்னாதாச்சிரியார் அவர்களிடமும் சரண். எனக்கு ஐயாவை நன்றாகவே தெரியும். நகைச்சுவை மன்னர். இது நிற்க.
நீண்ட மதிப்பீடு ஆயினும், முழு நூலையும் படித்த நிறைவு. வேறு என்ன வேண்டும் பராபரமே.