இலக்கியம்கட்டுரைகள்

குறுந்தொகை நறுந்தேன் – 2

-மேகலா இராமமூர்த்தி

மானுட சமூகத்தையும் மாந்தக் கூட்டத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருப்பது முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழும் காதல்!

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாகும் விந்தை நம் சிந்தை தொடுவது.

இதோ…எடுத்ததை முடிக்கும் திறனும் உரனுங்கொண்ட கட்டழகுக் காளையொருவன், கானவேட்டையில் கலைமானொன்றைத் துரத்தி வரக் காண்கிறோம்.  அம்மானோ ஆண்தகைக்கு அகப்படாது நாலுகால் பாய்ச்சலில் சென்றுவிட, அதனைத் தேடிக்கொண்டு மலையருவிப் பக்கம் வந்தவன், வரும் வழியில் அழகிய தமிழ்மகளொருத்தி தன் தோழியோடு செயலை (அசோகு) மரத்தடியில் நின்றிருக்கக் கண்டான்; தான் கலைமானைத் துரத்திவந்த செயலை மறந்து, மரத்தடியில் நின்றிருந்த பெண்மானை இமையா நாட்டத்தொடு நோக்கினான். தனைநோக்கிய பெம்மானை அப்பெண்மானும் நோக்கினாள்.

தன் வீரத்தையும் உரத்தையும் அப் பாவையின் பார்வை உருவிப்போனதை உணர்ந்தான் அந்தக் காளை. வேட்டத்தில் இப்போது அவனுக்கு நாட்டமில்லை. தன் கண்ணெதிரே தோன்றுவது அணங்கா? ஆய்மயிலா? எனச் சிந்திக்கத் தொடங்கினான். தன் ஐயத்தைப் போக்கிக்கொள்ள அருகே சென்று அப்பெண்களிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தான். அவர்களோ பெண்களுக்கே உரிய நாணையே பூணாகக் கொண்டவர்களாதலால், அந்நிய ஆடவனோடு உரையாடத் தயங்கித் தரைபார்த்து நின்றிருந்தனர். மிகுந்த ஏமாற்றத்தோடு தன்னூர் திரும்பினான் அவன்!

வேட்டையாடச் சென்ற தலைவன் விலங்கு எதனையும் வீழ்த்திக் கொணராது வறிதே திரும்பியது கண்ட அவன் தோழன், “வேட்டைக்குச் சென்றாய்…வெறுங்கையோடு மீண்டுவருகின்றாயே! விலங்கு ஏதும் வசப்படவில்லையா?” என்று வினவினான்.

”விலங்கைத் தேடிச்சென்ற என்னை விலங்கிட்டுவிட்டாள் வஞ்சியொருத்தி. அதனால் கான்விலங்கை வேட்டையாட நான் மறந்தேன்” என்ற தலைவன் தொடர்ந்து,

”மலையிலிருந்து வீழும் தூவெள்ளருவி பாறை வெடிப்புகளில் ஒலிக்கும் பன்மலர்ச் சாரலிலுள்ள சிறுகுடிவாழ் குறவன் ஒருவனுடைய குறுமகளின் நீரையொத்த மென்சாயல், தீபோன்ற என் உரத்தையும் அவித்துவிட்டது நண்பா!” என்றான் ஏக்கத்தோடு.

மால்வரை  இழிதருந்  தூவெள்  அருவி
கல்முகைத் 
ததும்பும்  பன்மலர்ச்  சாரல்
சிறுகுடிக் 
குறவன்  பெருந்தோட்  குறுமகள்
நீரோ 
ரன்ன  சாயல்
தீயோ 
ரன்னவென்  உரனவித்  தன்றே.  (குறுந்: 95 – கபிலர்)

[ ”போர்க்களத்துக்கு வாராதவர்கூடப் பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சும் என் வலிமை, வனிதை ஒருத்தியின் ஒளிமிகு நுதலுக்குத் தோற்றுப்போனதே” என்று வள்ளுவர் படைத்த காதலனும் தன்னையே எள்ளி நகையாடுவதை இதனோடு நாம் பொருத்திக் காணலாம்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும்
உட்குமென் பீடு.   (குறள்: 1088) ]

தலைவனின் விசித்திர மொழிகளைக் கேட்ட தோழன்,

நண்ப! ”வலியும் உரனும் மிக்க உன் பேராண்மை மெல்லிய பெண்ணொருத்தியிடம் தோற்றுப்போனது என்று நீ சொல்வதை என்னால் நம்பமுடியவில்லையே” என்று வியந்தான்.

”ஏன் நம்ப மறுக்கிறாய்? சிறிய வெள்ளிய பாம்புக்குட்டியொன்று வலிமிகு காட்டுயானையையே வருத்தும் இயல்புடையது என்று நீ அறியாயோ? அதுபோல், அழகிய வளையணிந்த அவ்விளைய மகளும் என்னை வருத்துகின்றாள்” என்றுகூறிப் பெருமூச்செறிந்தான்.

சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை
கான 
யானை  அணங்கி  யாஅங்கு
இளையள் 
முளைவாள்  எயிற்றள்
வளையுடைக் 
கையள்எம்  அணங்கி  யோளே. (குறுந்: 119 – சத்திநாத(க)னார்

[பொதுவாக யானைக்கும் புலிக்குமிடையேயான பகையையும் போரையுமே இலக்கியங்கள் நமக்குப் பெரிதும் சுட்டியிருக்கின்றன.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் (குறள்: 599)
 என்று வள்ளுவமும் புலியைக்கண்டு அஞ்சும் யானையை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. ஆனால், புலியொத்த வலியற்ற ஒரு சிறு பாம்புக்குட்டிகூடக் காட்டுயானையை வருத்தும் எனும் புதிய செய்தியைச் சத்திநாதனாரின் குறுந்தொகைப் பாடல் நமக்கு அறியத்தருகின்றது.]

தலைவனின் சொற்கேட்டுக் கடகடவென  நகைத்த தோழன்,

”பெருந்தோளுடைய அருமைத் தலைவ! காதலென்பது வருத்தமும் நோயும் அன்று!  பழங்கொல்லையில் தழைத்த முற்றாத இளம்புல்லைக் கடித்துண்ண முடியாத கிழட்டுப் பசு ஒன்று அதனைத் தன்  நாவால் தடவி இன்புறுவதுபோல், காமமும் அதனை நினைப்பதால் இன்பந்தரும் ஒரு மனநிலையேயன்றி வேறில்லை. விரும்பினோரை அது விடாது; வெறுத்தோரை அது தொடாது. ஆதலால் காமவுணர்வைக் கொன்றுவிடு; உன் ஆற்றலால் அதனை வென்றுவிடு!” என்று இடித்துரைத்தான்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும்
பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற்
கலித்த முற்றா இளம்புல்
மூதா
தைவந் தாங்கு
விருந்தே
காமம் பெருந்தோ ளோயே.  (குறுந்: 204 – மிளைப்பெருங்கந்தனார்)

தோழனின் மொழிகள் தலைவனின் செவிகளுக்கு எட்டியாய்க் கசந்தன; தன் காதல் கைகூட அவன் ஏதேனும் யோசனை சொல்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்தவனுக்குக் காதலையே விட்டுவிடு என்று அவன் சொன்ன யோசனை எரிச்சலூட்டியது.

இனி இவனிடம் இதுகுறித்துப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த தலைவன், வேறு யாரை அணுகினால்  தன் காதல் வெல்ல வழிபிறக்கும் எனச் சிந்தித்த வேளையில்,  பளிச்சென்று அவன் மூளையில் மின்னல் ஒன்று வெட்டியது! யோசனை ஒன்று கிட்டியது!

[தொடரும்]

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க