-மேகலா இராமமூர்த்தி

சென்றவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தின் ஒளிப்பதிவாளர் திருமிகு. ஷாமினி. அதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இவ்விருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

man-and-dog

பாய்ந்துவரும் வெள்ளத்தில், தோளில் ஞமலியையும் உள்ளத்தில் உறுதியையும் சுமந்தபடி இந்த மனிதர் போவது எங்கே?

விடைசொல்ல வருகின்றனர் சிந்தனைத் திறமிகு நம் கவிஞர்கள்!

****

விசுவாசத்தோடு வீட்டில் வாசம்செய்யும் நாயின் நன்றியறிதலைத் தன்  கவிதையில் விவரமாய் விளக்கியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

உலகில் நன்றியுள்ள பிராணி நாய் என்று சொல்வதுண்டு
உலகில் நன்றிகெட்டவன் என்று மனிதனை சொல்வதுண்டு
நாயை செல்லமாக வளர்ப்பவன், எல்லையை மீறக்கூடாது!
அதனைஅதிகம் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது!
நாயும் எஜமானன் போடும் உணவிற்காக நன்றியினை காட்டும்
சிலசமயம் அடித்து துரத்தினாலும் அவனிடமே வந்து சேரும்
கடலில் அவன் வீசிய பொருளை நீந்தி சென்று எடுத்து வரும்
கடலில் குளித்தாலும் தோளையும் தாவி பிடித்து உறவாடும்!
வீட்டில் திருடர்கள் வந்தால் குரைத்து மனிதனை எழுப்பும்
எஜமானன் தொலைவில் இருந்தாலும் அவன் வரவை உணர்த்தும்
தன் எஜமானுக்காக உயிரையும் கொடுத்து செய்நன்றி காட்டும்
யாருமில்லாத தனிமனிதனுக்கு நண்பனாய் துணையிருக்கும்!
பொய்யும்,புரட்டும் பேசுபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுவோம்
நாய் ஜாக்கிரதை என்ற பலகையை வீட்டு வாசலில் மாட்டுவோம்
உலகில் நாய் வளர்ப்பதே ஓர் நாகரிக பொழுது போக்காகும்
என்றைக்கும் நன்றியுடனே நம்மையும்,வீட்டையும் காக்கும்!
[…]

****

மழைதந்த பெருவெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் நிலையிலும், வாயில்லாப் பிராணியான நாயையும் காப்பாற்ற விழையும் இந்த மனிதரின் மனிதாபிமானத்தை இல்லை…இல்லை ’மிருகாபிமானத்தைப்’ பெருமிதத்தோடு போற்றுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

நீராதாரங்கள்
அடையாளமில்லாமல்
அழிக்கப்பட்டு
அடுக்குமாடி கட்டடங்கள் ஆயின
ஏரிகளும் குளங்களும்
யாரிடம் முறையிடும்?
தன் குறையை
மனிதனின்பிழை கண்ட
இறைவனின் இழையே
மழையாககொட்டி
வெள்ளமாக பெருக்ககெடுக்க
ஏழை பணக்காரன்
வித்தியாசமின்றி விரட்ட
உயிர்களையும்
உடமைகளையும்
இழந்தாலும்
இந்த ஐந்தறிவு உயிரை
முதுகில் அணைத்து
கரை சேர்த்த இந்தமனிதனின்
மனிதாபிமானம்
மறக்கமுடியாது

****

”காதலுக்கு எப்படிச் சாதியும் மதமும் தடையில்லையோ அதுபோல் தோழமைக்கும் அவை தடையில்லை. உருவம் பார்த்து வருவதில்லை நட்பு; உள்ளத்து அன்பில் மலர்வது அது! இங்கு நாம்காணும் இவ்விரு உயிர்களையும் பிணைத்திருப்பது அத்தகு அன்பே!” என்று வியக்கிறார் முனைவர் மா. பத்ம பிரியா. 

தோழமைக்கு இனமேது குலமேது
ஐந்தறிவு ஆறறிவு பேதமெல்லாம்
அன்புக்கு முன் நில்லாது
உருவத்தில் இல்லை உயர்வு தாழ்வு
உயர்ந்த உள்ளத்தில் தான் உள்ளது
அன்பு செய்யும் அஃறிணை கூட  உயர்திணையே!
அன்பில்லாத உயர்திணையும் அஃறிணையே!
குறும்பு செய்யும் மழலையாக,தோழனாக,தோழியாக
ஒவ்வொரு வீட்டிலும் காவலனாக…
பன்முக உறவினைப் பரிமாறும் பற்றாளன்
கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் செல்லப்பிராணியிடம்
தோளில் வளர்ந்த பிள்ளைகள் கூட
தூர நிற்பர் ஒருகாலத்தில்
காலில் விழும் செல்லப்பிராணியோ
தாவி அணைக்கும்  தவணையின்றி
அதனை உணர்ந்த மானிடர்கள்
தோளில் இடம் தந்துள்ளனர் போலும்
தோளோடு தோளாகத் தோழமை செய்ய
உன்னத அன்பே போதும். 

****

மனிதர்மீது நாய்காட்டும் அன்பை நெகிழ்ச்சியோடு தம் பாக்களில் பதிவுசெய்துள்ள கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்! 

****

அன்று உழவருக்கு உற்றதோழனாய்த் திகழ்ந்தவை மாடுகள். அந்த மாடுகளையே செல்வமெனக் கருதி சிறப்போடு வாழ்ந்த இனம் நந்தமிழினம்! இன்றோ…மாடு வளர்ப்பது மடமை; நாய் வளர்ப்பதே நாகரிகம் என்றாகிவிட்டது நம்மவர்க்கு!” என உண்மை விளம்பும் கவிதையொன்று நெஞ்சைத் தொ(சு)டுகிறது!

எல்லை தாண்டிப் பேகும்போது,
செல்லப் பிராணியும்
தொல்லைதான்…
மாட்டின் பின்னே செல்வது
மடமை என்றாக்கி,
நாயின் பின்னே செல்வதை
நாகரிகமாக்கிக்கொண்டோம்!
அதனால்தான்,
நாயும் ஏறுது
நம் தலையில்…
இடத்தைக் கொடுத்தால்,
மடத்தைப் பிடிப்பது
மனிதனிடம் கற்றதுதானோ…!

கால்நடைகளோடு நமக்குள்ள காலத்தைவென்ற உறவை நினைவூட்டிக் கவிவடித்திருக்கும் கவிஞர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 81-இன் முடிவுகள்

 1. போட்டி 79 மற்றும் 80 இன் முடிவுகள் என்னவாயிற்று?

 2. திரு. கொ.வை. அரங்கநாதன் அவர்களுக்கு,
  வணக்கம்.
  படக்கவிதைப் போட்டி 79 & 80-இன் முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. அவற்றைக் காண:

  படக்கவிதைப் போட்டி 79-இன் முடிவுகள்: http://www.vallamai.com/?p=71910

  படக்கவிதைப் போட்டி 80-இன் முடிவுகள்: http://www.vallamai.com/?p=72450

  நன்றி!

  -மேகலா இராமமூர்த்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க