க. பாலசுப்பிரமணியன்

இறைவனை நாம் எப்படி அணுக வேண்டும்?

திருமூலர்-1

இறைவனிடம் பக்தி செய்ய எந்த முறை சரியானது? தினசரி கோவிலுக்குச் சென்று நாம் வணங்கிவிட்டு வருவதால் இறைவன் மகிழ்ச்சியடைவானா? தினசரி இறைவனுக்கு நைவைத்யம் அல்லது படைப்புகள் செய்தல் நமக்கு நன்மை கிட்டுமா?

“அனுமன் ராமனிடம் கட்டிய பக்திபோல் நாம் செய்யவேண்டுமா? இல்லை, மீரா கண்ணனிடம் கட்டிய அன்பு சிறந்ததா? அல்லது சூர்தாஸ் கண்ணனை ஒரு குழந்தைபோல் பாவித்து காட்டிய அன்பு பெரிதா? இல்லை, கண்ணப்ப நாயனார் சிவனிடம் காட்டிய அன்பு சிறந்ததா? பட்டினத்தார் போல் எல்லாவற்றையும் துறந்து உண்மை நிலையை அறிந்தால் மட்டும் இறைவன் அருள்வானா?” என்றெல்லாம் நம் மனத்தில் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.  இதை “தாஸ்ய பக்தி, சக்ய  பக்தி, மாதுர்ய பக்தி, வாத்சல்ய பக்தி..” என்று ஒன்பது வகையாகப் பிரித்து பண்டைய இலக்கியங்கள் போற்றுகின்றன. . அதையெல்லாம் விட தினம் காலையில் இறைவன் பெயரை நாம் நினைத்து உருப்போட்டுக்கொண்டிருந்தால் நாம் இறைவனோடு இணையும் வாய்ப்புக்கள் அதிகம் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், வாயில் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டு  மனம் மட்டும் எங்கோ அலைபாய்ந்தால் அதனால் என்ன பயன்?

இந்த நிலையை வர்ணிக்கும் கபீர் தனது ஒரு பாடலில் கூறுகின்றார்.

“கையிலே மாலை சுற்றிக்கொண்டிருக்கின்றது, வாயினுள்ளே நாக்கும் அவன் பெயரைச்சொல்லிச்  சுற்றிக்கொண்டிருக்கின்றது. மனதோ எல்லா திசையிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதுவா இறைவனை நினைக்கும் முறை?” என்று நம்மைச் சாடுகின்றார்

ஆனால் திருமூலர் இறைவனை எவ்வாறு போற்றிக் கொண்டிருந்தார்?  இந்தப் பாடல் அதற்குச் சான்றாக இருக்கின்றது.

மன்னகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்

விண்ணகத்தான்  ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்

பண்ணகத் தின்னிசை பாடலுற்றானுக்கே

கண்ணகத்தே நின்று காதலித்தேனே.     (31)

மண்ணும் விண்ணும் அவனே, வானும் அவனே, வேதமும் அவனே, இன்னிசைப் பாடலின் உயிர்ப் பொருளும் அவனே,- அப்படிப்பட்டவனை எப்படி அன்பு செய்வது?  – அவன் நாம் கூப்பிட்ட குரலுக்கு வருவானோ? அவனிடம் நேரம் எங்கே உள்ளது?  ஆகவே, அவனை என் கண்ணுக்குள் வைத்துக் காதலித்தேன் என்று சொல்கிறார் முற்றும் துறந்த  முனிவர்.

நம் மனதைத் தவிர, நம் கண்களைத் தவிர அவனை வைத்துப் போற்றச்    சிறந்த இடம் எங்கே யுள்ளது?

இது  ஒரு அநுபூதி நிலை. இறைவனோடு  இரண்டறக்கலந்த  நிலை.,

இந்த அனுபூதி நிலையை காரைக்கால் அம்மையார் எவ்வாறு உணருகின்றார்?

கண்ணால் கண்டுஎன் கையாராகி கூப்பியும்

எண்ணார எண்ணத்தால் எண்ணியும் – விண்ணொன்

எரியாடி  என்றென்றும் இன்புறுவன் கொல்லோ

பெரியானைக் காணப் பெறின்.

நம் மனத்தின் உள்ளே இருக்கின்ற இறைவனை விட்டுவிட்டு நாம் எங்கெங்கோ அலைகின்றோம்.

“பனையுள் இருந்த பருந்தது  போல

நினையாதவர்கில்லை நின் இன்பந்தானே ..” (47)

என்கிறார் திருமூலர்.

மாணிக்க வாசகரோ தன்னுடைய அகக்கண்ணிலே அந்த தில்லையானின் நடனத்தைக் கண்டு களிப்புற்று அவனிடம் என்னவெல்லாம் வேண்டுகின்றார் ..

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே

பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு

ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்

தாடு  நின்கழற் போது நாயினேன்

கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்

கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்

வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்

தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே .

இறைவனின் நினைவிலேயே அவனோடு ஒன்றாகி ஆனந்தப் பரவசத்தை அனுபவிக்கின்ற இந்த முன்னோரின் அருள்நிலைகள் நம் வாழ்க்கைப் பாதைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளதன்றோ ?

இந்த அனுபூதி நிலையை அடைந்ததும் ஐம்பொறிகளும் அதன் விளைவுகளும் அதனால் வரும் மயக்கங்களும் நீங்கப்பெற்று எல்லாப் பிணிகளுக்கு ஒரே மருந்தாய் இறைவனை நாடும் உள்ளம். இந்த உயரிய நிலையை அனுபவ பூர்வமாக உணர்ந்த பாட்டினத்தாரோ திருவெற்றியூரானை எவ்வாறு வேண்டுகின்றார் தெரியுமா ?

ஓடுவிழுந்து சீப்பாயு மொன்பதுவாய்ப் புண்ணுக்

கிடுமருந்தை யானறிந்து கொண்டேன் – கட்டுவருத்தந்

தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவில்

போவா ரடியிற் பொடி.

இந்த நிலையில் மாந்தருக்கு மகிழ்வேது, துயரேது? இது எல்லாம் விடுபட்ட நிலையன்றோ ?

காணும் இடங்களிலேயெல்லாம் அவன் நிறைந்திருக்க உணரும் பொருள்களெல்லாம் அவன் உணர்வே உள்ளிருக்க, அவனைத் தேடித் போவானேன்? உளமுருகி அழைத்தால் மட்டும் போதுமே ! அவன் நம்மைத் தேடி வரமாட்டானோ ?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (5)

  1. திருமூலர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார் என்று சித்தர்களின் பாடல்களைப் பொருளுணர்ந்து படிக்கும் பொழுது அதன் உட்பொருள் மனத்தில் பதியும் என்ற கருத்தை மிக அழகாக எளிய நடையில் தருகின்ற நண்பர் பாலசுப்ரமணியன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப் பதிவு தொடந்து வாசகர்களுக்குப் பயன் தரட்டும்.

  2. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு உளங்கனிந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *