கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
-மணிமுத்து
பச்சைக் கம்பளத்தை விரித்தார்போல எங்கும் செழுமை, பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளிர்ச்சியாய். எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டம், பார்க்கும் போதே உள்ளுக்குள் புத்துணர்ச்சி ஊட்டுவதாய்.
இந்த வர்ணனைகளுக்குப் பொருத்தமான ஊர் ஒன்று உண்டென்றால், அது நீலகிரி தான்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில்தான் அவன் பிறந்தான். அவன்தான் வீட்டில் கடைசிப் பையன்; மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டான். அந்த ஓலைக்குடிசை வீட்டிற்கு அவன்தான் குட்டி இளவரசன்.
பரமேஷ்வரன் பெயர் வைத்தால், அந்த பரமேஷ்வரனின் ஒட்டுமொத்த அருள் கிடைக்குமென அவருடைய பெயரையே வைத்தனர்.
வீட்டிற்கு வீடு வாசற்படி என்பது போல், அவனும் வறுமையோடு போராடித்தான் ஏழாம் வகுப்பை முடித்தான். அவன் வீட்டில் பழைய சாப்பாடே விருந்தாக வழங்கப்பட்டது.
தாய் தந்தை இருவருமே தேயிலை பறிக்கச் சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும், அதுதான் உண்மை நிலவரம்.
தாய் சொல்லாவிட்டாலும், அவன் வறுமையை உணர்ந்துதான் வளர்ந்தான். வறுமை வாழ்க்கையில் எதை கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ, தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் பெரிதாக கற்றுக் கொடுத்துவிடுகிறது.
அந்தக் குட்டி இளவரசனுக்குப் போட்டியாக ஒரு குட்டி இளவரசியும் இருந்தாள். அவனுடைய அக்கா, அவனுக்காகப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவள்.
திடீரென்று ஒருநாள் அவன் பள்ளியில் மயங்கி விழ உடனே அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான்.
பரிசோதனை செய்த மருத்துவரோ ஏதோ வாயில் வராத பெயர் உள்ள வியாதியைக் கூறினார்.
நல்லவேளை உயிருக்கு ஏதும் ஆபத்துயில்லையாம், ஆனால் என்ன கண்பார்வைதான் வராது என்றனர். மருத்துவரைப் பொறுத்தவரை உயிரைவிட கண் பெரியதல்ல.
ஆனால் வம்சவழியில் யாருமே படிப்பறிவே இல்லாதவர்கள். ஒரே மகன் பள்ளிக்குப் போவதே மகிழ்ச்சியாகக் கருதியவர்களுக்கு, தலையில் இடிதான் இறங்கியது பாவம்.
ஒரு வழியாக உண்மையை ஒப்புக்கொள்ளும் முன்னே ஒருமாதம் ஓடிவிட்டது. எப்போது சாப்பிட்டோம், எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் வீட்டில் அனைவரும் நிலை குலைந்திருந்தனர்.
இறுதியாக வேறுவழியில்லாமல் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது மகனுக்கு பார்வை வராது என்பதை.
அவனைப் பார்க்க முடிகிறதே, அவன் நம்முடன் இருக்கிறான் என்று ஆறுதல் அடைந்தனர். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்று கூடச் சொல்ல முடியாது. தலைப்பாகையோடு போகவில்லை கண்ணையும் சேர்த்து அல்லவா கொண்டு போய்விட்டது.
பிறகு அந்த இளவரசனின் உலகம் நான்கு சுவருக்குள் முடிந்து போனது. மூன்று வருடம் இப்படியே கழிய, பிறகுதான் தெரிந்தது கண் தெரியாத குழந்தைகள் கூட படிக்கப் பள்ளிகள் உண்டு என்று. ஒரு வழியாக எதோ ஒரு புண்ணியவானின் உதவியுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்துவிட்டான்.
ஆரம்பத்தில் பிரெயில் எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிரமமாகத்தான் இருந்தது. பிறகு மெதுமெதுவாகக் கற்றுக் கொண்டான். வருடத்திற்கு ஒருமுறை ஊருக்குச் சென்று வருவான் அதுவும் கூட அவனுடைய பகுதிநேரப் பணி வருமானத்தில் தான். அந்த முன்னூறு ரூபாய் தொடர் வண்டிக்குச் செலவு செய்யக் கூட யோசிக்க வேண்டியிருந்தது.
அவனுடைய அப்பா அம்மாவிற்கோ அவன் பகுதி நேர வேலை பார்த்து கஷ்டபடுவதெல்லாம் தெரியாது. அவன் அரசு உதவித் தொகையில் படித்து வருவததாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இளவரசிக்குத் திருமணம் முடிந்துவிட்டது, ஆனாலும் அவளிடம் கூட இவன் எதையும் சொல்லமாட்டான். இவன் தம்பி முறைக்கு எதையும் செய்ய முடியவில்லை என்றாலும், அவளிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
வறுமையில் இருப்பவர்களுக்கே உண்டான சுயகெளரவம், இவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அவனைஅப்போது நான்சந்தித்தபோது அவன் தமிழில் முதுகலை பட்டம் பெற்றது மட்டுமில்லாமல், இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பையையும் முடித்திருந்தான்.
அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்தான் பிறரின் உதவியுடன்.
எதேச்சையாகத்தான் தெரிய வந்தது, அவனுடைய முதுகலை ஆசிரியர் பயிற்சிப்படிப்பிற்கு, அவனுக்குப் பணம் தேவைப்படுவது. நண்பர்கள் அனைவரும் கையில் இருப்பதைப் போட்டுக் கொடுப்பதாக முடிவுசெய்ய, இன்னொரு நண்பனோ, மொத்தப்பணம் பனிரெண்டாயிரம் ரூபாயை அவனே கொடுப்பதாக ஏற்றுக் கொண்டான்.
அவனிடம் மகிழ்ச்சியாகத் தெரிவித்தபோது, அவனோ அந்தப் பணத்தை நண்பனுக்குக் கொடுக்கச் சொன்னான். அவனுக்கு எட்டாயிரம் கல்வி உதவித் தொகை வருமாம், அது போக நன்காயிரம் பணத்தை, அவன் பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்துக் கொள்வானாம்.
ஆனால் அவனுடைய நண்பனுக்கு கல்வி உதவித் தொகை கிடையாது என்பதால், பணத்தை நண்பனுக்கு கொடுக்க சொன்னான். அந்த நிமிடம் மெய் சிலிர்த்துத்தான் போனது.
கையில் காசு இருப்பவனே இலவசம் என்றால், “அவனையும் கடன்காரன் வரிசையில் சேர்த்துக் கொள்ள” தயாராக இருக்க, தன்னுடைய நிலை அறிந்தும், மறுத்த இவன் ஒருபடி மேலே உயர்ந்துதான் விட்டான்.
அவன் நிலையில் நான் இருந்தாலும், ஆசை ஓர் ஒரமாக எட்டிப் பார்க்கத்தான் செய்திருக்கும். நான் அவனை நினைத்துப் பெருமிதப்பட நண்பன் சொன்னான், தொலைபேசியில் பேசக் காசு இல்லை என்று ஐம்பது ரூபாய் வாங்கினால் கூட திருப்பிக் கொடுத்துவிடுவான் என்று.
பணம் என்பது வாழ்க்கையின் தேவைக்காக மட்டும், வாழ்க்கையே இல்லை
என்பதை யாரோ தலையில் குட்டிச் சொன்னது போல் உணர்ந்தேன்.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே”, என்பது அவனுக்கே பொருந்துவதாய்.
ஆசைகள் எப்போதும் வளர்ந்துக் கொண்டே போகிறது…ஒன்று நிறைவேறினால் மற்றொன்று வரிசையில் அடித்துக் கொள்கிறது,
ஆனால்…
ஆசைகளை ஆளகற்றுக் கொள்கிறவனே,
வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்கிறான்
இவனை போல!