தேவதாசியும் மகானும் – புத்தக மதிப்புரை
மதிப்புரை – தஞ்சை வெ. கோபாலன்
தேவதாசியும் மகானும்
எழுதியவர்: திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம்
தமிழாக்கம்: திருமதி பத்மா நாராயணன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.175
பக்கங்கள்: 216
தமிழாக்கம் வெளியான ஆண்டு: டிசம்பர் 2012
ஆசிரியர் குறிப்பு:
“தேவதாசியும் மகானும்” எனும் இந்த நூல் பெங்களூரு நாகரத்தினம்மாவின் வாழ்வும் காலமும் பற்றியது. இதனை ஆங்கிலத்தில் முதலில் எழுதிய ஆசிரியர் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம். 1966ஆம் வருஷம் பிறந்த இவர் இங்கிலாந்தில் பிறந்து சென்னையிலும் கொல்கொத்தாவிலும் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். விளம்பரத்துறை இவரது பணியை ஏற்றுக் கொண்டது. பின்னர் இவரது குடும்பத் தொழிலான Industrial Hydraulics and Software இவரை ஈர்த்துக் கொண்டது. ஆறு வயது முதல் கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டு இசை வரலாற்றையும் தொடர்ந்து கற்றார். பாடகர் சஞ்சய் சுப்பிரமணியத்துடன் இணைந்து இசைக்கான இணைய தளம் நடத்தினார். பின்னர் இவ்விருவரும் சேர்ந்து இசை பற்றி வினாடி வினா புத்தகம் ஒன்றை எழுதினார்கள். இசை பற்றி ‘சுருதி’ தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதி வருகிறார். தற்போது சுருதியில் ஆசிரியர் குழுவிலும் பங்கு பெறுகிறார். இவரது மனைவியின் எயர் சாரதா. மகன்கள் அவினாஷ், அபிநவா./ இந்த நூலின் முதல் ஆங்கில நூல் பதிப்பு East West Books (Madras) P Ltd. சார்பில் 2007இல் வெளிவந்தது.
தமிழ் மொழிபெயர்ப்பின் ஆசிரியர் திருமதி பத்மா நாராயணன். 1935இல் பிறந்த இவர் சென்னை வாசி. இவர் பல கதாசிரியர்களின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர்களில் சிலர் லா.ச.ரா., இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், அ.முத்துலிங்கம் ஆகியோர் நாவல்கள், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,க்ருஷாங்கினி, சோ.தர்மன், திலிப்குகார் ஆகியோரின் சிறுகதைகள். இவர் பல இதழ்களில் கதைகள் எழுதுகிறார்.
ஒரு மகானைப் போற்றி பிரபலப்படுத்திய தேவதாசிப் பெண்
எவர் ஒருவரின் பாடல்கள் கர்நாடக இசைக் கலைஞர்களால் நாள்தோறும் பாடப்படுகின்றனவோ, அந்த பாடல்களை அல்லது கீர்த்தனங்களை இயற்றிய அந்த மகான், தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கத்தையொட்டி மக்களால் மறக்கப்படுவதற்கு இடம் கொடுக்காமல் அவர் புகழை உலகறியச் செய்த ஒரு தேவதாசிப் பெண்ணின் வரலாற்று நூல் இது. நூலின் தலைப்பு “தேவதாசியும் மகானும்”. ஆங்கில மூலத்தின் ஆசிரியர் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் சுவை குன்றாமல் மொழியாக்கம் செய்திருப்பவர் திருமதி பத்மா நாராயணன்.
நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஒரு தேவதாசிப் பெண்ணுக்கும் மகானுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. நம் நாட்டின் மரபுப்படியும் இது சாத்தியமே. தாங்கொணா துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அவற்றை அறவே மறந்து ஓர் அறம் சார்ந்த பணியில் ஈடுபட்டு, ஒரு பெண் நினைத்தால் சாதித்துக் காட்டமுடியும் எனும் வைராக்கியத்தை விவரிப்பது இந்த நூல். அந்த மகான் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். கர்நாடக இசை மூவரில் பிரதானமானவர். தேவதாசி என்று குறிப்பிடப்படுபவர் அந்த மகானுடைய சமாதியை திருவையாற்றின் காவிரிக் கரையில் தேடிக் கண்டுபிடித்து ஆங்கோர் சமாதிக் கோயிலை உருவாக்கி இன்று உலகெங்கிலுமிருந்தும் ஆயிரமாயிரம் இசை ரசிகர்கள் வந்து ஆண்டுதோறும் இசை அஞ்சலி நிகழ்த்த மூல முதல் காரணகர்த்தா பெங்களூர் நாகரத்தினம்மா எனும் சாதனைப் பெண்மணி.
சுருங்கச் சொன்னால் பெங்களூர் திருமதி நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். சென்ற நூற்றாண்டின் முதல் பகுதியில் தேவதாசிகளின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, அவர்கள் அனுபவித்த சமுதாயக் கொடுமைகள் என்ன, அத்தனைக்கிடையிலும் அவர்களில் பெரும்பாலோர் மிகவும் கெளரவமான மதிக்கத்தக்க வகையில் வாழ்ந்த வரலாறு இந்த நூலில் காணக் கிடைக்கிறது. தேவதாசிகள் என்போர் ஆலயங்களில் இறைவனுக்காகப் பொட்டுக் கட்டுதல் எனும் சடங்கைச் செய்துகொண்டு, இறைவன் பணியில் ஈடுபடுவதோடு, இசை, நாட்டியம் ஆகிய கலைகளை மரபு கெடாமல் பாதுகாத்து இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்த்த பெருமைக்கும் உரியவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட தேவதாசி மரபில் உதித்த பெருந்தகைகள் ஏராளம். தங்கள் சொத்துக்கள் அனைத்தையுமே தாங்கள் பணிபுரியும் ஆலயத்தின் இறைவர்க்கென்றே ஈந்த கொடையாளர்களாகப் பலர் இருந்ததாக ஆய்வாளர் திரு பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தென் இந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இவர்கள் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக காவிரி பாய்ந்து வளம் பரப்பும் சோழ வளநாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு கோயிலின் பக்கம் விழும் அளவுக்கு ஆலயங்கள் அதிகம். அங்கெல்லாம் பணிபுரிந்த தேவதாசியர் அதிகம். அவர்களில் பெரும்பாலும் ஆடல் பாடலுக்குப் பெயர் போனவர்கள். பெண்கள் பிறந்தால் மகிழ்ச்சியடையும் வர்க்கம் அவர்கள் வர்க்கம். ஆண்கள் நாதஸ்வரம், தவில் போன்ற கலைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்து உலகப் புகழ்பெற்றிருக்கின்றனர்.
“ஒரு தேவதாசிக்குப் பெண் குழந்தை பிறப்பது என்றுமே மகிழ்ச்சி தரும் நிகழ்வு” என நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாற்றைத் தொடங்குகிறார் ஆசிரியர். மைசூர் மாநிலத்தில் புட்டலக்ஷம்மாவுக்கு அப்படிப் பிறந்தவர் நாகரத்தினம்மா. தாய் புட்டலக்ஷம்மா நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேச்சரம் கோயிலில் தேவரடியாராக பணிபுரிந்தார். அவர்கள் திருமணம் என்று செய்து கொள்ளாமலே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு வாழும் உரிமை பெற்றிருந்தனர். அப்படி அவர் உரிமையோடு வாழ்ந்தது மைசூரில் சுப்பராவ் என்பவரோடு எனும் விவரங்களைத் தருகிறார் ஆசிரியர்.
சுப்பராவோடு ஏற்பட்ட பிணக்கினால் மகள் நாகரத்தினம் ஒன்றரை வயதாக இருந்தபோது அவரை விட்டுப் பிரிந்தாள் புட்டலக்ஷ்மி. அதுகூட கொடுமை இல்லை; அத்தனை சொத்துக்களையும் பறித்துக் கொண்டு அவரை அடித்துத் துரத்தித் தெருக்களில் அலையவிட்ட கொடுமையும் நடந்தது. அப்படி அநாதையாகத் தெருவில் கைக்குழந்தையோடு விடப்பட்ட புட்டலக்ஷ்மியின் வைராக்கியம், தாய் சுமந்த துன்பங்களை உணர்ந்து மகள் கண்ணும் கருத்துமாக நாட்டியம், இசை இவற்றில் தேர்ந்த வரலாறு மிகவும் நயமாக விவரிக்கப்படுகிறது.
வாழ்ந்த இடத்தில் ஆதரவை இழந்து, காஞ்சிபுரம் சென்று அங்கு எதிர்பார்த்த உதவி கிடைக்காத நிலையில் மீண்டும் பெங்களூர் வந்து மகளுக்குக் கலைகளையும் பன்மொழிக் கல்வியையும் கொடுத்து அவளையும் ஒரு வைராக்கிய மனுஷியாக வளர்த்த பெருமை புட்டலக்ஷ்மியைச் சேரும். வயதிலும், கலைகளிலும் வளர்ந்த நாகரத்தினம் எப்படியெல்லாம் யாருடைய ஆதரவையெல்லாம் கேட்டுப் பெற்றார் என்பது இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வீணை தனம்மாள் அந்தக் காலத்தில் எத்தனை செல்வாக்கோடும் மரியாதையோடும் வாழ்ந்தார் என்ற விவரங்களை இந்நூலில் காணமுடிகிறது. தஞ்சை அரசவை நர்த்தகி வம்சத்தில் வந்தவர் இவர் என்பதும் இங்கு அறியக் கிடைக்கிறது. நாகரத்தினம்மாள் சென்னைக்கு வந்தபின் இந்த தனம்மாளின் ஆதரவு கிட்டியது. அந்த காலகட்டத்தில் நாகரத்தினம்மாளின் சங்கீதம் எப்படி இருந்தது என்பதை ஆசிரியரின் வாக்கால் பார்ப்பதென்றால், “நாகரத்தினம்மாவின் சங்கீதம் சற்றும் மரபு தவறாத சாஸ்திரிய சங்கீதமாக இருந்தது.” லய சுத்தம், குரலின் தனித்தன்மை, கம்பீரம் இவை வர்ணிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் தெரியுமோ தெரியாதோ, இவர் யதுகுல காம்போஜி ராகம் பாடாத கச்சேரியே இல்லை என்பதும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. அதோடு தன் சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்ள இராமநாதபுரம் சமஸ்தான இசைக் கலைஞர் பூச்சி சீனிவாச ஐயங்காரிடம் பயிற்சி பெற்ற விவரமும் கிடைக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இவர் தன்னுடைய இனிய சங்கீதத்தால் சென்னை நகரையே கலக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. வருமானம் அதிகரிக்கவே சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் சொந்த வீட்டையும் வாங்கியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் புகழ்வாய்ந்த திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் நடனம் ஒரு முக்கிய அம்சம் என்பதும், அங்குள்ள சிவபெருமானே அஜப நடனம் ஆடிக் கொண்டிருப்பவர் என்பதும், அவர் பெயரில் இயற்றப்பட்ட தியாகேசர் குறவஞ்சி எனும் இசை நாட்டிய நாடகம் பற்றியும் இங்கு குறிப்பிடப்படுகிறது.
இவர் பிறந்த மைசூர் மாநிலத்தில் 1909இல் ஆலயங்களில் தேவதாசிகளின் பணிகள் நிராகரிக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. நாட்டியம் ஆடுவதை நிறுத்தியபின் நாகரத்தினம்மாள் உடல் பெருக்கத் தொடங்க இசையில் மட்டும் அவர் காட்டிய ஆர்வம் தெரியவருகிறது. பெயரைச் சுருக்கிக் கொள்ளும் வழக்கமும் இவரைப் பிடித்துக் கொள்ள கோலார் நாகரத்தினம் எனும் பெயரை கே.என்.ஆர். என்று ஆன விவரமும் அறியக் கிடைக்கிறது.
இவரைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அது “26 வருஷங்களில் நாகரத்தினம்மா 146 நகரங்களில் கச்சேரிகள் செய்துள்ளார்” அதுமட்டுமல்ல தமிழ்கூறு நல்லுலகில் அவர் செய்த கச்சேரிகளின் எண்ணிக்கை 1235 அவற்றில் சென்னை மாகாணத்தில் மட்டும் 849 கச்சேரிகள் எனும் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி இவருடைய நெருங்கிய தோழி என்ற செய்தியும் தெரிகிறது.
சென்னையில் செல்வத்தோடு தனிமையில் வாழ்ந்த ஒரு பெண்மணிக்கு எத்தனை இன்னல்கள் வந்து சேரும் என்பதை உணர முடிகிறது. இவர் தனிமையில் இருப்பதால் துணைக்கு மீனாட்சிசுந்தரம் எனும் ஆசிரியர் இவருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார். தனிமையைப் போக்க இவர் நாயொன்றையும் கிளியொன்றையும் வளர்த்த விவரம் கிடைக்கப் பெறுகிறது. இந்த காலகட்டத்தில்தான் தியாகராஜ சுவாமிகளின் புகழ் பரவத் தொடங்கியது. 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்து முன்னிரவொன்றில் இவர் கண்ட ஒரு கனவில் தியாகராஜ சுவாமிகள் கையைத் தூக்கி இவரை ஆசீர்வதிப்பது போல கண்டது இவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சந்தர்ப்பவசத்தால் அந்த சமயத்தில் திருவையாற்றில் சத்குரு தியாகராஜருடைய சமாதி சிதிலமடைந்து அடையாளம் தெரியாமல் இருக்கும் செய்தி வந்தடைந்ததாம்.
தியாகராஜ சுவாமிகள் அமரத்துவம் அடைந்தபின் அவரது உடல் பாவாசாமி அக்ரகாரத்துக்கு அருகில் காவிரிக் கரையில் அடக்கம் செய்யப்பட்டதும் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு அங்கு ஒரு சாதாரண கட்டடம் அமைக்கப்பட்டது பற்றியும், 1904 முதல் தில்லைஸ்தானம் ராம ஐயங்காரின் வாரிசுகள் அவருக்கு ஆராதனைகள் செய்யத் தொடங்கியது முதல் எல்லா விவரங்களும் விவரமாக எழுதப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்ல தியாகராஜருக்கு ஆராதனை செய்வதில் பெரிய கட்சி, சின்ன கட்சி என்று இருவேறு கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆராதனை செய்த காட்சிகளும் இதில் விரிகின்றன. அப்போதுதான் தியாகராஜரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட நாகரத்தினம்மாள் தன்னை அவர் பணியில் அர்ப்பணித்துக் கொள்கிறார்.
தியாகராஜ சுவாமிகள் சமாதியின் நிலைமை குறித்து நாகரத்தினம்மாளுக்கு எடுத்துரைத்தவர்கள் முனிஸ்வாமி நாயுடு, நாகராஜ பாகவதர் ஆகியோர். திருவையாற்றை அடைந்து அங்கு போய் தியாகராஜரின் சமாதியைத் தேடி அலுத்துப் போன அழகை விரிவாக எடுத்துரைக்கிறார். சமாதி இருந்த இடம் கவனிப்பாரற்று மோசமான செயல்களுக்கு இருப்பிடமாக ஆகியிருந்தது கண்டு மனம் பதைக்கிறார். சுற்றிலும் முட்புதர்கள், மூங்கில் குத்துகள், விஷப்பாம்புகள் இருந்தது படம்பிடித்துக் காண்பிக்கப்படுகிறது.
