சிறீ சிறீஸ்கந்தராஜா

**************************************************
உலகின் முதல் இசை
தமிழிசையே!!
***********************************************
இசைத்தமிழின் தொன்மை – 75
***********************************************
 
பழந்தமிழிசையில் பண்கள்
**********************************

கர்நாடக இசையும் தமிழிசையும்
*************************************************

THODAR - 075
கர்நாடக இசை மற்றும் தமிழிசை ஆகிய இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.

தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நுாற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

தொடர்ந்து 20 ம் நுாற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியர் காலகட்டம்.

இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான
அருணாசலக் கவிராயர், 
முத்துத் தாண்டவர், 
மாரிமுத்தாப் பிள்ளை 

ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.

தியாகராஜர், 
சியாமா சாஸ்திரிகள், 
முத்துசாமி தீட்சிதர்

என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றையே மேடைகளில் பாடினார்கள்.

தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது.

தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர்.

இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்களின் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், ‘கருநாடக சங்கீதம்’ எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றது.

சாரங்க தேவர்
********************
சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 – 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில்“சங்கீத ரத்னாகரம்” என்னும் நூலை எழுதினார்.

இது வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும்.

தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னரே அந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய “பிருகத தேசி” என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.

அந்நூலில் உள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது.

வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்றும் அறியப்படுகின்றது.

சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.

இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின.

சில ராகங்களுக்குச் சாரங்க தேவர் “பாஷா ராகங்கள்”என்று பெயரிட்டுள்ளார்.

“பாஷா” என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும்.

இந்துஸ்தானி இசை
******************************

கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது.

தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின்
இசையின் வரவால் தனித்துவம் இழந்தது.

இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது.

பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை.

ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசையேயாகும்.

அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.

14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய “சங்கீத சுதாகரம்” என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன.

கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன.

தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.

ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

பார்ப்பனப் புரட்டும் திருட்டும்!
******************************************
தமிழகத்தின் ஊர்ப்பெயர்களையே வடமொழியில்
கும்பகோணம் (குடமூக்கு),
வேதாரண்யம் (மறைக்காடு),
விருத்தாசலம் (பழமலை)

என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களையும்
வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாகவே வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார்.

இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார்.
தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார்.

எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார்.

இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

ஆபிரகாம் பண்டிதர்
******************************
இந்த ஆரிய நாசகார இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

“பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன.

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன.

இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை.

இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில்  “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர்.

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
19/08/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *