என்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, “நீயே அவருக்குக் கடிதம் எழுது..” என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில், “சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேனே தவிர, நண்பர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.” என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பதிவை எழுதுவதற்கும் அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. மேலும் சில நண்பர்களும் இதுகுறித்து என்னைக் கேட்டார்கள்.

முகநூல் மட்டுமல்ல, குடும்பப் புலனக் குழுக்களில் [WhatsApp] இருந்துகூட வெளியேறினேன். அதற்குப் பல காரணங்கள். காணி நிலம் வேண்டுமென்பதில்லை என் ஆசை. விதைகள் வேண்டுமெனக்கு. ஆமாம், நான் ஒரு விவசாயியைப் போன்றவன். நேரமே என்னுடைய விதை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அப்படியே என அறிவேன். சரியான நிலத்தில் உழுது, பயிரிட்டு அதில் விளைச்சலைக் காண விரும்புகிறேன். இணைய உலகம் 24 x 7 விழித்துக்கொண்டே இருக்கிறது. உலகமெங்கும் நண்பர்களிருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் கிழக்கிலிருந்து வந்திருக்கும் செய்திகளைப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் பொறுப்புடன் பதிலளிப்பது; முடிந்தால் ஓரிருவருடன் உரையாடல்கள். பிறகு அடித்துப் பிடித்துக்கொண்டு நாளைத் துவக்க வேண்டியது. அத்தோடு முடிந்ததா என்றா அதுவும் இல்லை. நாள் முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது முறை புலனம் பார்த்துக்கொண்டு, எதைப் பற்றியாவது எவருடனாவது விவாதித்துக்கொண்டிருப்பது. இதனால் செய்யும் எந்தப் பணியிலும் கவனம் கூடவில்லை. என்னுடைய “கவன நீட்டம்” [Attention Span] வெகுவாகக் குறைந்து விட்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்தால் உலகையே மறந்து வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் முகநூல் மற்றும் புலன உலகுக்குள் புகுந்ததிலிருந்து நாற்பது பக்கங்கள் வாசிப்பதற்குள் நான்கு முறை கைப்பேசியை எடுத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

மாலை வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் முகநூல், புலனம் வழி  உரையாடல்கள் துவங்கிவிடும். தரமான புத்தகங்களைத் தேடிப்  பிடித்து வாசிப்பது, எழுதுவது, பியானோ வாசிப்பது, நண்பர்களிடம்   உரையாடல் (blood & flesh நண்பர்கள்,  சமூக வலைதள நண்பர்களல்ல), குடும்பம், தோட்டம், தொழில், யோகா என்று பல திறக்குகளில் இயங்கிக்கொண்டிருந்தவன், புலனத்தில் வரும் ஒன்றுக்கும் உபயோகமற்ற செய்திகளையெல்லாம் அதிதீவிரமாக வாசித்து அவற்றுக்கு என்னுடைய கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைக்கு என்னை அறியாமலேயே நகர்த்திச் செல்லப்பட்டுவிட்டேன். இரவு தூங்கப் போகலாம் என்று நினைக்கும் பொழுது, அமெரிக்கா விழித்துக்கொண்டு விடுகிறது. அவ்வளவுதான். முடிந்து போயிருந்த விவாதம் ஒன்று மீண்டும் தொடங்கும். நான் டின்னிட்டஸால் அவதியுற்றிருந்த காலங்களில் இந்த உரையாடல்கள் என் இரவைக் கடப்பதற்குப் பேருதவி புரிந்தது என்பது உண்மையென்றாலும், பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதையாகிவிட்டிருந்தது என் நிலை. ஒரு முறை ப்ரசல்ஸ் மாநகரத்தில் கார் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, சிவப்பு சமிக்ஞை விழாதா என்று ஏங்கி, விழுந்தவுடன் குதூகலத்துடன் கைபேசியை எடுத்துச் செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்குமளவு அடிமையாகி விட்டிருந்தேன். இன்னொரு முறை நண்பர் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசாமல் புலனம் வழி யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தேன். எரிச்சலடைந்த என்னுடைய தோழி திவ்யா, “மாதவன், போனை சற்று நேரம் தூரமாக வைக்கிறாயா?” என்று திட்டினாள்.

“உன் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய்” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்குமளவிற்கு பல செயல்களில் என்னை உட்படுத்திக்கொண்டிருந்தவன் இப்படியொரு பரிதாபகரமான நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று தீவிரமாக ஆய்ந்து பார்த்தேன். மேலும், எங்கள் வீட்டில் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் [Retrospective] நடத்துவோம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அனைவரும் பச்சை நிறத் தாள்களில் வீட்டில் “நன்றாகப்  போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுத வேண்டும். சிவப்பு நிறத் தாள்களில் “மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுதவேண்டும். இறுதியாக நீல நிறத் தாள்களில்  “பிரச்சினைகளைக் களைவதற்கான யோசனைகளை” எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிகமான ரெட் கார்டுகளை வாங்குவது அடியேனே. என் மனைவியும், மகனும் ஒரு மூன்று மாத காலம் என்னை கிழித்து எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கான நேரமே ஒதுக்குவதில்லை. எந்த நேரமும் கைப்பேசியிலேயே கிடக்கிறேன் என்பது அவர்கள் வாதம். அது முற்றிலும் சரியே! என் நூலகத்திலிருக்கும் புத்தகங்களும், என் வீட்டுச் செடிகளும், மரங்களும்கூட இதையே என்னிடம் எப்படித் தெரிவிப்பது என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. இல்லத்தில் “Sunday – no device day!” என்கிற முறையை அமல்படுத்தினோம். ஆனால் அதன் மூலம் நாங்கள் நினைத்த அளவுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. எனவேதான் முகநூல், புலனக் குழுக்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டேன். விலகுவதற்கான காரணங்களை விளக்கமாக எழுதி அத்தனை குழுக்களுக்கும் அனுப்பினேன். எல்லோரும் ஆதரவு தெரிவித்தார்கள். குழுக்களில் இருந்து மட்டுமே விடைபெறுகிறேன். ஆனால் எனக்குத் தனியாகச் செய்தியோ அல்லது மின்னஞ்சலோ அனுப்பலாம் என்று தெரிவித்தேன். அன்று வரை ரத்தமும் சதையுமாகப் பழகி, அவர்களுடனான உரையாடல்களுக்காக என் உடல், பொருள், ஆவி அத்தனையும் கொடுத்து வந்திருந்தேன். 😉 ஆனால் பாருங்கள், அன்றிலிருந்து இன்று வரை எனக்குத் தனியாக வந்த செய்திகளைக் “கைவிட்டு எண்ணிவிடலாம்”. என் இல்லாமையை பெரும்பாலானவர்கள் உணரவில்லை என்பது எனக்குத் தெளிவானது. ஆனால், என் தனிப்பட்ட நேரத்தின் பெரும் பகுதியை அவர்களுக்குத்தான் செலவழித்தேன். எனவே, சமூக வலைதளம் என்பது என்னளவில் ஒருவித மாயையே; போதையே. அஃதொரு மாயவலை.

சிறுவயதில் அப்பா அடிக்கடி சென்னை மாநகருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை வழியனுப்பிவிட்டால், அதை முற்றிலும் மறந்து நண்பர்களுடன் விளையாட்டுகளில் மூழ்கிவிடுவோம். அவரும் அவருடைய பணிகளையெல்லாம் முடித்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புவார். காலையில் எழுந்தவுடன் அப்பா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கும். ஓடிச் சென்று அவருடைய பெட்டியைத் திறந்து என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று துழாவுவோம். அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இதை எங்கள் வீட்டு ஆய்வுக் கூட்டத்தில் ஒருமுறை பேசி அலசியிருக்கிறோம். அன்றிலிருந்து, நான் நண்பர்களைச் சந்திக்கச் சென்றாலோ, வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலோ என் மனைவியிடமிருந்து எந்தச் செய்தியும் வராது. நானாகத் தொடர்புகொண்டால்தான் உண்டு.

எவ்வளவு பிரச்சினைகளைத்தான் ஒரு மனிதன் தீர்த்துவைக்க முடியும் என்கிற அளவுக்கு பிரச்சனைகளின் குவியலாக இருக்கிறது சமூக வலைத்தளம். அங்கு தொடர்ச்சியாக நடந்து வரும் புரட்சிகளின் ஜ்வாலை என்னைச் சுட்டெரிக்கின்றது. எல்லாமே அவசர புரட்சிகள். இந்த வாரம் புதிதாக உதயமாகும் புரட்சி, முந்தைய வாரம் உதித்த புரட்சியை அஸ்தமிக்கவைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் எதுவுமே நீடிப்பதில்லை. ஏனெனில் அடித்தளத்தை மாற்றும் நோக்கத்துடன் நாம் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் அதில் நீடித்த முயற்சிகள் இருப்பதில்லை. பல புரட்சிகள் வெறும் திசைதிருப்பல்களாகவே வருகிறது. புரட்சிக் கருத்து கூறுபவர்களிடம் தீர்க்கமாக எதையேனும் பரிந்துரைத்தால் மௌனமாகக் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே, அவற்றை வெறும் உணர்ச்சிகர எதிர்வினைகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். அதுதான் நம்முடைய படைப்பாற்றலுக்கு [Creativity] முழுமுதற்காரணம். ஆனால், நம்முடைய ஆகப்பெரும் குறைபாடும் இந்த “உணர்ச்சிவசப்படுதலே”. அதனாலேயே பலமுறை சமநிலையை இழக்கிறோம். அதுசார்ந்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை. உணர்ச்சிகளின் மீது கொஞ்சம் கண் வையுங்கள் என்று பேசினால் அதற்கும் கொந்தளிக்கிறார்கள். இதையெல்லாம் விமர்சிக்கும் அதே சமயம், புதிய மாற்றங்களை வரவேற்பவனாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், சமூக வலைத்தளங்களை முற்றிலும் வேண்டாம் என்றும் கூறமாட்டேன். அவற்றை உபயோகிக்கும் விதம், செய்திகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் உபயோகிக்கும் காலஅளவு போன்றவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நானேகூட முகநூலைப் பயன்படுத்தி வெள்ள நிவாரண நிதி திரட்டி சென்னைக்குக் கொண்டுவந்தேன். ஆனால், எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே என்னுடைய சாரதி, பணியாளர்கள், உற்றார், சுற்றார், என்று அடிப்படைத் தேவைகளுக்காக அன்றாடம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுதற்கான வல்லமையையே முழுவதும் பெற்றுவிடாத நிலையில், பெயர் தெரியாதவர்களுக்கு உதவி புரிவது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அதையும் அவர்களை அருகில் வைத்துக்கொண்டே செய்யும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெயர் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்பது என்னுடைய கருத்தல்ல. சுற்றி இருப்பவனின் கண்ணீருக்கு நெஞ்சைக்  கல்லாக்கிக்கொண்டு, எங்கோ இருப்பவனுக்கு அழுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே என் மனசாட்சி என்னிடம் கேட்கும் கேள்வி. அதுபோன்று கன்னத்தில் அறையும் விதமாக சில நிகழ்வுகள் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அலைந்தபோதே நடந்திருக்கிறது. அதைத்தான் நான் மாயை என்பது. மேலும், சமூக வலைத்தளங்களில் நடக்கும் பல போராட்டங்களுக்கு வெறும் தார்மீக ஆதரவை மட்டும் தந்துப் புரட்சி செய்துகொண்டிருப்பதும் என்னுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது.

இன்னொன்று – எல்லாவற்றுக்கும் கருத்து கூறவேண்டிய சமூக அழுத்தமும் அங்கு அதிகமாக இருக்கிறது. கருத்து கூறாதவனை உணர்ச்சியற்றவனாக பாவிக்கும் மனநிலையும் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கருத்துக்கூறாதவன் செய்துகொண்டிருக்கும் அரிய பல சமூகப் பணிகள் குறித்து இமியளவும் அப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது. இவையனைத்துக்கும் மேலாக நான் ஏற்கனவே சொன்னதுபோல் எனக்கு என் நேரம் வேண்டும். இணைய உலகில் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்து, கண்களை மூடி, மனதைச் சற்று அமைதிப்படுத்தி, சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் நான் கூற வருவதில் இருக்கும் உண்மை புலப்படலாம்; நியாயம் புரியலாம்.

தற்போதெல்லாம் நான் செய்தித்தாள்களைக்கூட அவ்வளவாக வாசிப்பதில்லை. செய்திகளுக்கா பஞ்சம் நம்மிடம். அன்றாடம் ஏதாவது ஒரு செய்தி; ஏதாவது ஒரு பிரச்சினை. வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முன்னெப்போதைவிடவும் தற்போது உலகம் அமைதியாகத்தான் இருக்கிறது என்கிற நேர்மறைச் சிந்தனை கொண்டவன் நான். முன்பெல்லாம் செய்திகள் வரலாறுகளான பிறகே நமக்குத் தெரிய வரும், அதனால், Ignorance was bliss. ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் செய்திகள் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அதிரடியாக அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும், அவ்வளவு ஏன் கழிப்பறை வரை நம்மைத் தேடி வந்து தாக்குகிறது.  நம்மைச் சுற்றி நடக்கும் “முக்கியமான விஷயங்களை”, “அவசியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளைப்” பற்றிய விழிப்புணர்வைக் கொன்றழித்து விட்டு, ஒரு மாய உலகில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன பெரும்பாலான செய்திகள். நாமறியாமலேயே நாமெல்லோரும் மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வலி மிகுந்த உண்மை.

செய்திகள் வேண்டாம் என்று கூறவில்லை. தேவையான செய்தி, தேவையற்ற செய்தி எவை என்பதை இனங்காண முயல வேண்டும்; முன்னுரிமைப்படுத்தவேண்டும். ஆனால், இன்றைக்கு முக்கால்வாசி செய்திகள் சந்தேகமில்லாமல் Toxic-ஆக இருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் மதம், அரசியல் சார்ந்த நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளும், அது சார்ந்த சண்டைகளும், சச்சுரவுகளும் பெரும் அச்சுறுத்தலைத் தருகின்றன. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்கூட வெறும் முகநூல் சண்டையில் பிரிந்துபோனதைப் கண்ணுற்றிருக்கிறேன். இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளுக்கு ஏன் மனிதர்கள் இரையாகிறார்கள்? ஒரு நாளைக்கு 4 செய்திகள் வாசிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு ஆயிரத்து ஐநூறு செய்திகள். இதில் எத்தனைச் செய்திகள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் பயன்பட்டிற்கும், எத்தனை பேர் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த உதவியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுகூட இல்லை.

ஒரு சில தேர்ந்தெடுத்தத் தளங்களை மட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன். இது தவிர தேவையான செய்திகள் நம்மை எவ்வழியிலேனும் வந்தடையும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மற்றபடி புத்தகங்கள் போதுமெனக்கு. கடந்த ஐந்து வருடங்களில், நான் அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் கடந்த வருடமாகத்தான் இருக்கும். எண்ணற்ற புத்தகங்கள். அதில் ஒரு முக்கியமான புத்தகமாக கால் நியூபோர்ட்டினுடைய “DEEP WORK”  புத்தகத்தைச் சுட்டுவேன். என்னுடைய அலுவலக நூலகத்தில்தான் முதன்முறையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். “DEEP WORK” என்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்ததால், அதை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அப்போதைய என்னுடைய சிந்தனைகளுக்கு இந்தக் கருத்தாக்கம் ஒத்துப்போனதால், அன்று மாலையே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். கவனச்சிதைவு நிறைந்த இந்த உலகில் நாம் அனைவருமே நுனிப்புல் மேய்பவர்களே. செய்யும் தொழிலில், செயலில், கலையில் “தேர்ச்சித்திறத்தை” [Mastery] அடையவேண்டுமென்றால், சித்தி கிட்டவேண்டுமென்றால் இந்த “DEEP WORK” மிகவும் அவசியம். நுனிப்புல் மேய்வதன் மூலம் எதிலும் MASTERY அடையமுடியாது. இயந்திரம் போன்று மாறுதல் இல்லாத, சுவையற்ற பணிகளை பெரும் சலிப்புடன் வாழ்க்கை முழுமைக்கும் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான். கால் நியூபோர்ட், கவனச்சிதைவுகளுக்கு மத்தியில் எதிலும் ஆழ்ந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைத்து, அதை அடைவதற்கு சில விதிகளை முன்வைக்கிறார். அதில் மூன்றாவது விதி என்ன தெரியுமா? “சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுங்கள்!” [Quit Social Media] என்பது.

கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பத்தாம் வகுப்புத் தோழர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் புலனக் குழுவில் என்னை இணைத்தார்கள். என்னை அந்தக் குழுவில் அவர்கள் இணைப்பது இது இரண்டாவது முறை. மறுப்பதற்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த வருடத்தோடு நான் பத்தாம் வகுப்பு படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது என்று நண்பனொருவன் நினைவுபடுத்தினான். ஒன்றிரண்டு குழுக்களில் இருப்பதில் பிரச்சினையில் இல்லை. பல குழுக்களில் இருந்தால் அது நம் நேரத்தைத் தின்றுவிடும். ஆனால், அதற்கென்று குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கிவிடவேண்டும். அதிக நேரம் செலவழிக்கக்கூடாது. நான் பகிரும் தகவல்களின் மூலம் அவர்களுக்கு ஏதெனும் பயனிருக்கிறதா என்று கணக்கெடுப்புகூட நடத்தினேன். பெரும்பாலான புலனக் குழுக்களில் யாரும் அவர்களைப் பற்றி பேசிக்கொள்வதில்லை. மீம்ஸ்களிலும், பயனற்ற துணுக்குகளிலும் நேரத்தை வீணாக்குகிறார்களே என்று மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் ஒரு விதையன்றோ? அத்திப் பூத்தாற்போல சில சமயங்களில் யாரேனும் மலரும் நினைவுகளைக் கொண்டுவருவார்கள். ஆனால், நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய நிலம் பெரியது; விதைகள் குறைவு. என் பட்டியலில் இருக்கும் விஷயங்களைச் செய்து முடிப்பதற்கு நேரமே போதவில்லை. இப்போது இந்தக் குழுவில் என்னுடைய இயக்கம் சற்று அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. நான் ஒரு extrovert! மற்றவர்களிடம் பேசுவதன் மூலமாகவே என்னுடைய உற்சாகத்தையும் ஆற்றலையும் பெறுகிறேன். ஆனால், அவர்கள் எல்லோருமே நேரில் வந்து உரையாடினால் அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த முறை இந்தியாவுக்கு செல்லும்போது அவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்க இருக்கிறேன். அதன் பிறகு விலகலாம் என்றிருக்கிறேன். தற்போதைக்கு நட்புகளின் சிந்தனைக்கு