மனிதநேயம் எங்கே போகிறது!
-மணிமுத்து
அழகான அந்திமாலை மெதுவாகத் தன்னை மறைத்துக்கொண்டிருந்த நேரம். சூரியனுக்கு பயந்து ஒளிந்திருந்த நட்சத்திரங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன.
போக்குவரத்து நிறைந்த பழைய மகாபலிபுரம் ரோட்டினில் ஒரு பெரிய தெரு. எப்போதோ ரோடு போடுவதற்காகத் தோண்டிய குழிகள் ஆங்கங்கே வாயைப்பிளந்து கொண்டிருந்தன.
எவ்வளவு பெரிய வித்தகனும் அவனுடைய வண்டியினுடைய வேகத்தை அங்குக் காட்டமுடியாது.
மென்பொறியாளர்கள் அதிகம் வாழும் ஏரியாவாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோர் கழுத்திலும் ஏதோ ஒரு நிறத்தில் அவர்களை அறிமுகப்படுத்தும் அட்டை தொங்கிக்கொண்டிருந்தது.
சில பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். சிலர் கைகளில் காய்கறிக்கூடை மறுநாள் சமையலுக்கு மட்டுமில்லாமல், மறுநாள் நிச்சயம் வாழ்வோம் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதாய். ஏனோ எனக்குள் காய்கறிக் கூடையில் உள்ள கத்திரிக்காயும், முள்ளங்கியும் பேசிக் கொண்டதுபோல் ஓர் உணர்வு. நாளை சம்பாருக்கு நீயா இல்லை நானா என்று சிரித்தபடி. வாழ்க்கை முடியப் போகிறபோதும் கூட சிரிக்கின்ற அவைகளுக்குத் தெரியும் உண்மை “எதுவும் நிரந்தரமில்லை.” ஏனோ நம்மால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாததாய்.
ஒருசில பள்ளிச்சிறுவர்கள், மாலை வகுப்பு முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர் மிதிவண்டியில் நண்பர்களுடன் பேசியபடி.
அவளும் வேலைமுடிந்து திரும்பிக் கொண்டிருந்தாள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தப்படி. அவளும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும், அவள் கழுத்திலும் ஊதா நிறத்தில் அவளுடைய அறிமுகம் தொங்கிக் கொண்டிருந்தது.
களைத்துக் கூடு திரும்புகின்ற குருவிகள்போல எல்லோர் முகங்களிலும் ஒரு நிம்மதி; காலை நேரப் பரபரப்பு சுத்தமாக வடிந்திருந்தது. ஆனால் அவளிடம் மட்டும் திடீரென்று ஒரு பரபரப்பு… வேகமாக ஒடினாள்.
மத்திய வயதுடைய ஒரு மனிதர் ஐம்பதைத் தொடக்கூடும், நடுரோட்டில் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கோ குடிபோதையில் வழி ஞாபகமில்லாமல் நடுரோட்டில் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது.
அருகிலேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலை ஓரக்கடை, கடையைச் சுற்றியிலும் வண்டாக மொய்த்த சிலர். அவரவர் கதைகளைப் பேசியப்படி தட்டில் இருப்பதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.
நமக்கெதற்குப் பஞ்சாயத்து என்று எல்லோரும் ஒதுங்கிப்போக, எதிரே வேகமாக வந்த சீருந்தோ அவரை இடிக்காமல் அதுவும் ஓரமாக ஒதுங்கிச்சென்றது. சுற்றிலும் எத்தனைபேர் இருந்தபோதிலும் ஏன் என்று கேட்க ஒருவர் இல்லை; ஆனால் அவளோ வேகமாகச்சென்று அவரின் கையைப்பிடித்து ஓரமாக ஒருமரத்தின் அடியில் அமர வைத்தவள், பின்பு அவரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவருக்கு மாலையில் பார்வை அவ்வளவாகத் தெரியாதென்று. அவர் நடுரோட்டில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே அவள் சொல்லித்தான் உணர்ந்துகொண்டார்.
மனது கசந்தது அவளுக்கு. ஏனிப்படி மனிதநேயம் இல்லாமல் போனது நமது சமுகத்தில் என்று. கலங்கிய கண்களுடன் சுற்றி நோட்டம் விட, அப்போதும் அவரவர் வேலையில் கண்ணாக இருந்தனர்.
பிறகு அவருக்கு அங்கிருந்த கடையில் சாப்பிட வாங்கிக்கொடுத்தவள், அவரிடம் தொலைபேசி எண்ணை விசாரித்தாள், அவருடைய வீட்டிற்கு தொடர்புகொள்ள.
ஆனால் அவரிடம் தொலைபேசி எண் எதுவும் இல்லை, அந்த மரத்தின் கீழேயே தங்கிவிட்டுக் காலையில் செல்வதாகக் கூறினார்.
அவரை அங்கேயே விட்டுவிட்டு வேகமாகச் சென்றவள், சென்ற வேகத்தில் திரும்பிவந்தாள், கைகளில் தண்ணீர் பாட்டிலுடன். அதை அவர் கையில் கொடுத்துவிட்டு அவளும் சென்றாள் மனதில் கனத்துடன்.
நம்மிடம் கருணை இல்லாமல் போகவில்லை. இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது, அவளைப் போல.
வாழ்க்கை மிகவும் அழகானதுதான் நமக்காக வாழும்போது மட்டுமல்ல பிறரிடம் சிறிது அன்பைச் செலுத்தும் போதும்தான்!
நமக்கென்ன என்றொதுங்கி நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்தோம்?
நாம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருப்பதாக நினைக்கிறோம், அது முழுவதும் நிஜமா?
நம்முள் பலருக்கும் கேள்வி எனக்கு யார் உதவினார்கள் என்பதுதானே?
நமக்குத் தெரிந்தே நாம் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம்!
இதுவா நம் முன்னோர்கள் நம்மைப்பற்றிக் கனவுகண்ட ஒற்றுமையான சமுகம்?
”இல்லை!”
சிறு தீக்குச்சிதான் பெரிய பொறியாக மாறும்.
நாம் முதலில் சிறிய தீக்குச்சியாக இருப்போம்!
எல்லாப் புரட்சிக்கும் எப்போதுமே ஏதாவது ஒரு சிறிய செயல்தான் தூண்டுகோலாய் இருந்தது!
அந்த ஒருவனை ஏன் நாம் மற்றவனில் தேட வேண்டும்?
மாற்றத்தை மற்றவர்களில் காண நமக்குள் மாற்றத்தை விதைப்போம் தோழா!