சிற்றிதழ் என்றால் என்ன? அதன் வரையறைகள் யாவை ? அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?

0
சிறீ சிறீஸ்கந்தராஜா

சிற்றிதழ் என்றால் என்ன? 
அதன் வரையறைகள் யாவை ? 
அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?
******************************************************

சிற்றிதழ்கள் – 06
******************************

20140135_1451187758253321_3907356523018521070_n

ஈழத்துச் சிற்றிதழ்கள்
********************************************04MAY
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்

கோப்பாய் சிவம்
இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
(1841-1984)

ஒரு கையேடு
கோப்பாய் – சிவம்

ஆசிரியரின் பிற நூல்கள்
கனவுப் பூக்கள் (புதுக்கவிதைகள்)
(சௌமினி சிவம்)
அன்னை பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
நியாயமான போராட்டங்கள்.
(ரூபா 5,000 பரிசுபெற்ற சிறுகதைத் தொகுதி)
********************************************
அணிந்துரை

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

நூல்கள் எரிந்து போகின்ற ஒரு காலகட்டத்திலே வாழ்கின்ற நாம் எம்முடைய பல்வேறு நிலைப்பட்ட பல நாட்டுத் தரவுகளையும் செய்திகளையும் ஆவணப்படுத்தி வைப்பது முக்கியமான கடமையாகும்.

எம்முடைய நாட்டிலே தோன்றிய தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியன பற்றி எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள அவற்றை நூலகங்லிலே அரும் பொருளகங்களிலே சேகரித்து வைக்க வேண்டும்.

அவற்றைச் சேகரித்து வைக்க முடியாவிட்டாலும் அவை பற்றிய தகவல்களை ஒன்று திரட்டிச் சேர்ப்பதாவது பயன் தரும்.

திரு. ப. சிவானந்த சர்மா (கோப்பாய்- சிவம்) இத்தகைய பயனுள்ள பணியினையே இந்நூல்; மூலமாகச் செய்துள்ளார்.

1841ல் தொடங்கிய முதல் பத்திரிகையாகிய உதயதாரகை இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பெருமையுடையது.

அதன் பின்னர் முன்னூறுக்கு மேற்பட்.ட தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன.
அவை பற்றிய விபரங்களையெல்லாம் ஒன்று திரட்டும் பணியினைக்; கோப்பாய் சிவம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

அப்பணியின் விளைவாக வெளிவருதே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்னும் இந்த நூலாகும்.

நூல் மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

வெறுமனே பட்டியலை மட்டும் கொடுப்பதைவிட, குறிப்பிடத்தக்க சில பத்திரிகைகளைப் பற்றிய மேலோட்டமான கருத்துக்களை முதலாவது பகுதியில் ஆசிரியர் தருகின்றார்.

1841ல் தொடங்கிய உதயதாரகை தொடக்கம் 1984ல் தொடங்கிய சுவர் வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியனவற்றின் மேலெழுந்தவாரியாக நோக்கி, அவற்றுள் விதந்து குறிப்பிடப்படவேண்டியனவற்றுக்குச் சுருக்கமான கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வீரகேசரி ஆசிரியர் திரு ஆ. சிவநேசச் செல்வனும் தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதனும் இத்துறையிலே ஆராய்ச்சி செய்து முதுகலைமானிப் பட்டம் பெற்றுள்ளனர்.

அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வுபூர்வமாகப் பல தரவுகளைக் கொண்டிருக்கின்றன.

கோப்பாய் சிவம் அவர்களுடைய நூல் ஆய்வு நோக்குடையதல்ல. அது ஆய்வுக்குத் தரவாக அமையும் நூல் எனவே அது தமிழுலகுக்குப் பயனுடையது.

நூலின் இரண்டாவது பகுதி 1984வரை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆண்டுவரிசைப்படி நிரைப்படுத்திய பட்டியலையுடையது.

பத்திரிகையின் பெயர், ஆசிரியர் அல்லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர், முகவரி ஆரம்பித்த ஆண்டு ஆகிய விபரங்கைளைக் கொண்டதாக இப்பட்டியல் அமைகின்றது.

ஈழத்துத் தமிழியல் ஆய்வு மாணவர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவவல்லது.

எறக்குறைய 375 தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய விபரங்களைத் தேடிச் சேகரித்துப் பட்டியல் போட்டுத்தருவது இலகுவானகாரியமல்ல.

பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளை அறிந்துகொள்வதிலே கஷ்டமிருக்காது.

ஆனால், ஆசிரியரோ இந்நாட்டில் எழுந்த எந்த சிறிய பத்திகையையும் விடாது குறிப்பிடவேண்டும் என்னும் நோக்குடையவராக அமைகிறார்.

எனினும், எங்களுக்கேயுரிய சில விசேட காரணங்களால் பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் முதலியவற்றிலிருந்து ஆண்டுதோறும் தனிப்பட்டவகையில் வெளியிடப்படும் சஞ்சிகைகளை இப்பட்டியலிலே சேர்த்துகொள்ளவில்லை.

இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ள எல்லாப் பத்திரிகைகள். சஞ்சிகைகளின் பெயர்கள் அகரவரிசைப்படி அட்டவனைப்படுத்தி நூலின் மூன்றாவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய தந்தையார் திரு. ச. பஞ்சாட்சர சர்மா மறுமலர்ச்சி தந்த ஓர் எழுத்தாளர்.

கோப்பாய் – சிவம் பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் தன் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

தந்தையார் பெயரையும் தன் பெயரையும். முன்வைத்த பத்திரிகைகள் சஞ்சிகைகளின் பெயர்களையும் முன்வைக்கவேண்டும் என்னும் ஒரு தார்மீகக்கடமையுடன் ஆசிரியர் இந்த நூலை அமைத்துள்ளார்.

ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிப்போக்கிலே நினைவில் வைக்கவேண்டியவை என ஈழகேசரி, மறுமலர்ச்சி, கலைச் செல்வி ஆகிய மூன்று சஞ்சிகைகளைக்கூறி. அவை தென்னிந்தியாவிலே மணிக்கொடிக்காலம், சரஸ்வதி காலம் என்று கூறப்படுவதுபோல ஈழத்திலும் தமக்கென ஒவ்வொரு காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தில் பல புதுமைகள் புரட்சிகள் செய்து நினைவில் நிற்பவை என்று ஆசிரியர் பொருத்தமாகக் கூறியுள்ளார்.

அதேவேளையில் மல்லிகை, சிரித்திரன் ஆகிய இதழ்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் கூறத்தவறவில்லை.

தூய இலக்கியத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் என்று தொடர்ந்து நீண்ட காலமாக வெளிவரும் மல்லிகை சிரித்திரன் ஆகியவற்றின் வெற்றி நடை நம்மை இறும்பூதெய்வைக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

நூலகவியல் மாணவர்களே இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடுவது வழக்கம்.

ஆனால், ஆக்க இலக்கியம் படைப்பவரான கோப்பாய் -சிவம் இம் முயற்;சியிலே ஈடுபட்டிருப்பது பராட்டுக்குரியதாகும்.

உடனடி உசாவலுக்கென சில நூல்கள் நூலகத்திலே வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நூல்;களுள் இதுவும் ஒன்றாகும்.

எங்கள் நாட்டுப் பத்திரிகைகளை சஞ்சிகைகளை நேரே பார்த்து விரிவான தகவல்களைப் பெறுவதற்கு முன்னர், அவை பற்றிய முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்நூல் நன்கு உதவும்.

தமிழியல் மாணவர்களுக்கும் நூலகவியல் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க வகையிலே இந்நூலை ஆக்கி வெளியிடும் கோப்பாய் சிவம் அவர்களுக்கு தமிழ் உலகம் சார்பில் நன்றி கூறுகின்றேன்.

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை
யாழ் பல்கலைக்கழகம்.

————————————————————-

ஆக்கியோன் முன்னுரை

கலை கலாச்சார, இலக்கிய வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவியற் தேவைகட்கும் பரஸ்பர அறிவு உணர்வுப் பரிமாறல்கட்கும் செய்திப் பரவல்களுக்கும் இணையற்ற சாதனங்களாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் இருந்து வருகின்றன.

அவைபற்றிய ஆய்வு சுவையான ஒர் அனுபவமாகும் .

தமிழ் நாட்டிலிருந்து இத்தகைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வுகள், பட்டியல்கள் பல நூல் வடிவில் வெளியாகியிருக்கின்றன.

