மகாதேவஐயர் ஜெயராமசர்மா

              B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

                முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

சமயம் தேவையா தேவையில்லையா என்பதற்கு அப்பால் சமயம் என்றால் என்ன என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுதலே முக்கியமாகும். சமயம் என்பது நல்லதொரு வாய்ப்பு என்று ஏன் கருதக்கூடாது ? நல்ல வாய்ப்புக்களை நமக்கெல்லாம் நல்லபடி தந்து நம்மையெல்லாம் வையத்தில் வாழ்வாங்கு வாழப் பண்ணுகிறது என்று சமயத்துக்கு விளக்கம் சொன்னால் பொருந்தும் அல்லவா ? நல்ல சமயமாக இருக்கிறது இதை நீ நழுவவிடாதே என்று சாதாரணமாக  நாம் கூறுகிறோம் அல்லவா ? அங்கு ” சமயம் ” என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா ? நல்வாய்ப்பினையே உணர்த்துகிறது என்பது முக்கியமாகும்.

 ” சைவசமயம் ” என்றுதான் அழைக்கின்றோம். ” சைவமதம் ” என்று அழைப்பதில்லை. காரணம் சமயம் என்னும் நன்னெறியூடாக மனத்திலே ” மதம் ” என்னும் ஆணவம் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்பதே காரணம் என்பதை  நாமனைவருமே அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இவ்வாறு புனிதம் மிக்க நம் சைவசமயம்  நிலைப்பதற்குக் கோவில்களே காரணமாக இருக்கின்றன என்பதே மிகவும் முக்கிய அம்சமெனலாம். சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் நிறைவேற்றக் கோவில்கள் இன்றியமையா திருக்கின்றன. சமயம் காட்டும் ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கக் கோவில்கள் உதவுகின்றது. சமயத்தின் மூலப்பொருளான இறைவனே உறையும் இடமாக  கோவில்களே விளங்குகின்றன என்பதும் இங்கு முக்கியமானதாகும்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் என்பதை விரும்பும் யாவருக்கும் சமயமும் கோவில்களும் இன்றியமையாதன என்பதுதான் நம் சமய குரவர்களின் எண்ணமாகும். இதனால் தான் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் யாவரும் கோவிலைச் சுற்றியே தங்களின் வாழ்வினை அமைத்துக் கொண்டார்கள். அவர்களின் ஆன்மீகத் தொண்டுகள் அனைத்துமே கோவில்களில் தான் ஆரம்பமாகின்றன.சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் வகையில் இவர்களது வாழ்க்கையும் செயற்பாடுகளும் கோவிலை வைத்தே நடைபெற்றன என்பதை வரலாற்றினால் அறிந்து கொள்ளுகின்றோம். ஞானத்தை  இவர்கள் அனைவருக்கும் வழங்கிய இடமாகவும் கோவில்களே அமைகின்றன. மூன்றுவயதில் சம்பந்தர் ஞானப்பால் உண்டதும் முதல் திருப்பதிகமான ” தோடுடைய செவியன் ” பாடியதும்,

சூலைநோய்நீங்கி ” கூற்றாயின வாறு ” பதிகத்தை அப்பர் பெருமான் பாடியதும்,

 இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு ” பித்தா பிறைசூடி” என சுந்தரப் பெருமான் பாடியதும் கோவிலில் தான் என்பது மிக மிக முக்கியமான விசயம் எனலாம்.

மக்கள் மனத்தை நல்லமுறையில் மடைமாற்றம் செய்வதற்குக் கோவில்கள் தாம் நிலைக்களம் என்பதை நமது அடியார்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் தாமும் கோவிலில் தொண்டுசெய்து தம் வழியில் மக்களையும் இட்டுச்சென்று அவர்கள் வாழ்வில் கோவிலை முக்கியமானதாக்கி விட்டார்கள். இதனால் ஊர்கள் தோறுமே சிறியதும் பெரியதுமாகக் கோவில்கள் தோற்றம் பெறலாயின. மக்களின் அன்றாட வாழ்வே பக்கத்துக்குக் கோவில்களைத் தொட்டே தொடங்கும் நிலை உருவாக்கம் பெற்றுவிட்டது.

திருமுறைகளைப் புராணங்களைப் படிக்கும் இடமாகக் கோவில்கள் விளங்கின.கோவில்களை மையமாக வைத்து ஊர்களின் பெயர்களும் பிரசித்த மாயின. ஊரின் பெயரைச் சொன்னால் அது கோவிலைக் குறிப்பதாகவே அமைந்துசிறப்பினையும் பெற்றது. சிதம்பரம் என்றால் அது ஊராக இருப்பினும் ஊர்மறந்து சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவில்தான் அங்கு வந்து நிற்கும். அதுபோல் பழனி,திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், தஞ்சாவூர்,மயிலாப்பூர், ஸ்ரீரங்கம்,திருப்பதி,பழமுதிர்சோலை,திருவாவினன்குடி,சீர்காழி, திருவண்ணாமலை,திருக்கழுக்குன்றம், இராமேஸ்வரம், கதிர்காமம், நல்லூர்,மண்டூர், வெருகல், சித்தாண்டி, செல்வச்சன்னிதி, நயினாதீவு, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, ஒட்டிசுட்டான்,திருகோணமலை, திருக்கேதீச்சரம், வற்றாப்பளை, இந்த ஊர்ப்பெயர்களை உச்சரித்தவுடன் அந்த ஊரினை மறந்து அங்குள்ள ஆண்டவனின் கோவில்களே நமக்கு

மனதில் வந்து நிற்கிறது என்பதை எவராலுமே மறுத்துவிடல்முடியாது அல்லவா? காராணம் – அந்த அளவுக்கு நமது வாழ்விலே கோவில்கள் இணைந்துவிட்டன.

