Tag: மாதவன் இளங்கோ

  • பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பெல்ஜியத்தில் வசிக்கும் கிறிஸ் வேய்னான்ட்ஸின் தோட்டத்தில் அவர் வளர்க்கும் மான்கள். எழுத்தாளர் மாதவன் இளங்கோ, அங்கே சென்றபோது செல்லம் கொஞ்சிய பேரழகுக் காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தின் தீனன் நகரில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ, தன் வீட்டில் உள்ள பச்சைப் பசேல் செர்ரி மரத்திலிருந்து செக்கச் சிவந்த செர்ரிப் பழங்களை அறுவடை செய்கிறார். உண்ணும்போது மட்டுமில்லை, காணும்போதும் தித்திக்கும் பழங்கள் இவை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    Zoom சந்திப்பு : அண்ணாகண்ணன் 

    குடியுரிமை பெற மிக எளிய வழி எது? தங்கக் கடவுச்சீட்டு (Golden Passport) என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை பெற முடியுமா? ஐரோப்பாவில் பிறந்தாலே குடியுரிமை உண்டா? வீடு வாங்குவதன் மூலமாகக் குடியுரிமை பெற முடியுமா?  ஊழியர் ஒருவர், தன்னைச் சார்ந்துள்ளோர் (Dependant) என யார் யாரை அழைக்கலாம்? யாரை அழைக்க இயலாது? ஐரோப்பாவில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? அதிகக் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அதிகப் பயன்கள் உள்ளன எனில், மக்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெறுவதில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ விரிவாகப் பதில் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பான உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாருங்கள்.

    ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    பெல்ஜியத்தில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ – தேவிப்பிரியா தம்பதியரின் மகன் அம்ருத சாய், பல துறைகளில் ஒரு தாரகையாக உருவாகி வருகிறார். 11 வயதுடைய இவர், தமிழ், ஆங்கிலத்துடன் டச்சு மொழியிலும் வல்லவர். அம்ருத பாலி என்ற கற்பனை உலகத்தைப் படைத்து, அதற்கு அரசனாக விளங்குகிறார். இதன் அடிப்படையில், ஆறு பாகங்கள் உள்ள ஒரு பெரிய நாவலை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்கள் படித்து வருகிறார். இரண்டு யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். கீபோர்டு, பியானோ, மேற்கத்திய இசை ஆகியவற்றைப் பயின்று வருகிறார். கேமிங் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நிரலாக்க மொழிகளையும் கற்று வருகிறார். இவ்வளவு துறைகளைக் கற்கும் போதும், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, சிறப்பாக மேலாண்மை செய்து வருகிறார். தமிழுக்கும் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் மட்டுமில்லை, உலகிற்கே ஒரு தாரகையாக இவர் உருவாகி வருகிறார். இந்த நேர்காணலில் அம்ருத சாய், தனது பல்வேறு ஆக்கங்களையும் முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மழலைக் குரலில் விரியும் அவரது புதிய உலகத்தை இங்கே கண்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – மாதவன் இளங்கோ நேர்காணல்

    ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – மாதவன் இளங்கோ நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பு என்ற அமைப்பு (Social Security System) உள்ளது. அங்கே குடியுரிமை பெற்றால், உயர்தரத்தில் அமைந்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் பலவற்றையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செலவே இல்லாமல் பெறலாம். குழந்தை பிறந்தால் தாய்க்கு உதவித்தொகை, படிக்கும் மாணவருக்கு உதவித்தொகை, வேலையிழந்தால் உதவித்தொகை, திறன்வளர்ப்புப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் அரசே வழங்குகிறது. தன் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் இருக்க வேண்டும் என்பதில் அரசுகள் முனைப்புடன் இருக்கின்றன. இத்தகைய ஒரு நாட்டில் வாழும் வாய்ப்பினை நாமும் பெற முடியும். அந்த நாடுகளில் பணியாற்றுவது எப்படி? எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அங்கே குடியுரிமை பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன? குடியுரிமை பெறுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்னென்ன? இவை அனைத்தையும் நமக்கு விளக்குகிறார், மாதவன் இளங்கோ.

    பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்று வாழும் மாதவன் இளங்கோ, தலைமைப்பண்புப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவர், வல்லமை மின்னிதழின் வல்லமையாளர் விருது பெற்றவர். இவருடைய சிறுகதையை வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். அம்மாவின் தேன்குழல் என்ற தலைப்பிலான இவரது சிறுகதைத் தொகுப்பினை அகநாழிகை வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான நேர்காணலைப் பாருங்கள்.

    ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். இதன் அடுத்த பகுதியில், மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் “ஹோட்டல் காஸ்ஆனஸ்“.

    ஹோட்டல் காஸானஸ்

    “ஆனஸ்” என்பது ஆசனவாயேதான் (Anus). “என்னக் கொடுமை இது?” என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. “மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது” என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் ‘யூப் ஃபன் லீஸ்ஹௌட்’ என்கிற டச்சு வடிவமைப்பாளர்.

    விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். ‘குதவறைக்குள் முதலிரவு’. கேட்பதற்கே கவித்துவமாக இருக்கிறதுதானே? சில சமயங்களில் சாகசச் சுற்றுலா பயணிகளும் வந்து தாங்குவார்களாம். மலத்துவாரத்தின் உட்புறத்துக்கு அருகே இரண்டு பேருக்கான படுக்கையுடன் கூடிய அந்த அறையில் ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் அறையில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். பெருங்குடலைப் போன்ற அறையின் வெளிப்புறத்தில் வீங்கியிருக்கும் நரம்புகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது. அதில் தங்கி இரவு தூங்குபவர்களுக்கு கண்டிப்பாக ஒரு இராட்சத பாலியஸ்டர் குடலுக்குள் உறங்குவது போன்றதொரு புதுமையான அனுபவம் கிடைக்கும்.

    அறையின் வெளிப்புறம்

    படுக்கை அறை

    குளத்தின் மறுபுறமிருந்து ஆசனவாய் காட்சி

    ஒரு கலைப்பூங்காவின் அழகிய இயற்கைக் சூழலில், அமைதியான குளத்தருகே கிடத்தி வைக்கப்பட்டுள்ள அந்த மாபெரும் தசைக் குழாய் விடுதி அறையில் ஓர் இரவு தங்குவதற்கு விலை என்ன தெரியுமா?

    ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் மட்டுமே.

    Jokes apart, இதற்குப் பின்புலத்தில் இருக்கும் கதையை, கனவை உங்களுக்கு விவரிக்க விழைகிறேன். அது ஒரு ‘சோளக் களம் கலைத் தளமான’ கதை.

    கலா ரசிகர்களான ‘ஹியர்ட்  ஃபெர்பேகெ’ மற்றும் ‘கார்லா ஃபெர்பேகெ-லென்ஸ்’ ஆகிய இருவரும் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப் நகருக்கு அருகே ‘கெம்ஸேகெ’ என்ற இடத்தில்  கிட்டத்தட்ட முப்பது ஏக்கர் பரப்பளவில் கலைப் படைப்புகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு தளத்தை ஏற்படுத்தி அங்கு வித்தியாசமான, சுவாரசியமான நவீன கலைப் படைப்புகளை சேகரம் செய்து வருகிறார்கள். ஐரோப்பாவில் சமகால கலைகளுக்கான மிகப்பெரிய தனியார் முயற்சிகளில் ஒன்றாக ‘ஃபெர்பேகெ அறக்கட்டளையைச்’ சுட்டலாம்.

    பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் இந்த அறக்கட்டளை, கலைஞர்களுக்கென்றே ஒரு குடியிருப்பை அமைத்து, அவர்கள் அங்கேயே வந்து தங்கி படைப்புகளைத் தளத்திலேயே உருவாக்கவும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தளத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஏ4 பக்கங்கள், அறக்கட்டளையின் பத்து ஆண்டு வரலாற்றைச் சொல்கின்றன. இது போன்ற கலைப்படைப்புகளை சேகரிப்பதற்கு ஒருவகையான வெறி இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதை ஆமோதிப்பது போலவே, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.” என்று கூறியிருக்கிறார் ஃபெர்பேகெ.

    இயற்கை, கலாச்சாரம், சூழலியல் இவை அனைத்தும் ஒன்றாக இணையும் அந்த நிலப்பரப்பு, கடந்த காலத்தில் ஒரு பெரிய கோழிக் கொட்டகையுடன் கூடிய வயல்வெளியாக இருந்திருக்கிறது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை அமைத்துத் தானே அதற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நடத்தி வந்திருக்கிறார் ஹியர்ட்  ஃபெர்பேகெ. ஆனால், கலையின் மீதான காதலால் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தைக் கலைக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் செவ்வனே நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார். இந்த எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதே ஒரு வித்தியாசமான கதை. ஒருமுறை ஒரு எஃகுச் சிற்பத்தைச் சரக்கேற்றிக் கொண்டுசெல்வதற்காக யாரோ இவரை அணுகியிருக்கிறார்கள். அங்கு ஆரம்பித்த அந்தக் கலைப் பயணம் இப்போது ஆயிரக்கணக்கான படைப்புகளின் கலைத் தொகுப்பாக வளர்ந்து நிற்பதைப் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

    தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பெல்ஜிய நாட்டு ஒவியக் கலைஞர்களின் படைப்புகளில் தொடங்கிய அவருடைய சேகரப் பணி, சமீபத்திய ஆண்டுகளில் சமகால படைப்புகள், உயிர்க் கலை என்று விரிவடைந்திருக்கிறது. அவர் சேகரித்துள்ள இருபதாம் நூற்றாண்டு கொலாஷ்கள் மட்டுமே கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் அதிகம். உண்மையில் இது ஒரு அசாதாரணப் பணி. இந்தத் தொகுப்பின் ஒரு பகுதிக்காகவே பெரியதொரு தனி அறையை ஒதுக்கி அங்கு நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார். தனித்துவமான இந்த இடத்துக்கு ஒவ்வொரு வருடமும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள்.

    கண்காட்சி

    யோஸ் டெல்ஹாயேவின் கலைப் படைப்பு

    ஆன்னி டி பீயின் கலைப் படைப்பு

    “எதையும் எடுக்காதீர்கள்; நிச்சயமாகப் பால் இல்லை” (புரிகிறதா? கீழே சிவப்பு விளக்கு!)

    அறக்கட்டளையின் பத்தாமாண்டு நிறைவை ஒட்டி எழுநூறு பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஃபெர்பேகெ. அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய ‘வாழ்க்கையின் நீட்சியாகக்’ காண்பவர், “இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையே அதிலுள்ள ஒரு கொலாஷைப் போன்றதுதான், என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும், கொலாஷில் உள்ள ஒரு துண்டைப் போன்றது. முதல் பார்வையில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பில்லாதது போலத்தான் தெரியும்” என்று தன் வாழ்க்கையை கொலாஷோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தப் பார்வை எனக்கு சுவாரசியமாகப் பட்டாலும், எல்லோருடைய வாழ்வும் அப்படித்தானே என்கிற எண்ணம் உதித்தது. மற்றவர்களுக்கு எப்படியோ, என்னுடைய வாழ்க்கை  நிச்சயமாக ஒரு கொலாஷ்தான்.

    கொலாஷ் தொகுப்புப் புத்தகம்

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஏலத்தில் பங்குபெறுவதும், கண்காட்சிகளுக்குச் சென்று பார்வையிடுவதும் என்று மிகவும் கடினப்பட்டு கலைப் படைப்புகளைத் தொகுத்ததாகக் கூறும் ஃபெர்பேகெ, அவற்றை வாங்குவாரின் மனநிலையைப் கோபத்துடன் விமர்சிக்கிறார், “கலைப் படைப்புகளை வாங்கும் பெரும்பாலானவர்கள் ஒரு நன்கு அறியப்பட்ட கலைஞனின் மோசமான படைப்பைக்கூட வாங்கிக்கொள்ள முனைகிறார்களே தவிர, அறியப்படாத கலைஞனின் நல்ல படைப்பை வாங்க மறுக்கிறார்கள். எனக்குத் தரமான படைப்புதான் முக்கியம். கலைஞன் யார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.” என்று தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்.

     

    வாங்குவதில் மட்டுமல்ல ரசிப்பதிலும் உலகெங்கும் இதே நிலைமைதானே. அவ்வளவு ஏன் எழுத்துச் சூழலிலும் இதே கதைத்தான். படைப்புகளை அனுப்பினால் நிறைய பத்திரிகைகளிலிருந்து பதில் கடிதம்கூட வருவதில்லை என்று நிறைய பேர் குமுறுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

    ஹியர்ட்  ஃபெர்பேகெ

    இது போன்ற கலை சார்ந்த முயற்சிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகைகளைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் என்னை வியப்பிலாழ்த்தியது; அவர் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது. “இதுபோன்ற அறிய செயல்களைச் செய்வதற்கு அரசாங்கத்தின் சிறு ஊக்க உதவித் தொகைகளை எதிர்பார்த்திருப்பது என்பது ‘அற்ப உயிரினத்தின் இயல்பு’.” என்று கூறிவிட்டு கலைஞனுக்கே உரிய கம்பீரத்துடன் சிரிப்பவர், “எனக்கு அது தேவையில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் சுயதொழில் செய்துவந்தவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டுமே. எனக்கான திட்டத்தை நானே வரைந்துகொள்ளவே விரும்புகிறேன்.” என்று அவர் கூறுவதில் ஒளிரும் அவரது தன்னம்பிக்கை ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும், “அரசாங்கம் இன்றைக்கு ஒன்று சொல்லும். நாளைக்கு ஒன்று செய்யும். அரசாங்கத்தை நம்பி இதுபோன்ற அறிய காரியங்களில் இறங்கினால், ஐந்து வருடங்கள் கழித்து நம்மைக் கையேந்த வைத்துவிடுவார்கள். நான் தன்னிறைவுடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த இடத்தின் உட்புறப் பகுதிகள் சிலவற்றையும், கலைப் படைப்புகளில் தங்க விரும்புபவர்களுக்கும் வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து நான் விரும்பியதையெல்லாம் செய்து வருகிறேன். இவ்விதம் எனக்கும் பணம் கிடைக்கிறது; கலைஞர்களுக்கும் உதவ முடிகிறது; அதே சமயம், பார்வையாளர்களுக்கும் பயணிகளுக்கும், கலையுடனும் கலைஞர்களுடனும் இயற்கையுடனும் தொடர்பு வைத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார். உண்மைதான். இயற்கை சூழலில் ஒரு கலைப்படைப்புக்குள் தனியாக ஒரு இரவைக் கடத்துவது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவமாகவே இருக்கும்.

    தண்ணீர் மீது அமைக்கப்பட்ட இன்னொரு தங்குமிடம்

    நான்கடுக்கு குடியிருப்பு – ஒவ்வொரு அடுக்கிலும் செயற்கை புல்வெளி மீதமைந்த கூடாரங்கள்

    “கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற பாரதியின் கட்டளைக்கு, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை மீசைக்காரரே!” என்று ஃபெர்பேகெ பதிலுரை தருவது போலவே எனக்குத் தோன்றுகிறது. இப்போது எனக்கு அந்த மலத்துவாரத்துக்குள் சென்று ஓரிரவு தங்குவது தவறில்லை என்றும் தோன்றுகிறது.

    Share
  • எனது போராட்டமும் ஸ்டீபன் ஹாக்கிங்கும்

    முதலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

    இனி இந்தக் கட்டுரையில் நான் எழுதி இருப்பது – என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.  

    ‘கேபி ஓல்ட்ஹவுஸ்’ என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி ‘டின்னிட்டஸ்’ (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறிய போது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செல்லப்பட்டு விடும். அந்த அளவில்தான் டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் கொடுமையான அந்தச் சத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் இறந்தே தீரவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, அவர்களின் அனுமதி பெற்றுக்கொண்டு, மடிந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்து விட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டேன்.

    டின்னிட்டஸ் பிரச்சினையின் கொடூரத்தையும், என்னுடைய போராட்டத்தையும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும். இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி Euthanasia (=கருணைக்கொலை என்கிற வார்த்தை பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது.

    ஒரு விழிப்புணர்வுக்காக இதைப் பற்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். ‘பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்’ என்று ‘அன்பே வா’ திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் ஒரு வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிட்டஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த மாபெரும் அரக்கன் இந்த டின்னிட்டஸ். அதனுடனான என் அனுபவங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் எழுத இருக்கிறேன்.

    தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சரோடு போராடுவது என்பது எத்தகையது என்று தெரியாது. பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொண்டதோடு சரி. அதை ‘முடி’ சிறுகதையிலும் பதிவு செய்திருக்கிறேன். டின்னிட்டஸ் கேன்சர் போல் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதல்ல. ஆனால், நிச்சயம் வாழ விடாமல் செய்யும் அளவுக்கு மோசமானது. அந்த அளவில், இதுவுமே உயிர்கொல்லிதான். இந்தச் சத்தங்களோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான துன்பம் வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய சிறுகதை ஒன்றுக்கு ‘அமைதியின் சத்தம்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். அந்தக் கதை டின்னிட்டஸோடு தொடர்புடையது அல்ல. ஆனாலும் அமைதியின் சத்தம் எவ்வளவு துன்பகரமானது என்பது எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.

    எப்படியோ இந்த டின்னிட்டஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நம்மூரில் எல்லாம் என்னைப் போன்ற சாதாரணனுக்கு இலவசமாக இத்தகைய வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. வசதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும் அப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதுவும் உண்மை. Especially, on human aspects.

    டின்னிட்டஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ, ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா..’ என்று கூறிய போதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. என் தந்தையாரும் அப்படியே. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; யோகா தெரபிஸ்ட்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து ஒரு சில யோக முறைகளை பயிற்சி செய்து வந்தேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த டீ குடிப்பதையே நிறுத்தி விட்டு, கிரீன் டீக்கு மாறினேன். எப்போதும் எதிலாவது என்னை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது என்று முடிவுசெய்தேன். சோம்பேறித்தனத்தை ‘டின்னிட்டஸ் அரக்கன்’ தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதை அறிவேன். எந்தப் பிரச்சினையையும் தலைக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் ஏற்படும் தனிமையும் அவனுக்குச் சாதகமானதுதான். வாழ்க்கையைக் கொண்டாடுவதால் மட்டுமே அவனைத் துரத்த முடியும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை, நான் செய்வதையெல்லாம் செய்ய விட்டு, அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் என்னை கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், என் மருத்துவரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.

    டின்னிட்டஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பழைய அமைதி வேண்டுமென்கிறார்கள். அதிலும் ஐரோப்பியர்கள்  சும்மாவே அமைதி விரும்பிகள் ஆயிற்றே. அர்த்தமற்ற அமைதியின் மீது அவர்களுக்கு அப்படி என்னதான் காதலோ? ஆனால் டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேண்டுகின்ற அமைதிக்கு நிச்சயம் சாத்தியமே இல்லை என்பதே வலிமிகுந்த உண்மை. எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. 🙂 ஏனெனில் நான் அதைக் கண்டுகொள்வதில்லை. போராடுவதற்கு மனதை வலிமையாக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

    ஆனாலும் மனவலிமை அற்ற இவர்களுக்கு இதையெல்லாம் புரிய வைப்பதில் சற்று திணறிக்கொண்டிருக்கிறேன். இருந்த மனவலிமையையும் டின்னிட்டஸ் அரக்கன் தின்றிருப்பான் என்பது எனக்குத் தெரியும். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் என் பெல்கிய நண்பன் ஒருவனை ‘ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா’ என்று தீர்வு சொன்னேன். இந்திய நகரங்களின் உள்ளமைந்த இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் அல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள். இங்கிருக்கும் இரண்டு நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டதால் என்னை இவர்கள் ஒரு கடவுளாகவே பார்க்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

    ஒருபுறம் சாகாத் துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் யுதனேசியா முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் கேபியிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? அவரை வாழ வைத்திருக்க முடியுமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த அன்று இரவு எனக்குத் உறக்கமே வரவில்லை.

    எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இயற்பியலாளர் ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இருபத்தோரு வயதில் அவருக்கு ‘Motor Neurone Disease’ வந்து உடல் முழுவதும் செயலிழந்து போனது. “இன்னும் இரண்டு வருடங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார்” என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனராம். ஆனால்,  ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால், தயங்காமல் அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன். தன்னுடைய எழுபத்தி ஆறு வயதில் நேற்று காலமான அவரால் பேச முடியாது, நடக்க முடியாது – எதற்கு இப்படி விவரித்துக்கொண்டு – அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவருக்குப் பிடித்தமான குரலை  அவரே தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு.

    ஒருமுறை அவரிடம், “எப்படி இத்தனை வருடங்கள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்ட போது அவர் கூறியது, “While there is life, there is hope”. அவருடைய இந்த வாசகம்தான் ஒரு காலகட்டத்தில் எனக்கு எல்லாமாயும் இருந்திருக்கிறது. நம் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை நமது நம்பிக்கையை மட்டும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஹாக்கிங்கால் தன்னுடைய இருபத்தோரு வயதிலிருந்து வாழ்வின் இறுதி வரை போராட்டத்துடன் வாழ முடிந்திருக்கிறது. அதுவும் சாதாரணமாக அல்ல. உலகின் தலைசிறந்த இயற்பியலாளராக.  நானும் இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் எதற்கு என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது.

    இறந்தால் இன்னொரு பிறவி இருக்கிறது என்கிற மூடத்தனத்தை ஒழித்தாலாவது கைவசம் இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையின் மீது மனிதர்களுக்குப் பற்று வருமா? அப்போதுதாவது வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாட ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுமா? ஓருடல். ஒரு பிறவி. காயமே இது மெய்யடா. மெய்யே மெய். அதில் எத்தனை பிரச்சினை இருப்பினும்.

    பிரச்சினைகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். அவற்றைத் தொலைத்துவிடுங்கள். டின்னிடஸ் என்பதே ஒரு பிரச்சினைதான். ஆயினும் உங்கள் பிரச்சினைகளை எனக்கிருக்கும் டின்னிட்டஸாகப் பாருங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். நண்பனாக்கிக் கொள்ளுங்கள். ரசிக்க ஆரம்பியுங்கள். அதன் மீதே தியானம் செய்யத் தொடங்குங்கள். இறுதியில் ஒருநாள் அவை தொலைந்து போகும். அவை இருக்கும். ஆனால் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. பிறகென்ன, வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

    எல்லோருக்குமே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக  உதித்திருக்கும். உலகத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்சமல்லவே. ‘செத்துத் தொலைப்பதற்கு பதிலாக வாழ்ந்துத் தொலைக்கலாம்’ என்கிற வரி நினைவுக்கு வருகிறது. அநேகமாக வண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. வண்ணதாசன் நம்பிக்கைவாதிதான். ஆனால், எனக்கு இந்த வரிகள்கூட எதிர்மறையாகவே தெரிகிறது. அது என்ன தொலைப்பது? கொண்டாட்டத்துடனே வாழலாமே? நானும்கூட பல சமயங்களில் தவறான காரணங்களுக்காக, அற்ப விஷயங்களுக்காக ‘என்ன வாழ்க்கை இது. செத்துப்போகலாம்’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு சரியான காரணத்துக்காக வாழ விரும்புகிறேன். பெல்ஜியத்தின் சுகாதாரத் துறைக்கும், இந்தக் காணொளியை எடுத்த செய்தி நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கைத் தந்தது போல, டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கைத் தர விரும்புகிறேன். அதற்கேனும் இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். சாதாரணமாக அல்ல. பெரும் குதூகலத்துடன்.  அதற்கான நம்பிக்கையை ஸ்டீபன் ஹாக்கிங் என்னுள் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

    “While there is life, there is hope” – Steven Hawking.

    I’m sorry. You are wrong, Mr.Hawking!  

    Of course, we have lost a wonderful life, but not “HOPE”. You continue to give hope with the way you lived your life. I am living my life happily & peacefully because of the hope you have planted in me. You are with me always in the form of “hope”, Mr.Hawking! So, you are wrong. There is hope – ALWAYS, whether there is life or not. So, why should I bid you adieu?

    -0-0-0-
    Share
  • போதிதர்மரும் தங்கமீன்களும்

    என்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, “நீயே அவருக்குக் கடிதம் எழுது..” என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில், “சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேனே தவிர, நண்பர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.” என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பதிவை எழுதுவதற்கும் அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. மேலும் சில நண்பர்களும் இதுகுறித்து என்னைக் கேட்டார்கள்.

    முகநூல் மட்டுமல்ல, குடும்பப் புலனக் குழுக்களில் [WhatsApp] இருந்துகூட வெளியேறினேன். அதற்குப் பல காரணங்கள். காணி நிலம் வேண்டுமென்பதில்லை என் ஆசை. விதைகள் வேண்டுமெனக்கு. ஆமாம், நான் ஒரு விவசாயியைப் போன்றவன். நேரமே என்னுடைய விதை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அப்படியே என அறிவேன். சரியான நிலத்தில் உழுது, பயிரிட்டு அதில் விளைச்சலைக் காண விரும்புகிறேன். இணைய உலகம் 24 x 7 விழித்துக்கொண்டே இருக்கிறது. உலகமெங்கும் நண்பர்களிருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் கிழக்கிலிருந்து வந்திருக்கும் செய்திகளைப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் பொறுப்புடன் பதிலளிப்பது; முடிந்தால் ஓரிருவருடன் உரையாடல்கள். பிறகு அடித்துப் பிடித்துக்கொண்டு நாளைத் துவக்க வேண்டியது. அத்தோடு முடிந்ததா என்றா அதுவும் இல்லை. நாள் முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது முறை புலனம் பார்த்துக்கொண்டு, எதைப் பற்றியாவது எவருடனாவது விவாதித்துக்கொண்டிருப்பது. இதனால் செய்யும் எந்தப் பணியிலும் கவனம் கூடவில்லை. என்னுடைய “கவன நீட்டம்” [Attention Span] வெகுவாகக் குறைந்து விட்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்தால் உலகையே மறந்து வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் முகநூல் மற்றும் புலன உலகுக்குள் புகுந்ததிலிருந்து நாற்பது பக்கங்கள் வாசிப்பதற்குள் நான்கு முறை கைப்பேசியை எடுத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

    மாலை வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் முகநூல், புலனம் வழி  உரையாடல்கள் துவங்கிவிடும். தரமான புத்தகங்களைத் தேடிப்  பிடித்து வாசிப்பது, எழுதுவது, பியானோ வாசிப்பது, நண்பர்களிடம்   உரையாடல் (blood & flesh நண்பர்கள்,  சமூக வலைதள நண்பர்களல்ல), குடும்பம், தோட்டம், தொழில், யோகா என்று பல திறக்குகளில் இயங்கிக்கொண்டிருந்தவன், புலனத்தில் வரும் ஒன்றுக்கும் உபயோகமற்ற செய்திகளையெல்லாம் அதிதீவிரமாக வாசித்து அவற்றுக்கு என்னுடைய கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைக்கு என்னை அறியாமலேயே நகர்த்திச் செல்லப்பட்டுவிட்டேன். இரவு தூங்கப் போகலாம் என்று நினைக்கும் பொழுது, அமெரிக்கா விழித்துக்கொண்டு விடுகிறது. அவ்வளவுதான். முடிந்து போயிருந்த விவாதம் ஒன்று மீண்டும் தொடங்கும். நான் டின்னிட்டஸால் அவதியுற்றிருந்த காலங்களில் இந்த உரையாடல்கள் என் இரவைக் கடப்பதற்குப் பேருதவி புரிந்தது என்பது உண்மையென்றாலும், பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதையாகிவிட்டிருந்தது என் நிலை. ஒரு முறை ப்ரசல்ஸ் மாநகரத்தில் கார் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, சிவப்பு சமிக்ஞை விழாதா என்று ஏங்கி, விழுந்தவுடன் குதூகலத்துடன் கைபேசியை எடுத்துச் செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்குமளவு அடிமையாகி விட்டிருந்தேன். இன்னொரு முறை நண்பர் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசாமல் புலனம் வழி யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தேன். எரிச்சலடைந்த என்னுடைய தோழி திவ்யா, “மாதவன், போனை சற்று நேரம் தூரமாக வைக்கிறாயா?” என்று திட்டினாள்.

    “உன் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய்” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்குமளவிற்கு பல செயல்களில் என்னை உட்படுத்திக்கொண்டிருந்தவன் இப்படியொரு பரிதாபகரமான நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று தீவிரமாக ஆய்ந்து பார்த்தேன். மேலும், எங்கள் வீட்டில் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் [Retrospective] நடத்துவோம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அனைவரும் பச்சை நிறத் தாள்களில் வீட்டில் “நன்றாகப்  போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுத வேண்டும். சிவப்பு நிறத் தாள்களில் “மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுதவேண்டும். இறுதியாக நீல நிறத் தாள்களில்  “பிரச்சினைகளைக் களைவதற்கான யோசனைகளை” எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிகமான ரெட் கார்டுகளை வாங்குவது அடியேனே. என் மனைவியும், மகனும் ஒரு மூன்று மாத காலம் என்னை கிழித்து எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கான நேரமே ஒதுக்குவதில்லை. எந்த நேரமும் கைப்பேசியிலேயே கிடக்கிறேன் என்பது அவர்கள் வாதம். அது முற்றிலும் சரியே! என் நூலகத்திலிருக்கும் புத்தகங்களும், என் வீட்டுச் செடிகளும், மரங்களும்கூட இதையே என்னிடம் எப்படித் தெரிவிப்பது என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. இல்லத்தில் “Sunday – no device day!” என்கிற முறையை அமல்படுத்தினோம். ஆனால் அதன் மூலம் நாங்கள் நினைத்த அளவுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. எனவேதான் முகநூல், புலனக் குழுக்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டேன். விலகுவதற்கான காரணங்களை விளக்கமாக எழுதி அத்தனை குழுக்களுக்கும் அனுப்பினேன். எல்லோரும் ஆதரவு தெரிவித்தார்கள். குழுக்களில் இருந்து மட்டுமே விடைபெறுகிறேன். ஆனால் எனக்குத் தனியாகச் செய்தியோ அல்லது மின்னஞ்சலோ அனுப்பலாம் என்று தெரிவித்தேன். அன்று வரை ரத்தமும் சதையுமாகப் பழகி, அவர்களுடனான உரையாடல்களுக்காக என் உடல், பொருள், ஆவி அத்தனையும் கொடுத்து வந்திருந்தேன். 😉 ஆனால் பாருங்கள், அன்றிலிருந்து இன்று வரை எனக்குத் தனியாக வந்த செய்திகளைக் “கைவிட்டு எண்ணிவிடலாம்”. என் இல்லாமையை பெரும்பாலானவர்கள் உணரவில்லை என்பது எனக்குத் தெளிவானது. ஆனால், என் தனிப்பட்ட நேரத்தின் பெரும் பகுதியை அவர்களுக்குத்தான் செலவழித்தேன். எனவே, சமூக வலைதளம் என்பது என்னளவில் ஒருவித மாயையே; போதையே. அஃதொரு மாயவலை.

    சிறுவயதில் அப்பா அடிக்கடி சென்னை மாநகருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை வழியனுப்பிவிட்டால், அதை முற்றிலும் மறந்து நண்பர்களுடன் விளையாட்டுகளில் மூழ்கிவிடுவோம். அவரும் அவருடைய பணிகளையெல்லாம் முடித்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புவார். காலையில் எழுந்தவுடன் அப்பா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கும். ஓடிச் சென்று அவருடைய பெட்டியைத் திறந்து என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று துழாவுவோம். அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இதை எங்கள் வீட்டு ஆய்வுக் கூட்டத்தில் ஒருமுறை பேசி அலசியிருக்கிறோம். அன்றிலிருந்து, நான் நண்பர்களைச் சந்திக்கச் சென்றாலோ, வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலோ என் மனைவியிடமிருந்து எந்தச் செய்தியும் வராது. நானாகத் தொடர்புகொண்டால்தான் உண்டு.

    எவ்வளவு பிரச்சினைகளைத்தான் ஒரு மனிதன் தீர்த்துவைக்க முடியும் என்கிற அளவுக்கு பிரச்சனைகளின் குவியலாக இருக்கிறது சமூக வலைத்தளம். அங்கு தொடர்ச்சியாக நடந்து வரும் புரட்சிகளின் ஜ்வாலை என்னைச் சுட்டெரிக்கின்றது. எல்லாமே அவசர புரட்சிகள். இந்த வாரம் புதிதாக உதயமாகும் புரட்சி, முந்தைய வாரம் உதித்த புரட்சியை அஸ்தமிக்கவைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் எதுவுமே நீடிப்பதில்லை. ஏனெனில் அடித்தளத்தை மாற்றும் நோக்கத்துடன் நாம் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் அதில் நீடித்த முயற்சிகள் இருப்பதில்லை. பல புரட்சிகள் வெறும் திசைதிருப்பல்களாகவே வருகிறது. புரட்சிக் கருத்து கூறுபவர்களிடம் தீர்க்கமாக எதையேனும் பரிந்துரைத்தால் மௌனமாகக் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே, அவற்றை வெறும் உணர்ச்சிகர எதிர்வினைகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். அதுதான் நம்முடைய படைப்பாற்றலுக்கு [Creativity] முழுமுதற்காரணம். ஆனால், நம்முடைய ஆகப்பெரும் குறைபாடும் இந்த “உணர்ச்சிவசப்படுதலே”. அதனாலேயே பலமுறை சமநிலையை இழக்கிறோம். அதுசார்ந்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை. உணர்ச்சிகளின் மீது கொஞ்சம் கண் வையுங்கள் என்று பேசினால் அதற்கும் கொந்தளிக்கிறார்கள். இதையெல்லாம் விமர்சிக்கும் அதே சமயம், புதிய மாற்றங்களை வரவேற்பவனாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், சமூக வலைத்தளங்களை முற்றிலும் வேண்டாம் என்றும் கூறமாட்டேன். அவற்றை உபயோகிக்கும் விதம், செய்திகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் உபயோகிக்கும் காலஅளவு போன்றவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நானேகூட முகநூலைப் பயன்படுத்தி வெள்ள நிவாரண நிதி திரட்டி சென்னைக்குக் கொண்டுவந்தேன். ஆனால், எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே என்னுடைய சாரதி, பணியாளர்கள், உற்றார், சுற்றார், என்று அடிப்படைத் தேவைகளுக்காக அன்றாடம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுதற்கான வல்லமையையே முழுவதும் பெற்றுவிடாத நிலையில், பெயர் தெரியாதவர்களுக்கு உதவி புரிவது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அதையும் அவர்களை அருகில் வைத்துக்கொண்டே செய்யும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெயர் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்பது என்னுடைய கருத்தல்ல. சுற்றி இருப்பவனின் கண்ணீருக்கு நெஞ்சைக்  கல்லாக்கிக்கொண்டு, எங்கோ இருப்பவனுக்கு அழுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே என் மனசாட்சி என்னிடம் கேட்கும் கேள்வி. அதுபோன்று கன்னத்தில் அறையும் விதமாக சில நிகழ்வுகள் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அலைந்தபோதே நடந்திருக்கிறது. அதைத்தான் நான் மாயை என்பது. மேலும், சமூக வலைத்தளங்களில் நடக்கும் பல போராட்டங்களுக்கு வெறும் தார்மீக ஆதரவை மட்டும் தந்துப் புரட்சி செய்துகொண்டிருப்பதும் என்னுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது.

    இன்னொன்று – எல்லாவற்றுக்கும் கருத்து கூறவேண்டிய சமூக அழுத்தமும் அங்கு அதிகமாக இருக்கிறது. கருத்து கூறாதவனை உணர்ச்சியற்றவனாக பாவிக்கும் மனநிலையும் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கருத்துக்கூறாதவன் செய்துகொண்டிருக்கும் அரிய பல சமூகப் பணிகள் குறித்து இமியளவும் அப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது. இவையனைத்துக்கும் மேலாக நான் ஏற்கனவே சொன்னதுபோல் எனக்கு என் நேரம் வேண்டும். இணைய உலகில் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்து, கண்களை மூடி, மனதைச் சற்று அமைதிப்படுத்தி, சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் நான் கூற வருவதில் இருக்கும் உண்மை புலப்படலாம்; நியாயம் புரியலாம்.

    தற்போதெல்லாம் நான் செய்தித்தாள்களைக்கூட அவ்வளவாக வாசிப்பதில்லை. செய்திகளுக்கா பஞ்சம் நம்மிடம். அன்றாடம் ஏதாவது ஒரு செய்தி; ஏதாவது ஒரு பிரச்சினை. வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முன்னெப்போதைவிடவும் தற்போது உலகம் அமைதியாகத்தான் இருக்கிறது என்கிற நேர்மறைச் சிந்தனை கொண்டவன் நான். முன்பெல்லாம் செய்திகள் வரலாறுகளான பிறகே நமக்குத் தெரிய வரும், அதனால், Ignorance was bliss. ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் செய்திகள் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அதிரடியாக அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும், அவ்வளவு ஏன் கழிப்பறை வரை நம்மைத் தேடி வந்து தாக்குகிறது.  நம்மைச் சுற்றி நடக்கும் “முக்கியமான விஷயங்களை”, “அவசியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளைப்” பற்றிய விழிப்புணர்வைக் கொன்றழித்து விட்டு, ஒரு மாய உலகில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன பெரும்பாலான செய்திகள். நாமறியாமலேயே நாமெல்லோரும் மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வலி மிகுந்த உண்மை.

    செய்திகள் வேண்டாம் என்று கூறவில்லை. தேவையான செய்தி, தேவையற்ற செய்தி எவை என்பதை இனங்காண முயல வேண்டும்; முன்னுரிமைப்படுத்தவேண்டும். ஆனால், இன்றைக்கு முக்கால்வாசி செய்திகள் சந்தேகமில்லாமல் Toxic-ஆக இருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் மதம், அரசியல் சார்ந்த நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளும், அது சார்ந்த சண்டைகளும், சச்சுரவுகளும் பெரும் அச்சுறுத்தலைத் தருகின்றன. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்கூட வெறும் முகநூல் சண்டையில் பிரிந்துபோனதைப் கண்ணுற்றிருக்கிறேன். இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளுக்கு ஏன் மனிதர்கள் இரையாகிறார்கள்? ஒரு நாளைக்கு 4 செய்திகள் வாசிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு ஆயிரத்து ஐநூறு செய்திகள். இதில் எத்தனைச் செய்திகள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் பயன்பட்டிற்கும், எத்தனை பேர் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த உதவியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுகூட இல்லை.

    ஒரு சில தேர்ந்தெடுத்தத் தளங்களை மட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன். இது தவிர தேவையான செய்திகள் நம்மை எவ்வழியிலேனும் வந்தடையும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மற்றபடி புத்தகங்கள் போதுமெனக்கு. கடந்த ஐந்து வருடங்களில், நான் அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் கடந்த வருடமாகத்தான் இருக்கும். எண்ணற்ற புத்தகங்கள். அதில் ஒரு முக்கியமான புத்தகமாக கால் நியூபோர்ட்டினுடைய “DEEP WORK”  புத்தகத்தைச் சுட்டுவேன். என்னுடைய அலுவலக நூலகத்தில்தான் முதன்முறையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். “DEEP WORK” என்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்ததால், அதை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அப்போதைய என்னுடைய சிந்தனைகளுக்கு இந்தக் கருத்தாக்கம் ஒத்துப்போனதால், அன்று மாலையே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். கவனச்சிதைவு நிறைந்த இந்த உலகில் நாம் அனைவருமே நுனிப்புல் மேய்பவர்களே. செய்யும் தொழிலில், செயலில், கலையில் “தேர்ச்சித்திறத்தை” [Mastery] அடையவேண்டுமென்றால், சித்தி கிட்டவேண்டுமென்றால் இந்த “DEEP WORK” மிகவும் அவசியம். நுனிப்புல் மேய்வதன் மூலம் எதிலும் MASTERY அடையமுடியாது. இயந்திரம் போன்று மாறுதல் இல்லாத, சுவையற்ற பணிகளை பெரும் சலிப்புடன் வாழ்க்கை முழுமைக்கும் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான். கால் நியூபோர்ட், கவனச்சிதைவுகளுக்கு மத்தியில் எதிலும் ஆழ்ந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைத்து, அதை அடைவதற்கு சில விதிகளை முன்வைக்கிறார். அதில் மூன்றாவது விதி என்ன தெரியுமா? “சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுங்கள்!” [Quit Social Media] என்பது.

    கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பத்தாம் வகுப்புத் தோழர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் புலனக் குழுவில் என்னை இணைத்தார்கள். என்னை அந்தக் குழுவில் அவர்கள் இணைப்பது இது இரண்டாவது முறை. மறுப்பதற்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த வருடத்தோடு நான் பத்தாம் வகுப்பு படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது என்று நண்பனொருவன் நினைவுபடுத்தினான். ஒன்றிரண்டு குழுக்களில் இருப்பதில் பிரச்சினையில் இல்லை. பல குழுக்களில் இருந்தால் அது நம் நேரத்தைத் தின்றுவிடும். ஆனால், அதற்கென்று குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கிவிடவேண்டும். அதிக நேரம் செலவழிக்கக்கூடாது. நான் பகிரும் தகவல்களின் மூலம் அவர்களுக்கு ஏதெனும் பயனிருக்கிறதா என்று கணக்கெடுப்புகூட நடத்தினேன். பெரும்பாலான புலனக் குழுக்களில் யாரும் அவர்களைப் பற்றி பேசிக்கொள்வதில்லை. மீம்ஸ்களிலும், பயனற்ற துணுக்குகளிலும் நேரத்தை வீணாக்குகிறார்களே என்று மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் ஒரு விதையன்றோ? அத்திப் பூத்தாற்போல சில சமயங்களில் யாரேனும் மலரும் நினைவுகளைக் கொண்டுவருவார்கள். ஆனால், நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய நிலம் பெரியது; விதைகள் குறைவு. என் பட்டியலில் இருக்கும் விஷயங்களைச் செய்து முடிப்பதற்கு நேரமே போதவில்லை. இப்போது இந்தக் குழுவில் என்னுடைய இயக்கம் சற்று அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. நான் ஒரு extrovert! மற்றவர்களிடம் பேசுவதன் மூலமாகவே என்னுடைய உற்சாகத்தையும் ஆற்றலையும் பெறுகிறேன். ஆனால், அவர்கள் எல்லோருமே நேரில் வந்து உரையாடினால் அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த முறை இந்தியாவுக்கு செல்லும்போது அவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்க இருக்கிறேன். அதன் பிறகு விலகலாம் என்றிருக்கிறேன். தற்போதைக்கு நட்புகளின் சிந்தனைக்கு முக்கியமான சில விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகக் குழுவில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

    சில நாட்களுக்கு முன்பு என்னுடைய மனைவியிடம் “லூவன் நகரில் இருக்கும்போது நிறைய எழுதினேன். ஆனால் இப்போது இங்கே தீனன் நகரம் வந்த பிறகு அந்த அளவுக்கு எழுத முடிவதில்லை.” என்று கூறினேன். அதற்கு அவள், “அப்போதெல்லாம் நீ அடிக்கடி பேருந்திலும், இரயிலும் பயணிப்பாய். சுற்றி நடப்பதை அவதானித்து, மாலை வீட்டுக்கு வந்ததும் சொல்வதற்கு விஷயங்கள் உன்னிடம் ஏராளம் இருக்கும். இப்போதெல்லாம் தனியாகக் காரில் செல்கிறாய். காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.” என்றாள். அவள் கூறியதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. என்னுடைய சக பயணிகளை நான் அவதானித்ததை வைத்து நான் எழுதிய சிறுகதைகளே நான்கைந்து தேறும். மாறாக காரில் செல்லும்போது நிஜ உலகத்திடமிருந்து தொடர்பு அறுந்துவிட்டதைப்போல உணர்ந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் பலவித வாகனங்களையும் சிவப்பு விளக்குகளையும் தவிர வேறெதையும் பார்க்கமுடிவதில்லை. அதிலென்ன சுவாரசியம் இருக்கிறது.  இரத்தமும் சதையுமாக நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் நிஜ மனிதர்களின் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு உலகில் சஞ்சாரம் செய்து அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதும் அதைப் போன்றதே. எப்படி இணையத்தில் வாசிப்பது ஒரு  சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதற்கு ஈடாகாதோ, அதுபோலவே, சமூக வலைத்தளங்களில் லைக் இட்டுவிட்டு உரையாடிக்கொண்டிருப்பது என்பது, ஒரு நண்பனுடன் காலாற நடந்துச் சென்று தெருமுனையில் தேநீர் பருகிக்கொண்டே உரையாடுவது போலாகாது.

    அதெல்லாம் சரி, இந்தப் பதிவுக்கும் “போதிதர்மரும் தங்கமீன்களும்” என்கிற தலைப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதுதானே? விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு டாக்டர் எரிக் தோபோலுடைய “The Creative Destruction of MEDICINE” என்கிற புத்தகத்தை வாசித்தேன். அதில் எரிக், தொன்னூறுகளில் 12 நொடிகளாக இருந்த  மனிதனுடைய “கவன நீட்டம்” தற்போது 8 நொடிகளுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தங்கமீன்களின் கவன நீட்டமான 9 நொடிகளைவிடவும் குறைவு என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இந்த ஆராய்ச்சியே தவறு என்றுகூட ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது எனக்கு பௌத்தத் துறவியான போதிதர்மர் நினைவுக்கு வந்தார். மீன்தொட்டியில் இருக்கும் தங்கமீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுமளவுக்கு, தியானநிலையில் இருக்கும் போதிதர்மரைப் போன்று முண்டைக்கண்கள் எதையோ உற்று நோக்கிக்கொண்டு அசைவற்றுக் கிடக்குமவை. மீன்தொட்டியைச் சற்று லேசாகத் தட்டினால் போதும், அந்தக் கணமே திடுக்கிட்டு, வெடுக்கென்று திரும்பி சடுதியில் ஓடி ஒளிந்துகொள்ளும். அதற்கு மாறாக, குகைச்சுவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போதிதர்மரைக் கயிற்றால் கட்டி இழுத்தாலும் மனிதர் அசரவில்லையாம். அது ஒரு “DEEP WORK” நிலை. சமூக வலைத்தளம் ஒரு மீன்தொட்டி போன்றதே. அதில் முண்டைக்கண் துருத்திக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன நம்முடைய மனங்கள். தொட்டியை டொக்கென்றும், டக்கென்றும் தட்டி கவனத்தைத் திசைதிருப்புவதற்கென்று ஒரு கூட்டமே அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களின் தட்டல்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று, எதிர்ச்செயலாய் திடுக்கென்றும், வெடுக்கென்றும், நடுக்கத்துடன் இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன தங்கமீன்களாய் நம் மனங்கள்.

    Share
  • ஞாநி

    மாதவன் இளங்கோ

    ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.

    நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.

    அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.
    நிறைகுடங்கள் அவர்கள்.
    அவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

     இவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. இலக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.

     அவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில்  ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

    ‘பெகெய்னாஃப்’ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.

    எங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவிட்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)’ என்கிற குசுவிசைக்கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

    இப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.  இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).

     

     அறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.

    ஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

     

    “ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.

     

    அவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.

    இன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும்,  இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” என்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.

     

    // பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார்//

    என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்டுக்கொண்டே “என்ன? என்ன?” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.
    I’ll miss you, Gnani.
     இப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய  கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.

    Share
  • கடைசி கடிதம்..

    With Vesa0

    இன்று காலை கண் விழித்தவுடன் வழக்கம் போல் கைபேசியை எடுத்து, ஜிமெயில் பெட்டியை திறந்து பார்த்தேன். மின்னஞ்சல் பட்டியலில் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களிடமிருந்து வந்திருந்த கடிதம் தான் முதலில் கண்ணில்  பட்டது. ‘அன்புள்ள மாதவன், ஒரு துயரச் செய்தி. விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட்..’ என்ற வரியைக் கண்டவுடன் ‘அந்தச் செய்தியாக’ நிச்சயம் இருக்கக்கூடாது என்கிற பரபரப்புடன் அதைத் தட்டினேன். அதே செய்தி தான்! ‘..வெங்கட் சாமிநாதன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்’.

    இன்று சரஸ்வதி பூஜை என்பதால் என் மனைவி அதிகாலை நாலரை மணிக்கே எழுந்து, அப்போதுதான் பூஜையை ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு செய்தியை சொல்லக் கூட தோன்றவில்லை. அங்கே அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில் ‘அம்மாவின் தேன்குழல்’  புத்தகம் மட்டும்  கண்ணில் பட்டு, மீண்டும் படுக்கையறைக்குச் சென்று மெத்தையின் மீது அமைதியாக அமர்ந்து விட்டேன்.
    ‘அம்மாவின் தேன்குழல்’ – என்னையும் வெ.சா அவர்களையும் இணைத்து வைத்த சிறுகதை.

    பெல்ஜியத்திற்கு வந்த பிறகு உண்டான வெறுமையை நிரப்புவதற்கு எழுத ஆரம்பித்து, எழுதியதை என் நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து வந்தேன். ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை வாசித்த என்னுடையநண்பர் ஒருவர் வல்லமை மின்னிதழில் நடந்து வரும் சிறுகதைப் போட்டி பற்றி தெரிவித்து, வல்லமைக்கு சிறுகதையை அனுப்புமாறு தெரிவித்தார். வல்லமை தளத்தில் சிறுகதைப் போட்டியின் நடுவர் வெங்கட் சாமிநாதன் என்று அறிவித்திருப்பதை பார்த்தவுடன், ‘விமர்சகர் வெ.சா நடுவரா? எவ்வளவு பெரிய ஆளுமை? ஆளை விடுங்கள்.’ என்று கூறிவிட்டேன். பிறகு, நண்பரின் வற்புறுத்தலின் பேரிலேயே என்னுடைய சிறுகதையை அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்தேனே தவிர எந்தவித  எதிர்பார்ப்பும் என்னிடம் இருக்கவில்லை. வெ.சா என் படைப்பை வாசிக்கப் போகிறார் என்பதே எனக்குப்  போதுமானதாக இருந்தது. நான் சற்றும்  எதிர்பார்க்காத வண்ணம் என்னுடைய சிறுகதையை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார் வெ.சா.

    “மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளில். நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.”

    அவருடைய இந்த வரிகள் என்னளவில் எனக்கு ஒரு பெரிய விருது. இந்தக் கதையின் மூலம் இணைந்தது ப்ரசல்சும் மயிலாப்பூரும் மட்டுமல்ல; நானும் அவரும் கூட. அதன் பிறகு மாதமாதம் என்னுடைய சிறுகதைகளை அனுப்பி  வைத்தேன். அடுத்தடுத்த மாதங்களில் என்னுடைய வேறுசில சிறுகதைகளையும் தேர்வு செய்து விமர்சித்திருந்தார்.  ஒரு முறை “வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.” என்று தலையில் குட்டவும் செய்தார்.  இருந்தாலும் போட்டியில் பங்குபெற்ற நாங்கள் விடாமல் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தது அவருக்கு நிச்சயம் ஆச்சர்யம் அளித்திருக்கக் கூடும்.

    “ஏதும் critical ஆகச் சொன்னால் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கிக் கொள்வதில்லை என்பது என் 50 வருட அனுபவம். அதற்கு முன்னர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் ஒரு critical comment-ஐ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  நியாயம் தான். அவர்கள் எல்லாம் கற்புக்கரசிகள் அல்லவா?. ஒரு தவற்றைக் கூட தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு தடவையானால் என்ன, புனிதம் கெட்டது கெட்டது தானே என்ற ஜ்வாலையில் வாழ்பவர்கள். நல்ல வேளையாக இங்கு அந்த மாதிரி எனக்கு ஏதும் உத்பாதங்கள் இது வரை எனக்கு நேரவில்லை.” என்றுவேறொரு தருணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் பிறகு திண்ணை, சொல்வனம் போன்ற இதழ்களில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளில் என்னைப் பற்றியும்  குறிப்பிட்டிருந்தார். நான் கடைஞன். இதை எல்லாம் அவர் செய்ய வேண்டிய தேவையே அவருக்கு இல்லை. ஆனால்அவரைப் போன்ற ஜாம்பவான்களின் நியூரான்களில் இடம் பிடிக்கும் அளவிற்காவது  என் படைப்புகள் இருப்பது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்தது. அதன் பிறகு நான் எதை எழுதினாலும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதையெல்லாம் வாசிப்பதற்கு அவருக்கு அதீத பொறுமை இருந்திருக்க வேண்டும். அவ்வப்போது தொலைபேசி மூலமாகவும் தொடர்பிலிருந்தேன்.

    கடந்த டிசம்பர் மாதம் விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பியவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

    “கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது.”

    இப்படிச் சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.

    ‘My dear Madhavan Elango,’ என்று ஆரம்பித்து, ‘எங்கிருக்கிறாய், பெல்ஜியத்திற்குத் திரும்பிவிட்டாயா?’ என்று வினவிவிட்டு,’Kanayazhi of Feb carries an article on your short story collection…………’ என்று எழுதியிருந்தார்.

    கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று கணையாழி பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தபோது, வேறொருவர் என் கதைகளைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையைப் பற்றி எனக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், கட்டுரையின் தலைப்பையும், அதற்குக் கீழ் அவருடைய பெயரையும் பார்த்தவுடன் எனக்கு ‘இனிய அதிர்ச்சி’! சிறிது நேரம் கழித்தே வாசிக்க ஆரம்பித்தேன். “இப்போது பெல்ஜியத்திலிருந்து… ஒரு மாதவன் இளங்கோ” என்கிற தலைப்பில் ‘அம்மாவின் தேன்குழல்’ நூலை அறிமுகப்படுத்தி ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் புத்தக முன்னுரையில் நான் எழுதியிருந்த என் அனுபவக் குறிப்பு ஒன்றைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருந்தார்.

    With Vesa12

    கடந்த டிசம்பர் மாதம் சென்னையில், ஒரு மழை நாளில் மாலைப்போழ்தில் அவரைச் சந்தித்த தருணம் மறக்கவியலாது. எழுத்தாளர் திலீப்குமாரும் அப்போது உடனிருந்தார். நானும் என் மனைவியும் சென்ற பத்து நிமிடங்களில்,  வெ.சா அங்கு வந்து சேர்ந்தார். மிகவும் சிரமப்பட்டுத்தான் நடந்து வந்தார். அவர் மெதுவாக நடந்து வருவதை பார்க்கும்போதுஅவருக்கு இருந்த மூட்டுவலியை உணர முடிந்தது. அதே சமயம், அதைக் கொஞ்சமும்  காட்டிக்கொள்ளாத புன்னகை சூடிய முகத்தின் மூலம், அவருடைய மனோவலிமையையும் உணர முடிந்தது. ‘தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல்’, ‘கலை இலக்கிய விமர்சகர்’, ‘எழுத்தாளர்’ என்று தான் ஏந்தியிருக்கும் அத்தனையத்தனை அடையாளங்களையும் உதறிவிட்டு, எனக்கும், என் மனையாளுக்கும் ஒரு நண்பனாகவும், ஒரு தாத்தாவாகவும் மட்டுமே தன்னைக் காட்டிக்கொண்டார். அத்தனை எளிமை. அத்தனை கனிவு. அவரிடம் என்னென்னவோ ‘இலக்கியத்தனமான விஷயங்கள்??!!’ எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதுவுமே பேசத் தோன்றவில்லை. அதுவும் கூட எனக்குப் பிடித்திருந்தது. வாசகனாக எழுத்தாளனை சந்திக்கச் சென்றவன், மாணவனாக ஆசிரியரை சந்திக்கச் சென்றவன், வெறும் பேரனாகவே திரும்பினேன்.

    என் மனைவியோடு அவரைப் பார்க்கச் சென்றிருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘குழந்தையை ஏன் அழைத்து வரவில்லை?’ என்று கேட்டார்.  என் மனைவி கூட, “இலக்கியவாதிகளைச் சந்தித்து விட்டு வந்தது போலவே தெரியவில்லை. நெருங்கிய உறவினர்களுடன், தந்தையுடன், தாத்தாவுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியோடு பேசிவிட்டு வந்தது போலிருக்கிறது” என்று கூறினாள். நானும் அவ்வாறே உணர்ந்தேன். உண்மையில் அவரை முதன்முறை சந்திப்பது போலவே தெரியவில்லை. அது ஒன்றும் விந்தையில்லை. ஏனெனில் அவரை வாசிக்கும்போது அவருடன் வாழ்ந்துகொண்டே, அந்த இடங்களுக்கெல்லாம் பயணித்தது போன்று, அந்த மனிதர்களைச் சந்திப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் – ‘சி.சு.செல்லப்பா ஒரு வாமன அவதாரம்’ கட்டுரைத் தொகுப்பு. ‘அவர் செல்லப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நுழையும் போது, செல்லப்பா அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மூட்டைக் கட்டிக்கொண்டிருந்ததாக’ ஒரு இடம் வரும். உண்மையில் அந்தக் காட்சி என்னுள் உறைந்து போயிருக்கிறது. அவர்கள் இருவரோடும் மூன்றாவது ஆளாக, ஒரு சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்ததற்கு முந்தைய நாள் வரை, அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவருடைய கருப்பு வெள்ளை உருவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் அப்படியில்லை. என் தாத்தாவே நினைவுக்கு வருகிறார். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ புத்தகத்தை வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு வாசகனுக்கு அதன் நடுப்பக்கத்தில் கட்டுரை வரைந்து ஊக்கப்படுத்தியவர் அவர்.

    “…எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே…” என்று புத்தக முன்னுரையிலேயே அவர் அம்மாவின் தேன்குழலையும், அமைதியின் சத்தத்தையும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்தது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

    இதையெல்லாம் அவர் செய்தது, அவர் என் மீது கொண்ட அன்பினாலும், நான் தொடர்ந்து எழுதுவதற்காக, எனக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டே என்பதை நான் அறிவேன்.

    பேரன்களுக்கும் தாத்தாக்களுக்கும் இடையான உறவு இருக்கிறதே, அது ஒரு அற்புதமான உறவு.  தம் பிள்ளைகளை  கண்டிப்பாக வளர்த்தவர்கள் கூட, தங்கள் பேரன் பேத்திகள் மீது மறந்தும் கூட கடிந்து கொள்ள விழைவதில்லை. காலம் அவர்கள் மென்மையானவர்களாக்கி விடுகிறதோ என்று  தோன்றுகிறது. பேரன் பேத்திகளும் கூட தங்கள் பெற்றோர்களை விட, தாத்தாக்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அந்த உறவு நீண்டகாலம் நீடிப்பதில்லை. நானும் அவரிடம் அத்தகைய பேரனாகவே பழகி இருக்கிறேன். தொலைபேசியில் அழைத்தால் கூட அவரைப் பேசவிட்டதில்லை. ‘ப்ளெமிஷ், டச்சு எல்லாம் ஒன்றே தான். வெவ்வேறு மொழிகளில்லை.’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ‘அத்தனை பெரிய படிப்பாளி. அவருக்கு அது தெரியாதா? எதற்கு எனக்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்!’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டு.

    என் தந்தைவழி, தாய்வழி தாத்தாக்களைப் பறிகொடுத்த பின்னர், எனக்குக் கிடைத்த அன்பான தாத்தா இவர். இன்று அவரையும் பறிகொடுத்து நிற்கிறேன்.

    கடந்த ஜூன் மாதம் அவர் பிறந்த நாளன்று காலை அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே ‘Thank you dear! ‘ என்று பதில் அனுப்பி இருந்தார். அன்று மாலை, மீண்டும் என் மகன் வடிவமைத்த வாழ்த்து அட்டையை, அவனுடைய புகைப்படத்துடன் அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதை பார்க்கவே இல்லை போலிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தி அன்று அவரிடமிருந்து ஒரு நீண்ட கடிதம். வழக்கம் போல் ஆங்கிலத்தில் தான்  எழுதியிருந்தார். “காந்தி ஜெயந்தி அன்று எனக்கு வாழ்த்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. குழந்தையுடைய புகைப்படத்துடனான வாழ்த்து அட்டை அருமை.” என்று கூறியவர், அவருடைய மூட்டுவலியைப் பற்றியும், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு, உடனே நான் அதை நினைத்து வருந்தக்கூடாது என்று, ‘சரி அதை விடு ஆர்த்ரிடிஸ் பத்து வருடமாக என்னுடைய நண்பன்’ என்று எழுதியிருந்தார்.

    DSC_0253

    கடந்த பத்து மாதங்களாக ஒரு வரி கூட எழுதவில்லை. அது எனக்கு பெரியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவருடைய இந்தக் கடிதத்துக்கு, ‘நான் டிசம்பர் மாதம் இந்தியா வருவேன். நிச்சயம் சந்திக்கலாம். Take Care.’ என்று எழுதிய வரியை அனுப்பாமலே  விட்டிருக்கிறேன். அதுதான் இப்போது என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது.

    ஒருமுறை அவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தேன்:

    “இந்தக் கடிதத்தை ஒரு சடங்காக நிச்சயம் நான் எழுதவில்லை. உண்மையில் இதற்கு மேல் நான் எழுதும் நல்ல படைப்புகள் மூலமாகவே நான் உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். என்னுடைய சமீபத்திய ஆக்கமான ‘முடி’, சொல்வனம் பெண்கள் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது. ‘முடி’ – உங்களுக்கு நான் செலுத்தும் ஒரு நன்றிச்செண்டு!”. 

    தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல், மூத்த கலை இல க்கிய  விமர்சகர், மூத்த எழுத்தாளர்  என்பதெல்லாம் மற்றவர்களுக்கே. எனக்கு அவர் தாத்தா மட்டுமே. முடி மட்டுமல்ல, இதற்கு மேல் நான் எழுதும் எல்லா வரிகளுமே நான் அவருக்குச் செலுத்தும் நன்றிச்செண்டு!

    மேற்கண்ட வரிகளோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை அவரது கடைசிக் கடிதத்தை வாசித்தேன். அதில் திடீரென ஒரு வரி வேறுவிதமான அர்த்தத்தைக் காட்டி, சுருக்கென்று என் மனதைத்  தைக்கிறது.  

    “Wish we were in accessible proximity, but that is not to be.” 

    With Vesa11 

    Share
  • முடி

    ன்னும் சில நாட்களில் மொத்தமாய்க் கொட்டித் தீர்ந்துவிடும்.

    ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள்.

    சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது. இன்னொரு மாடல் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு அவனுடைய துணிகளனைத்தையும் எடைக்கு போடுவது போன்ற ஒரு விளம்பரம். நான் எடைக்கு துணிகளை எடுக்கும் ஆசாமியாக லுங்கி கட்டிக்கொண்டு, பனியன் அணிந்து, தராசை தூக்கிப்பிடித்தபடி, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அந்தப் படத்தில் என் தலைமுடியின் நீளத்தையும், அடர்த்தியையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

    இப்போது அதே விளம்பரத்தை மீண்டும் எடுத்தால் நிச்சயம் என்னைக் கூப்பிட மாட்டார்கள். ஜடை போட்டுப் பின்னும் அளவுக்கு அடர்ந்த முடி குடிகொண்டிருந்த இந்த முன்னாள் மாடலின் பின்மண்டை இப்போது மின்னிக் கொண்டிருக்கிறது – பிளாஷ் பிரச்சினைகள் வரும் அளவிற்கு.

    அவ்வளவு தூரம் எதற்குப் போக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு வந்த போது கூட தலையில் முடி பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் என் தங்கை எடுத்த புகைப்படமே அதற்கு சாட்சி. என்னை விட்டு இத்தனை வேகமாக என் தலைமுடி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

    கவலை அதிகம் இருந்தால் முடி கொட்டும் என்கிறார்கள். கடன் அதிகம் இருந்தாலும் கொட்டும். ஏழரை வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீட்டுக்கடனை இப்போதுதான் கட்டி முடித்தேன். சென்னையில் இருந்த போது, வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் மாத தவணை கட்டுவதற்கே சரியாக இருந்தது. நான்கு வருடங்கள் செவ்வனே கட்டிவந்தும் அசல் மாறாமல் அப்படியே அய்யனார் சிலைபோல் இளித்தபடி அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டபோதுதான் முடி கொட்ட ஆரம்பித்திருக்க வேண்டும்.

    சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உணவுக்கா பஞ்சம் இந்த தேசத்தில்? நமக்குத்தான் எதையும் செய்யத் தெரிவதில்லை. சாம்பார் செய்ய நினைத்தால் ரசமாகிறது. வெஜிடபிள் பிரியாணி செய்ய நினைத்தால் தக்காளி சாதமாகிப் போய்த்தொலைகிறது. சமைப்பது கூட கடினமில்லை. ஆனால் அதற்குப் பிறகு வரும் பாத்திரங்களைக் கழுவும் படலத்தை நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் தயிர் சாதத்துடனும், ரொட்டியுடனும் ஓடுகிறது வண்டி. அவ்வப்போது ரெடிமிக்ஸ், ஃபுரோசன் ஃபுட் எடுத்துக்கொள்வதும் உண்டு.

    உள்ளூர் இந்தியக் குடும்பஸ்தர்கள், அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விருந்துக்கு அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளையெல்லாம் மறுப்பதே கிடையாது. அந்த நாட்களில் மட்டும்தான் நல்ல சாப்பாடே! ஓட்டலுக்கும் போக முடியாது. அதுவும் நான் வசிக்கும் லூவன் நகரின் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஹிமாலயன் ரெஸ்டாரண்டில் தினந்தோறும் சாப்பிடவேண்டும் என்றால் இன்னொரு முறை வங்கியில் கடன் வாங்கி, வட்டி கட்ட வேண்டியது தான்..

    பெல்ஜிய நாட்டில் தண்ணீரின் கடினத்தன்மை அதிகம் என்கிறார்கள். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை நாட்களாக எனக்குத்தான் அது தெரியாமல் போயிருக்கிறது. இப்போது தண்ணீர் வரும் இடங்களில் எல்லாம் பில்ட்டர் மாட்டி வைத்திருக்கிறேன். கடினத்தன்மை கொண்ட தண்ணீரில் குளிப்பதற்கென்றே சிறப்பு ஷாம்பு ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சரி. திருமணம் என்கிற ஒன்று நடக்கும் வரையிலாவது இருப்பதைக் காப்பற்றிக்கொள்வது நல்லது.

    எனக்கென்னவோ இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணமாகப்படுவது – ‘பார்ட் போலன்’ என்னும் ஆசாமி தான்! பார்ட் என்னுடைய மேலதிகாரி. அவர் ஒரு தொட்டால் விரிஞ்சிக் கண்ணன். தொட்டதற்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து கண்கள் விரிந்து, கன்னம் சிவந்து, வாய் கூப்பாடு போட ஆரம்பித்துவிடும். என் வாழ்நாளில் இத்தனை பதற்றம் நிறைந்த மனிதனை நான் பார்த்ததில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் இந்த மனிதரின் பதற்றம் அவரோடு இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அது என் தலைமுடி வரை அல்லவா நீண்டிருக்கிறது. என் சொட்டைக்கு நிச்சயம் இந்த மனிதர் தான் பிரதான காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அவரது முன்னுரிமைகள் என்னை முழி பிதுங்க வைக்கும். ‘பிரசல்சு நகரில் உள்ள அலுவலகத்தில் சில பிரச்சினைகள். நீ உடனே அங்கு செல்லவேண்டும். அவர்களோடு அமர்ந்து இந்த வார இறுதிக்குள் பிரச்சினைகள் தீர்த்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்த இரண்டு நாட்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும். ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் இஷ்டம் போலெல்லாம் நடந்துகொண்டால், அப்புறம் நான் எதற்கு?’ என்று கத்துவார்.

    வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிவாக்கில் அழைத்து, ‘இது அதிமுக்கியமான வேலை. திங்கள்கிழமை காலைக்குள் முடித்துவிடு!’ என்பார். வேறு வழியே இல்லாமல் வார இறுதி முழுவதும் அமர்ந்து வேலை செய்யவேண்டும். இது போன்ற செயல்களை, இந்தியாவில் தங்கள் பெயரைத் தாங்களே சுருக்கி வைத்துக்கொள்ளும் ஐ.டி பிராஜக்ட் மானேஜர்களான என்.கே-கள், விஷி-கள், ராண்டி-கள் செய்து பார்த்திருக்கிறேன். வெள்ளிகிழமையானால் மூன்று மணிக்கே கிளம்பி விடும் சுதந்திர விரும்பிகளான ஐரோப்பியர்களில் இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

    என்றைக்காவது ஒருநாள் சற்று முன்னதாக கிளம்பினால் போதும். நான் பையைத் தூக்கிக்கொண்டு நடந்து போவதை ஓரக்கண்ணால் பார்ப்பார். சில சமயங்களில், ‘ஏன் அடிக்கடி சீக்கிரம் கிளம்பிவிடுகிறாய்?’ என்பார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதுபோல் சென்றிருப்பேன். அவருடைய போலி அழுத்தங்களின் காரணமாக இரவு வரை நான் வேலை பார்த்த நாட்களும், அவர் கொன்றழித்த என் வார இறுதிகளும் எப்போதுமே அவர் நினைவில் தங்குவதில்லை. அவருக்கென்ன? அவர் மட்டும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் யாருக்கும் சொல்லாமல் சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார். நமக்குத்தான் சிரமம்.

    ‘இவர் ஒரு ரேசிஸ்டா?’, ‘நான் ஒரு இந்தியன் என்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரா?’ என்றால் அதுவும் இல்லை. எங்கள் அணியில் இருக்கும் யோஹான் டி வொல்ஃப்-பிற்கும் இதே நிலைமைதான். அலுவலக நேரத்தில் அடிக்கடிப் புகைப்பிடிக்க வெளியே செல்கிறான் என்று அவனுடைய லைட்டரை ஒருமுறை பிடுங்கி வைத்துக்கொண்டார். யோஹான் இந்த மனிதரின் செயல்களை எந்த நிலையிலும் மதித்தாகவே தெரியவில்லை. அவன் வேறொரு லைட்டரை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் வெள்ளிகிழமை மாலை வேலைகளை ஒதுக்குவார். அவன் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘டாட் வோல்கன்ட வீக்’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவான். திங்கள்கிழமை எப்படி இருந்தாலும் கத்துவார். குதிப்பார். அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இருந்ததில்லை. ஆனால், அதை அவன் வேறுவிதமாகவும் சமாளித்தான். வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் அமர்ந்திருக்கும் லூவன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். கென்டு நகரில் இருக்கும் எங்களின் கிளை அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.

    எங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிலும், ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அலுவலகத்திலும் வேலைப் பார்க்கலாம் என்கிற சலுகை இருந்தது. இந்தச் சலுகைகளையெல்லாம் நான் அவ்வளவாக அனுபவித்ததே இல்லை. பார்ட் என்னை அனுபவிக்கவிட்டதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் உண்மையான காரணம் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நாளொன்றுக்கு இருபது யூரோ ஃபுட் அலவன்ஸ் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் பார்ட்டின் மேல் வெறுமனே பழிசுமத்த எனக்கு விருப்பமில்லை.

    யோஹான் திங்களன்று வீட்டிலிருந்தும், வெள்ளியன்று கென்டிலிருந்தும் ‘வேலை செய்வான்’. ‘வீட்டிலும், கென்டிலும் இருப்பான்’ என்று தான் சொல்லவேண்டும். புதன்கிழமை எங்கிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. புதன்கிழமைகளில் என்ன காரணத்தினாலோ பார்ட் வேலைக்கு வருவதில்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார். மீதம் ஒருநாள் அவருடைய சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரோ என்னவோ? இங்குள்ள பெரும்பாலானோர் அவர்களுடைய சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

    பெல்ஜியத்தில் பள்ளிகூடங்கள் புதன்கிழமை அன்று அரைநாள் மட்டுமே இயங்குகின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவதற்காக வேண்டி, பெண்கள் பெரும்பாலும் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் அல்லது அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தைக் காப்பகங்களுக்கு பெருஞ்செலவு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பார்ட் வராமல் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    எவரையும் விட்டுவைத்ததில்லை இந்த மனிதர். ஆறுமாதங்களுக்கு முன்பு டெய்சி நெவென் என்கிற அழகிய இளம் பெண் எங்கள் அணியில் சேர்ந்தாள். ஏனோ யோஹான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அமோரியை அவளுக்கு பட்டியாக நியமித்து இருந்தார் பார்ட். அவளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காபி அருந்துவதலிருந்து, உணவு வரை அத்தனை நேரமும் அவளுடனேயே இருந்தான் அமோரி. அவனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனுக்கு முடி நீளம். தன்னுடைய குதிரைவால் முடியால் என்னுடைய பொறாமையை மட்டும் சம்பாதித்து வைத்திருந்தவன், நான் புறமுதுகு காட்டியபடி நின்றுகொண்டிருந்த போட்டோவை என்னைக் கேட்காமலேயே பேஸ்புக்கில் போட்ட நாளில் இருந்து என் ஜன்ம எதிரியாகி விட்டான்.

    டெய்சியால் பார்ட்டின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவருடன் கைபேசியில் பேசிமுடித்துவிட்டு, ‘ஹீ ஈஸ் எ மேல் சாவினிஸ்ட்!’ என்று கத்திவிட்டு தடாலென கைபேசியை மேஜை மீது வீசி எறிந்தாள். சாவினிஸ்ட் என்பதை விடுங்கள். இவரைப் பார்த்து ஒரு சாடிஸ்ட் என்று கூட சொல்லமுடியாது. சாடிஸ்டுகள் பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவர்கள். இந்த மனிதர் சந்தோஷப்பட்டே நான் பார்த்ததில்லையே. வரையறுக்கவே முடியாத ஒரு பிறவி. டெய்சிக்கு சாவினிஸ்ட், அமோரிக்கு சாடிஸ்ட் என்று இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை இஸ்டுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

    கடைசியில் டெய்சி, காரல் வாண்டர்கோட்டனிடமே முறையீடு செய்துவிட்டாள். காரல் எங்கள் டைரக்டர். அவரோ அவள் விரும்பியபடியே அவளை மட்டும் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றினாரே தவிர, பார்ட்டின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவருடைய எல்லா ப்ராஜக்டுகளும் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதனால் இருக்கலாம். எல்லாவற்றையும் என் தலையில் தாங்கிக் கொட்டவைத்துக் கொண்டிருக்கிறேனே! என் எதிரி அமோரியே என்னை பார்ட்டின் ‘ரெக்டராண்ட்’ என்று கூறுவான். டச்சு மொழியில் ‘வலதுகை’. இப்படியும் கூறிவிட்டு, ‘நல்ல வேலை இடதுகை இல்லை. இந்தியாவில் இடதுகையை வேறு சில விஷயங்களுக்கு உபயோகிப்பார்கள்’ என்று சொல்லிச் சிரித்து வெறுப்பேற்றுவான். காரலுக்கு நான் செய்துகொண்டிருப்பவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பார்ட் சொன்னாரோ இல்லையோ. நேரடியாகவே பாராட்டத் தெரியாத மனிதர், காரலிடம் பெரிதாக அப்படி என்ன சொல்லியிருக்கப் போகிறார். கண்டிப்பாக என்னுடைய உழைப்பைக் காட்டி இவர் நல்ல பெயர் வாங்கியிருப்பார்.

    இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இத்தகைய சர்வாதிகார மனப்போக்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?

    இவருக்கு அடுத்து எனக்கு அதிக மன உளைச்சலைத் தருவது, எங்கள் அலுவலகத்திலேயே எனக்கு அறவே பிடிக்காத இந்த எலிவேட்டர். ஆனால் என்ன செய்வது, ஆறாவது தளத்தில் இருக்கும் என்னுடைய இருக்கைக்கு அதில் தானே சென்று வரவேண்டியிருக்கிறது. அந்தப் பாழாய்ப்போன எலிவேட்டரின் உள்ளே மூன்று புறங்களிலும் கண்ணாடிகள் இருக்கும். மூன்று கண்ணாடிகளிலும் முன்னூறு சொட்டைகள் தெரியும் போது மனதில் தோன்றுவதை விவரிக்க முடியாது. அங்கேயே அமர்ந்து அழுதுவிடலாம் போல் இருக்கும். இதனாலேயே எலிவேட்டரில் ஏறியவுடன் கதவைப் பார்த்தபடி நின்றுகொள்வேன்.

    முழுச்சொட்டையுடையோரைப் பார்க்கும் போதெல்லாம், இவர்களுக்கு நம் நிலைமை பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டாலும், முன்னூறு சொட்டைகள் காட்டும் இந்த லிப்டும், எரிச்சலூட்டும் முகபாவங்கள் காட்டும் இந்த பார்டும், குதிரைவால் கொண்டையான் அமோரியும் என் முடி கொட்டுவதை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    நான் வேறு தளத்திற்குச் சென்று விடவேண்டும் அல்லது வேறு அலுவலகத்துக்குச் சென்று விட வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு பார்டை விட்டு வேறு பிராஜக்டிற்கோ, வேறு டிபார்ட்மென்டிற்கோ சென்றுவிட வேண்டும் என்று தோன்றவில்லை. நான் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு தற்காலிக ஒப்பந்த பணியாளனாகத்தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பார்ட் தான் எனக்கு நிரந்தரப் பணியிடம் பெற்றுத் தந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிறுவனத்தில், ஒரு இந்தியனுக்கு வேலை பெற்றுத் தருவதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. என்னதான் கடுமையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தாலும், வெளிநாட்டான் வெளிநாட்டான் தான். அவனுக்கு என்று சில எழுதப்படாத வரம்புகள் இருக்கின்றன. அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கூட இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் செனோஃபோபியாவையும், இவர்கள் காட்டும் சட்டில் ரேசிசத்தையும் சகித்துக் கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

    அனைத்திற்கும் மேலாக, மொழிப்பிரச்சினை. வேறு அணிக்கு மாறிச் சென்றால் ஆங்கிலத்தை மட்டும் கட்டிக்கொண்டு பிழைக்க முடியாது. மொழியறியாதவன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லாமல், பாவம் பார்க்காமல் டச்சு மொழியில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆங்கிலத்தைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட இது என்ன தமிழகமா?

    என் மன உளைச்சலுக்கான முதல் காரணகர்த்தாவாக எனக்கு பார்ட் தென்பட்டாலும், மேலே கூறிய இந்த இரண்டு விஷயங்களில், பார்ட் தனித்தே நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால் எல்லா விஷயத்திலும் இந்த மனிதர்களைக் காட்டிலும் அவர் முரண்பட்டவராகவே தெரிகிறார்.

    முடி உதிர்ந்தது உதிர்ந்தது தான். திருமணம் ஆகி இருந்தால் இவ்வளவு கவலைப்படமாட்டேன். சத்தியமூர்த்தி மாமா தான் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதற்காகவே இந்தியாவிற்கு வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் அவர் சொல்வது – ‘இவனுக்கு முழுக்க முடி கொட்றதுக்குள்ள ஒரு பொண்ண பாத்து முடிக்கணும். எனக்கே இந்த வயசிலே இவ்ளோ முடி இருக்கு. இவனுக்கு ஏன் இப்படி?’

    அவர் மட்டுமா? நான்கு வருடங்கள் கழித்து தற்செயலாக என்னை பார்த்த நண்பரொருவர், ‘என்ன பயங்கரமா மாறிட்டீங்க?’ என்று கேட்டார்.

    சொட்டை! எவ்வளவு பயங்கரமான ஒரு வார்த்தை!

    என் கல்லூரி நண்பர்கள் அதற்கு மேல் சென்று, ‘என்ன மச்சான் மாடி காலியாகிட்டே வருது!’ என்பார்கள். தோற்றத்தை வைத்து பகடி செய்வதில் நம் மக்களை யாரும் விஞ்சிவிட முடியாது. இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அலோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, பலவித எண்ணைகள், அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எர்வாமாட்டின் என்று அத்தனையும் முயன்றாகி விட்டது. அவ்வப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்ஃபி-கள் எடுத்தது தான் மிச்சம்.

    சமீபத்தில் கூட கபோக்கி என்கிற அமெரிக்க ப்ராடக்ட் ஒன்றைப் பற்றி இணையத்தில் பார்த்தேன். இலவச சாம்பிளுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். சிப்லா கூட டுகெயின் என்கிற ஜெல்லைத் தயாரித்திருக்கிறது. தடவிய ஆறுமாதங்களில் முடி வளர்ந்து விடுகிறதாம். டாக்டர் ரெட்டி லேப்சின் மின்டாப்பை பற்றி அங்கு வேலைபார்க்கும் நண்பன் மிலிந்தனிடமே கேட்டுவிட்டேன். அவனோ, ‘மின்டாபும் வேண்டாம். டுகெயினும் வேண்டாம். இரண்டிலும் மினாக்சிடில் இருக்கிறது. அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டான். எதற்கு இந்த வேண்டாத வம்பு என்று விட்டுவிட்டேன்.

    இவற்றாலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்காலத்திற்குத் தயாராவது மட்டுமே சிறந்த வழி. எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விக் வாங்கலாமா என்றால் அதெல்லாம் ஊரறிந்த வித்தை. அதற்குச் சொட்டையே மேல். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பாலு மகேந்திராவைப் போல் எப்போதும் தொப்பி அணிந்துகொண்டிருப்பார். அது அவருக்கான பாணி. சொட்டை உள்ள சிலர் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அது போல் செய்யலாம். எனக்கென்னவோ சொட்டையை விட மொட்டை சற்று மேலானதாகத் தோன்றுகிறது. அது அவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய வார்த்தை இல்லை. பயங்கரமாயும் இல்லை. ‘மொட்டை, இங்க வா’ என்பதற்கும், ‘சொட்டை இங்க வா’ என்பதற்கும் நிச்சயம் கடலளவு வித்தியாசமிருக்கிறது. எனவே நிச்சயம் முன்மண்டையில் முடி முழுவதுமாகக் கொட்டிவிட்டால், நான் நிச்சயம் மொட்டை அடித்துக்கொள்வேன்.

    இருப்பினும் இப்போதெல்லாம் முடிக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் ஒழுங்காக எடுத்துக்கொள்கிறேன். வாரத்தில் ஒருமுறைதான் தலைக்குக் குளிக்கிறேன். அதுவும் தலைக்கு மட்டும் பாட்டில் வாட்டர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறேன். அலுவலகத்திலும் அதிகமாக வேலை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறேன். பார்ட்டின் வலதுகை என்கிற பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை.

    அன்றைக்கு வெள்ளிக்கிழமை. பத்தரை மணியாகியும் பார்ட் வரவில்லை. வழக்கமாக எட்டரை மணிக்கெல்லாம் வந்துவிடுபவர் ஆயிற்றே. குறுஞ்செய்தி அனுப்புவார். அதுவும் இல்லை.

    யோஹான் கைபேசியில் அழைத்தான். “மோஹான்’, என்று எப்போதும் போல் விளித்தான். அது மோஹான் இல்லை மோகன் என்று பலமுறை சொல்லியும் அவனுக்கு ஏறவில்லை. அவன் பெயர் யோஹான் என்பதால் அவன் பெயரில் இருக்கும் ‘J’-இற்கு பதிலாக ‘M’ இருப்பதால் அப்படி அழைக்கிறான்.

    ‘ஒரு வருத்தமான செய்தி!’ என்றான்.

    ‘ஏன் இன்றைக்கு பார்ட் கென்ட் அலுவலகம் வந்துவிட்டாரா?’ என்றேன் சிரித்துக்கொண்டே.

    ‘ஜோக்ஸ் அபார்ட், பார்ட்ஸ் வைப் பாஸ்ட் அவே’.

    ‘வாட்?’

    பார்ட்டின் மனைவி இறந்து விட்டார் என்றா கூறினான்? எப்படி இவனால் இதைக் கூட எந்தவித உணர்ச்சியுமின்றிக் கூற முடிகிறது. அவன் தொடர்ந்தான்.

    ‘ஆமாம். இப்போதுதான் காரல் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.’

    ‘என்ன காரணம்?’

    ‘தெரியவில்லை. நாளைக்கு இறுதிச் சடங்கு! காரல் இன்று மாலை பெரு நாட்டிற்குச் செல்வதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நீ அவருக்கு நெருங்கியவன் என்பதால், உன்னையும் கண்டிப்பாக போக முயற்சி செய்யச் சொன்னார்.’

    நான் எப்போது அவருக்கு நெருங்கியவன் ஆனேன்?..

    ‘நிச்சயம் வருகிறேன் யோஹான். ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா? ‘

    ‘என்ன காரணம் என்று தெரியவில்லை, மோஹான். காரல் ஏதோ அவசரமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாலை புறப்படுவதற்கு முன்பு அழைக்கிறேன் என்றார். ஆனால், அமோரி ஒருமுறை பார்டின் மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறான். நான் சரியாக கவனிக்கவில்லை. அவன் சைப்ரசில் இருந்து வந்துவிட்டானா என்று தெரியவில்லை. போன் செய்து பார்க்கவேண்டும். இறுதிச்சடங்கு நடக்குமிடத்தின் முகவரியை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.’ என்றான்.

    அதற்கு மேல் எனக்கு வேலையே ஓடவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? இந்த ஆசாமி வீட்டிலும் இதே போன்று நடந்து கொள்பவரோ? இப்படி இருந்தால் யாருக்குத்தான் உடன் வாழப் பிடிக்கும்? விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? இருக்காது. இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவார்களே. அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டார்கள். ஆக்சிடண்டாக இருக்குமா? ஆனால், அமோரி அவருடைய மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறானே? பிரச்சினை என்றால்? மனநலம் குன்றியவளா? இருக்காது. அமோரிக்கு பார்ட்டை சுத்தமாகப் பிடிக்காது. அவன் ஏதேனும் உளறியிருப்பான். சொல்ல முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இந்த யோஹான் சரியாக கேட்டிருக்கவேண்டும். ஜடம். இவர்கள் சக மனிதர்களின் சொந்த விஷயங்களில் மூக்கையும் நுழைக்க மாட்டார்கள்; அக்கறையும் கொள்ளமாட்டார்கள். அப்படியே ஓரிருவர் அக்கறை காட்டினாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்றும் முறைத்துக்கொள்வார்கள்.

    பார்ட்டை தொலைபேசியில் அழைக்கலாமா? அவர் எப்போதும் போல் எரிந்து விழுந்தால் என்ன செய்வது? நமக்கெதற்கு வம்பு! இதையெல்லாம் யோஹானைப் போலவே ஒதுங்கி நின்று பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்நேரம் அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பான். பார்ட் இருந்தால் போன் செய்துவிடுவார். இப்போது அவனுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவன் என்னமாதிரியான மனநிலையில் இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பார்ட் இன்னும் சில நாட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற எண்ணம் தோன்றியபோது என்னுடைய மனமும் லேசாக இன்புற்றது. உதடுகள் என்னை அறியாமல் விரிந்து புன்னகைத்த அடுத்த கணம், ‘என்ன மாதிரியான சாடிஸ்ட் நான்?’ என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்து என் வக்கிர எண்ணங்களை ஒடுக்கியது. மனம் உடனே துக்கமடைவதற்கான காரணங்களைத் தேடியது. அவரில்லாமல் இந்த வேலை கிடைத்திருக்குமா? கடனை அடைத்திருப்போமா? ஏதோ பாவம் கோபப்படுகிறார், திட்டுகிறாரே ஒழிய, முதுகுக்குப் பின்னே என்னைப் பற்றி யாரிடமாவது தவறாகப் பேசியிருக்கிறாரா? பதட்டக்காரர். ஏதோ ஒரு விஷயத்தில் இயலாமையோ அல்லது மனப்பிறழ்வோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாவற்றுக்கும் பதற்றம் கொள்கிறார். இப்போது பாவம் மனைவியை இழந்துவிட்டு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ?

    அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு ஹெயிஸ்ட்-ஆப்-டென்-பெர்க் சென்றேன். எவ்வளவு நீண்ட பெயர் இந்த நகருக்கு? மலை-மேலமைந்த-ஹெயிஸ்ட் நகரம். லூவன் நகரிலிருந்து நாற்பத்தைந்து நிமிட தூரம். பார்ட்டின் வீடு இந்த நகருக்கு அருகே உள்ள இட்டெகெம் என்கிற கிராமத்தில் இருக்கிறதாம். இறுதிச் சடங்கு ஹெயிஸ்ட்லுள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் நடக்கிறதாம். வழக்கமாக இதுபோன்ற சடங்குகள் தேவாலயத்தில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்ட் ஒரு நாத்தினாக இருக்க வேண்டும்.

    ஈமச்சடங்கு மண்டபம் இருந்த இடம் ஒரு குட்டித் தீவைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் தண்ணீர். அமைதியான இடம். யோஹான் அந்தத் தீவுக்குச் செல்லும் குறுகிய பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பது தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றேன்.

    மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் கோட்டு போட்ட கனவான்களும் நன்கு உடையணிந்த பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் தாள்கள் இருந்தன. அந்தப் பெண்மணியைப் பற்றி இவர்கள் அனைவரும் எழுதிக்கொண்டு வந்துள்ளதை இன்னும் சில நேரத்தில் வாசிப்பார்கள் என்று யோஹான் கூறினான். காரலிடம் தான் முந்தைய நாள் மாலை பேசியவற்றைப் பற்றியும் மெதுவாக சொல்லிக்கொண்டே வந்தான்.

    இருவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றோம். வரவேற்பறையில் ஒரு இளம் வயது பெண்ணின் புகைப்படம் வைக்கப்பட்டு, அதற்கருகே விதம் விதமான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தார்கள். பார்ட்டின் மனைவி தனது இளம் வயதில் எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். பார்ட்டுக்கே நாற்பத்து ஐந்து வயதாகிறது. அவரது மனைவிக்கு ஒரு ஐந்து குறைவாக இருக்கலாம். ஆனால், அந்தப் புகைப்படத்தில் வசீகரமான புன்னகையுடன் காணப்பட்டார்.

    வரவேற்பறையைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த போது, பார்ட்டும் அவருக்கு அருகே மூன்று குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எட்டிலிருந்து, பதினைந்து வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களுடைய கண்களை ப் பார்த்தேன் – சிவந்திருந்தன. முந்தைய இரவு முழுவதும் நிறைய அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது. பார்ட் ஏன் இத்தனை நாளாய் இவர்களைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை. யார்தான் பேசுகிறார்கள்!

    பார்ட்டை நெருங்கினேன். அவருக்குக் கைகொடுத்து ஆறுதல் சொல்ல நினைத்த அடுத்தகணம், என்னைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தார். பார்டின் இந்த செயல் நான் இதுவரை கண்டிராதது. குழந்தைகள் ஓடிவந்து அவரின் முதுகைப் பற்றிக் கொண்டார்கள். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. பேரமைதி நிலவிய அந்தக் கூடத்தில் அவரது கதறல் என்னை நிலைகுலைய வைத்தது.

    “கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்னவோ செய்த பார்த்துவிட்டேன். தீவிரமான சிகிச்சை! இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.’ என்று உடைந்துபோன குரலுடன் பேசினார்.

    கூடத்தின் மையத்தில் அவரது மனைவியின் உடல் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. யோஹான் அதற்குள் அங்கே சென்று மலர் வளையத்தை வைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான். பார்ட் என் கைகளைப் பற்றி, ‘உன்னிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடு!’ என்றார்.

    எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது. எனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகளை தட்டிக்கொடுத்தவாறு, என் கண்ணீரை அடக்கத் திணறிக்கொண்டிருந்தேன்.

    அவரது மனைவியின் உடல் வைக்கப்படிருந்த இடத்துக்குச் சென்றேன். மேஜைக்கருகே கீழே அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். எல்லோரும் மலர்வளையங்களை அங்கே வைத்திருந்தார்கள். நான் மட்டுமே பூச்செண்டு கொண்டு வந்திருந்தேன். சலனமின்றி படுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாளைய வலி நீங்கி, களைப்புடன் அமைதியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

    அவரது தலையைப் பார்த்தேன். ஒரு முடி கூட இல்லை.

    Share
  • நாடோடியும், நான்-ரெசிடண்ட் இந்தியனும்

    மாதவன் இளங்கோ

    என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்தியாவின் ஏதோவொரு கிராமத்தில் பிறந்து,  நகரத்திற்கு இடம்பெயர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, உலகின் ஒரு கால்பகுதியேனும் சுற்றிவிட்டு தற்போது ஐரோப்பாவின் ஹாலந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் எனும் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு என்.ஆர்.ஐ ஆசாமி.

    விடிந்தால் தீபாவளி. ஆனால், மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், முந்தைய நாள் மாலையே நகரிலும், நகருக்கு வெளியிலும் இருக்கும் இந்திய  நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன்கள் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து.

    பால்கனிக்கு சென்று நின்றேன். அங்கே பல வண்ண வானவேடிக்கைகளில்லை. கண்கவர் மத்தாப்பூக்கள் உண்டாக்கும் வளையங்களைக் காண முடியவில்லை. வெடிச்சத்தம் சிறிதும் இல்லை. அமைதி, எங்கும் அமைதி. காதைச் செவிடாக்கும் அமைதி!  தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடக் கூட்டம் இல்லை. அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லை. ஆர்பாட்டங்கள் இல்லவே இல்லை! அட, இது இந்தியாவே இல்லை!

    ஒருவித ஏக்கத்தோடும், வெறுமையோடும் எனது அறைக்குச் சென்று, ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். பக்கத்து அறையில் என் மனைவி யூட்யூபில் சரவெடி காணொளிகளைக் காட்டி, தீபாவளி பற்றி என் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது.

    அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. இப்போதும்  அப்படித்தான் – என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.

    என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயார் சொல்லிக் கேட்டிருக்கிறோம் நானும் என் தம்பியும். ஆகையால் அந்த நாளில், பெரும்பாலும் அவர் மௌனமாகவோ அல்லது தியான நிலையிலோ தான் இருப்பார்.

    இது எங்களுக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவரது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாங்களும் தீபாவளி கொண்டாட விரும்பியதில்லை – கொண்டாடியதில்லை. “பட்டாசு வேண்டும்! புத்தாடை வேண்டும்!” என்று நானோ, என் தம்பியோ கேட்டதே இல்லை. இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்? தீபாவளிக்குப் பதிலாக வேறு எதையாவது கொண்டாடிவிட வேண்டியதுதான்.

    இருந்தாலும், நாங்கள் சிறுவர்களாதலால், மற்ற சிறுவர்கள் சரவெடிகள் வெடிப்பதையும், மத்தாப்பூக்கள் கொளுத்துவதையும் பார்க்கும்போது மனம் “நமக்கும் கிடைக்காதா?” என்று ஏங்குவதை தவிர்க்க முடிந்ததில்லை. “பரவாயில்லை, மத்தாப்பூ மட்டுமாவது வாங்கலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?” என்று எனக்கு மனது மாறினாலும், “வேண்டாம்!,” என்று மறுத்துவிடுவான் என் தம்பி. அந்தச் சிறுவயதிலேயே அவன் கொண்டிருந்த  நேர்மையும், பெருந்தன்மையும், புரிதலும் ஆச்சர்யமானவை தான். ‘குழந்தைகள் பாவம் விளையாடிவிட்டுப் போகட்டும்’ என்கிற பெருந்தன்மை பெரிய மனிதர்களுக்கே இல்லாதபோது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மழலையின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியதல்லவா?

    தீபாவளி நாளன்று நாங்கள் நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது வழக்கம். எங்கள் எதிர் வீட்டு நண்பன் வாசு வண்ண வண்ண வெடிகளாய் வெடித்து மகிழ்வதை நாங்கள் இருவரும் மாடிப்படியில் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

    அதற்கு பின்னால் நாங்கள் செய்ததை இன்று நினைத்தால் இன்றுகூட எனக்கு சிரிப்பு வருகிறது.

    என் பக்கத்து வீட்டு நண்பன் சரவணன், “நீங்க வெடிக்கலையா….? ஏ…ன்? எதற்கு…?” என்று ராகத்தோடு கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுவான். அதனால், அவன் எழுவதற்கு முன்னரே, எதிர்வீட்டு வாசலில் இருக்கும் வெடித்த காகிதக் குவியல்களையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு விடுவோம்.

    பட்டாசு வெடிப்பதை  விட, இந்த விளையாட்டு தான் எங்களுக்கு சுவாரஸ்யமாகவும், பேரானந்தம் தருவதாகவும் இருந்தது.

    விடிந்ததும் நம் பக்கத்து வீட்டு நண்பர் சரவெடி கிளப்புவார். வழக்கம் போல வந்து கேள்விக்கணைகளை தொடுப்பார். “அதெல்லாம் நாலு மணிக்கே ஆயிடுத்து!” என்று ஒரு கதையை அள்ளி விட்டுவிடுவோம். அவனும் அதை நம்பி சரவெடியில் மீண்டும் மும்முரமாக இறங்கி விடுவான்.

    அப்போது என் மனதை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. தெருவில் சரவெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தால் போதும், குறவர் இனச் சிறுவர் கூட்டம் ஒன்று எங்கிருந்தாலும் ஓடி வந்து, சரவெடியை கண்டுகளித்து ஆர்ப்பாட்டம் போடும். ஒரு நீண்ட சரவெடியை கொளுத்தும் போது, எல்லா வெடிகளும் வெடிக்காது, ஒன்றிரண்டு வெடிகள் தப்பிப் போயிருக்கும். சரவெடி ஓய்ந்ததும், அந்தச் சிறுவர்கள் தப்பியவற்றையெல்லாம் தேடியலைந்து பொறுக்கியெடுத்து வெடித்து மகிழ்வார்கள். அதிலும் பார்த்தீர்களேயானால், அவர்கள் பொறுக்கியெடுத்த வெடிகள் பலவற்றில் திரிகளே இருக்காது. இருந்தாலும் விடாமல் அவற்றையெல்லாம் பிய்த்தெடுத்து, உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் சேகரம் செய்து கொண்டு போய் மொத்தமாகக்  கொளுத்தி விட்டு ஆட்டம் போடுவார்கள்.

    அவர்கள் என்னவோ இதையெல்லாம் குதூகலத்தோடு செய்து கொண்டிருந்தாலும், அவ்வாறு அவர்கள் தேடித்திரிவதைப் பார்க்கப் பரிதாபமாகவும், சிறிது விந்தையாகவும் கூட இருக்கும். எனக்கும் அவர்களைப்போலவே பட்டாசு கிடையாது தான். ஆனால், அது போதாமையினாலோ, இல்லாமையினாலோ அல்ல என்கிற புரிதல் எனக்கு இருந்தது. அவர்களுக்குத் தருவதற்காகவாவது கொஞ்சம் பட்டாசு வாங்கினால் நன்றாக இருக்குமே என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்.

    அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் – ‘குகன்’. அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேமாத சென்னையில் நான்கு மணிநேரம் பைக்கில் அலைந்துவிட்டு, திடீரென குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால் எதிர்கொள்ளும் குளிர்ச்சியை என்னால் உணரமுடிகிறது. மகிழ்ச்சி என் மனதை நிறைக்கிறது.

    அவர்களுடைய வாழ்க்கைமுறை எவ்வளவு  வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சுவழக்கில் அவர்களை நாம் “குருவிக்காரங்க” என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை; எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதும் ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு ‘சுதந்திரப் பறவை’.

    என்னுடைய வாழ்க்கையும்  ‘கொஞ்சம்’ சுதந்திரமானது தான். மாலை நான்கு மணிக்கு பள்ளி விட்டால், நான்கு பதினைந்திற்குள் வீட்டில் இருக்க வேண்டும். என் சுதந்திரம் அந்த அளவில் இருந்தது.

    அவன் எனக்கு நண்பனான பின், நான் நிறையவே மாறிவிட்டிருந்தேன். அவனோடு வேட்டையாடச் சென்றேன், தெருவில் கில்லி, கோலி எல்லாம் விளையாட ஆரம்பித்தேன். அவன் கூடாரத்திலெல்லாம் (அதுதான் வீடே!) பலமுறை அவனுடன் அமர்ந்து  உணவருந்தி மகிழ்ந்திருக்கிறேன். கூடாரத்தைப் பற்றி அங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது சென்றாலும் அங்கே ஆனந்தம், ஆர்ப்பாட்டம் தான். எங்கள் வீட்டில் அதற்கு நேர்மாறாக எப்போதும் ஒரு ‘பின் டிராப் சைலன்ஸ்’ இருந்தாக வேண்டும்.

    அந்தக் கூடாரத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை முறையைப் பற்றியும் எழுதினால் நிச்சயமாக இந்தக் கதை ஒரு குறுநாவலாகிவிடும். அவன் செய்வதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறேன்.

    அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆரம்பத்தில் ஏனோ என் தாயார் அதை விரும்பவில்லை. அவனையும் எங்களுக்குச் சமமாக  நடத்தவேண்டும் என்று அவனது அங்கீகாரத்திற்காக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்தினேன். அது வேலைக்கு ஆகாததால் பிறகு, காந்திய வழியில் உண்ணாவிரதமெல்லாம் இருந்ததுண்டு. வெகு விரைவில் அவன் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். எல்லோருக்கும் அவனைப் பிடித்துப்போய் விட்டது.

    அவனோடு சேர்ந்து நான் கோலி விளையாடியது மாறி, அவன் எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவ்வளவு ஏன்? அந்த சமயத்தில் பிரபலமான பாக்மான், பாராட்ரூப்பர், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகளெல்லாம் கூட, எங்கள் வீட்டு கணிப்பொறியில் விளையாட ஆரம்பித்தான்.

    பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த அவன், என் தந்தையின் உதவியோடு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்தான். அந்த வயதிலேயே எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எதைச் சொன்னாலும் அப்படியே ‘பற்றிக்கொள்ளும் அவனது திறம்’ என்னை வியக்க வைக்கும்.

    அந்தப் பறவை மெதுவாக எங்கள் கூண்டுக்குள் அது அறியாமலேயே சிக்கிக் கொள்ள ஆரம்பித்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

    ஒரு சமயத்தில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால், அவர்களின் கூடாரங்களெல்லாம் அகற்றப்பட்டன. சிறகடித்து பறக்கும் சுதந்திரப் பறவைகளின் வாழ்க்கை என்று நான் கருதிய அந்த நாடோடிகளின் வாழ்க்கையில் இருந்த சிரமங்களும், சிக்கல்களும், அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

    நாமெல்லாம் இன்று வைபை (Wi-fi) சமிக்ஞைகள் சில நொடிகள் வரவில்லையென்றால் கூட பொறுமையிழந்துவிடுகிறோம். ஆனால்,  படுக்கைகளையும், பொருட்களையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த அந்த நாடோடிக் கூட்டத்தின் வாழ்க்கையை நினைத்து அன்றிரவு அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது.

    தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு, தலையில் இருந்த மூட்டையை ஒரு கையில் பிடித்துகொண்டு, மறுகையை என்னை நோக்கி அசைத்தவாறு, ‘வெளிநாட்டுக்குச் செல்வது’ போன்று மகிழ்ச்சியோடு  சிரித்துக்கொண்டே அவன் சென்ற அந்தக் காட்சி உண்மையில் என்னுள் உறைந்து போயிருக்கிறது.

    அதன் பிறகு, அவனைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்து போனது என்னவோ என் நண்பன் தானே ஒழிய, எங்கள் நட்போ அல்லது அந்த நட்பின் மூலம் கிடைத்த அனுபவமோ அல்ல.

    என் மனவெளியில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கும் அத்தினங்களின் நினைவுகளைப் பதிவுசெய்து, உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த நட்பும், அனுபவமும் சாஸ்வதம் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். அதேபோல, இரைச்சல் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலில், இதுபோன்ற குளிர்ச்சியான நினைவுகள் மனதிற்கு சிறிதளவேனும் இதமும், இனிமையும் தரும் என்றும் நம்புகிறேன். இன்றைக்கு அது போன்ற ஒரு நட்போ அல்லது எனக்கு அப்போதிருந்த மனநிலையோ கோடி கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

    அவன் நிச்சயம் எங்கோ இருக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தாலும், அது சாத்தியம்!

    இருப்பினும், உங்களுக்கு ஒரு கோரிக்கை!

    ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்.. சந்திக்க நேர்ந்தால்..

    ‘என்னைப் பற்றி அவனிடம் தயவுசெய்து எதுவும் கூறி விடாதீர்கள்!’

    அதுவும் இந்த பாழாய்ப் போன உலகத்தில், ‘கார் எப்போ வாங்குற? கார் எப்போ வாங்குற’ என்று திரும்பத் திரும்ப கேட்டு உயிரெடுத்த உடன்பணிபுரிபவர்களின் வாயடைக்க கடனுக்கு கார் வாங்கி, ‘நீ வீடு இல்லாமல் இருப்பது எனக்கு அவமானம்’ என்று கூறிய தந்தையின் கௌரவத்திற்காக கடனுக்கு வீடு வாங்கி, மேலும் காதணி, நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விழாக்களில் சொந்தங்கள் முகத்தைத் தூக்கி மும்பையில் வைப்பதை காணச் சகிக்காமல், அவர்களோடு பெருமையுடனும் புன்னைகையுடனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, கடன் அட்டை உபயோகித்து தங்க நகைகள், துணிமணிகளெல்லாம் வாங்கி, பொறுப்போடு நான்காம் தேதிக்குள் அத்தனை தவணைகளையும் கட்டி, எஞ்சியிருந்த காசில் வீட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கு பொம்மைகள், எனக்குப் புத்தகங்கள் வாங்கி மாத கடைசியில் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டு, நண்பர்களிடமும் கடன் வாங்கி, கடன் பட்டியல் கூட்டுத்தொடராகவும், கடன் பணம் பெருக்குத்தொடராகவும் வளர்ந்து, மன அழுத்தத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, வெறுத்துப்போய் ஒரு நாடோடி போல் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடிவந்து, ‘எங்கள் வேலையைப்  பறித்துக்கொள்ள வந்த களவாணிகளே!’ என்பது போன்ற பார்வையை வீசிய அந்நியர்களின் (உண்மையில் நாங்கள் தான் இங்கு அந்நியர்கள்!) எதிர்ப்பைச் சுமந்து, கடின உழைப்பாலும், தாய்நாடு தந்த அறிவாலும் அவர்களின் நம்பகத்தன்மையைப் பெற்று, சிறிது சிறிதாக அவர்களில் ஒருவனாகி,

    (மூச்சு வாங்குகிறது… இரண்டு நிமிடங்கள் பொறுத்துக்கொள்ளவும்..)

    சரி. இப்படி ஆறு வருடமாக கைகட்டி, வாய்கட்டி, செலவு பண்ணாமல் சேர்த்து வைத்து, இந்திய ரூபாய் வீழ்ச்சியடைகிற நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து, இந்தியாவிற்கு சிறிது சிறிதாக பணத்தை அனுப்பி, அங்கு வந்து வீட்டுக்கடனை அடைத்து, நிம்மதியாக தெருவோர தேநீர் கடையில் ஒரு சனிக்கிழமை தேநீர் பருகும்போது, ‘வீட்டு விலையெல்லாம் இந்த என்.ஆர்.ஐ நாய்களால ஏறி போயிடுச்சு’ என்று தேநீர் கடையில் தினசரி படிக்கும் மேதைகளிடம் பட்டம் பெற்று, வீட்டுக்கடனை முழுவதுமாக அடைத்து எஞ்சிய தொகையில் நிலம் வாங்க விரும்பி, என் பெற்றோர் ‘திஸ் இஸ் மை சன் ப்ரம் அப்ராட்’ என்று வீண்பெருமையடித்துக்கொண்டு அறிமுகப்படுத்தியதால், இருபது கோடி மதிப்புள்ள நிலத்தை ஏஜெண்ட் காட்ட, ‘நான் அந்த மாதிரி என்.ஆர்.ஐ இல்லைங்க, வேற மாதிரி. இந்தியாவில் இருக்கற எல்லாரும் எப்படி அனில் அம்பானி இல்லையோ, அதேபோல் வெளிநாட்டுல இருக்கற எல்லா இந்தியனும் லக்ஷ்மி மிட்டலும் இல்லை. நான் ஒரு நார்மல் மிடில் கிளாஸ் என்.ஆர்.ஐ!’ என்று எடுத்துச் சொல்லி அவரது மேலும் கீழும் பார்வையை தர்மசங்கடத்துடன் வாங்கி,

    உதவி என்று வந்த உறவுகாரனுக்கு ஆயிரம் ரூபாய் தந்து, ‘வெளிநாட்டுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான், பிச்ச காச தர்றான் பாரு பரதேசி’ என்கிற பட்டத்தையும் பெற்று, இன்னும் ‘திமிர் புடிச்சவன்’, ‘கஞ்சன்’, ‘கர்வி’, அதிமேதாவி, ‘நாட்டுப்பற்று இல்லாதவன்’ என்று எனக்கு முற்றிலும் பொருந்தாத அத்தனை அடைமொழிகளையும் தாங்கி,

    இறுதியாக இன்றைக்கு பழைய வாழ்க்கையை நினைத்து, உண்மையான அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி தயவு செய்து குகனிடம் கூறி விடாதீர்கள்.

    அவன் என் நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்படுவான். இன்னும் சொல்லப்போனால், இதெல்லாம் அவனுக்குப் புரியவும் புரியாது.

    அவன் ஒரு பறவை.

    யாரையும் வேதனைக்கும் உட்படுத்தாமல், எந்தக் கவலையும் இன்றி, யாருக்காகவும் இல்லாமல், அவனுக்காகவே வாழ்ந்து, எப்போதும் ஆனந்தமாக சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை.

    Share
  • கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

    மாதவன் இளங்கோ 

    லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.

    நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.

    பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் பேருந்துகளில் ஒன்றைப் பிடிப்பது வழக்கம். ஆனால் அன்றைக்கு இரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இருக்கும் லூவன் நகராட்சி மன்றத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் உள்வட்ட சாலைப் பேருந்தான 601-ஐப் பிடிக்க நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே 601-இன் பின்புறம் தெரிந்தது. ஓடிச் சென்று ஏறுவதற்குள் கிளம்பிவிட்டது. இந்த ஊர் ஓட்டுநர்கள் வேறு கடமை தவறாத கனவான்கள் ஆயிற்றே. கதவை மூடிவிட்டு கிளம்பிவிட்டால், மீண்டும் நிறுத்தமாட்டார்கள்.

    அடுத்த பேருந்து வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் காத்திருப்பது, குறிப்பாக இந்த பேருந்து நிலையத்திலும், இரயில் நிலையத்திலும்  காத்திருப்பது. ஏழு, எட்டு, ஒன்பதுகளும் இரயில் நிலையம் செல்லும். ஆனால் அவை நகருக்குள்ளே உள்ள சந்து பொந்துகளில் ஆடி அசைந்து சென்று இரயில் நிலையத்தை அடைவதற்குள் தலை கிறுகிறுத்து விடும்.

    வீட்டிற்கு திரும்பப் போய்விட்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. இன்னும் சில நிமிடங்கள் இங்கு தான் நிற்கவேண்டும். கைபேசியை எடுத்து முகநூலில் மேலும் கீழாகத் தள்ளி நிலைத்தகவல்களைப் பார்ப்பதற்கு அலுப்பாக இருந்தது.

    நிறுத்தத்தில் எனக்கெதிரே உல்லாசப் பேருந்தான ஓஸ்டண்டுரேய்க் நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற பேருந்துகள் வெளிவட்ட சாலைக்கு மறுபுறமுள்ள சதுக்கத்தில் தான் நிற்கும். அன்றைக்கு மட்டும் ஏன் அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதுவும் வெகுநேரமாக. பேருந்துக்குள் ‘உலகத்தின் பாதி’ பல நிறங்களில் அமர்ந்திருந்தது.

    நிறுத்தத்திற்கு எதிரே, உள்வட்ட சாலைக்கும் வெளிவட்ட சாலைக்கும் இடையே ஒரு பெரிய பாலமும், அதன் கீழே ஒரு பதினைந்து கார்கள் மட்டுமே நிற்கக்கூடிய தரிப்பிடமும் இருக்கும். ஓஸ்டண்டுரேய்க்கிற்குள் இருந்த சில பயணிகள் மட்டும் நின்றுகொண்டு கண்ணாடி ஜன்னலினூடே அந்தத் தரிப்பிடத்தைப் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பின்னாலிருந்து யாரோ ஒரு மனிதர் உரக்கக் கத்திக்கொண்டு இருப்பது கேட்டது. ஒரு கறுத்த  மொட்டைத் தலை இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருப்பது மட்டுமே எனக்குத்  தெரிந்தது. சொகுசுப் பேருந்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவேளை அங்கு நடக்கும் விந்தையும் அந்த மனிதரும் தெளிவாகத் தெரியக்கூடும். எனக்கு சரியாகத் தெரியவில்லை.

    அங்கே இரண்டு மனிதர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்த வேளையில், கார் மறைவிலிருந்து வெளியே வந்து என் கண்களுக்குத் தென்பட்ட அந்த மனிதர் ஆக்ரோஷமாக கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அவரது உடலின் அத்தனை அங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன என்று சொல்லுமளவிற்கு அவருடைய உடல்மொழி பயமுறுத்தக்கூடிய விதத்தில் இருந்தது. அருகிலிருந்த காரை காலால் எட்டி உதைத்தார். பாலத்தின் பக்கம் ஓடிச்சென்று அதன் சுவரைக் குத்தினார். வானத்தைப் பார்த்துக் கத்தினார். இது உறுமலா, ஓலமா, கதறலா அல்லது அனைத்தும் கலந்த ஒன்றா?

    திடீரென்று திரும்பியவர் சடாரென குனிந்து சாலையை குத்துசண்டையில் குத்துவது போல் அவரது இடது கை முஷ்டியால் குத்தினார். அப்படிக் குத்தும்போதும் அவர்போட்ட சத்தம் இருக்கிறதே! நான் மட்டும் அவ்வாறு கத்தியிருந்தால், ஒன்று என் தொண்டையிலிருந்து குருதி கிளம்பியிருக்கும் அல்லது நான் சற்றுமுன் தின்ற இட்லி வாந்தி வடிவம் பெற்றிருக்கும்.

    அவர் ஒவ்வொருமுறை கத்தும் போதும், குத்தும் போதும், குதிக்கும் போதும் எனக்கெதிரே இருந்த சொகுசுப் பேருந்து பயணிகளின் சிரிப்பை பார்த்திருக்கவேண்டும். ஏதோ ஒரு தெரியாத காரணத்திற்காக நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்துவாசிகளுக்கு கிட்டத்தட்ட அவர் ஒரு வித்தைக்காரராகவே தெரிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் இது எவற்றையுமே கண்டுகொண்டதாய் தெரியவில்லை. வேறு சிலர் சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், என்னைப்போலவே.  எனக்கருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த ஒரு கனவான் அந்த மனிதரைப் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார், நான் அவரைப் பார்க்கும் போது, நெற்றியைத் தேய்த்துக்கொண்டார், பிறகு மேலே பார்த்தார். ஏனோ இதையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தார். மேலே உப்பரிகையிலிருந்து வேறு ஒரு கூட்டம் நடப்பதனைத்தையும்  சலசலப்புடன்  பார்த்துக்கொண்டிருந்தது.

    நடுத்தெருவில் எதற்காக இந்த மனிதர்  இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார், என்ன நடக்கிறது என்றெல்லாம் புரிந்துகொள்ள முடியாததாலோ என்னவோ எனக்கு அவர் மீது பரிதாபமே வரவில்லை. அதே சமயம் அதில் சிரிப்பதற்கும் எதுவும் இல்லை என்றும் தோன்றியது.

    யாரிடம் இப்படி அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டு திட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்? பிரஞ்சு மொழி தான். ஆனால், எனக்கு என் காதருகே வந்து, சாத்வீகமாக பிரஞ்சு மொழியில் யாராவது ஏதாவது பேசினாலே அதில் பாதிகூட விளங்காது. இருபதடி தூரத்தில் நின்றுகொன்று இந்த வேகத்திலும், கோபத்திலும், கொந்தளிப்பிலும் கத்திக்கொண்டிருந்தால் எனக்கு என்ன புரியப்போகிறது, அது பிரஞ்சு மொழியில் எழுப்பப்படும் சத்தம் என்பதைத் தவிர.

    எதிர்முனையில் இருப்பது ஆணாக இருக்குமா? பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால், இதுபோன்று ஒரு மனிதர் கத்திக்கொண்டிருப்பதை யார் இவ்வளவு நேரம்  பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்? இவர் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்கு மட்டுமே இத்தனை பொறுமை சாத்தியம்.  ஒருவேளை, எதிர்முனையில் இருப்பவனும் இதே போல் கத்திக்கொண்டிருக்கிறானோ என்னவோ? அல்லது கத்திவிட்டு போகட்டும் என்று சாமர்த்தியமாக கைபேசியை  மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்களா? இப்படி இருக்குமோ? இந்த மனிதர் நிச்சயம் screaming_manநடித்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அதற்கும் வாய்ப்பே இல்லை. அந்த மனிதரின் கத்தலில் ஒரு உண்மை தெரிகிறது.

    அந்த ஓலம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். அடிபட்ட தெருநாய்கள் வலியில் இப்படி ஓலமிடுவதைப் பலமுறை பார்த்திருக்கேன். மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த மனிதரும் அப்படி ஏதோவொரு பொறுக்கமுடியாத வலியை நிச்சயம் அநுபவித்துக் கொண்டிருக்கவேண்டும். தலை வலிக்கும், கால் வலிக்கும்  மருந்திருக்கிறது.ஆனால் மனவலிக்கு? அதற்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ அந்த வலி இருப்பவர்கள் மருத்துவத்தை நாடவும் ஏற்கவும் மறுக்கிறார்கள். அப்படி அவர்களே ஏற்றுக்கொண்டாலும், சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது எனக்கு அந்த மனிதர் மீது பரிதாபம் பிறந்திருப்பதை உணரமுடிந்தது.

    இவருக்கென்ன காதல் தோல்வியா? மணமுறிவா? பண அழுத்தம் தந்த மன அழுத்தமா? ஒருவேளை வியாபாரத் தோல்வியா? எதிர்முனையிலிருப்பவன் வியாபாரக் கூட்டாளியாக இருப்பானோ? ஏமாற்றிவிட்டானா? அப்படி இருக்க வாய்ப்பு குறைவு. இங்கெல்லாம் ஒப்பந்தம் இல்லாமல் திருமணம் கூட செய்து கொள்ளமாட்டார்களே. மேலும் இவரைப் பார்த்தால் வியாபாரியாகவும் தெரியவில்லை.

    ஏனோ எனக்கு இது நிச்சயம் தோல்வி சார்ந்த வலியாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. துரோகம் சார்ந்த வலியாக இருக்கலாம். ஆம். அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கதறல், உடல்மொழி அத்தனையிலும் துரோகத்தின் வலி வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது எந்த வகை துரோகம் என்பது அவசியமில்லை. துரோகத்தில் என்ன வகை வேண்டிக்கிடக்கிறது. ஒருவேளை  எதிர்முனையில் இருப்பவர் தெரியாமல் துரோகமிழைத்துவிட்டாரோ? அதனால் தான் பொறுமையோடு இவர் கத்துவதைக் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறாரோ என்னவோ. ஆனால், துரோகத்தைக் கூட தெரியாமல் செய்ய முடியுமா?

    நான்கூட துரோகம் செய்திருக்கிறேன். நினைவறிந்து ஒரே முறை. அதுவும் ஒரு உற்ற நண்பருக்கு. சந்தர்ப்ப வசத்தால் செய்த துரோகம். ஆனால் அதற்கு பதிலாய் அத்தனையும் அனுபவித்தாகிவிட்டது. இதே போன்று ஒருமுறை எதிர்முனையில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் இதுபோலெல்லாம் கத்தவில்லை. நிதானமான மனிதர். இல்லை, அவரை மனிதர்கள் வகையில் சேர்க்கக்கூடாது. தெய்வம். துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யவும் வழி செய்து கொடுத்தவர். ஆனால், இங்கே இந்த முனையில் இப்படிப்பட்ட மனிதர் இருப்பதால், அங்கே அந்த முனையில் அப்படிப்பட்டவர் இருப்பதாகவெல்லாம் என்னால் அநுமானிக்க முடியவில்லை.

    ஓஸ்டண்டுரேய்க் கிளம்ப ஆயத்தமானது. பயணிகளின் முகத்தில் கேளிக்கை முடியப்போகும் சோகமும், அதேசமயம் அவரைக் கடப்பதற்குள் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கான உச்சக்கட்ட விருந்தாக அந்த மனிதர் கைபேசியை பாலத்தின் சுவர்மீது வேகமாக வீசி எறிந்தார். எறிந்த வேகத்தில் அது சுக்கு நூறாகப் போயிருக்கும். ஐபோனோ, சாம்சங்கோ என்னவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது இனிமேல் நிச்சயம் பயன்பட வாய்ப்பேயில்லை.

    ஒரு நல்ல விஷயம். இப்படி வீசி எறிந்ததில் அவருடைய ஆத்திரத்தில் ஒரு மூன்று சதவீதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

    எஞ்சியுள்ள ஆத்திரத்தை ஏந்திக்கொண்டு அருகே இருந்த காரில் ஏறி அமர்ந்தார். அடுத்த சில நொடிகளில் அந்தக் கார் க்ரீச்சென்ற சத்தத்தோடு திரும்பி, உள்வட்ட சாலையில் சீறிப் பாய்ந்து சென்றது.

    அதுவரை சலனமற்று இருந்த என் உள்ளமும் உடலும் அப்போது நடுங்க ஆரம்பித்தது.

     

    oOo

    Share
  • அது பணக்காரர்களுக்கான தேசம்..!

    சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

    கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை அடிக்கடி சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    “நீ எப்போது இங்கு வந்தாய்?” என்று கேட்டார்.

    “நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்” என்றேன்.

    “இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?” என்றார்.

    “வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்.” என்றேன்.

    “இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?”

    “நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம்பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையைக் கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.” என்றேன்.

    சிரித்துக்கொண்டே, “இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது.” என்றார்.

    “உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?” என்று கேட்டேன்.

    “என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, ‘அது பணக்காரர்களுக்கான தேசம்!’.” என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்! உன்னுடைய தேசமும் அப்படித்தான்.” என்று அவர் மேலும் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

    அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    “அது பணக்காரர்களுக்கான தேசம்!”

    Share
  • அத்துமீறல்

    மாதவன் இளங்கோ

    thalys

     

    இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாம்.

    என்ன செய்வது? சரவண பவனில் நான் கேட்டிருந்த கொத்துப் பராட்டாவையும், ரோஸ்மில்கையும் கொண்டுவருவதற்கு, கொஞ்சமல்ல நிறையவே தாமதம் செய்துவிட்டார்கள். நானோ அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இந்த பாரீஸ் நகரத்தை விட்டுச் செல்வது என்கிற உறுதியோடு இருந்தேன். ஆசை யாரை விட்டது? பெல்கியத்தில் ஒரு சரவண பவன் இருந்தால் நான் இந்த அற்ப கொத்துப் பராட்டாவிற்கு ஆசைப்பட்டிருப்பேனா? இருந்தாலும் தாலிஸ் இரயில் இன்னும் அரைமணியில் கிளம்பவிருந்த நிலையில், என் தாயாருக்கு வேகமாக நடப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், உருண்டையான மனைவியையும், ஐந்து வயது மகனையும், மூன்று பெரிய பயணப்பெட்டிகளை வைத்திருந்த நிலையில், இந்தக் கொத்துப் பரோட்டா ஆசை தேவையற்ற ஒன்று!

    இன்னும் இருபது நிமிடங்கள்தான். தாலிஸ் கிளம்பிவிடும். அவர்களை இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து போகச் சொல்லிவிட்டேன்.

    இறுதியில் கொத்துப் பரோட்டா வந்து சேர்ந்தது. அதிவிரைவாக ஒரு வாய் பரோட்டா, ஒரு வாய் ரோஸ்மில்கென்று மருந்து விழுங்குவது போல் விழுங்கிவிட்டு, பெட்டியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

    இன்னும் ஐந்தே நிமிடங்கள்…

    பாரீஸ் வடக்கு இரயில் நிலையம் சரவண பவனிலிருந்து அத்தனை தூரமொன்றுமில்லை. நடக்கும் தூரமே. இருந்தாலும், தாலிஸ் ஆயிற்றே! அதுதான் இந்த ஓட்டம். எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்ப்பது தெரிந்தது. இவர்களோடு இது ஒரு பெருந்தொல்லை! இந்த ஊர்க்காரர்கள் ஓடினால், “பாவம், ஏதோ அவசரம் போலிருக்கு!” என்று பரிதாபத்துடன் பார்ப்பார்கள் அல்லது கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் நான் அவசரத்துக்கு ஓடினால், “இந்தியன் ஓடுகிறான்”, “அநாகரிகமானவன்!” என்பது போன்ற பார்வையை வீசுவார்கள். அவர்கள் நினைப்பது எனக்கு எப்படித் தெரியுமா? அந்த முகத்தைப் பார்த்தாலே போதும். ஏதோ ஐந்து நாட்களுக்கு முன்பே அழுகிப்போன மாம்பழத்தை தெரியாமல் தொட்டுவிட்டது போன்று முகத்தை சுளிப்பார்கள். சிலர் ஏளனமாகச் சிரிக்கவும் செய்வார்கள்.

    பிரசல்சு நகரம் செல்லும் தாலிஸ் இரயில் எட்டாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பும் என்று பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி வந்த அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே எட்டாவது பிளாட்பாரத்திற்கு ஓடினேன்.

    தொலைவில் முதல் வகுப்புப் பெட்டிக்கு முன்பு அதிகாரியுடன் என் குடும்பம் நின்று கொண்டிருந்தது. முதல் வகுப்பு என்று கூறினேன். நான் வாங்கும் சம்பளத்திற்கு அத்தனை பேரையும் முதல் வகுப்புப் பெட்டியில் எல்லாம் அழைத்துப் போகவே முடியாது. முடிந்தாலும், தேவையற்ற ஒன்று. ஏதோ எங்கள் அதிர்ஷ்டம், நான் முன்பதிவு செய்த தினத்தன்று இரண்டாம் வகுப்பு விலைக்கே முதல் வகுப்பு பயணச்சீட்டு கிடைத்தது. அதுவும் தாலிசில்! அது என்ன தாலிஸ்? மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் வண்டி அது. நான் வசிக்கும் பிரசல்சு நகரத்திற்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம்.

    அந்த இரயில் வண்டியைப் பிடிக்காமல் விட்டால் என்னவாகிவிடப் போகிறது? என் மனைவிக்கு தாலிசில் முதன்முதலாக முதல்வகுப்பில் செல்லும் பாக்கியம் கிட்டாமல் போகும். வரும்போது இரண்டாம் வகுப்பே விமானத்தை விடப் பிரமாதமாக இருக்கிறது என்று கூறிய என் தாயாருக்கு அதைவிடப் பிரமாதம் என்ன என்பது தெரியாமல் போகும். எனக்கு? ஒன்றுமில்லை. நான் நேராக நிலா சலூனிற்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

    பாரீசில் நிலா சலூனா? அந்நகரின் வடக்கு இரயில் நிலையம் அருகே உள்ள லா சாப்பல் பகுதி ஒரு குட்டித் தமிழ் தேசம். முனியாண்டி விலாசு, மாணிக்க விநாகர் ஆலயம் உட்பட பல தமிழ் விஷயங்களை, விசேஷங்களை அங்கு காணலாம். எனக்கு தமிழகத்தின் நினைவு அழுத்தும் போதெல்லாம் ஒரு வார இறுதியில் கிளம்பி பாரீஸ் நகரம் சென்று விடுவேன். நம் மக்களைப் பார்க்கலாம். நிறைய தமிழ் கேட்கலாம். ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை கணபதி அங்காடியில் வாங்கி வந்து விடலாம். முக்கியமாக முருங்கைக்காய்!

    இந்த முறை கணபதி அங்காடி மூடியிருந்தது. வி.எஸ்&கோ ட்ரேடர்ஸ் பேரங்காடியில் வாங்கிய முருங்கைக்காய் நிரம்பிய பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பயணப்பெட்டியை இழுத்துக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை சென்றடைந்தேன். ஏற்கனவே எங்கள் அனைவருடைய பயணச்சீட்டுகளையும் அதிகாரியிடம் கொடுத்திருந்தாள் என் மனைவி. விதிப்படி 2 நிமிடங்களுக்கு முன்னதாகவே பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்து விட்டதால், அவர் எதுவும் சொல்லவில்லை. புன்னகைக்கவும் இல்லை.சுளித்துக்கொண்டு பார்ப்பதற்கு இந்தப் பார்வை பரவாயில்லை என்று தோன்றியது. எனக்குப் பிறகு மூன்று ஐரோப்பியர்கள் ஏறினார்கள். என்னிடம் காண்பிக்காமல் சேமிக்கப்பட்ட புன்னகை அவர்களுக்கு பரிமாறப்பட்டதைக் கண்டேன். இதெல்லாம் பழகிவிட்டது.

    பயணப்பெட்டிகளை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. முருங்கைக்காய் பையையும் என் மகனுக்கு தேவையான தின்பண்டங்கள் நிறைந்த பையையும் மட்டும் எடுத்துக்கொண்டேன். அதில் தான் அவனுக்குத் தேவையான தற்காப்பு வாந்தி உறையும் இருந்தது. இல்லையென்றால் தாலிஸ் நாறிவிடும் அபாயமிருந்தது. அந்த விசேஷ கைப்பையிலுள்ள பல சமாச்சாரங்கள் எதற்கு என்பது என் மனைவி மட்டுமே அறிந்த விஷயம். சில தாய்மார்கள் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது.

    அந்தப் பெரிய மூன்று பயணப்பெட்டிகளை அவற்றிக்கான இடத்தில் அடுக்கி வைக்க அந்த அழகான பணிஞை உதவி செய்தாள். ‘மெர்சி’ என்று பிரெஞ்சு மொழியில் நன்றி தெரிவித்தவுடன். ‘நோ ப்ராப்ளம்’ என்று ஆங்கிலத்தில் அழகிய புன்னைகையுடன் பதிலளித்தாள். அது அவள் வேலை. அவள் டச்சுக்காரியாகவோ அல்லது பிளம்மியப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். உள்ளே இருந்து என் மனைவி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு சிரிக்கும் போது என் மகனைப் போலவே கன்னத்தில் அழகாக குழி விழுந்தது எனக்குப் பிடித்திருந்தது.

    உள்ளே நுழைந்து என்னுடைய இருக்கையை அடைவதற்குள் தாலிஸ் கிளம்ப ஆரம்பித்தது. பெரும்பாலும் அத்தனை இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட இங்கு இருக்கைகள் அகலமானவை, எண்ணிக்கையும் குறைவு தான்.

    இருக்கையில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்த என் மகன், ‘கம்பர்ட் 1 சூப்பரா இருக்குப்பா!’ என்றான். ஆமாம். முதல்வகுப்புப் பெட்டியை தாலிசில் அப்படித்தான் அழைத்தார்கள். என் தாயும் அவள் தரப்புக்கு, ‘என்னடாது ப்ளைட்டவிட அசத்தரது! அறுபது வயசில நேக்கடிசிருக்கற யோகத்தப் பாரு!” என்று வரும்போது இரண்டாம் வகுப்புக்கு கூறியதையே மீண்டும் கூறினாள், சற்றே கூடுதலான பிரமிப்புடன்.

    “உக்காரு பாட்டி! அப்பா உக்காரு பா! ஜாலியா இருக்கும்” என்று கத்தினான் என் மகன். திடீரென ஏதோ தோன்றியவனாய் சுற்றி நோட்டம் விட்டேன். கிட்டத்தட்ட அத்தனைக் கனவான்களும், சீமாட்டிகளும் எங்களை சிறுத்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் என் மகனுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த அம்மணி மூக்குக் கண்ணாடியினூடே பார்த்த பார்வை அழுகிய மாம்பழத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

    பாரீசுக்கு வரும்போது நால்வரும் இருவேறு வரிசைகளில் அமர்ந்திருந்தோம். நல்லவேளை. கம்போர்ட் 1-ல் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. இரண்டு பேர் வண்டி செல்லும் திசைக்கு எதிராக அமர்ந்து சென்றாக வேண்டும். என் மனைவிக்கு இது அறவே பிடிக்காது. அதுவும் தாலிசில் – முடியவே முடியாது. அதனால் எனக்குப் பக்கத்தில் என் தாயார். எனக்கு எதிரே ஜன்னலோர இருக்கையில் என் மகன், அவனருகே என் மனைவி. எங்களுக்கு இடையே பெரிய தொரு மேஜை. கம்போர்ட் 1-ல் உணவு இலவசமாகத் தருவார்களாம். என்ன பெரியதாய் இருக்கப் போகிறது அந்த உணவில். பரோட்டாவிற்கும் குருமாவிற்கும் ஈடாகப்போவதில்லை.

    எங்களுக்கு எதிர்புற ஜன்னலருகே இரண்டு எதிரெதிர் இருக்கைகளில் ஒரு கனவானும் சீமாட்டியும் அமர்ந்திருந்தார்கள். இளம் வயதுதான். அநேகமாக கணவன் மனைவியாக இருக்கவேண்டும். நண்பர்களாகக் கூட இருக்கலாம். அந்தப் பெண் அவனுடைய கைவிரல்கள் ஒவ்வொன்றாக தடவி விட்டுக்கொண்டே டச்சு மொழியில் அவனிடம் என் மகன் காலைத் தூக்கி மேசைமீது வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தாள். அதைப் புரிந்துகொண்ட என் மனைவி என் மகனை அதட்டி கால்களைக் கீழே போடச் சொன்னாள்.

    சிறிது நேரத்தில் எப்போதும் போல் என் மகன், ‘மெர்குரி, வீனஸ்…’ என்று கோள்களின் பாட்டை உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் மெதுவாக அந்தப் பெண்ணை பார்த்தேன். அழுகிய மாம்பழம்! அதற்கு முன்பே அதை கவனித்துவிட்ட என் மனைவி, ‘அமைதியாக இருக்கப் போகிறாயா? இல்லையா?’ என்று அவனை அதட்டினாள்.

    நான் என் மகனுடன் மெதுவாகப் பேசினேன்.

    “காலை மேசையின் மேல் தூக்கி வைத்து அசுத்தப்படுத்தக் கூடாது. நாமும், அடுத்து இங்கு வந்து அமர்பவர்களும் சாப்பிடும் இடமலல்லவா? மேலும் அது அநாகரிகமான செயலும் கூட! பொது இடங்களில் நாம் சத்தம் போட்டு பேசவோ பாடவோ கூடாது! அதுவும் கம்போர்ட் 1-ல் கூடவே கூடாது. இங்கிருக்கும் கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் அது பிடிக்காது. நாம் அவர்களுக்கு தொல்லை தருகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பொருத்தவரை, நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! ஒலி மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று அறிவுரைத்துக்கொண்டே அவன் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தேன்.

    கம்பர்ட் 1-ல் அமைதி பரவ ஆரம்பித்திருந்தது. மேஜையும் அப்படி ஒன்றும் அழுக்கடையவில்லை.

    ஜன்னலினூடே வெளியே நோக்கினேன். வண்டி போகும் வேகத்தில் வெளியில் இருந்த எதுவும் தெரியவில்லை. மாறாக வண்டிக்குள் நடப்பதெல்லாம் திரைப்படமாய் தெரிந்துகொண்டிருந்தது. குறிப்பாக எங்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த அந்த சீமாட்டியின் இதழ்கள் அந்த கனவானின் வாய்க்குள் அடைபட்டுக் கிடந்தது தெரிந்தது. அவை ஏற்படுத்தும் சத்தமும் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வலதுகை அவள் மார்பின் மீது எதையோ தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

    என் மனைவி முகத்தை சுளித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டிருந்தாள். திரும்பி எனக்கருகே இருந்த என் தாயைப் பார்த்தேன். அவள் முகத்திலும் அதே பாவம். அவளும் என் மனைவிக்கு முன்பே கண்களை மூடியிருக்கவேண்டும். இருவரும் தூங்கிவிட்டதாய் தெரியவில்லை.

    என் மகன் கால்களைத் தொங்கபோட்டபடி, கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடியபடி ஜன்னலின் மீது சாய்ந்துகொண்டிருந்தான். அநேகமாக தூங்கியிருக்கவேண்டும். அவனை அப்போது எழுப்பவேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அந்த முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிந்தது. என் மீதான கோபத்துடனேயே தூங்கிப் போயிருக்கிறான்.

    என் அறிவுரை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும், “நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று நான் கூறியது அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

    oOo

     

    Share