அவற்றுட் சிலநூல்களில் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சிலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இலங்கையின் பத்திரிகைத் துறைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால வரலாறு இருக்கிற தெனினும், அத்துறையில் பூரணமான ஆய்வு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

நான் அறிந்தவரையில் குரும்பசிட்டி கனகரத்தினம், ஆ.சிவநேசச்செல்வன், இ.சிவகுருநாதன், ச. பஞ்சாட்சரசர்மா ஆகியோர் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்ட சிலராவர்.
முதலாமவர் இத்துறையில்; சுடர் சஞ்சிகையில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்.

ஆ, சிவநேசச்செல்வன் இ.சிவகுருநாதன் இருவரும் இத்துறையில் ஆய்வுகள் சில மேற்கொண்டிருந்தனர்.

எனது தந்தையாரான பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பல பத்திரிகைகள் – சஞ்சிகைகளை (மாதிரிப்பிரதிகளையாவது) சேகரித்து வந்ததுடன் பல தகவல்களையும் சேகரித்து வந்தார்.

அவர் வழியில் இம்முயற்சியை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன்.

1974 ஆம் ஆண்டில் இத்துறையில் இரு கட்டுரைகளை வானொலி மஞ்சரியில் வெளியிட்டிருந்தேன்.

இதைத் தொடர்ந்து மலர் சஞ்சிகை பற்றிய விமர்சனத்தை இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சியிலும், மரகதம் பற்றிய விமர்சனக் கட்டுரையை தினகரன் பத்திரிகையிலும் தேன்மொழி, கற்பகம் ஆகியன பற்றிய கட்டுரைகளை மல்லிகையிலும் எழுதினேன்.

ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரை அல்லது பட்டியல் தானும் இதுவரை நூல் வடிவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்தந்தையார் தேடித்தொகுத்து வைத்த தகவல்களுடன் படுத்திய பட்டியலை வெளியீட்டுக்குத்தயாராக வைத்திருந்தேன்.

இருந்த போதும் இப்பட்டியல் பூரணமானதா என்ற ஐயப்பாட்டினாலும் மேலும் தகவல்களைச் சேகரிக்கும் ஆவல் காரணமாகவும், பிரசுரவசதிகள் கிட்டாததனாலும் பல ஆண்டுகள் தாமதிக்க நேர்ந்தது.

இன்று இத்தொகுப்;பை உங்கள் முன் சமர்ப்பிக்கும் துணிவை நான் அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இதனைப் பூரணப்படுத்துவதே நமது பார்வைக்குத் தட்டுப்படாமலும் கேள்விக்கு எட்டாலும் பல இதழ்கள் வெளிவந்திருக்கலாம்.

மலையகத்திலும், மட்டுநகர், திருகோணமலை போன்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட பல இதழ்கள் நமது கேள்விக்கு எட்டாமலே இருந்திருக்கலாம்.

மேலும் இலங்கைப் பத்திரிகைத் துறையில் விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இச்சிறு நூல் ஒரு முதல் நூலாக அமையும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

இந்நூலை வெளியிடுவதற்கேற்றவகையில் எனக்கு உதவியும் உற்சாகமும் ஊட்டிய எனது மேலதிகாரி கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணியாளார் திரு. ம. சபாரத்தினம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

என்னோடு முன்னர் நேரடி பழக்கமெதும் இல்லாமல் இருந்தும் கூட நான் போய்; கேட்டவுடன் இந்நூலுக்குப் பொருத்தமான ஒரு அணிந்துரையை இன்முகத்துடன் உவந்தளித்த பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

பல இதழ்களைப் பற்றிய தகவல்களை எனக்குக் கிடைக்கச் செய்த எழுத்தாளர் திருவாளர் மயிலங்கூடலூர் நடராஐன் அவர்களுக்கும் இந்நூலை உருவாக்கும் போது வேண்டிய ஆலோசனைகள் வழங்கி உருவமைப்புக்கொடுத்த திரு. பா. பாலசண்முகநாதன் அவர்களுக்கும் அழகுற அச்சேற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் ஊழியர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் உரித்தாகுக.

கோப்பாய் சிவம்
பிரதிப்பணிப்பாளர் பணிமனை,
நீர்ப்பாசனத் திணைக்களம்,
கிளிநொச்சி.

இதழ்கள் இன்னும் விரியும்….

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
21/07/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.