நம்மோடு இணைந்துவிட்ட கோவில்களின் அமைப்பினை உற்று நோக்கும் பொழுது,  ஒரு மனிதன் படுத்திருந்தால் எப்படி இருக்குமோ அதே அமைப்பினையே காணமுடிகிறது. மனிதனின் தலை கர்ப்பக்கிரக மாகவும் , கழுத்து அந்தராளமாகவும், தோள் முகமண்டலமாகவும், வயிறு மகாமண்டபமாகவும், கால்கள் பிரகாரமாகவும், பாதங்கள் கோபுரமாகவும், அமைந்திருக்கின்றன.

கோவில் என்பது சாதரண இடமல்ல. அது பல தத்துவங்கள் பொதிந்திருக்கும் இடமாகும். மனித உடலை ஒத்தவிதத்தில் கோவிலின் அமைப்பு உள்ளது என்பதைப் பார்த்தோம். மனித உடலில் ஆன்மா குடி கொண்டுள்ளதைப் போல கோவிலில் ஆண்டவன் குடிகொண்டு இருக்கின்றான். இதனை ” தேஹோ தேவாலய ஹ ப்ரோக்தோ ஜீவோ தேவஹஸனாதனஹ ” என்று ஸ்கந்ததோபனிஷத் சொல்கிறது. இக்கருத்தை வலியுறுத்துவது போலவே திருமூலரும் ” உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் ” என்றார். அப்பர் பெருமானும் ” காயமே கோவிலாக ‘ என்று திருத்தாண்டகம் வாயிலாகக் காட்டுவதும் நோக்கத்தக்கதே.

கோவில்களில் வழிபடுவதற்கென இறைவனின் திருவுருவங்கள் கல்லினாலும், செம்பினாலும், அமைக்கப்படுகின்றன. பொன்னும் மணியும் , தங்கமும், வைரமும், வெள்ளியும், நிறைந்திருந்தும் அவற்றை யெல்லாம் தேர்ந்தெடுக்காது  கல்லையும் செம்பையும் எடுத்த காரணம்தான் என்ன ? நமது முன்னோர்களின் மதி நுட்பத் தையே இது காட்டுகிறது.

 இறைவன் ஒளி வடிவானவன். இதனால் தான்

  ” சோதியே சுடரே சூழொளி விளக்கே “

” மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் “

” ஒளிவளர் விளக்கே “

” தீபமங்கள ஜோதி நமோநம”

” பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு ” என்று அடியவர்கள் பாடினார்கள்.

கல்லில் நெருப்புத் தங்கி இருக்கிறது என்பதை நமது முன்னோர்கள் கண்டார்கள். இதனால் கல்லையும் கல்லையும் உரசித் தீயை உண்டாக்கினார்கள். கும்பாவிஷேக வேளையில் சிவாக்கினியால் எழும் சிவஞான ஒளியை நிறை குடமாகிய கும்பத்தில் சேமித்து  அக்கும்ப நீரால் நெருப்பு நிறைந்துள்ள கல் விக்கிரகத்தை அபிஷேகம் செய்து கல் விக்கிரகமாகிய கடவுளை நிறுவினார்கள்.

 உற்சவகாலத்தில் எழுந்தருளும் உற்சவ மூர்த்தி செம்பினால் ஆக்கப் பட்டது. செம்புக்கு மின் சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் இருக்கிறது. மின் பிறப்பாக்கியிலிருந்து மின் சாரத்தைப் பரப்ப செம்பினாலான  கம்பிகள் பயன்படுத்தப் படுவதைக் காண்கின்றோம். அதே போல உள்ளே இருக்கின்ற கற்பக்கிரகக் கல்லால் ஆன மூர்த்தியின் தெய்வ மின்  ஆற்றலை வெளியில் கொண்டுவந்து அடியார்களுக்கு அருளி அவர்கள் ஈடேற உதவுவதற்காகவே செம்பினால் ஆன உற்சவ மூர்த்தியை நமது முன்னோர்கள் அமைத்தார்கள். கல்லும் செம்பும் மனிதனது வாழ்வில் மிகவும் முக்கியமானவை. அப்படி முக்கியமான வற்றையே கோவிலிலும் சேர்த்து அதற்குத் தத்துவ ரீதியாக விளக்கம் கொடுத்த நமது முன்னோர்களின் மதி நுட்பத்தைக் கட்டாயம் போற்றியே ஆக வேண்டும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *