-மீனாட்சி பாலகணேஷ் 

 (காதலின் புதியதொரு பரிமாணம்)

          மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                              *****************

                        தொடர்ச்சி: காட்சி – 3

          சித்ரா: அது முடியாத செயல். தணியாத Chitrangadha-3ஆர்வத்துடன் என்னை எதிர்கொள்ளும் அவருடைய பார்வை தாபமிகுந்த ஆன்மா தனது கரங்களால் அணைத்துக்கொள்வது போலுள்ளதே! அவருடைய இதயம் தளைகளை உடைத்துக்கொண்டு எல்லையற்ற ஆசையின் ஓலம் உடல் முழுவதும் படர்ந்தோடுவதை உணரும்போது, எவ்வாறு அவரை ஒரு யாசகனைப்போல் திருப்பி அனுப்ப இயலும்? முடியவே முடியாது!

          (மதனனும் வசந்தனும் நுழைகின்றனர்)

ஆ! காதற்கடவுளே! எத்தகைய பயங்கரமான தீயில் என்னைச் சுட்டெரிக்கிறீர் நீர்? நான் எதனைத் தொட்டாலும் அது சூட்டால் எரிகின்றதே!

          மதனன்: நேற்றிரவு என்ன நடந்ததென அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

          சித்ரா: வசந்தமலர்கள் தூவப்பட்ட புல்படுக்கையில் நான் படுத்துக்கொண்டு அர்ஜுனன் என்னை, என்னழகைப் பற்றிக் கூறிய வர்ணனைகளை திரும்ப எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்டநாள் முழுவதும் சேர்த்துவைத்த நறுந்தேனை துளித்துளியாக சுவைத்து மகிழ்ந்திருந்தேன். எனது முந்தைய பிறவிகளைப்போலவே முந்தைய வாழ்க்கையையும் மறந்துவிட்டேன். என்னை விரைந்து செல்லும் சில பொழுதுகளே உள்ள ஒரு மலர்போல எண்ணிக்கொண்டேன்; அதற்குள்ளாக அது ரீங்காரமிடும் வண்டுகளின் புகழாரங்களைச் சூடிக்கொள்ள வேண்டும்; கானகத்தின் ரகசியங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்; ஆகாயத்தை நோக்காமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டும், தலைகுனிந்து கொண்டும் ஒரு சப்தமுமின்றி, தனது இறுதிமூச்சைப் புழுதிக்கு அளித்திட வேண்டும்; அவ்வாறு கடந்தகாலமும் எதிர்காலமும் அற்ற சிறுகதை போலும் அருமையான பொழுதினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

          வசந்தன்: முடிவற்ற பெருமை நிறைந்த வாழ்வு மலர்ந்து நிறைவுறுவதும் ஒரேயொரு காலைப்பொழுதுதான்.

       மதனன்: பாடப்படும் ஒரு பாடலின் குறுகியபொழுதில் முடிவற்ற பொருள்பொதிந்துள்ளதனைப் போன்றதே அது!

          சித்ரா: தென்றல் காற்று என்னைத் தாலாட்டிட நான் உறங்கினேன். தலைக்குமேல் பூத்துக்குலுங்கிய மாலதிக்கொடியிலிருந்து எனது மேனி முழுதும் முத்தங்கள் விழுந்தன. எனது தலைமயிர், மார்பகம், பாதங்கள் என ஒவ்வொரு மலரும் ஒரு இடத்தைத் தேர்ந்து விழுந்து இறந்தது! நான் உறங்கினேன். எனது ஆழ்ந்த உறக்கத்தினிடையே தீயின் கூரான விரல்களைப்போல ஒரு ஆழமான ஆர்வமான பார்வை, எனது உறங்கும் மேனியைத் தீண்டியதை உணர்ந்தேன்.

          திடுக்கிட்டு எழுந்த நான் எனதுமுன்பு அந்தத் தவசி நிற்பதனைக் கண்டேன். மேற்குத்திசை நோக்கி நகர்ந்துவிட்ட நிலவு, இந்த மெல்லிய மனித உடலில் புனையப்பட்ட ஆச்சரியமிகுந்த தெய்வீகக்கலையை மரங்களின் இலைகளினூடாக வேவுபார்த்துக் கொண்டிருந்தது. வீசியகாற்று அழுத்தமான நறுமணச் சுகந்தங்களால் நிரம்பியிருந்தது; சில்வண்டுகள் ஓசையிடும் ஆரவாரம் இரவின் நிசப்தத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது; மரங்களின் நிழல்கள் ஏரியின் நீரில் ஓசையின்றிப் பிரதிபலித்தன. தனது கைத்தடியுடன் அவன் அங்கு ஒரு காட்டுமரத்தைப்போல உயரமாக, உறுதியாக, அசைவின்றி நின்றான்.

          கண்களைத் திறந்தபோது, நான் வாழ்வின் நிதர்சனங்களிலிருந்து இறந்துவிட்டது போலவும் ஒரு கனவின் வசப்பட்டு, நிழலுலகில் பிறந்துவிட்டது போன்றும் எனக்குத் தோன்றியது- நழுவும் ஆடைகளைப்போல எனது நாணமும் எனது காலடியில் நழுவி விழுந்தது. அவனுடைய அழைப்பு கேட்டது – ‘ஆருயிரே! எனது உயிரின் உயிரே!’ மறந்துவிட்ட எனது பிறவிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதற்குப் பதிலளித்தது. நான், “எடுத்துக்கொள்! என்னை முழுமையாக எடுத்துக்கொள்!” என்றேன். எனது கரங்களை அவனை நோக்கி நீட்டினேன். நிலவு மரங்களின் பின்னேசென்று மறைந்தது. ஒரு இருள்திரை அனைத்தையும் மூடிக்கொண்டது. சுவர்க்கமும் பூமியும், காலமும் இடமும், மகிழ்ச்சியும் துன்பமும், இறப்பும் வாழ்வும் ஒன்றோடொன்று பிணைந்து தாங்கவியலாத இன்பவெள்ளத்திலாழ்த்தின. நாளின் முதல் ஒளிக்கீற்றுகளுடனும், பறவைகளின் முதல் ஒலிகளுடனும் நான் எழுந்து எனது இடதுகரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தேன். காலைநேரத்துப் பிறைநிலாவைப்போல் தனது இதழ்களில் தவழும் பொருளற்ற புன்னகையுடன் அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான். விடியல்பொழுதின் இளஞ்சிவப்பு அவனது உயர்வான நெற்றியில் படர்ந்து அழகு செய்தது. நான் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றேன். பெரிய இலைகளை ஒன்றுசேர்த்து அவனுடைய முகத்தினை சூரியவெளிச்சத்தினின்று மறைத்தேன். என்னையே நான் பார்த்துக்கொண்டபோது பழைய மண்ணையே கண்டேன். நான் யாராக இருந்தேன் என நினைவு வந்தபோது, தன் நிழலையே கண்டு அச்சங்கொண்டு ஓட்டமாக ஓடும் மானைப்போல் ஷெபாலி மலர்கள் இறைந்திருந்த கானகப்பாதையில் ஓடினேன். ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு அமர்ந்து எனது முகத்தை இரு கரங்களாலும் மூடிக்கொண்டு அழவும் புலம்பவும் முயன்றேன். ஆனால் கண்களில் நீரே வரவில்லை.

          மதனன்: அந்தோ! மானிட மகளே! நான் தெய்வீகப் பொக்கிஷத்திலிருந்து சுவர்க்கத்தின் இனிய தேறலை எடுத்து, அத்துடன் ஒரு உலகசம்பந்தமான இரவினை விளிம்புவரை நிரப்பி, உனது கையில் அதனை அருந்தி மகிழ அளித்தேன்! இருந்துமா இந்த அவலக்குரல்?

