க. பாலசுப்பிரமணியன்

உள்ளத்தின் உள்ளே ஒளியாய்

திருமூலர்-1-3

உள்ளத்தில் ஒளியாய் அவன் உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் போதும் நாம் ஏன் அவனை அறிந்துகொள்வதில்லை? அவன் காட்டும் பாதையில் ஏன் செல்வதில்லை? அதற்குக் காரணமே அவன் உள்ளிருந்தும் அவனை நாம் அறியாமல் வெளியே அவனைத் தேடும் மாயையால்தானே? அவனை உணர்வு பூர்வமாக, அனுபவ பூர்வமாக மட்டுமின்றி வேறெப்படி அறிந்து கொள்ளமுடியும்? இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கூறுகின்றார்:

உண்டு ஒரு பொருள் என்று உணர்வார்க்கு எலாம்

பெண்டிர் ஆண் அலி என்று அரி ஒண்கிலை

தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்

கண்டும் கண்டிலேன் என் கண் மாயமே.

இந்தப் பாட்டில் மாணிக்க வாசகர் சூசகமாக “உணர்வார்க்கு’ என்று கூறி அனுபவ நிலையின் முக்கியத்துவத்தை எடுத்து உரைக்கின்றார்

இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் காரைக்காலம்மையார் “காதலால்- காண்பார்க்குச் சோதியாய் சிந்தையுள் தோன்றுமே ” என்று அன்போடு அவனை அணுகவேண்டிய நிலையையும் சோதியாய் அவனைச் சிந்தையில் அனுபவிக்க வேண்டியதன் காரணத்தையும் நம்முன் வைக்கின்றார்.

இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவறியாதே .

ஆகவே அவனை அறிந்து கொள்ள, அவனை அணைத்துக்கொள்ள, அவனோடு நிரந்தரமான உறவு கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் நமக்கு திருமூலரிடமிருந்து பதில் கிடைக்கின்றது

ஒளித்துவைத்  தேன்உள்ளூர உணர்ந்து ஈசனை

வெளிப்பட்டு நின்று அருள் செய்திடு மீண்டே

களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை

வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சி யுமாமே

அவனை உள்ளத்தால் உணர்ந்து அவனோடு அருள்சார்ந்த உறவை ஏற்படுத்தி அதை உறுதிசெய்துகொண்டால் அவன் நம் உள்ளத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டான்.

உள்ளத்தின் உள்ளே அவனை நிறுத்தி அறிந்தோர்க்கு எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும்? இந்த அனுபவ  நிலையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட வரிகள்

சிப்பியில் முத்தொளிகாண் சின்மயநோக் கில்லார்க்கு

அப்பி லொளிபோ லமர்ந்த மெய்ப்பொருள்காண்

என்னே அழகான விளக்கம் ! அவன் சிப்பிக்குள் அமர்ந்த முத்தாக உள்ளே நின்று ஒளி வீசுகின்றான்.

இந்த அழகான ஒளிப்பிழம்பையும் அதனால் உண்டான அனுபவத்தையும் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மால் வர்ணிக்க முடியும்? ஒரு முறை ஒரு சீடன் இதே கேள்வியை கபீர்தாஸரிடம் கேட்டபொழுது அவர் அவனுக்கு சிறிதளவு இனிப்பைக் கொடுத்து “இது எவ்வாறு இருக்கிறது” என்று கேட்க “அது இனிப்பாக இருக்கிறது என்று சொல்ல “இனிப்பு என்றால் என்ன” என்ற் கேள்வி எழ. அதை அனுபவத்தால் தான் உணரமுடியும் தவிர அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது என்ற உண்மையை உணர்ந்தான். அதே போல்தான் இறைவனை உணர்வால் தான் அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்து மேலோங்கி நிற்கின்றது/.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *