“வேர்களும் விழுதுகளும்” – “ஈழத்து இலக்கியப் பரப்பு”

0

20431640_1461941410511289_3613242538548371941_n

**********************************************
வைத்திய கலாநிதி
தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
(தி. ஞானசேகரன் – பகுதி-I)
*********************************
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.
15.4.1941 பிறப்பு (74 வயது).
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார்.
பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது
சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
இவர் “ஞானம்” என்னும் சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும்
ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த
அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம்
விதந்தோதத்தக்கது.
அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும்
பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன.
தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இவரது படைப்புகள்
*************************************************
வட இந்தியப் பயண அனுபவங்கள் – 2013
எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
குருதிமலை (புதினம்) – 1979
புதிய சுவடுகள் (புதினம்) – 1977
காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973
ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி ஞானசேகரன் தம்பதிகள் லண்டனுக்கும் வந்தனர்.
இவர்களுடனான சந்திப்பை “தேசம்நெற்” நவம்பர் 08 இல் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்திருந்தது.
ஒரு இலக்கியக் கலந்துரையாடலாகவும் இலக்கிய நண்பர்களின் சந்திப்பாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
புலம்பெயர் இலக்கியங்களை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றிய உரையாடல் முக்கியத்துவம் பெற்றமைந்தது.
புலம்பெயர்ந்தவர்கள் எழுதுவது எல்லாம் புலம்பெயர் இலக்கியங்களாகக் கொள்ளப்பட முடியாது என்றும்
அதன் உள்ளடக்கம் புலம்பெயர்ந்த சூழலின்
வெளிப்பாடாக அமைய வேண்டும் என்றும்
தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் முற்றாக
தாயக நிகழ்வுகளையே பதிவு செய்வதாக அமைந்து
படிப்படியாக புலம்பெயர் சுழலை வெளிப்படுத்தி
தற்போது முற்றுமுழுதாக புலம்பெயர் சுழலை,
அங்குள்ள சமூகங்களை மையைப்படுத்தி
வெளிவருவதை தி. ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
ஞானம் இதழின் தொகுப்பு இதழ்கள்
வரலாற்று ஆவணங்கள் என்றும்
இவை ஆண்டாண்டு காலத்துக்குமான
இலக்கியப் பதிவை மேற்கொண்டுள்ளது என்பதும்
அங்கு ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.
போருக்குப் பின்னான ஒரு இலக்கியப் பதிவை
ஞானம் கொண்டு வரவேண்டும் என்பதை
எழுத்தாளர் உதயணன் வலியுறுத்தினார்.
அதனை நிச்சயம் கொண்டு வரத் திட்டமிட்டு
இருப்பதாகவும் ஆனால் அதற்கான காலம்
இன்னமும் உள்ளதாகவும்
தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
இதனை ஏனையவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இன்னமும் போருக்குப் பின்னான பதிவுகள் வந்து கொண்டிருப்பதால் அதற்கான தொகுப்பை சிறிது
காலத்திற்குப் பின் வெளியிடுவதே உகந்தது என்ற
கருத்து அங்கு வெளியிடப்பட்டது.
ஈழத்தின் முன்னணி சஞ்சிகை ‘ஞானம்” ஆசிரியர்.
2000 ஜுன் முதல் வருகிறது. இறுதியாக 184ஆவது இதழ்
கடந்த மாதம் இணையத்திலும் வருவதால் அதிக
வாசகர்களை உள்வாங்குகின்றது.
பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம்’ எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றது.
1960களிலிருந்து எழுதிவரும் இலக்கியப் படைப்பாளி.
வைத்தியர்- மலையகத்தில் நீண்ட காலமாக
(புசல்லாவையில்) பணியாற்றியவர்.
கல்வி:
புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை,
உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்
பழைய மாணவராவார்.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி
சி. கணேசையர் இவரின் பூட்டனார்.
நல்லை ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள்
இவரது தாய் மாமா.
இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற
சிறுவர்களுக்கான சஞ்சிகையில் பள்ளிப் பராயத்தில்
சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை
அடிக்கடி எழுதி வந்தார்.
1964ஆம் ஆண்டில் ‘கலைச்செல்வி’ எனும் சஞ்சிகையில்
“பிழைப்பு” எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது.
‘கலைமகள்” இவரின் சில கதைகள் பிரசுரம் செய்தது.
இதுவரை 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார்.
எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக
எமது படைப்பாளிகள் பலர் நாட்டை விட்டும்
புலம்பெயர்ந்தனர்.
மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின.
சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம்.
இவை யாவும் எமது படைப்பாளிகளின்
படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த
நிலைமையை தோற்றுவித்தன.
வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம்
அருகத் தொடங்கிற்று.
ஆனாலும், இலக்கியச் செயற்பாடுகள்
காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட
வேண்டியது அவசியமானது என்பதை உணர்ந்து,
இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே
இப்பணியில் ஞானசேகரம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய
இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி
அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய
நிலையில், ஈழத்து இலக்கியத்தின் உறவுப் பாலமாக இயங்குகின்றார்.
உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே.
மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய
சாதனையைப் படைத்து வருகின்றார்
என்றால் மிகையாகாது.
இவர் 1997ஆம் ஆண்டு மத்திய மாகாண
சாகித்திய விழாவில் இலக்கிய சேவைகளுக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், ரத்னதீப பதநம என்ற அமைப்பு,
1998 ஆம் ஆண்டில் கண்டியில் ரத்னதீப
விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.
அகில இலங்கை சமாதான நீதவானான இவருக்கு
அரசு வழங்கும் அதியுயர் கௌரவமான கலாபூஷண
அரச விருதும் கிடைத்துள்ளது.
மிக அண்மையில் உடத்தலவின்ன சிந்தனைவட்டம்
இவருக்கு இதழியல் வித்தகர் எனும் பட்டம்
வழங்கி கௌரவித்தது.
இவ்வாறாக பிரதேச, மாவட்ட, மாகாண,
தேசிய மட்டத்தில் இவர் பல விருதுகளையும்,
கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை
தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர்
கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது.
அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக
மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது.
ஞானசேகரன் நூல்கள்:
1973 கால தரிசனம் – சிறுகதைகள்.
12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு
பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார்.
1977 புதிய சுவடுகள் (மறுபதிப்பு 2004) முதல் நாவல்.
வீரகேசரி நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது.
இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
1979 குருதிமலை- நாவல் (2005 மீள்பதிப்பு)
1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது.
தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத்
தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம்
இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது.
இந்நாவல் ‘தகவம்’ பரிசினையம் பெற்றுக் கொண்டது.
1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த
ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றது.
1992இல் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
எம்.ஏ. வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று
பதிப்புகளைக் கண்டது.
மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக
2005இல் வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான
மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின்
பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப்
போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின்
வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின்
மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
1994 லயத்துச் சிறைகள் 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த
நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.
1996 கவ்வாத்து குறுநாவல் தேசிய கலைஇலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.
‘விபவி” கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு” விருதும், சான்றிதழும் பெற்றது.
மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள்
1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.
1998 அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்).
தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் BA வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
1999 அவுஸ்திரேலியப் பயணக்கதை புதிய சூழலில் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ள வாற்றையும், தமது ஆன்மீக, உலகியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் கோவில்களையும் கல்வி நிலையங்களையும் கலை-இலக்கிய மன்றங்களையும் அவர்கள் அமைத்துள்ளவாற்றையும் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
1999 புரிதலும் பகிர்தலும். அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் தொகுதி.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஐவரின் நேர்காணல்கள் இங்கு இடம்பெறுகின்றன.
எஸ்.பொன்னத்துரை,
மாத்தளை சோமு,
லெ.முருகபூபதி,
அருண் விஜயராணி,
சி.மனோகரன்
ஆகியோரது கலை இலக்கியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும், கருத்துக்களையும் அவர்களது மன உணர்வுகளையும் சிறப்பான முறையில் இந்நேர்காணல்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
****************************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
01/08/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.