”வேர்களும் விழுதுகளும்”

-சிறீ சிறீஸ்கந்தராஜா 

ஞானசேகரன் சிறுகதைகள் –      தி. ஞானசேகரன்

அணிந்துரை: பேராசிரியர் க. அருணாசலம்
(தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

1

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ்இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது பல உண்மைகள் புலப்படும். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம். காலத்தால் மிக முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன்றி அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கும் மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன என்னும் உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். ஒருசிலர் அவற்றை ஏற்கத் தயங்கினர். ஆயின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாண்டு காலத் தேடுதல் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள் முதலியவற்றின் மூலமாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “முந்து தமிழ்க்கல்வெட்டுக்கள்”என்னும் நூல் சங்ககால இலக்கியங்களை அலட்சியம் செய்தவர்களை வாய்மூடச் செய்துள்ளது.

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியைக் கொண்டுள்ள சங்ககாலத்தில் இலக்கியங்களைப் படைத்தளித்த இலக்கிய கர்த்தாக்களைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். வறுமையில் வாடிய புலமையாளர்களும் அறிவுடை மன்னர்களும் புலமைமிக்க பெண்களும் கணக்காயர்களும் வணிகர்களும் எனப் பல திறத்தினரும் இலக்கிய கர்த்தாக்களாக விளங்கியுள்ளனர் என்பதை நாம் அறியமுடிகின்றது. இதே நிலைமையை நாம் தொடர்ந்து இற்றைவரை காணலாம். சோதிட வல்லுநர்களும் வைத்தியர்களும் இலக்கியங்களைப் படைத்தளித்தமையை ஈழத்தின் இடைக்காலத் தமிழ் இலக்கிய உலகிற் காணலாம்.

ஈழத்திலே இருபதாம் நூற்றாண்டிலும் இன்றும்கூட வைத்தியத் துறையைச் சார்ந்த நந்தி, ஜின்னா ஷரிபுத்தீன், தி. ஞானசேகரன், எம். கே. முருகானந்தன், க. சதாசிவம், எஸ். முருகானந்தன் போன்றோர் வைத்தியத் துறையில் மட்டுமல்லாது நவீன இலக்கியத் துறையிலும் தமது தடங்களைப் பதித்துள்ளமை மனங்கொளத்தக்கது.

2

நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்துவரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்; ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்டகாலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அனுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

ஞானசேகரன் தமது “வாசனை” என்னும் சிறுகதையின் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது. “……தாத்தா என்மீது அளவுகடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப் பருவம்வரை அவரது அரவணைப்பிலும், நிழலிலும்தான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப் போய்விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வுகூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும். …தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கிப் பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பலமுறை நான் எண்ணியதுண்டு.”

1960களிலிருந்து இற்றைய வரை எழுதிவரும் ஞானசேகரனது படைப்புகளில் மானுடத்தை இதய சுத்தியோடு நேசிக்கும் உயர் பண்பையும் சிறுமைகண்டு பொங்கியெழும் இயல்பையும் சமுதாயத்தில் நிலவிவரும் ஊழல்களையும் போலித்தனங்களையும் கண்டிக்கும் பாங்கினையும் மாறிவரும் கருத்தோட்டங்களை உள்வாங்கிப் புதியதொரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்னும் பேராவலையும் ஒருங்கே தரிசிக்க முடிகின்றது. அவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவராயினும் சாதி, மத பேதமற்ற சமுதாயத்தைக் காணவிழையும் முனைப்பினை அவரது சிறுகதைகள் பலவும் நாவல்கள் சிலவும் வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.

1977ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘புதிய சுவடுகள்’ என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’என்னும் நாவலும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்ட அவர், வயதான நிலையிலும்கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

தமது புனைகதைகள் மூலம் நீண்டகாலமாகவே ஈழத்து இலக்கிய உலகிலும் தமிழகத்து இலக்கிய உலகிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். புனைகதைகளைப் படைப்பதுடன் மட்டும் அமையாது கடந்த சில ஆண்டுகளாக ‘ஞானம்’ என்னும் தரமானதோர் இலக்கியச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வருகிறார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இச்சஞ்சிகையின் தரம் உயர்ந்து செல்வதனையும் பயன்மிக்க நேர்காணல்களும் விவாதங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கலாம்.

ஞானம்’சஞ்சிகையின் தரத்தின் காரணமாகக் குறுகிய காலத்துள் இலங்கை, இந்தியா என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைக் கடந்து, உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இது வலம்வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சஞ்சிகைமூலம் ஞானசேகரனின் சாதனைகளும் புகழும் உலகெங்கும் பரவிவருகின்றன. எழுத்தாளர் ஞானசேகரனிலும் பார்க்க ‘ஞானம்’சஞ்சிகையின் ஆசிரியரது பெயரே இன்று இலக்கிய உலகில் அதிகம் பிரபலமடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

தமிழ் இலக்கிய உலகம் ஆரம்பத்தில் ஞாசேகரனைத் தரமானதொரு படைப்பாளியாகவே இனங்கண்டிருந்தது. ஆயின் ‘ஞானம்’சஞ்சிகை வெளிவரத் தொடங்கியதிலிருந்து இதழ்கள்தோறும் அவர் முன்வைக்கும் கருத்துகள், நேர்காணலின்போது ஆய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் பாங்கு, தொடுக்கும் வினாக்கள், மணிவிழா நாயகர்களையும், மறைந்த எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும்போதும் நினைவுகூரும்போதும் வெளிப்படுத்தும் கருத்துகள், வாசகர்களின் கேள்விக்கான பதில்கள் முதலியவற்றின் மூலம் அவரது எழுத்தாற்றலை மட்டுமன்றி விசாலித்த அறிவையும் இலக்கியப் புலமையையும் எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும் இனங்காணும் ஆற்றலையும் கண்டு இலக்கிய உலகம் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டிருக்கிறது.

3

இச்சிறுகதைத் தொகுதியிலமைந்துள்ள கதைகள் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு சில உண்மைகள் புலப்படும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி எனவும் அவ்வக்கால மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்கள் எனவும் சமுதாயத்தை விமர்சனம் செய்யும் சாதனம் எனவும் சமுதாயத்தை அது இருக்கின்ற நிலையிலும் பார்க்க உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முனையும் வலிமை வாய்ந்த ஆயுதம் எனவும் பலபடக் கூறுவர். மேற்கண்ட கருத்துகள் யாவும் ஞானசேகரனின் சிறுகதைகளுக்கும் பொருந்தக் கூடியனவே.

இன்றைய யாழ்ப்பாணத்து இளந்தலைமுறையினர் பலரும் அறிந்திராத செய்திகள் பலவற்றைப் பல சிறுகதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமகாலப் போர்ச்சூழலைச் சில சிறுகதைகள் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சமுதாயச் சிக்கல்களைப் பல சிறுகதைகள் விமர்சனம் செய்கின்றன. மலையகத்தையும் கொழும்பு மாநகரையும் மையப்படுத்திப் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும் தொடர்புபடுத்தும் அகலுலகத் தொடர்புகொண்ட சிறுகதையொன்றும் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. இச்சிறுகதைகளை ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்குப் பிறகு வரும் வாசகர்கள் படிக்கும்போது இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளத் தவறமாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.

இத் தொகுதியிலமைந்துள்ள சிறுகதைகளைத் தெளிவு கருதிப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்:

(அ) யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

(ஆ) மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

(இ) கொழும்பு மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

(ஈ) போர்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள்.

(உ) ஆசிரியர் தாம்பெற்ற வைத்திய அநுபவங்களைப் புலப் படுத்தும் சிறுகதைகள்.

(ஊ) அகலுலகத் தொடர்பு கொண்ட சிறுகதைகள்.

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.