Tag: சிறீ சிறீஸ்கந்தராஜா

  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    ஒளியைத் தேடி

    நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.

    கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

    பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

    பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.

    பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.

    அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.

    எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.

    அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.

    தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.

    பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.

    “பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.

    பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.

    “பூமணி! நான் …. …. உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”

    நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.

    அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.

    அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

    அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

    அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.

    “பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”

    பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.

    அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.

    ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.

    எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்

    நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!

    நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?

    பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

    பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.

    அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.

    நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.

    நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.

    குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.

    நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன். பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!

    சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?

    சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”

    “இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்….”

    சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?

    சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.

    அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.

    “பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”

    அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.

    என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.

    அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.

    எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.

    “பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”

    ‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.

    சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.

    அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.

    இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.

    அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.

    உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.

    அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.

    இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?

    நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன்.

    ****

    http://www.sirukathaigal.com/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

    ****

    ஞானம் (இதழ்)

    https://ta.wikipedia.org/s/a7c

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    Share
  • தமிழிசைப் பண்கள் – முத்துத்தாண்டவர்

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    தமிழிசைப்பண்கள்
    **********************

    இசைத்தமிழின் தொன்மை – 80
    பழந்தமிழிசையில் பண்கள் 

    தமிழ் மும்மூர்த்திகள்
    *************************

    முத்துத் தாண்டவர் (1525-1625)
    அருணாசலக் கவிராயர் (1711-1779)
    மாரிமுத்துப் பிள்ளை (1712-1787)

    முத்துத் தாண்டவர் (1525-1625)

    muthuமுத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி ஆவார். ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.

    ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள்:

    அருணாசலக் கவிராயர் (1712-1779),
    மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787),
    முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.

    தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். 

    அநுபல்லவியை இணைத்து, பல்லவி – அநுபல்லவி – சரணம் என்ற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். 

    பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். 

    இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். 

    பல்லவி-அநுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

     இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். 

    மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். 

    முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். 

    இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில: 

    பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற்,
    புவனத்தில் வேறுமுண்டோ.

    இராகம் கல்யாணி, தாளம்ஜம்பை தாளம்

     ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு
    தெய்வ மிப்படியுண்டோ.

    இராகம் – தோடி, தாளம் – ஏக தாளம்

     சேவிக்க வேண்டுமையா – சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. இராகம் -ஆந்தோளிகா, தாளம் ஆதி தாளம். 

    சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும்.
    இராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுடை தாளம் 

    நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. இராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம் 

    இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். 

    தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. 

    சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தைப் பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். 

    அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. 

    ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். 

    இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். 

    அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். 

    தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். 

    தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி. 

    முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. 

    ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். 

    நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். 

    ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது. ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. 

    ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். 

    1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.

     

     

     

    Share
  • கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I

    “ஈழத்து இலக்கியப் பரப்பு”
    *********************************
    கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I 
    (ஏப்ரல் 5, 1933 – டிசம்பர் 6, 1982) 
    ***********************

    kailaspathy 1

    இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.

    இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து.

    தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.

    பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும்தொடர்ந்தார்.

    பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத்தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார்.

    அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான
    க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம்,
    சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல்
    இவருக்குக் கிடைத்தது.

    பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற “லேக் ஹவுஸ்” பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.

    இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார்.

    இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

    பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, “Tamil Heroic Poetry” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார்.

    1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின்
    யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது.

    அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார்.

    ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

    ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

    தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது.

    இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர்,
    அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

    இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

    இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது.

    இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது.

    1982ல், “ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்” என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

    “அடியும் முடியும்”,
    “பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்”,
    “தமிழ் நாவல் இலக்கியம்”,
    “இலக்கியச் சிந்தனைகள்”
    என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

    மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர்,
    49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.

    தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில்
    திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்.
    ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்.

    “கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்.

    இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்.

    சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.

    தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்.

    ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர்.

    இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்.

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்.
    இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
    இத்தனை பெருமைக்கும் உரியவர் “ஈழம் தந்த கொடை’ கலாநிதி க.கைலாசபதி.

    மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில்
    இளைய தம்பி கனகசபாபதி தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார்.

    தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார்.

    தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார்.

    பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

    பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

    பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

    பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார்.

    “தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து “கலாநிதி’ (முனைவர்) பட்டம் பெற்றார்.

    கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார்.

    சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார்.

    வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

    “தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது.

    கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

    இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.

    அமெரிக்காவிலுள்ள “அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

    இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார்.

    அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் “புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்’ என  இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

    யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு,
    இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு,
    இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு,
    இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு,
    ட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.

    “இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது.

    இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்” என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.

    “கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்.

    ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

    “உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்” என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

    “உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன.

    இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன.

    ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை” என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    இவரது நூல்கள்
    *************************
    பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்,
    தமிழ் நாவல் இலக்கியம்,
    ஒப்பியல் இலக்கியம்,
    அடியும் முடியும்,
    இலக்கியமும் திறனாய்வும்,
    கவிதை நயம்,
    சமூகவியலும் இலக்கியமும்,
    நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,
    திறனாய்வுப் பிரச்சினைகள்,
    பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,
    இலக்கியச் சிந்தனைகள்,
    பாரதி ஆய்வுகள்,
    ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,
    இரு மகாகவிகள்,
    சர்வதேச அரசியல் நிகழ்வுகள்
    முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.

    இலங்கையில் இருந்து வெளிவந்த,
    தொழிலாளி,
    தேசாபிமானி,
    செம்பதாகை,
    ரெட்பானர்
    முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

    பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

    தமிழ்நாட்டு இதழ்களான
    தாமரை,
    சாந்தி,
    சரஸ்வதி,
    செம்மலர்,
    தீக்கதிர்,
    ஜனசக்தி,
    ஆராய்ச்சி
    முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் “தமிழ்நாவல் இலக்கியம்’. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.

    கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.

    முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

    தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து
    எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

    தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.

    தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

    நன்றி:
    விக்கிபீடியா
    பி. தயாளன் – தினமணி

    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    09/09/2017

    Share
  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா 

    ஞானசேகரன் சிறுகதைகள் –      தி. ஞானசேகரன்

    அணிந்துரை: பேராசிரியர் க. அருணாசலம்
    (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

    1

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ்இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது பல உண்மைகள் புலப்படும். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம். காலத்தால் மிக முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன்றி அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கும் மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன என்னும் உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். ஒருசிலர் அவற்றை ஏற்கத் தயங்கினர். ஆயின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாண்டு காலத் தேடுதல் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள் முதலியவற்றின் மூலமாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “முந்து தமிழ்க்கல்வெட்டுக்கள்”என்னும் நூல் சங்ககால இலக்கியங்களை அலட்சியம் செய்தவர்களை வாய்மூடச் செய்துள்ளது.

    சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியைக் கொண்டுள்ள சங்ககாலத்தில் இலக்கியங்களைப் படைத்தளித்த இலக்கிய கர்த்தாக்களைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். வறுமையில் வாடிய புலமையாளர்களும் அறிவுடை மன்னர்களும் புலமைமிக்க பெண்களும் கணக்காயர்களும் வணிகர்களும் எனப் பல திறத்தினரும் இலக்கிய கர்த்தாக்களாக விளங்கியுள்ளனர் என்பதை நாம் அறியமுடிகின்றது. இதே நிலைமையை நாம் தொடர்ந்து இற்றைவரை காணலாம். சோதிட வல்லுநர்களும் வைத்தியர்களும் இலக்கியங்களைப் படைத்தளித்தமையை ஈழத்தின் இடைக்காலத் தமிழ் இலக்கிய உலகிற் காணலாம்.

    ஈழத்திலே இருபதாம் நூற்றாண்டிலும் இன்றும்கூட வைத்தியத் துறையைச் சார்ந்த நந்தி, ஜின்னா ஷரிபுத்தீன், தி. ஞானசேகரன், எம். கே. முருகானந்தன், க. சதாசிவம், எஸ். முருகானந்தன் போன்றோர் வைத்தியத் துறையில் மட்டுமல்லாது நவீன இலக்கியத் துறையிலும் தமது தடங்களைப் பதித்துள்ளமை மனங்கொளத்தக்கது.

    2

    நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்துவரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்; ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்டகாலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அனுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

    ஞானசேகரன் தமது “வாசனை” என்னும் சிறுகதையின் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது. “……தாத்தா என்மீது அளவுகடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப் பருவம்வரை அவரது அரவணைப்பிலும், நிழலிலும்தான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப் போய்விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வுகூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும். …தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கிப் பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பலமுறை நான் எண்ணியதுண்டு.”

    1960களிலிருந்து இற்றைய வரை எழுதிவரும் ஞானசேகரனது படைப்புகளில் மானுடத்தை இதய சுத்தியோடு நேசிக்கும் உயர் பண்பையும் சிறுமைகண்டு பொங்கியெழும் இயல்பையும் சமுதாயத்தில் நிலவிவரும் ஊழல்களையும் போலித்தனங்களையும் கண்டிக்கும் பாங்கினையும் மாறிவரும் கருத்தோட்டங்களை உள்வாங்கிப் புதியதொரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்னும் பேராவலையும் ஒருங்கே தரிசிக்க முடிகின்றது. அவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவராயினும் சாதி, மத பேதமற்ற சமுதாயத்தைக் காணவிழையும் முனைப்பினை அவரது சிறுகதைகள் பலவும் நாவல்கள் சிலவும் வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.

    1977ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘புதிய சுவடுகள்’ என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’என்னும் நாவலும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்ட அவர், வயதான நிலையிலும்கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

    தமது புனைகதைகள் மூலம் நீண்டகாலமாகவே ஈழத்து இலக்கிய உலகிலும் தமிழகத்து இலக்கிய உலகிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். புனைகதைகளைப் படைப்பதுடன் மட்டும் அமையாது கடந்த சில ஆண்டுகளாக ‘ஞானம்’ என்னும் தரமானதோர் இலக்கியச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வருகிறார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இச்சஞ்சிகையின் தரம் உயர்ந்து செல்வதனையும் பயன்மிக்க நேர்காணல்களும் விவாதங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கலாம்.

    ஞானம்’சஞ்சிகையின் தரத்தின் காரணமாகக் குறுகிய காலத்துள் இலங்கை, இந்தியா என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைக் கடந்து, உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இது வலம்வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சஞ்சிகைமூலம் ஞானசேகரனின் சாதனைகளும் புகழும் உலகெங்கும் பரவிவருகின்றன. எழுத்தாளர் ஞானசேகரனிலும் பார்க்க ‘ஞானம்’சஞ்சிகையின் ஆசிரியரது பெயரே இன்று இலக்கிய உலகில் அதிகம் பிரபலமடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

    தமிழ் இலக்கிய உலகம் ஆரம்பத்தில் ஞாசேகரனைத் தரமானதொரு படைப்பாளியாகவே இனங்கண்டிருந்தது. ஆயின் ‘ஞானம்’சஞ்சிகை வெளிவரத் தொடங்கியதிலிருந்து இதழ்கள்தோறும் அவர் முன்வைக்கும் கருத்துகள், நேர்காணலின்போது ஆய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் பாங்கு, தொடுக்கும் வினாக்கள், மணிவிழா நாயகர்களையும், மறைந்த எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும்போதும் நினைவுகூரும்போதும் வெளிப்படுத்தும் கருத்துகள், வாசகர்களின் கேள்விக்கான பதில்கள் முதலியவற்றின் மூலம் அவரது எழுத்தாற்றலை மட்டுமன்றி விசாலித்த அறிவையும் இலக்கியப் புலமையையும் எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும் இனங்காணும் ஆற்றலையும் கண்டு இலக்கிய உலகம் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டிருக்கிறது.

    3

    இச்சிறுகதைத் தொகுதியிலமைந்துள்ள கதைகள் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு சில உண்மைகள் புலப்படும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி எனவும் அவ்வக்கால மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்கள் எனவும் சமுதாயத்தை விமர்சனம் செய்யும் சாதனம் எனவும் சமுதாயத்தை அது இருக்கின்ற நிலையிலும் பார்க்க உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முனையும் வலிமை வாய்ந்த ஆயுதம் எனவும் பலபடக் கூறுவர். மேற்கண்ட கருத்துகள் யாவும் ஞானசேகரனின் சிறுகதைகளுக்கும் பொருந்தக் கூடியனவே.

    இன்றைய யாழ்ப்பாணத்து இளந்தலைமுறையினர் பலரும் அறிந்திராத செய்திகள் பலவற்றைப் பல சிறுகதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமகாலப் போர்ச்சூழலைச் சில சிறுகதைகள் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சமுதாயச் சிக்கல்களைப் பல சிறுகதைகள் விமர்சனம் செய்கின்றன. மலையகத்தையும் கொழும்பு மாநகரையும் மையப்படுத்திப் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும் தொடர்புபடுத்தும் அகலுலகத் தொடர்புகொண்ட சிறுகதையொன்றும் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. இச்சிறுகதைகளை ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்குப் பிறகு வரும் வாசகர்கள் படிக்கும்போது இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளத் தவறமாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.

    இத் தொகுதியிலமைந்துள்ள சிறுகதைகளைத் தெளிவு கருதிப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்:

    (அ) யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (ஆ) மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (இ) கொழும்பு மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (ஈ) போர்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள்.

    (உ) ஆசிரியர் தாம்பெற்ற வைத்திய அநுபவங்களைப் புலப் படுத்தும் சிறுகதைகள்.

    (ஊ) அகலுலகத் தொடர்பு கொண்ட சிறுகதைகள்.

    [தொடரும்]

     

     

    Share
  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

     “ஞானம்” நேர்காணல் ஆளுமைகள் பட்டியல் – 01

    கைலாசபதி

    01 –  கார்த்திகேசு சிவத்தம்பி

    02 –  ச. பொன்னுத்துரை

    03 – டொமினிக் ஜீவா

    04 – எம்.ஏ. நுஹ்மான்

    05 –  செ,யோகநாதன்  

    06 –  வ.அ. இராசரத்தினம்

    07 –  அருண் விஜயராணி

    08 –  கே.எஸ். சிவகுமாரன்

    09 –  பொ. பூலோகசிங்கம்

    10 –  இ. அம்பிகைபாகர்

    11 –  த, கலாமணி

    12 –  லெ. முருகபூபதி

    13 –  தி.ச. வரதராசன்

    14 – எஸ். தில்லைநாதன்

    15 – கே. கணேஷ்

    16 – சிற்பி பாலசுபிரமணியம்

    17 –  நா. சோமகாந்தன்

    18 –  பாலசிங்கம் பிரபாகரன்

    19 –  சித்திரலேகா மெளனகுரு

    20 –  புதுவை இரத்தினதுரை

    21 –  எஸ். பொ.

    22 –  தி.ச. வரதர்

    23 –  வீ. அரசு – தமிழ்நாடு

    24 –  பஞ்சாட்சர சர்மா

    25 –  க. குணராசா (செங்கை ஆழியான்)

    26 –  மா. அனந்தராசன்

    27 –  தெளிவத்தை ஜோசப்

    28 –  எம்.ஏ. நுஹ்மான்

    29 –  சு. குனேஸ்வரன் (துவாரகன்)

    30 –  கே.எஸ். சிவகுமாரன்

    31 –  சபா ஜெயராசா

    32 –  ஷோபாசக்தி அன்ரனிதாசன்

    33 –  மா. சண்முகலிங்கம்

    34 –  தி. ஞானசேகரன்

    35 –  திருமதி கார்த்திகா கணேசர்

    36 –  முல்லை அமுதன்

    37 –  திருமதி கார்த்திகா கணேசர்

    38 –  தி. ஞானசேகரன்

    39 –  செ, கணேசலிங்கன்

    40 –  சோ. பத்மநாதன்

    41 –  செ. யோகராசா

    42 –  மு. பொன்னம்பலம்

    43 –  மு. பொன்னம்பலம்

    44 –  தெணியான்

    45 –  ஜின்னா சரிபுத்தீன்

    46 –  இராஜேஸ்வரி பாலசுபிரமணியம்

    47 –  அகளங்கன்

    49 –  ந. செல்வரராஜா

    50 – அன்னலட்சுமி இராசதுரை

    51 –  இளைய அப்துல்லாஹ் – அனஸ்

    52 –  கே. ஆர். டேவிட்

    53 –  வி. ஜீவகுமாரன்

    54 –  அ. சண்முகதாஸ்

    55 –  இரா. உதயணன்

    56 – துரை மனோகரன்

    57 – ஆசி கந்தராஜா

    58 – ந. உதயணன்  

    59 – சோ. சந்திரசேகரம்

    60 – 

    ************* 

    இது தொடர்பான வேறு பதிவுகள்

    இந்நிகழ்வு என் (என் செல்வராஜா) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வை முடித்துக் கொண்டு இன்றே தி. ஞானசேகரன் தம்பதிகள் இலங்கை பயணமாகினர்.

    ******

    கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை

    [தொடரும்]

     

     

    Share
  • தமிழிசைப்பண்கள்

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    **************************************************
    உலகின் முதல் இசை
    தமிழிசையே!!
    ***********************************************
    இசைத்தமிழின் தொன்மை – 75
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    கர்நாடக இசையும் தமிழிசையும்
    *************************************************

    THODAR - 075
    கர்நாடக இசை மற்றும் தமிழிசை ஆகிய இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.

    ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.

    தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நுாற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

    தொடர்ந்து 20 ம் நுாற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

    அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

    இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

    பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

    நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியர் காலகட்டம்.

    இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

    தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான
    அருணாசலக் கவிராயர், 
    முத்துத் தாண்டவர், 
    மாரிமுத்தாப் பிள்ளை 

    ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.

    தியாகராஜர், 
    சியாமா சாஸ்திரிகள், 
    முத்துசாமி தீட்சிதர்

    என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றையே மேடைகளில் பாடினார்கள்.

    தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது.

    தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர்.

    இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

    தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்களின் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், ‘கருநாடக சங்கீதம்’ எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றது.

    சாரங்க தேவர்
    ********************
    சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 – 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில்“சங்கீத ரத்னாகரம்” என்னும் நூலை எழுதினார்.

    இது வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும்.

    தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னரே அந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

    அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய “பிருகத தேசி” என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.

    அந்நூலில் உள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது.

    வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்றும் அறியப்படுகின்றது.

    சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.

    இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின.

    சில ராகங்களுக்குச் சாரங்க தேவர் “பாஷா ராகங்கள்”என்று பெயரிட்டுள்ளார்.

    “பாஷா” என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும்.

    இந்துஸ்தானி இசை
    ******************************

    கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது.

    தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின்
    இசையின் வரவால் தனித்துவம் இழந்தது.

    இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது.

    பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை.

    ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசையேயாகும்.

    அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.

    14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய “சங்கீத சுதாகரம்” என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன.

    கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன.

    தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.

    ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன.

    2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

    பார்ப்பனப் புரட்டும் திருட்டும்!
    ******************************************
    தமிழகத்தின் ஊர்ப்பெயர்களையே வடமொழியில்
    கும்பகோணம் (குடமூக்கு),
    வேதாரண்யம் (மறைக்காடு),
    விருத்தாசலம் (பழமலை)

    என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களையும்
    வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாகவே வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

    17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார்.

    இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார்.
    தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார்.

    எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார்.

    இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

    ஆபிரகாம் பண்டிதர்
    ******************************
    இந்த ஆரிய நாசகார இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

    “பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன.

    தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்.

    அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன.

    இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை.

    இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

    கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

    20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

    சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில்  “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர்.

    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    19/08/2017

    Share
  • “வேர்களும் விழுதுகளும்” (2)

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    “ஈழத்து இலக்கியப் பரப்பு”
    **********************************************

    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-II)
    *********************************

    GNANAM - 150

    2004 ஞானம் பொன் மலர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் அவர்களை பிரதம ஆசிரியராகவும், புலோலியூர் க.சதாசிவம் அவர்களை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கலை இலக்கிய மாத இதழின் 50வது இதழ்.

    பேராசிரியர் சிவத்தம்பியுடனான நேர்காணல் இவ்விதழின் சிறப்பம்சமாக உள்ளது.

    வீ.என்.சந்திரகாந்தி, திக்குவல்லை கமால், யோகேஸ் கணேசலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

    கவிதைகளில், மாவை வரோதயன், சி.மௌனகுரு, ரூபராணி,
    தவ சஜிதரன், சங்கீதா, இளைய அப்துல்லாஹ், தினகரன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

    இலக்கியக் கட்டுரைகள் ஏழு இடம்பெற்றுள்ளன.

    பேராயர் எஸ்.ஜெபநேசன், கல்வயல் வே.குமாரசுவாமி, வ.இராசையா, துரை மனோகரன், புலோலியூரான், சுதர்சன், செ.யோகராசா ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகள்
    இவ்விதழை அலங்கரிக்கின்றன.

    2005 தி.ஞானசேகரன் சிறுகதைகள் 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

    2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான
    நாவேந்தன் விருதினைப் பெற்றது.

    2005 கார்த்திகேசு சிவத்தம்பி- இலக்கியமும் வாழ்க்கையும் . இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு பேராசிரியர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு.

    வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை
    இந்த நேர்காணலிலே பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.

    ஈழத்து நவீன இலக்கியத்துறையின் பிதாமகர்களில் ஒருவராக விளங்கும் பேராசிரியர் கடந்த 50 வருடகாலப் பகுதியில் ஈழத்து இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், எழுச்சிகள், முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார்.

    பேராசிரியரின் வாழ்க்கையின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இந்த நேர்காணல் ஓரளவுக்கு அவரது வாழ்க்கைச் சரிதம் போன்றும் அமைந்துள்ளது.

    2005 கொக்கிளாய் மாமி – ஞானம் பரிசுக்கதைகள் 2005தொகுப்பு

    ஞானம் கலை இலக்கியப் பண்ணை ஏற்பாட்டில் 2005ம் ஆண்டுக்கான கலாபூஷணம் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.

    முல்லைமணி வே.சுப்பிரமணியம்,
    மாதுமை சிவசுப்பிரமணியம்,
    டாக்டர் ச.முருகானந்தன்,
    தம்பு-சிவா,
    புனிதகலா,
    நவஜோதி ஜோகரட்னம்,
    மு.சந்திரகாந்தா,
    த.அஜந்தகுமார்,
    தாட்சாயணி,
    டி.ஜனார்த்தனன்,
    சிவனு மனோகரன்,
    எஸ்.உதயச்செல்வன்
    ஆகிய எழுத்தாளர்களின் பரிசுபெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்பும் ஒவ்வொரு கதைக்கு முன்னும் இடம்பெற்றுள்ளது.

    2006 சிறைப்பட்டிருத்தல் – ஞானம் பரிசுக்கதைகள் 2006 தொகுப்பு. ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் புலோலியூர் சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டியில் 2006ம் ஆண்டுக்கான பரிசினைப்பெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.

    புதிய தலைமுறைப் படைப்பாளிகள் பன்னிருவரின் கதைகள் அடங்கியது.

    புலோலியூர் செ.கந்தசாமி,
    ஏ.கே.குணநாதன்,
    கார்த்திகா பாலசுந்தரம்,
    என்.ஏ.தீரன்,
    கே.எஸ்.சுதாகர்,
    ம.பா.மகாலிங்கம்,
    ஆ.புனிதகலா,
    பிரமிளா செல்வராஜா,
    நவஜோதி ஜோகரட்ணம்,
    பொன்னம்பலம் சுதாகர்,
    தர்மராஜா அஜந்தகுமார்,
    சிவனு மனோகரன்
    ஆகியோரின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    2007 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் நவீன இலக்கியச் செல்நெறியில் ஆழத்தடம் பதித்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 75ஆவது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பவள விழா மலர்.

    பேராசிரியரின் பன்முகத் திறமைகளை பல்வேறு தளங்களில் விமர்சிக்கும் கட்டுரைகள் இம்மலரை நிறைத்துள்ளன.

    சி.மௌனகுரு,
    அ.சண்முகதாஸ்,
    எஸ்.சந்திரசேகரன்,
    பெ.மாதையன்,
    நாகராச ஐயர் சுப்பிரமணியன்,
    செ.யோகராசா,
    க.இரகுபரன்,
    அ.முகம்மது சமீம்,
    வே.விமலராஜா,
    தெணியான்,
    செங்கை ஆழியான்,
    அ.இரவி,
    எஸ்.மேசேஸ்,
    அந்தனி ஜீவா,
    எஸ்.எச்.எம்.ஜெமீல்,
    ஆகியோரின் கட்டுரைகளும் ஞானம் நேர்காணலின் சில பகுதிகளும் இம்மலரில் மணம் பரப்புகின்றன.

    நூலின் இறுதியில் பேராசிரியரின் வாழ்வும் பணியும் பற்றிய சுருக்கக் குறிப்பும் காணப்படுகின்றது.

    2007 போர்க்காலக் கதைகள்.

    அரை நூற்றாண்டுக்கால போர்க்கால வரலாற்றைச் சித்திரிக்கும் 20 கதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.

    போரின் பல்வேறு வகைப்பட்ட தாக்கங்களை வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த படைப்பாளிகளின் பன்முகப்பட்ட பார்வையில் தொகுப்பாசிரியர் தேர்ந்து பதிவு செய்திருக்கின்றார்.

    டிலான் ஜெயந்தன்,
    ராணி ஸ்ரீதரன்,
    தி.ஞானசேகரன்,
    புலோலியூர் செ.கந்தசாமி,
    ஓ.கே.குணநாதன்,
    தாமரைச் செல்வி,
    சுதர்ம மகாராஜன்,
    குமுதினி கலையழகன்,
    முல்லையூரான்,
    யோகேஸ்வரி சிவப்பிரகாசம்,
    வதிரி சி.இராஜேஸ்கண்ணன்,
    செங்கை ஆழியான்,
    ச.முருகானந்தன்,
    முல்லைமணி,
    தாட்சாயணி,
    கே.விஜயன்,
    முத்து,
    நீரங்க விக்ரமசிங்க,
    லோ.சுதர்மன்,
    சந்திரகாந்தா முருகானந்தன்
    ஆகிய இருபது படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    2008 ஞானம்- 100 ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ் .

    06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 100ஆவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

    தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 100ஆவது இதழில்,

    42 இலக்கியக் கட்டுரைகளும்,
    33 கவிதைகளும்,
    ஒரு நாடகமும்,
    16 சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

    கௌதமன், மதிபுஷ்பா ஆகியோரின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.

    2009 கருமுகில் தாண்டும் நிலவு .

    கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் 2007ம் ஆண்டு பரிசுபெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    கருமுகில் தாண்டும் நிலவு (கார்த்திகாயினி சுபேஸ்),
    ஒடுக்கம் (கார்த்திகா பாலசுந்தரம்),
    கற்றுக்கொள்வதற்கு (கே.எஸ்.சுதாகர்),
    நான் சாகமாட்டேன் (ச.முருகானந்தன்),
    மீளாமகன் (தர்மராஜா அஜந்தகுமார்),
    பாடமாத்தி (சிவனு மனோகரன்),
    கல்லடிப் பாலம் (தீரன்-ஆர்.எம்.நௌசாத்),
    அறம்செய்ய (ஆவூரான்),
    தவம் கலைகிறது (கேணிப்பித்தன் ச.அருளானந்தம்),
    தேடல் (கயிலை-தம்பையா கயிலாயர்),
    ஒரு நாள் (பிரமிளா பார்த்திபன்),
    கனவு கனவாயே (நிரஞ்சனி சபாரத்தினம்)
    ஆகிய பன்னிரு பரிசுச் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

    2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:

    கட்டுரைக் கோவை (இணைப்பதிப்பாசிரியர்)

    2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவின் பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

    இதில் 3ஆவது கட்டுரையாக என்.செல்வராஜா எழுதிய “ஈழத்தமிழரின் நூல்களை ஆவணப்படுத்துவதில்
    நூல்தேட்டத்தின் பங்களிப்பும் அது எதிர்கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பிலான விரிவான ஆய்வும்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    2012 நகுலநாதம் (துணைவியாருடன் இணந்து வெளியிட்டது)
    24.3.2012 அன்று வெளியிடப்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கும்பாபிஷேக மலர்.

    பாயிரவியல்,
    வாழ்த்தியல்,
    வரலாற்றியல்,
    கிரியாவியல்,
    மெய்யியல்,
    இசையியல்,
    மீட்பியல்,
    பதிவியல்,
    (எழுத்துரு/ஒளியுரு) ஆகிய எட்டுப் பிரிவுகளின் கீழ் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய பாரிய மலர் இதுவாகும்.

    2012 ஞானம் 150 ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்.

    தமிழிஇலக்கியப் பரப்பில் இது ஒரு புதிய இலக்கியப்பதிவு!!
    இதுவரை இத்தகைய “போர்க்கால இலக்கியம்” என்ற சொற்றொடரே ஞானம் இதழில் தான் அறிமுகமாகிறது.

    06.06.2000 அன்று தனது முதலாவது இதழை
    வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 150ஆவது இதழ் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக
    600 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

    150ஆவது இதழில், ஈழத்தின் போர்க்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பதிவுசெய்யும் கருத்தாடல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

    சிவா கௌதமனின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.

    இந்நூலின் இறுதியில் என்.செல்வராஜா எழுதிய
    ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும் என்ற சிறப்புக் கட்டுரை (பக்.553-600) இடம்பெற்றுள்ளது.

    2013 வட இந்திய பயண அனுபவங்கள்.

    ஞானம் பதிப்பகத்தின் 27ஆவது வெளியீடாகவும்,
    3வது பயண இலக்கியமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.

    கங்காஸ்நானம், திரிவேணி சங்கம ஸ்நானம், கேதார்நாத், பத்ரிநாத், காசி விசவநாதர் தரிசனம் ஆகியவை பற்றி அவர் விபரிக்கின்றபோது
    நாமும் ஸ்நானம் செய்து, தரிசனம்காணும்  பேறு பெறும் வகையில் அவர் விபரித்துச் செல்கின்றார்.

    மற்றையது ஒரு யாத்திரிகன் என்ற தளத்தைத் தாண்டி ஒரு படைப்பாளியின் மனோபாவத்துடன் அவர் இவ்விலக்கியத்தைப் படைத்துள்ளார்.

    புராண இதிகாச சம்பவங்களையும் பொருத்தமுற விபரித்துச் செல்லும் அவர், செல்லும் வழி, தூரம், பிரயாண ஊடகம்,
    தங்குமிட வசதி, முதலிய விடயங்களையும் ஆங்காங்கே பதிவுசெய்கிறார்.

    இப்பயண இலக்கியம் டில்லியையும் அதனைச் சூழவுள்ள வரலாற்று முக்கியத்துவமான இடங்களான தாஜ்மஹால்,
    ஜெய்ப்பூர் அரண்மணை, ஆக்ரா கோட்டை, கிருஷ்ணரின் ஜனனபூமியான மதுரா ஆகிய இடங்கள் பற்றியும் அங்கே ஆசிரியரின் அனுபவங்களையும் பதிவு செய்கின்றது.

    2013 ஞானம் – தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர்.
    ஞானம் இதழின் 159ஆவது இதழ் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுச் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது.

    சபா.ஜெயராசா,
    எஸ்.சிவலிங்கராஜா,
    பேராயர் எஸ்.ஜெபநேசன்,
    சு.சுசீந்திரராஜா,
    சி.தில்லைநாதன்,
    செ.யோகராசா,
    அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்,
    க.இரகுபரன்,
    சந்திரசேகரம் சசீதரன்,
    வசந்தி தயாபரன்,
    ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகளும், வாகரைவாணனின் தமிழுக்கொரு தனிநாயகம்
    என்ற கவிதையும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

    2013 எனது இலக்கியத் தடம் (1ம் பாகம்)
    ஞானம் பதிப்பகத்தின் 26ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள நூல்.

    ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன் அவர்கள் இந்நூல்வழியாகத்
    தனது இலக்கியப் பயணத்தை படிமுறையாக விளக்கிச் செல்கின்றார்.

    முன்னர் ஜீவநதி இலக்கியச் சஞ்சிகையில் தொடராக இது வெளிவந்தது.

    2013 சாகித்தியரத்னா செங்கை ஆழியான் நேர்காணல்
    இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா விருதினைப் பெற்ற ஈழத்துப் படைப்பிலக்கியவாதியான செங்கை ஆழியான் க.குணராஜாவுடன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் ஒரு விரிவான நேர்காணலை மேற்கொண்டு ஞானம் சஞ்சிகையில் அதனைத் தொடராகப் பிரசுரித்திருந்தார்.

    அதன் நூல்வடிவம் இதுவாகும்.
    46 நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுதிகளையும்,
    8 பல்சுவைக் கட்டுரைகளையும் பல்வேறு தொகுப்பு நூல்களையும் இதுவரை தந்தவரான செங்கை ஆழியானின் படைப்பிலக்கியப் பணி இன்னமும் தடையின்றித் தொடர்கின்றது.

    இந்நேர்காணல் வழியாக அவரது இலக்கியத்தேடலின் ஆழமும் அகலமும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

    வேர்களும் விழுதுகளும் இன்னும் வளரும்….

    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    16/08/2017

    Share
  • “செவ்வரத்தம் பூ!!”

     

    320798_265797463459029_373147311_n

    *********************************

    கிராமத்துப் பூக்காரி
    நீதான்!

    மண்வாசனை வீசுவதால்
    நீதான்
    எங்கள் மண்ணின் மகாராணி!

    சினிமாப் பாணியில்
    சொல்வதானால்
    நல்லதொரு நாட்டுக்கட்டை!

    உனக்குக் கவர்ச்சி அதிகம்!
    எத்தனை கூட்டத்துள்ளும்
    கண்கள் உன்னையே தேடும்!

    மூக்கும் முழியுமாக
    முந்தானையால்
    பாதிமுகம் மறைத்துச் சிரிப்பாய்
    அற்புதம்!!

    ஒற்றைக் கல்லு
    மூக்குத்தியில் தான்
    உன் அழகின் உச்சம்
    இருக்கிறது!

    வீட்டில் நிறைகுடம் வைத்தால்
    சுமங்கலி நீதானே
    முன் நிற்பாய்!

    உச்சி முதல் பாதம்வரை
    உன்னை ஒருமுறை
    பார்த்தாலே போதும்
    கண்களுக்கு அப்படி ஒரு குளிர்ச்சி!!

    அது என்ன
    உனக்கு மட்டும் விதி விலக்கு??

    பெண்கள் வாடையே பிடிக்காத
    பிள்ளையார்
    உன்ன மட்டும் தன் தலையில்
    தூக்கி வைத்திருக்கிறார்?

     

    ***************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    13/08/2017

    Share
  • “வேர்களும் விழுதுகளும்” – “ஈழத்து இலக்கியப் பரப்பு”

    20431640_1461941410511289_3613242538548371941_n

    **********************************************
    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-I)
    *********************************
    தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.
    15.4.1941 பிறப்பு (74 வயது).
    நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
    ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார்.
    பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
    அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.
    யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது
    சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
    இவர் “ஞானம்” என்னும் சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
    1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும்
    ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த
    அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம்
    விதந்தோதத்தக்கது.
    அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும்
    பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன.
    தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
    இவரது படைப்புகள்
    *************************************************
    வட இந்தியப் பயண அனுபவங்கள் – 2013
    எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
    கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
    ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
    அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
    புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
    அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
    கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
    லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
    குருதிமலை (புதினம்) – 1979
    புதிய சுவடுகள் (புதினம்) – 1977
    காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973
    ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி ஞானசேகரன் தம்பதிகள் லண்டனுக்கும் வந்தனர்.
    இவர்களுடனான சந்திப்பை “தேசம்நெற்” நவம்பர் 08 இல் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்திருந்தது.
    ஒரு இலக்கியக் கலந்துரையாடலாகவும் இலக்கிய நண்பர்களின் சந்திப்பாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
    புலம்பெயர் இலக்கியங்களை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றிய உரையாடல் முக்கியத்துவம் பெற்றமைந்தது.
    புலம்பெயர்ந்தவர்கள் எழுதுவது எல்லாம் புலம்பெயர் இலக்கியங்களாகக் கொள்ளப்பட முடியாது என்றும்
    அதன் உள்ளடக்கம் புலம்பெயர்ந்த சூழலின்
    வெளிப்பாடாக அமைய வேண்டும் என்றும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    புலம்பெயர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் முற்றாக
    தாயக நிகழ்வுகளையே பதிவு செய்வதாக அமைந்து
    படிப்படியாக புலம்பெயர் சுழலை வெளிப்படுத்தி
    தற்போது முற்றுமுழுதாக புலம்பெயர் சுழலை,
    அங்குள்ள சமூகங்களை மையைப்படுத்தி
    வெளிவருவதை தி. ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    ஞானம் இதழின் தொகுப்பு இதழ்கள்
    வரலாற்று ஆவணங்கள் என்றும்
    இவை ஆண்டாண்டு காலத்துக்குமான
    இலக்கியப் பதிவை மேற்கொண்டுள்ளது என்பதும்
    அங்கு ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.
    போருக்குப் பின்னான ஒரு இலக்கியப் பதிவை
    ஞானம் கொண்டு வரவேண்டும் என்பதை
    எழுத்தாளர் உதயணன் வலியுறுத்தினார்.
    அதனை நிச்சயம் கொண்டு வரத் திட்டமிட்டு
    இருப்பதாகவும் ஆனால் அதற்கான காலம்
    இன்னமும் உள்ளதாகவும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    இதனை ஏனையவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
    இன்னமும் போருக்குப் பின்னான பதிவுகள் வந்து கொண்டிருப்பதால் அதற்கான தொகுப்பை சிறிது
    காலத்திற்குப் பின் வெளியிடுவதே உகந்தது என்ற
    கருத்து அங்கு வெளியிடப்பட்டது.
    ஈழத்தின் முன்னணி சஞ்சிகை ‘ஞானம்” ஆசிரியர்.
    2000 ஜுன் முதல் வருகிறது. இறுதியாக 184ஆவது இதழ்
    கடந்த மாதம் இணையத்திலும் வருவதால் அதிக
    வாசகர்களை உள்வாங்குகின்றது.
    பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம்’ எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றது.
    1960களிலிருந்து எழுதிவரும் இலக்கியப் படைப்பாளி.
    வைத்தியர்- மலையகத்தில் நீண்ட காலமாக
    (புசல்லாவையில்) பணியாற்றியவர்.
    கல்வி:
    புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை,
    உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்
    பழைய மாணவராவார்.
    தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி
    சி. கணேசையர் இவரின் பூட்டனார்.
    நல்லை ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள்
    இவரது தாய் மாமா.
    இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற
    சிறுவர்களுக்கான சஞ்சிகையில் பள்ளிப் பராயத்தில்
    சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை
    அடிக்கடி எழுதி வந்தார்.
    1964ஆம் ஆண்டில் ‘கலைச்செல்வி’ எனும் சஞ்சிகையில்
    “பிழைப்பு” எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது.
    ‘கலைமகள்” இவரின் சில கதைகள் பிரசுரம் செய்தது.
    இதுவரை 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார்.
    எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக
    எமது படைப்பாளிகள் பலர் நாட்டை விட்டும்
    புலம்பெயர்ந்தனர்.
    மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
    வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின.
    சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம்.
    இவை யாவும் எமது படைப்பாளிகளின்
    படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த
    நிலைமையை தோற்றுவித்தன.
    வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம்
    அருகத் தொடங்கிற்று.
    ஆனாலும், இலக்கியச் செயற்பாடுகள்
    காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட
    வேண்டியது அவசியமானது என்பதை உணர்ந்து,
    இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே
    இப்பணியில் ஞானசேகரம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
    முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய
    இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி
    அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய
    நிலையில், ஈழத்து இலக்கியத்தின் உறவுப் பாலமாக இயங்குகின்றார்.
    உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே.
    மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய
    சாதனையைப் படைத்து வருகின்றார்
    என்றால் மிகையாகாது.
    இவர் 1997ஆம் ஆண்டு மத்திய மாகாண
    சாகித்திய விழாவில் இலக்கிய சேவைகளுக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
    மேலும், ரத்னதீப பதநம என்ற அமைப்பு,
    1998 ஆம் ஆண்டில் கண்டியில் ரத்னதீப
    விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.
    அகில இலங்கை சமாதான நீதவானான இவருக்கு
    அரசு வழங்கும் அதியுயர் கௌரவமான கலாபூஷண
    அரச விருதும் கிடைத்துள்ளது.
    மிக அண்மையில் உடத்தலவின்ன சிந்தனைவட்டம்
    இவருக்கு இதழியல் வித்தகர் எனும் பட்டம்
    வழங்கி கௌரவித்தது.
    இவ்வாறாக பிரதேச, மாவட்ட, மாகாண,
    தேசிய மட்டத்தில் இவர் பல விருதுகளையும்,
    கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
    டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை
    தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர்
    கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது.
    அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக
    மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது.
    ஞானசேகரன் நூல்கள்:
    1973 கால தரிசனம் – சிறுகதைகள்.
    12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு
    பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார்.
    1977 புதிய சுவடுகள் (மறுபதிப்பு 2004) முதல் நாவல்.
    வீரகேசரி நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது.
    இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
    1979 குருதிமலை- நாவல் (2005 மீள்பதிப்பு)
    1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது.
    தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத்
    தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம்
    இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது.
    இந்நாவல் ‘தகவம்’ பரிசினையம் பெற்றுக் கொண்டது.
    1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த
    ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றது.
    1992இல் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
    எம்.ஏ. வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
    தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று
    பதிப்புகளைக் கண்டது.
    மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக
    2005இல் வெளியிடப்படுகின்றது.
    ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான
    மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின்
    பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப்
    போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின்
    வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின்
    மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
    1994 லயத்துச் சிறைகள் 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
    இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த
    நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.
    1996 கவ்வாத்து குறுநாவல் தேசிய கலைஇலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.
    ‘விபவி” கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு” விருதும், சான்றிதழும் பெற்றது.
    மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.
    இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள்
    1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.
    1998 அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்).
    தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் BA வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
    1999 அவுஸ்திரேலியப் பயணக்கதை புதிய சூழலில் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ள வாற்றையும், தமது ஆன்மீக, உலகியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் கோவில்களையும் கல்வி நிலையங்களையும் கலை-இலக்கிய மன்றங்களையும் அவர்கள் அமைத்துள்ளவாற்றையும் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
    1999 புரிதலும் பகிர்தலும். அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் தொகுதி.
    அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஐவரின் நேர்காணல்கள் இங்கு இடம்பெறுகின்றன.
    எஸ்.பொன்னத்துரை,
    மாத்தளை சோமு,
    லெ.முருகபூபதி,
    அருண் விஜயராணி,
    சி.மனோகரன்
    ஆகியோரது கலை இலக்கியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும், கருத்துக்களையும் அவர்களது மன உணர்வுகளையும் சிறப்பான முறையில் இந்நேர்காணல்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    01/08/2017

    Share
  • சிற்றிதழ் என்றால் என்ன? அதன் வரையறைகள் யாவை ? அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    சிற்றிதழ் என்றால் என்ன? 
    அதன் வரையறைகள் யாவை ? 
    அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?
    ******************************************************

    சிற்றிதழ்கள் – 06
    ******************************

    20140135_1451187758253321_3907356523018521070_n

    ஈழத்துச் சிற்றிதழ்கள்
    ********************************************04MAY
    இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்

    கோப்பாய் சிவம்
    இலங்கையில்
    தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
    (1841-1984)

    ஒரு கையேடு
    கோப்பாய் – சிவம்

    ஆசிரியரின் பிற நூல்கள்
    கனவுப் பூக்கள் (புதுக்கவிதைகள்)
    (சௌமினி சிவம்)
    அன்னை பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
    நியாயமான போராட்டங்கள்.
    (ரூபா 5,000 பரிசுபெற்ற சிறுகதைத் தொகுதி)
    ********************************************
    அணிந்துரை

    பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்த்துறை
    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

    நூல்கள் எரிந்து போகின்ற ஒரு காலகட்டத்திலே வாழ்கின்ற நாம் எம்முடைய பல்வேறு நிலைப்பட்ட பல நாட்டுத் தரவுகளையும் செய்திகளையும் ஆவணப்படுத்தி வைப்பது முக்கியமான கடமையாகும்.

    எம்முடைய நாட்டிலே தோன்றிய தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியன பற்றி எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள அவற்றை நூலகங்லிலே அரும் பொருளகங்களிலே சேகரித்து வைக்க வேண்டும்.

    அவற்றைச் சேகரித்து வைக்க முடியாவிட்டாலும் அவை பற்றிய தகவல்களை ஒன்று திரட்டிச் சேர்ப்பதாவது பயன் தரும்.

    திரு. ப. சிவானந்த சர்மா (கோப்பாய்- சிவம்) இத்தகைய பயனுள்ள பணியினையே இந்நூல்; மூலமாகச் செய்துள்ளார்.

    1841ல் தொடங்கிய முதல் பத்திரிகையாகிய உதயதாரகை இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பெருமையுடையது.

    அதன் பின்னர் முன்னூறுக்கு மேற்பட்.ட தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன.
    அவை பற்றிய விபரங்களையெல்லாம் ஒன்று திரட்டும் பணியினைக்; கோப்பாய் சிவம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

    அப்பணியின் விளைவாக வெளிவருதே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்னும் இந்த நூலாகும்.

    நூல் மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

    வெறுமனே பட்டியலை மட்டும் கொடுப்பதைவிட, குறிப்பிடத்தக்க சில பத்திரிகைகளைப் பற்றிய மேலோட்டமான கருத்துக்களை முதலாவது பகுதியில் ஆசிரியர் தருகின்றார்.

    1841ல் தொடங்கிய உதயதாரகை தொடக்கம் 1984ல் தொடங்கிய சுவர் வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியனவற்றின் மேலெழுந்தவாரியாக நோக்கி, அவற்றுள் விதந்து குறிப்பிடப்படவேண்டியனவற்றுக்குச் சுருக்கமான கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    வீரகேசரி ஆசிரியர் திரு ஆ. சிவநேசச் செல்வனும் தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதனும் இத்துறையிலே ஆராய்ச்சி செய்து முதுகலைமானிப் பட்டம் பெற்றுள்ளனர்.

    அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வுபூர்வமாகப் பல தரவுகளைக் கொண்டிருக்கின்றன.

    கோப்பாய் சிவம் அவர்களுடைய நூல் ஆய்வு நோக்குடையதல்ல. அது ஆய்வுக்குத் தரவாக அமையும் நூல் எனவே அது தமிழுலகுக்குப் பயனுடையது.

    நூலின் இரண்டாவது பகுதி 1984வரை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆண்டுவரிசைப்படி நிரைப்படுத்திய பட்டியலையுடையது.

    பத்திரிகையின் பெயர், ஆசிரியர் அல்லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர், முகவரி ஆரம்பித்த ஆண்டு ஆகிய விபரங்கைளைக் கொண்டதாக இப்பட்டியல் அமைகின்றது.

    ஈழத்துத் தமிழியல் ஆய்வு மாணவர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவவல்லது.

    எறக்குறைய 375 தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய விபரங்களைத் தேடிச் சேகரித்துப் பட்டியல் போட்டுத்தருவது இலகுவானகாரியமல்ல.

    பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளை அறிந்துகொள்வதிலே கஷ்டமிருக்காது.

    ஆனால், ஆசிரியரோ இந்நாட்டில் எழுந்த எந்த சிறிய பத்திகையையும் விடாது குறிப்பிடவேண்டும் என்னும் நோக்குடையவராக அமைகிறார்.

    எனினும், எங்களுக்கேயுரிய சில விசேட காரணங்களால் பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் முதலியவற்றிலிருந்து ஆண்டுதோறும் தனிப்பட்டவகையில் வெளியிடப்படும் சஞ்சிகைகளை இப்பட்டியலிலே சேர்த்துகொள்ளவில்லை.

    இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ள எல்லாப் பத்திரிகைகள். சஞ்சிகைகளின் பெயர்கள் அகரவரிசைப்படி அட்டவனைப்படுத்தி நூலின் மூன்றாவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

    இவருடைய தந்தையார் திரு. ச. பஞ்சாட்சர சர்மா மறுமலர்ச்சி தந்த ஓர் எழுத்தாளர்.

    கோப்பாய் – சிவம் பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் தன் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

    தந்தையார் பெயரையும் தன் பெயரையும். முன்வைத்த பத்திரிகைகள் சஞ்சிகைகளின் பெயர்களையும் முன்வைக்கவேண்டும் என்னும் ஒரு தார்மீகக்கடமையுடன் ஆசிரியர் இந்த நூலை அமைத்துள்ளார்.

    ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிப்போக்கிலே நினைவில் வைக்கவேண்டியவை என ஈழகேசரி, மறுமலர்ச்சி, கலைச் செல்வி ஆகிய மூன்று சஞ்சிகைகளைக்கூறி. அவை தென்னிந்தியாவிலே மணிக்கொடிக்காலம், சரஸ்வதி காலம் என்று கூறப்படுவதுபோல ஈழத்திலும் தமக்கென ஒவ்வொரு காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தில் பல புதுமைகள் புரட்சிகள் செய்து நினைவில் நிற்பவை என்று ஆசிரியர் பொருத்தமாகக் கூறியுள்ளார்.

    அதேவேளையில் மல்லிகை, சிரித்திரன் ஆகிய இதழ்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் கூறத்தவறவில்லை.

    தூய இலக்கியத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் என்று தொடர்ந்து நீண்ட காலமாக வெளிவரும் மல்லிகை சிரித்திரன் ஆகியவற்றின் வெற்றி நடை நம்மை இறும்பூதெய்வைக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    நூலகவியல் மாணவர்களே இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடுவது வழக்கம்.

    ஆனால், ஆக்க இலக்கியம் படைப்பவரான கோப்பாய் -சிவம் இம் முயற்;சியிலே ஈடுபட்டிருப்பது பராட்டுக்குரியதாகும்.

    உடனடி உசாவலுக்கென சில நூல்கள் நூலகத்திலே வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நூல்;களுள் இதுவும் ஒன்றாகும்.

    எங்கள் நாட்டுப் பத்திரிகைகளை சஞ்சிகைகளை நேரே பார்த்து விரிவான தகவல்களைப் பெறுவதற்கு முன்னர், அவை பற்றிய முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்நூல் நன்கு உதவும்.

    தமிழியல் மாணவர்களுக்கும் நூலகவியல் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க வகையிலே இந்நூலை ஆக்கி வெளியிடும் கோப்பாய் சிவம் அவர்களுக்கு தமிழ் உலகம் சார்பில் நன்றி கூறுகின்றேன்.

    பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
    தமிழ்த்துறை
    யாழ் பல்கலைக்கழகம்.

    ————————————————————-

    ஆக்கியோன் முன்னுரை

    கலை கலாச்சார, இலக்கிய வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவியற் தேவைகட்கும் பரஸ்பர அறிவு உணர்வுப் பரிமாறல்கட்கும் செய்திப் பரவல்களுக்கும் இணையற்ற சாதனங்களாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் இருந்து வருகின்றன.

    அவைபற்றிய ஆய்வு சுவையான ஒர் அனுபவமாகும் .

    தமிழ் நாட்டிலிருந்து இத்தகைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வுகள், பட்டியல்கள் பல நூல் வடிவில் வெளியாகியிருக்கின்றன.

    அவற்றுட் சிலநூல்களில் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சிலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இலங்கையின் பத்திரிகைத் துறைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால வரலாறு இருக்கிற தெனினும், அத்துறையில் பூரணமான ஆய்வு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

    நான் அறிந்தவரையில் குரும்பசிட்டி கனகரத்தினம், ஆ.சிவநேசச்செல்வன், இ.சிவகுருநாதன், ச. பஞ்சாட்சரசர்மா ஆகியோர் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்ட சிலராவர்.
    முதலாமவர் இத்துறையில்; சுடர் சஞ்சிகையில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்.

    ஆ, சிவநேசச்செல்வன் இ.சிவகுருநாதன் இருவரும் இத்துறையில் ஆய்வுகள் சில மேற்கொண்டிருந்தனர்.

    எனது தந்தையாரான பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பல பத்திரிகைகள் – சஞ்சிகைகளை (மாதிரிப்பிரதிகளையாவது) சேகரித்து வந்ததுடன் பல தகவல்களையும் சேகரித்து வந்தார்.

    அவர் வழியில் இம்முயற்சியை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன்.

    1974 ஆம் ஆண்டில் இத்துறையில் இரு கட்டுரைகளை வானொலி மஞ்சரியில் வெளியிட்டிருந்தேன்.

    இதைத் தொடர்ந்து மலர் சஞ்சிகை பற்றிய விமர்சனத்தை இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சியிலும், மரகதம் பற்றிய விமர்சனக் கட்டுரையை தினகரன் பத்திரிகையிலும் தேன்மொழி, கற்பகம் ஆகியன பற்றிய கட்டுரைகளை மல்லிகையிலும் எழுதினேன்.

    ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரை அல்லது பட்டியல் தானும் இதுவரை நூல் வடிவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்தந்தையார் தேடித்தொகுத்து வைத்த தகவல்களுடன் படுத்திய பட்டியலை வெளியீட்டுக்குத்தயாராக வைத்திருந்தேன்.

    இருந்த போதும் இப்பட்டியல் பூரணமானதா என்ற ஐயப்பாட்டினாலும் மேலும் தகவல்களைச் சேகரிக்கும் ஆவல் காரணமாகவும், பிரசுரவசதிகள் கிட்டாததனாலும் பல ஆண்டுகள் தாமதிக்க நேர்ந்தது.

    இன்று இத்தொகுப்;பை உங்கள் முன் சமர்ப்பிக்கும் துணிவை நான் அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இதனைப் பூரணப்படுத்துவதே நமது பார்வைக்குத் தட்டுப்படாமலும் கேள்விக்கு எட்டாலும் பல இதழ்கள் வெளிவந்திருக்கலாம்.

    மலையகத்திலும், மட்டுநகர், திருகோணமலை போன்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட பல இதழ்கள் நமது கேள்விக்கு எட்டாமலே இருந்திருக்கலாம்.

    மேலும் இலங்கைப் பத்திரிகைத் துறையில் விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இச்சிறு நூல் ஒரு முதல் நூலாக அமையும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    இந்நூலை வெளியிடுவதற்கேற்றவகையில் எனக்கு உதவியும் உற்சாகமும் ஊட்டிய எனது மேலதிகாரி கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணியாளார் திரு. ம. சபாரத்தினம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

    என்னோடு முன்னர் நேரடி பழக்கமெதும் இல்லாமல் இருந்தும் கூட நான் போய்; கேட்டவுடன் இந்நூலுக்குப் பொருத்தமான ஒரு அணிந்துரையை இன்முகத்துடன் உவந்தளித்த பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

    பல இதழ்களைப் பற்றிய தகவல்களை எனக்குக் கிடைக்கச் செய்த எழுத்தாளர் திருவாளர் மயிலங்கூடலூர் நடராஐன் அவர்களுக்கும் இந்நூலை உருவாக்கும் போது வேண்டிய ஆலோசனைகள் வழங்கி உருவமைப்புக்கொடுத்த திரு. பா. பாலசண்முகநாதன் அவர்களுக்கும் அழகுற அச்சேற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் ஊழியர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் உரித்தாகுக.

    கோப்பாய் சிவம்
    பிரதிப்பணிப்பாளர் பணிமனை,
    நீர்ப்பாசனத் திணைக்களம்,
    கிளிநொச்சி.

    இதழ்கள் இன்னும் விரியும்….

    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    21/07/2017

    Share