திருவையாற்றில் இவருடைய பணி ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பிரிந்து கிடந்த இரு கட்சியினர் இவரை முதலில் அண்டவிடவில்லை. பெண்கள் ஆராதனைகளில் பாடக்கூடாது என்ற எழுதப்படாத விதி கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்ற இவர் அவர்களிடம் போராடவில்லை, மாறாக பெண்களுக்கென்று தனியாக ஒரு ஆராதனை நடத்திய விதம், அதற்காக நாற்பத்தி இரண்டு ஊர்களிலிருந்து இசைக் கலைஞர்களான தேவதாசியரை வரவழைத்து காவிரியில் நீராடி, ஐயாறப்பர் ஆலயத்தில் வழிபாடு நடத்தி பகல் ஓய்வுக்குப் பின் சமாதியில் அவருக்கு ஆராதனை எடுத்த காட்சியை நேரில் வந்து காண வெட்கப்பட்டோ என்னவோ அருகில் இருந்த செவ்வாய்க்கிழமை படித்துறையில் நின்று உள்ளூர் மக்கள் வேடிக்கை பார்த்த வரலாறு சிரிப்பை வரவழைக்கக்கூடியதாக இருக்கிறது. மனிதருள் ஒரு பிரிவினரை எந்த அளவுக்கு அவர்கள் இளக்காரமாகப் பார்த்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.
ஏற்கனவே இருக்கும் இரு கட்சிகளோடு நாகரத்தினம்மாவின் பெண்கள் கட்சியும் சேர்ந்து கொள்ளவே தியாகராஜர் ஆராதனை மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. முதல் இரு கட்சிகளிலும் கச்சேரி செய்ய முடியாத ஆண் பாடகர்கள் நாகரத்தினம்மாவின் பெண்கள் கட்சியில் சேர்ந்து பாடத் தொடங்கினார்கள். ஐ.சி.எஸ்.அதிகாரி எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி, இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயர் ஆகியோர் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து மூன்றையும் ஒன்றாக்கினர். இந்த முயற்சியில் நாகரத்தினம்மாளின் சாதனை ஆராதனையில் பெண்களுக்கும் பாடும் உரிமையைப் பெற்றுத் தந்தது. பெண் உரிமை பேசுவோர் இந்த விஷயத்துக்காகவாவது இவர் புகழைப் பாடவேண்டும்.
தியாகராஜ சுவாமிகளுடைய சமாதியை அமைக்க அவர் பட்டபாடு, தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று அதற்காகச் செலவு செய்தது, பல ஊர்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்து அதில் வரும் பணத்தையெல்லாம் சமாதி அமைக்க செலவழித்தது, திருவையாற்றிலேயே வந்து தங்கி தான் எடுத்த பணியை முடித்தது, அந்த மகானுடைய சமாதிக்கு எதிரிலேயே தன்னையும் அடக்கம் செய்யச் சொல்லி தன் பக்தியை வெளிப்படுத்தியது உட்பட இனி வரும் சந்ததியினர் உணர்ந்து போற்றத்தக்க வகையில் இந்த வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் திருவையாற்று வைதீகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இவரிடம் பாட்டு சொல்லிக் கொள்ள தயங்கியிருக்கிறார்கள். என்ன கொடுமை!
இந்த நூலை எழுத திருவையாறு, தில்லைஸ்தானம் ஆகிய இடங்களில் பலர் ஆசிரியருக்கு ஒத்துழைப்பு தந்திருக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் நன்றி பாராட்டியிருக்கிறார் ஆசிரியர். நிறைவாக, மன நிறைவோடு சொல்லவேண்டிய செய்தி, இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்ட உணர்வுகளைச் சற்றும் மாற்றாமல் அப்படியே, தமிழ் மொழியிலேயே நேரடியாக எழுதப்பட்ட நூலைப் போல மொழிபெயர்த்திருக்கிற திருமதி பத்மா நாராயணன் அவர்களுக்கும் ஆங்கில மூல நூலை எழுதிய வெங்கடகிருஷ்ணன் அவர்களின் கடின உழைப்புக்கும் தமிழ் மக்கள், இசைப்பிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும்.
கதை மாந்தரும் அருமை. மூலமும் அருமை. மொழியாக்கமும் அருமை. மதிப்பீடும் அருமை.