முக்கியமான சில விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகக் குழுவில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய மனைவியிடம் “லூவன் நகரில் இருக்கும்போது நிறைய எழுதினேன். ஆனால் இப்போது இங்கே தீனன் நகரம் வந்த பிறகு அந்த அளவுக்கு எழுத முடிவதில்லை.” என்று கூறினேன். அதற்கு அவள், “அப்போதெல்லாம் நீ அடிக்கடி பேருந்திலும், இரயிலும் பயணிப்பாய். சுற்றி நடப்பதை அவதானித்து, மாலை வீட்டுக்கு வந்ததும் சொல்வதற்கு விஷயங்கள் உன்னிடம் ஏராளம் இருக்கும். இப்போதெல்லாம் தனியாகக் காரில் செல்கிறாய். காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.” என்றாள். அவள் கூறியதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. என்னுடைய சக பயணிகளை நான் அவதானித்ததை வைத்து நான் எழுதிய சிறுகதைகளே நான்கைந்து தேறும். மாறாக காரில் செல்லும்போது நிஜ உலகத்திடமிருந்து தொடர்பு அறுந்துவிட்டதைப்போல உணர்ந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் பலவித வாகனங்களையும் சிவப்பு விளக்குகளையும் தவிர வேறெதையும் பார்க்கமுடிவதில்லை. அதிலென்ன சுவாரசியம் இருக்கிறது.  இரத்தமும் சதையுமாக நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் நிஜ மனிதர்களின் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு உலகில் சஞ்சாரம் செய்து அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதும் அதைப் போன்றதே. எப்படி இணையத்தில் வாசிப்பது ஒரு  சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதற்கு ஈடாகாதோ, அதுபோலவே, சமூக வலைத்தளங்களில் லைக் இட்டுவிட்டு உரையாடிக்கொண்டிருப்பது என்பது, ஒரு நண்பனுடன் காலாற நடந்துச் சென்று தெருமுனையில் தேநீர் பருகிக்கொண்டே உரையாடுவது போலாகாது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவுக்கும் “போதிதர்மரும் தங்கமீன்களும்” என்கிற தலைப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதுதானே? விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு டாக்டர் எரிக் தோபோலுடைய “The Creative Destruction of MEDICINE” என்கிற புத்தகத்தை வாசித்தேன். அதில் எரிக், தொன்னூறுகளில் 12 நொடிகளாக இருந்த  மனிதனுடைய “கவன நீட்டம்” தற்போது 8 நொடிகளுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தங்கமீன்களின் கவன நீட்டமான 9 நொடிகளைவிடவும் குறைவு என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இந்த ஆராய்ச்சியே தவறு என்றுகூட ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது எனக்கு பௌத்தத் துறவியான போதிதர்மர் நினைவுக்கு வந்தார். மீன்தொட்டியில் இருக்கும் தங்கமீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுமளவுக்கு, தியானநிலையில் இருக்கும் போதிதர்மரைப் போன்று முண்டைக்கண்கள் எதையோ உற்று நோக்கிக்கொண்டு அசைவற்றுக் கிடக்குமவை. மீன்தொட்டியைச் சற்று லேசாகத் தட்டினால் போதும், அந்தக் கணமே திடுக்கிட்டு, வெடுக்கென்று திரும்பி சடுதியில் ஓடி ஒளிந்துகொள்ளும். அதற்கு மாறாக, குகைச்சுவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போதிதர்மரைக் கயிற்றால் கட்டி இழுத்தாலும் மனிதர் அசரவில்லையாம். அது ஒரு “DEEP WORK” நிலை. சமூக வலைத்தளம் ஒரு மீன்தொட்டி போன்றதே. அதில் முண்டைக்கண் துருத்திக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன நம்முடைய மனங்கள். தொட்டியை டொக்கென்றும், டக்கென்றும் தட்டி கவனத்தைத் திசைதிருப்புவதற்கென்று ஒரு கூட்டமே அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களின் தட்டல்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று, எதிர்ச்செயலாய் திடுக்கென்றும், வெடுக்கென்றும், நடுக்கத்துடன் இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன தங்கமீன்களாய் நம் மனங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.