          சித்ரா: (வெறுப்புடன்) யார் அதனைப் பருகினார்கள்? வாழ்வின் மிக அபூர்வமான ஒரு ஆசை, காதலின் முதன்முதல் சங்கமம் எனக்கு அளிக்கப்பட்டது; ஆயினும் வலுக்கட்டாயமாக எனது பிடியிலிருந்து பறித்துக்கொள்ளவும் பட்டதே! இரவல் வாங்கிய இந்த அழகு, என்னைப் போர்த்துள்ள இந்தப் பொய்மை என்னைவிட்டு நழுவும்போது, நன்றாக மலர்ந்து முதிர்ந்த பூவின் இதழ்களைப்போல் அந்த இனிய சங்கமத்தின் ஒரே அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடுமே! தனது நிர்வாணத்தின் கொடுமையையும் அவமானத்தையும் தாங்காமல் அந்தப்பெண் இரவும் பகலும் அழுதுகொண்டு அமர்வாளே!

          காதல்கடவுளே! இந்த சபிக்கப்பட்ட தோற்றம் ஒரு அரக்கனைப்போல் என்னுடன் இருந்துகொண்டு காதல் தொடர்பான அனைத்துப் பரிசுகளையும் களவாடுகிறது; எனது உள்ளம் விழையும் முத்தங்கள் அனைத்தையும் பறித்துச் செல்கிறதே!

          மதனன்: அந்தோ! உனது அந்த ஓர் இரவு எப்படி வீணாகி விட்டது! உனது மகிழ்ச்சி எனும் படகு கண்ணில் கண்டும், அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு கரையைத் தொட முடியவில்லையே!

          சித்ரா: சுவர்க்கம் எனக்கு மிக அருகில் நெருங்கி வந்தும், அது என்னை இன்னும் வந்தடையவில்லை என்பதனை நான் கணப்பொழுது மறந்துவிட்டேன். ஆனால் காலையில் எனது கனவிலிருந்து கண்விழித்ததும் எனது உடலே எனது எதிரியாக மாறக் கண்டேன். அவளை தினந்தோறும் அலங்கரிப்பதும், அவளுடைய காதலன் தழுவிக்கொள்ள அவனிடம் அனுப்புவதும் எனக்குப் பிடிக்காத வேலை. ஓ கடவுளே! உனது வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!

          மதனன்: ஆனால் நான் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் உன்னால் உன் காதலன் முன்னால் நிற்க இயலுமா? மதுக்கிண்ணத்திலிருந்து முதலில் சிறிது அருந்தியுள்ளவனிடமிருந்து, அவனுடைய மகிழ்ச்சியைத் தட்டிப்பறிப்பது கொடுமையல்லவா? எத்தகையதொரு கழிவிரக்கம் நிரம்பிய கோபத்துடன் அவன் உன்னை எதிர்கொள்வான் தெரியுமா?

          சித்ரா: அது இப்போதைய நிலைமையை விட மேலானது. எனது உண்மை வடிவை அவனுக்குக் காண்பிப்பேன்; இந்த வேடத்தைவிட அது உயர்வானது. அவன் என்னை நிராகரித்தாலும், மறுத்து என் இதயத்தைச் சிதறடித்தாலும், அதையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்வேன்.

          வசந்தன்: எனது புத்திமதியைக் கேட்டுக்கொள். வசந்தகாலம் முடிந்து இலையுதிர்காலம் துவங்கும்போது பழங்கள் கனியும் வெற்றிப்பெருமிதம் உண்டாகும். காதல் வெப்பத்தால் மலர்ந்த உன் உடலெனும் மலர் வாடியுதிர்ந்து போகும்போது அர்ஜுனன் மகிழ்ச்சியாக உன்னிடம் உள்ள முதிர்ச்சியின் உண்மையைப் புரிந்துகொள்வான். குழந்தாய்! உனது களியாட்டத் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ந்திருப்பாயாக!

காட்சி- 4

          சித்ரா: வீரரே! என்னை ஏன் அவ்வாறு பார்க்கிறீர்கள்?

          அர்ஜுனன்: நீ அந்த மலர்மாலையை எவ்வாறு தொடுக்கிறாய் எனப் பார்க்கிறேன். இரட்டை சகோதர-சகோதரி என்னும் தோலும் நளினமும் இணைந்து உன் விரல்நுனிகளில் எவ்வாறு விளையாட்டாக நடனமாடுகின்றன எனக்காண்கிறேன். பார்த்துக்கொண்டே சிந்தித்தவண்ணம் இருக்கிறேன்.

          சித்ரா: என்ன சிந்திக்கிறீர்கள் ஐயா?

          அர்ஜுனன்: உன்னைப் பற்றித்தான், நீ இதே மென்மையான தொடுதலுடனும் இனிமையுடனும் நான் தலைமறைவாயுள்ள எனது இந்த நாட்களை நான் நாடு திரும்பும்போது எனக்குச் சூட்டும் கிரீடமாக வைக்க ஒரு தெய்வீகமான மலர்ச்சரமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறாய்;

          சித்ரா: வீடா? (நாடா?) ஆனால் இந்தக் காதல் வீட்டிற்கானதல்லவே!

          அர்ஜுனன்: வீட்டிற்கல்லவா?

          சித்ரா: ம்ஹூம்; அதனைப் பற்றியே பேசவேண்டாம்! நிரந்தரமானதையும் உறுதியானதையுமே உமது வீட்டிற்கு எடுத்துச் செல்வீராக. வழியில் பூத்த இந்தச் சிறிய காட்டுமலரை அவ்விடத்திலேயே விட்டுச் செல்லுங்கள்; நாளின் முடிவில் அது மற்ற வாடும் மலர்களுடனும், அழுகும் இலைகளுடனும் அழகாகக் கிடந்து மடிய விட்டுவிடுங்கள். அதனை உங்களுடைய மாளிகையின் கூடத்திற்கு எடுத்துச்சென்று விடாதீர்கள்; அங்கு அதன் மதிப்பையறியாத கல்தரையில் வீசியெறியப்பட்டு, வாடி, மறக்கப்பட்டும் விடும்.

          அர்ஜுனன்: நம்முடையதென்ன அத்தகைய காதலா?

          சித்ரா: ஆம்! வேறொன்றுமல்ல! ஏன் அதற்காகப் பச்சாதாபப்பட வேண்டும்? பொழுதுபோக்குக்கான ஒன்று அதன் காலத்தைக் கடந்து வாழக்கூடாது. அது வெளியேற வேண்டிய வாயில் மூடப்பட்டுவிட்டால், மகிழ்ச்சி துன்பமாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அது நீடிக்கும்வரை மட்டுமே அதனைக் கொண்டாட வேண்டும். மாலைப்பொழுதின் நிறைவினை உங்கள் காலைப்பொழுதின் தேவைகளுக்குமேல் உரிமை கொண்டாடக்கூடாது. அந்தநாள் முடிவுற்றுவிடும்.

          இந்த மாலையை அணிவீராக! நான் களைப்பாக இருக்கிறேன். என்னை உம் கரங்களில் ஏந்திக் கொள்ளுங்கள் அன்பே!  நமது இதழ்களின் இனிய சந்திப்பில், இந்த வீணான பிதற்றல்கள் நிறைந்த மனக்குறைகள் இறந்து போகட்டும்.

        அர்ஜுனன்: உஷ்! கேள், என் கண்ணே! அந்த அமைதியான மரங்களினூடே மாலைநேரத்துக் காற்றின் மூலம், தூரத்துக் கிராமத்திலிருந்து ஒலிக்கும் கோவில்மணியின் ஓசையைக்கேள்!

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *