Tag: மணிமுத்து

  • கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

    -மணிமுத்து

    பச்சைக் கம்பளத்தை விரித்தார்போல எங்கும் செழுமை, பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளிர்ச்சியாய். எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டம், பார்க்கும் போதே உள்ளுக்குள் புத்துணர்ச்சி ஊட்டுவதாய்.

    இந்த வர்ணனைகளுக்குப் பொருத்தமான ஊர் ஒன்று உண்டென்றால், அது நீலகிரி தான்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில்தான் அவன் பிறந்தான். அவன்தான் வீட்டில் கடைசிப் பையன்; மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டான். அந்த ஓலைக்குடிசை வீட்டிற்கு அவன்தான் குட்டி இளவரசன்.

    பரமேஷ்வரன் பெயர் வைத்தால், அந்த பரமேஷ்வரனின் ஒட்டுமொத்த அருள் கிடைக்குமென அவருடைய பெயரையே வைத்தனர்.

    வீட்டிற்கு வீடு வாசற்படி என்பது போல், அவனும் வறுமையோடு போராடித்தான் ஏழாம் வகுப்பை முடித்தான். அவன் வீட்டில் பழைய சாப்பாடே விருந்தாக வழங்கப்பட்டது.

    தாய் தந்தை இருவருமே தேயிலை பறிக்கச் சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும், அதுதான் உண்மை நிலவரம்.

    தாய் சொல்லாவிட்டாலும், அவன் வறுமையை உணர்ந்துதான் வளர்ந்தான். வறுமை வாழ்க்கையில் எதை கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ, தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் பெரிதாக கற்றுக் கொடுத்துவிடுகிறது.

    அந்தக் குட்டி இளவரசனுக்குப் போட்டியாக ஒரு குட்டி இளவரசியும் இருந்தாள். அவனுடைய அக்கா, அவனுக்காகப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவள்.

    திடீரென்று ஒருநாள் அவன் பள்ளியில் மயங்கி விழ உடனே அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான்.

    பரிசோதனை செய்த மருத்துவரோ ஏதோ வாயில் வராத பெயர் உள்ள வியாதியைக் கூறினார்.

    நல்லவேளை உயிருக்கு ஏதும் ஆபத்துயில்லையாம், ஆனால் என்ன கண்பார்வைதான் வராது என்றனர். மருத்துவரைப் பொறுத்தவரை உயிரைவிட கண் பெரியதல்ல.

    ஆனால் வம்சவழியில் யாருமே படிப்பறிவே இல்லாதவர்கள். ஒரே மகன் பள்ளிக்குப் போவதே மகிழ்ச்சியாகக் கருதியவர்களுக்கு, தலையில் இடிதான் இறங்கியது பாவம்.

    ஒரு வழியாக உண்மையை ஒப்புக்கொள்ளும் முன்னே ஒருமாதம் ஓடிவிட்டது. எப்போது சாப்பிட்டோம், எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் வீட்டில் அனைவரும் நிலை குலைந்திருந்தனர்.

    இறுதியாக வேறுவழியில்லாமல் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது மகனுக்கு பார்வை வராது என்பதை.

    அவனைப் பார்க்க முடிகிறதே, அவன் நம்முடன் இருக்கிறான் என்று ஆறுதல் அடைந்தனர். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்று கூடச் சொல்ல முடியாது. தலைப்பாகையோடு போகவில்லை கண்ணையும் சேர்த்து அல்லவா கொண்டு போய்விட்டது.

    பிறகு அந்த இளவரசனின் உலகம் நான்கு சுவருக்குள் முடிந்து போனது. மூன்று வருடம் இப்படியே கழிய, பிறகுதான் தெரிந்தது கண் தெரியாத குழந்தைகள் கூட படிக்கப் பள்ளிகள் உண்டு என்று. ஒரு வழியாக எதோ ஒரு புண்ணியவானின் உதவியுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்துவிட்டான்.

    ஆரம்பத்தில் பிரெயில் எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிரமமாகத்தான் இருந்தது. பிறகு மெதுமெதுவாகக் கற்றுக் கொண்டான். வருடத்திற்கு ஒருமுறை ஊருக்குச் சென்று வருவான் அதுவும் கூட அவனுடைய பகுதிநேரப் பணி வருமானத்தில் தான். அந்த முன்னூறு ரூபாய் தொடர் வண்டிக்குச் செலவு செய்யக் கூட யோசிக்க வேண்டியிருந்தது.

    அவனுடைய அப்பா அம்மாவிற்கோ அவன் பகுதி நேர வேலை பார்த்து கஷ்டபடுவதெல்லாம் தெரியாது. அவன் அரசு உதவித் தொகையில் படித்து வருவததாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இளவரசிக்குத் திருமணம் முடிந்துவிட்டது, ஆனாலும் அவளிடம் கூட இவன் எதையும் சொல்லமாட்டான். இவன் தம்பி முறைக்கு எதையும் செய்ய முடியவில்லை என்றாலும், அவளிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

    வறுமையில் இருப்பவர்களுக்கே உண்டான சுயகெளரவம், இவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    அவனைஅப்போது நான்சந்தித்தபோது அவன் தமிழில் முதுகலை பட்டம் பெற்றது மட்டுமில்லாமல், இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பையையும் முடித்திருந்தான்.

    அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்தான் பிறரின் உதவியுடன்.

    எதேச்சையாகத்தான் தெரிய வந்தது, அவனுடைய முதுகலை ஆசிரியர் பயிற்சிப்படிப்பிற்கு, அவனுக்குப் பணம் தேவைப்படுவது. நண்பர்கள் அனைவரும் கையில் இருப்பதைப் போட்டுக் கொடுப்பதாக முடிவுசெய்ய, இன்னொரு நண்பனோ, மொத்தப்பணம் பனிரெண்டாயிரம் ரூபாயை அவனே கொடுப்பதாக ஏற்றுக் கொண்டான்.

    அவனிடம் மகிழ்ச்சியாகத் தெரிவித்தபோது, அவனோ அந்தப் பணத்தை நண்பனுக்குக் கொடுக்கச் சொன்னான். அவனுக்கு எட்டாயிரம் கல்வி உதவித் தொகை வருமாம், அது போக நன்காயிரம் பணத்தை, அவன் பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்துக் கொள்வானாம்.

    ஆனால் அவனுடைய நண்பனுக்கு கல்வி உதவித் தொகை கிடையாது என்பதால், பணத்தை நண்பனுக்கு கொடுக்க சொன்னான். அந்த நிமிடம் மெய் சிலிர்த்துத்தான் போனது.

    கையில் காசு இருப்பவனே இலவசம் என்றால், “அவனையும் கடன்காரன் வரிசையில் சேர்த்துக் கொள்ள” தயாராக இருக்க, தன்னுடைய நிலை அறிந்தும், மறுத்த இவன் ஒருபடி மேலே உயர்ந்துதான் விட்டான்.

    அவன் நிலையில் நான் இருந்தாலும், ஆசை ஓர் ஒரமாக எட்டிப் பார்க்கத்தான் செய்திருக்கும். நான் அவனை நினைத்துப் பெருமிதப்பட நண்பன் சொன்னான், தொலைபேசியில் பேசக் காசு இல்லை என்று ஐம்பது ரூபாய் வாங்கினால் கூட திருப்பிக் கொடுத்துவிடுவான் என்று.

    பணம் என்பது வாழ்க்கையின் தேவைக்காக மட்டும், வாழ்க்கையே இல்லை
    என்பதை யாரோ தலையில் குட்டிச் சொன்னது போல் உணர்ந்தேன்.

    “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே”, என்பது அவனுக்கே பொருந்துவதாய்.

    ஆசைகள் எப்போதும் வளர்ந்துக் கொண்டே போகிறது…ஒன்று நிறைவேறினால் மற்றொன்று வரிசையில் அடித்துக் கொள்கிறது,

    ஆனால்…

    ஆசைகளை ஆளகற்றுக் கொள்கிறவனே,
    வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்கிறான்
    இவனை போல!

    Share
  • மனிதநேயம் எங்கே போகிறது!

    -மணிமுத்து

    அழகான அந்திமாலை மெதுவாகத் தன்னை மறைத்துக்கொண்டிருந்த நேரம். சூரியனுக்கு பயந்து ஒளிந்திருந்த நட்சத்திரங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன.

    போக்குவரத்து நிறைந்த பழைய மகாபலிபுரம் ரோட்டினில் ஒரு பெரிய தெரு. எப்போதோ ரோடு போடுவதற்காகத் தோண்டிய குழிகள் ஆங்கங்கே வாயைப்பிளந்து கொண்டிருந்தன.

    எவ்வளவு பெரிய வித்தகனும் அவனுடைய வண்டியினுடைய வேகத்தை அங்குக் காட்டமுடியாது.

    மென்பொறியாளர்கள் அதிகம் வாழும் ஏரியாவாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோர் கழுத்திலும் ஏதோ ஒரு நிறத்தில் அவர்களை அறிமுகப்படுத்தும் அட்டை தொங்கிக்கொண்டிருந்தது.

    சில பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். சிலர் கைகளில் காய்கறிக்கூடை மறுநாள் சமையலுக்கு மட்டுமில்லாமல், மறுநாள் நிச்சயம் வாழ்வோம் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதாய். ஏனோ எனக்குள் காய்கறிக் கூடையில் உள்ள கத்திரிக்காயும், முள்ளங்கியும் பேசிக் கொண்டதுபோல் ஓர் உணர்வு. நாளை சம்பாருக்கு நீயா இல்லை நானா என்று சிரித்தபடி. வாழ்க்கை முடியப் போகிறபோதும் கூட சிரிக்கின்ற அவைகளுக்குத் தெரியும் உண்மை “எதுவும் நிரந்தரமில்லை.” ஏனோ நம்மால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாததாய்.

    ஒருசில பள்ளிச்சிறுவர்கள், மாலை வகுப்பு முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர் மிதிவண்டியில் நண்பர்களுடன் பேசியபடி.

    அவளும் வேலைமுடிந்து திரும்பிக் கொண்டிருந்தாள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தப்படி. அவளும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும், அவள் கழுத்திலும் ஊதா நிறத்தில் அவளுடைய அறிமுகம் தொங்கிக் கொண்டிருந்தது.

    களைத்துக் கூடு திரும்புகின்ற குருவிகள்போல எல்லோர் முகங்களிலும் ஒரு நிம்மதி; காலை நேரப் பரபரப்பு சுத்தமாக வடிந்திருந்தது. ஆனால் அவளிடம் மட்டும் திடீரென்று ஒரு பரபரப்பு… வேகமாக ஒடினாள்.

    மத்திய வயதுடைய ஒரு மனிதர் ஐம்பதைத் தொடக்கூடும், நடுரோட்டில் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கோ குடிபோதையில் வழி ஞாபகமில்லாமல் நடுரோட்டில் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது.

    அருகிலேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலை ஓரக்கடை, கடையைச் சுற்றியிலும் வண்டாக மொய்த்த சிலர். அவரவர் கதைகளைப் பேசியப்படி தட்டில் இருப்பதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.

    நமக்கெதற்குப் பஞ்சாயத்து என்று எல்லோரும் ஒதுங்கிப்போக, எதிரே வேகமாக வந்த சீருந்தோ அவரை இடிக்காமல் அதுவும் ஓரமாக ஒதுங்கிச்சென்றது. சுற்றிலும் எத்தனைபேர் இருந்தபோதிலும் ஏன் என்று கேட்க ஒருவர் இல்லை; ஆனால் அவளோ வேகமாகச்சென்று அவரின் கையைப்பிடித்து ஓரமாக ஒருமரத்தின் அடியில் அமர வைத்தவள், பின்பு அவரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவருக்கு மாலையில் பார்வை அவ்வளவாகத் தெரியாதென்று. அவர் நடுரோட்டில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே அவள் சொல்லித்தான் உணர்ந்துகொண்டார்.

    மனது கசந்தது அவளுக்கு. ஏனிப்படி மனிதநேயம் இல்லாமல் போனது நமது சமுகத்தில் என்று. கலங்கிய கண்களுடன் சுற்றி நோட்டம் விட, அப்போதும் அவரவர் வேலையில் கண்ணாக இருந்தனர்.

    பிறகு அவருக்கு அங்கிருந்த கடையில் சாப்பிட வாங்கிக்கொடுத்தவள், அவரிடம் தொலைபேசி எண்ணை விசாரித்தாள், அவருடைய வீட்டிற்கு தொடர்புகொள்ள.

    ஆனால் அவரிடம் தொலைபேசி எண் எதுவும் இல்லை, அந்த மரத்தின் கீழேயே தங்கிவிட்டுக் காலையில் செல்வதாகக் கூறினார்.

    அவரை அங்கேயே விட்டுவிட்டு வேகமாகச் சென்றவள், சென்ற வேகத்தில் திரும்பிவந்தாள், கைகளில் தண்ணீர் பாட்டிலுடன். அதை அவர் கையில் கொடுத்துவிட்டு அவளும் சென்றாள் மனதில் கனத்துடன்.

    நம்மிடம் கருணை இல்லாமல் போகவில்லை. இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது, அவளைப் போல.

    வாழ்க்கை மிகவும் அழகானதுதான் நமக்காக வாழும்போது மட்டுமல்ல பிறரிடம் சிறிது அன்பைச் செலுத்தும் போதும்தான்!

    நமக்கென்ன என்றொதுங்கி நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்தோம்?

    நாம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருப்பதாக நினைக்கிறோம், அது முழுவதும் நிஜமா?

    நம்முள் பலருக்கும் கேள்வி எனக்கு யார் உதவினார்கள் என்பதுதானே?

    நமக்குத் தெரிந்தே நாம் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம்!

    இதுவா நம் முன்னோர்கள் நம்மைப்பற்றிக் கனவுகண்ட ஒற்றுமையான சமுகம்?

    ”இல்லை!”

    சிறு தீக்குச்சிதான் பெரிய பொறியாக மாறும்.

    நாம் முதலில் சிறிய தீக்குச்சியாக இருப்போம்!

    எல்லாப் புரட்சிக்கும் எப்போதுமே ஏதாவது ஒரு சிறிய செயல்தான் தூண்டுகோலாய் இருந்தது!

    அந்த ஒருவனை ஏன் நாம் மற்றவனில் தேட வேண்டும்?

    மாற்றத்தை மற்றவர்களில் காண நமக்குள் மாற்றத்தை விதைப்போம் தோழா!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — மணிமுத்து.

     

     

    நான் அறிந்த எம்.ஜி.ஆர்!

    குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

    வாழ்ந்தவர் கோடி,
    மறைந்தவர் கோடி,
    மக்களின் மனதில் நிற்பவர் யார்!
    என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

    வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத்  தெரியாதவர்.

    எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

    அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்  தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

    அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ  அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

    சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
    சிலர் அல்லும், பகலும்
    வெறும் கல்லாய் இருந்து விட்டு
    அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

    தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

    அந்த மாமனிதருக்கு
    கிடைத்தது தான்
    என்ன
    எல்லோரையும் போல
    சிறுவயதில் வறுமைதான்.
    கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
    வறுமையில் வாழ்க்கையை
    எப்படி வாழ வேண்டும்
    என்று மட்டுமல்ல,
    எப்படி மாற்ற வேண்டும்
    என்றும் கற்றுக் கொண்டாயா!
    அதனால் தான் வறுமையில்
    வாழ்ந்தவர்களுக்காக
    வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
    அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
    உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

    அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

    மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது 
    முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
    என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
    வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
    ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

    நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.

    Share
  • எப்படியும் வாழ்கிறான்!

    மணிமுத்து.

     

    இன்று வழக்கத்தை விட நேரமாகிவிட்டது, ஆகவே மிதிவண்டியை வேகமாக அழுத்திக் கொண்டிருந்தாள் அவள். சிக்னல் கூட தன் பங்கிற்கு உதவி செய்தது அவளுடைய நேரத்தை நீட்டிக்க.

    எனவே சுற்றி இருப்பவர்களிடம் பார்வையை ஓட்டினாள். சுறுசுறுப்பான காலைவேளை என்பதால் அனைவரும் கைகடிகாரத்தை பார்ப்பதும் மீண்டும் சிக்னலையும் பார்த்தபடி இருந்தனர்.

    அருகில் இருந்த ப்ளாட்பாரத்தில் வரிசையாக கடைகளும், செருப்பு தைப்போரும் அமர்ந்திருந்தனர், யாராவது காலில் செருப்பு பிய்ந்திருக்கிறதா என்ற பார்வை அங்கு போவோர் வருவோரின் காலையை தேடிக் கொண்டிருந்தது.

    நல்லவேளை சிக்னல் விழுந்து விட்டது, அப்பாடா என்று கூறிக்கொண்டே சைக்கிளை அழுத்தினாள் அவள்.

    பஸ்நிலையத்தை நெருங்கியதும் அங்கு அமர்ந்து இருந்த ஒருவரிடம் பையிலிருந்த பார்சலை நீட்டினாள். அவனுடைய முகம் எப்போதும் போல் மலர்ந்தது, ஒரு நிமிடம் அந்த முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தவள் நிரந்தரமான சந்தோஷத்தை உண்டாக்க விரும்பினாள்.

    பார்சலை வாங்கியவன் அவளுடைய மிதிவண்டி கடந்ததும் அதிலிருந்த உணவை உண்பதில் முற்பட்டான், அவன் இரு கால்களையும் இழந்தவன்.

    அவனை பார்த்தால் அவள் மனதில் ஏனோ ஒரு பரிதாபம் . எனவே தினமும் அவனுக்கு ஒரு வேளை உணவு அவளுடைய பொறுப்பாய் எடுத்துக்கொண்டாள், அதுவும் அவளுடைய உணவை பாதியாக குறைத்து தான்.

    அவன் பெயர் கோடிஸ்வரன். ஆனால் பெயர் மிகவும் பொருத்தம் தான் என்று அவன் பெயரை கேட்ட போது எண்ணினாள்.

    அவள் பெயர் தீபா. வெளிச்சம் என்ற அர்த்தத்தை எடுத்து கொண்டு யாருக்காவது துன்பம் என்றால், அவளால் முடிந்த உதவி செய்வாள்.

    இவள் கஷ்டம் என்று நினைத்து செய்த பல உதவி கள் இறுதியாக நகைச்சுவையாக முடிந்துவிடும்.

    ஒரு நாள் கடைக்கு சென்றவள் வழியில் ஒரு பாட்டி வாயை அசைத்து கொண்டே இருப்பதற்காக அருகில் பூந்தொட்டியிலிருந்த மண்ணை வாயில் போட, உடனே வீட்டிற்கு சென்று தாயிடம் கூட சொல்லாமல் பத்து ரூபாய்க்கு இரண்டு பீஸ்கட் பாக்கெட்களை வாங்கி அந்த பாட்டியின் கைகளில் திணித்தாள். அந்த பாட்டிக்கு, கண்ணோ அறை குறை, காதோ முழு குறை, எனவே அமைதியாக வாங்கி கொண்டார்.

    பிறகு வீட்டிற்கு திரும்ப, பக்கத்துவீட்டு வாண்டு “YOU ARE GREAT!” என்றது அவளை பார்த்து, உடனே பூரிப்பில் வீட்டிற்கு சென்றாள்.

    தன் தாயிடம் “அம்மா வெளியில ஒரு வயசானவங்களை பார்த்தேன் மா, எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றவள். உடனே தன் மாமாவிடம் தொடர்பு கொண்டு முதியோர் இல்லத்தையே விசாரிக்க சொல்லி விட்டாள்.

    பிறகு தான் தெரிந்தது அந்த பாட்டி பொழுது போகாமல் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று!.

    தாயின் குரல் கோபமாக ஒலித்தது ”அடி பாவி சட்டினி அரைக்க வைச்சிருந்த காசை இப்படி பண்ணிட்டு வந்திட்டியே! இன்னிக்கு ரசத்துல சாப்பிட்டு படு அப்பதான் திருந்துவ என்று!”ஓசை படாமால் மாடிக்கு சென்று விட்டாள்.

    மற்றொரு சமயம், இரண்டு செங்கல் ரோட்டில் கிடக்க தூக்கி தூரப் போட்டாள் அது உடைந்து சிதறியது.

    அப்போது அருகே வந்தவர் “ஏன்மா செங்கல் தூக்க முடியலேனு வைச்சுட்டுப்போன இப்படி உடைச்சிட்டியே எங்கிருந்து வந்து சேர்றிங்க எனக்குன்னு என்று பொறிந்து விட்டு போனார்”.  அவளோ சுற்றிலும் பார்வையை ஒட விட்டாள் “அப்பாடா யாரும் பார்க்கலை!” என்றபடி அங்கிருந்து அகன்றாள்.

    அன்றுடன் அவளுக்கு கடைசி நாள், இனி அவள் வேலைக்கு செல்ல போவது இல்லை எனவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

    இனி அந்த கோடிஸ்வரனின் ஒரு வேளை சாப்பாடு என்ற எண்ணம் தான் அவள் மனதில். எனவே அன்று அவரிடம் பேசினால் “நீங்க எதாவது வேலை பார்க்கறிங்களா, நான் வேணா எங்க அண்ணன் கிட்ட சொல்லி எதையாவது செய்றேன்” என்றாள். இந்த ஒரு மாதமாக உணவு கொடுத்த மரியாதைக்காக கோடிஸ்வரன் அவளை திட்டவில்லை.

    மெளனமாக மறுத்துவிட்டான். அவளும் இப்பொழுது வெளியூர் சென்றுவிட்டாள். ஆனாலும் கோடிஸ்வரன் வாழ்கிறான், வேறுயாரோருவர் பரிதாபத்துடன் செய்யும் உதவியால்.

    எப்பொழுதாவது பஸ்சில் செல்லும் போது மீண்டும் அவனை சந்திக்க நேரும் “பரிதாப பார்வையை செலுத்திய படி பஸ்ஸுடன் அவளும் நகர்ந்து விடுவாள்”

    வாழ்க்கை இப்படித்தான் என்று பழக்க படுத்தி கொண்டால் மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கும்.

    முயற்சி செய்து பழக்கத்தை மாற்றிவிட்டால் மற்றவர்கள் பரிதாபத்தில் வாழ நேராது.

    begger
    அவள் முயற்சி செய்தால்…
    அவன் வாழ்வதற்கு!
    பரிதாபத்துடன் அல்ல….!

    பரிதாபம் !!!……
    மோசமான வார்த்தை
    மற்றொருவர் சொல்லும்போது கேட்க நேருவது !

    இப்படியும் மனதில் தோன்றும்
    “அவன் என்ன உசத்தி!
    யார் அவனுக்கு உரிமை கொடுத்தா
    என்னை பார்த்து பரிதாபப்பட!..
    ஏனோ இந்த எண்ணம்
    அவனுக்கு மட்டும் எதிர்மறையாக அமைந்துவிட்டது!

    Share
  • தேடல்

    -மணிமுத்து

    மாலை வேளையில்
    மனமோ எதிலும் ஒன்றாமல் போக,
    நொடிகளை நெட்டித்தள்ள
    புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன்…                open book

    எழுத்துக்களின் சுவாரசியத்தில்
    என்னை மறந்து
    பக்கங்களைத் திருப்பினேன்
    ஒன்றன்பின் ஒன்றாக!
    நானும் அதில் ஒன்றிப்போனேன்
    ஒரு பக்கமாக!

    பக்கங்கள் பாதி திரும்பிய நிலையில்,
    மீதி பக்கத்திற்கான தெரியாத முடிவுகளும்,
    அடுத்த பக்கத்திற்கான தேடல்களும்  ஒருபுறம் இருக்க –
    கடிகாரம் மணி பன்னிரெண்டைக் காட்டியது!
    வலுக்கட்டாயமாக இரவு உறக்கத்திற்குச் செல்லத் திரும்பினேன்…
    பாதி படித்த நிலையில்
    திறந்த பக்கங்கள் அப்படியே இருக்க!
    சிறிது தூரம் சென்றபின் – திரும்பியபோது,
    மின்விசிறியின் காற்றில்
    படிக்காத பக்கங்கள் மட்டும் வேகமாகத் திரும்பியது
    “என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லாதே என்று கூச்சலிடுவதைப் போல!”

    மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன் விட்ட இடத்திலிருந்து
    தூக்கம் எங்கோ தொலைந்துபோக!

    இப்படித்தான்!
    ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
    ஒவ்வொரு கதையாய்!
    புரட்டப் புரட்ட எல்லாப் பக்கங்களும்
    சுவாரசியமானவைகளாய்!
    ஒவ்வொரு பக்கமும் தேடல்கள் நிரம்பியதாய்
    கதைக்குத் தகுந்தாற் போல!

    எல்லாத் தேடல்களுக்கும் பதில் அடுத்த பக்கத்தில்!
    பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் புரட்டுபவனுக்கோ
    ஒவ்வொரு நாளும் சுவாரசியமான தேடல்களாய்,
    நேற்றைய தேடலின் பதிலாய் அமைந்துவிடுகிறது!
    தேடல் இல்லாதவனோ
    விடை தெரியாத கேள்வியாகவே மடிந்துவிடுகிறான்!

     

    Share
  • மௌனம்

    -மணிமுத்து

    பார்ப்பவர் கண்களுக்கு!
    எதை கேட்டாலும்
    மெளனத்தையே
    பரிசாகத் தந்தாள்
    எனவே
    அவன் கேள்வியையும்
    அவள் பாஷையிலே
    கேட்க
    ’பக்’கென்று சிரித்துவிட்டாள்
    அடடா!
    இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
    தெரியும்போது
    ஊமை என்கிறார்களே!!!

    Share
  • வேரை மறந்த விழுதுகள்!

    -மணிமுத்து

    images

    சிறகடித்த பறவைகளின்
    சந்தோசத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல்
    சோகச்சிலைகளாய்!
    ஆங்காங்கே தெரிந்த தலைகள்
    ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்
    ஆரம்பித்த இடமோ வெவ்வேறாய் – ஆனால்
    சேர்ந்தது என்னவோ முதியோர் இல்லம் என்ற கடலில் !
    நதியாக இருந்தவர்கள் கடலில் கலந்தபின் உபயோகமற்றவர்களாய்!

    இது முன்னேறும் நாடு!
    நாட்டை முன்னேற்ற நாங்கள் – கூடவே
    எங்களையும் முன்னேற்றிக் கொண்டு – இல்லையென்றால்
    எங்களை முன்னேறிக்கொண்டு வேறொருவன் – என்பது
    பிள்ளைகளுக்கு ஒரு காரணமாய் !
    இறுதியாய் நதி, கடலை அழைத்துச்
    செல்வது – சுதந்திரமாய்
    எங்கும்  சென்றுவரும் கம்பிகளால்
    அடைக்கப்படாத முதியோர் காப்பகச் சிறைக்கு…!

    வெளிநாட்டு வேலை – இவர்கள் பாசமுள்ளவர்கள்தான்!
    ஆனால் சூழ்நிலை – விழுதுகளின்
    கையாலாகாத்தனத்திற்கு ஒரு காரணமாய் – விதியைப் போல!
    முன்னேறும் விழுதுகள் என்றாவது ஒரு நாள்
    மீண்டும் – சந்திக்க நேரும் பயணம்!
    அன்றைய விழுதுகளுக்குச் சுகமாய்த் தோன்றியவை
    இன்று வேர்களாக மாறியபின்
    சுவாசிப்பதற்கு மூச்சைக் கடன்வாங்கியபடி
    கண்ணோரம் கரித்துக் கொண்டு
    கண்ணீருடன் பிரார்த்தனை – கடவுளிடம்
    வளரும் விழுதுகளுக்காக!
    யாரும் சந்திக்க வேண்டாம் இந்தப் பயணம் என்று!

     

    Share