திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (20)
க. பாலசுப்பிரமணியன்
இறையுணர்விற்கு என்ன வழி?
ஒரு முறை ரோமாபுரியின் பேரரசராக இருந்த ஜூலியஸ் சீசர் தன்னுடைய குருவை சந்திக்கச் சென்றார். அவரை வணங்கிய மாமன்னர் குருவிடம் “நான் தங்களுக்கு என்ன சேவை செய்யலாம்” என்று கேட்டாராம். அவனைப் பார்த்துச் சிரித்த குருவோ ” நீ என்னுடைய வெளிச்சத்தில் நிற்காமல் இருந்தாலே போதும்” என்றாராம். ஒவ்வொரு குருவும் இதையே தான் விரும்புகின்றார். தன்னுடைய சீடனுக்குத் தான் வழிகாட்டியாக இருந்தாலும், தன்னுடைய வழியை அவன் தானே தேடிக்கொள்ள வேண்டும் என்பதே உட்கருத்து. எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடனின் கைகளை பிடித்துக் கடைசி வரை நடப்பதில்லை.
இறைவனைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் இருளை நீக்கும் குருவின் துணைகொண்டு தன் உள்ளத்துள்ளே இருக்கும் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்கின்றான். அவ்வாறு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம், ஏராளம் ! அந்த அனுபவங்களைத் தருவதற்கு குரு என்னவெல்லாம் செய்கின்றார்? பின் வரும் பாடல் அதை நன்கு விளக்குகின்றது
பத்தி பணித்து பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுருவாமே.
அனுபவங்களின் முத்தாய்ப்பாக சீடனுக்குக் கடைசியில் அறிவும் ஒளியும் கிட்டுகின்றன. இது ஒரு ஆனந்தமான அனுபவம். இந்த ஆனந்த அனுபவத்தை உணர்கின்ற ஒருவன் இறைவனைத் தன்னுடைய இதயத்தில் நிறுத்தி மகிழும் பொது அவனுக்கு இந்த வெளி உலகையெல்லாம் துறந்து ஆன்ம உலகின் வெளிச்சமும் அதைச் சார்ந்த ஒரு முக்தி நிலையும் தென்படுகின்றது. இந்த நேரத்தில் அந்த குருவே இறைவனின் உருவாகாத் தென்படுகின்றார் . அந்த இறைவனும் குருவின் வடிவில் தோற்றமளிக்கின்றார் . இந்த இனிய பயணத்தை விளக்குவது போல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முக்திதந் தானே .
இதயத்தின் உள்ளே இறைவன் அமர்ந்தாலும் அவனை அறிந்து கொள்ளக்கூடிய அறிவும் அதற்கான முயற்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. குருவின் துணைகொண்டு இந்த அறிவை பெற்றால் உள்ளும் புறமும் இறை சக்தியே சூழ்ந்திருப்பதை உணரமுடியும். இந்த உன்னத அறிவு நிலையே உண்மையான முக்தி நிலை. இதை உணர்ந்த பட்டினத்தார் கூற்று இதோ :
எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க
மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே.
இந்த முக்தி உணர்வு நிலையை விளக்கும் அப்பரோ தேவாரத்தில், இந்த நிலையை அடைவதற்குக் காரணம் கூட அந்த பரம்பொருளின் அருள்தான் என்று எடுத்துச் சொல்லும் வண்ணம் பாடுகின்றார் :
“ஊனாகி உயிரோடு யதனுள் நின்ற உணர்வாகிப்
பிறவனைத்தும் நீயாக நின்றாய்
நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவுங் காட்டா நின்றாய் ..”
இப்படிப்பட்ட உன்னதமான உணர்வுநிலைக்கு வழிகிடைத்தாலும் அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நெஞ்சை எப்படிப் போற்றமுடியும்? அதனால்தானோ மாணிக்க வாசகர் எல்லாம் இருந்தும் அவனை அறிய முயலாத நெஞ்சை “பிண நெஞ்சே” என்ற சொற்றொடரால் அழைக்கின்றார்
அறிவு இல்லாத என்னைப் புகுந்து ஆண்டுகொண்டு
அறிவதை அருளி மேல்
நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்
பந்தனை அறுப்பானைப்
பிறவி இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்
மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிரி எலாம் மிகக் கீழ்படுத்தாய் கெடுத்தாய்
என்னைக் கெடுமாறே
(தொடரும்)