பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஜேக்சன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி (152)

 1. உழைப்பே உயர்வு!!
  =====================
  முண்டியடித்து முன்னேறிச்சென்று
  கைகளை நீட்டி யாசகம் கேட்பது
  அடிக்கடி நிகழ்கின்ற அவலம்!!
  ஆன்மீக விழாவோ அரசியலோ
  எதுவாயினும் இலவசங்கள்
  இல்லாமல் நடப்பதே யில்லை!!
  வாங்கும் வசதி வாய்க்கவேண்டி
  வாழ்ந்திடப் பழகிக்கணும்!!
  வாக்குகளையும் விலை தந்து
  வாங்கும் நிலை வந்ததினால்
  அதிகம் தருபவன் வெற்றிபெற்று
  அதைவிடத்திருடுபனாகிறான்!!
  தவறுகளுக்குக் காரணகர்த்தா
  தருபவரைவிட பெறுபவர்தானே!!
  மீன்களைபெற்றால் உணவாகும்
  அதைப்பிடிக்ககற்க உயர்வுவரும்!!
  கையூட்டு இல்லா நல்லசமுதாயம்
  கண்டிட வேணுமென்றால் யாரும்
  கண்டிப்பாய் ஏந்திட மாட்டோம்
  கரங்களை எனஉறுதியேற்கணும்!!
  உழைத்துச்சேர்த்து பொண்டுபுள்ள
  உறவு நட்புக்கு கடமை செய்வதே
  உண்மையான அன்பளிப்பாகும்!!
  ஊரான்காசு எதுக்கு வேணும்???..
  ??????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி…ஈரோடு….
  9442637264….
  ??????????????

 2. மனிதா உணர்ந்திடு உன் ஆற்றலை…!
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  சுடரொளி கண்கள், செப்பும் நல்வாய்,
  வயிரம் பாய்ந்த மரநிகர் உடம்பில்
  வயதின் மூப்பு தோன்றிட வில்லை..
  நாற்றம் உணர்ந்திட அமைந்தவோர் நாசியில்
  நலமே யன்றி குறைவேது மில்லை…
  கேட்டு இன்புறும் செவிக ளிரண்டில்
  கூரிய செவித்திறன் குறையவு மில்லை…
  இத்தனை சிறப்புகள் மெத்தவும் இருந்தும்…
  இலவசம் என்பதற் கலைவதும் ஏனோ…?

  ஐம்பொறி யனைத்தையும் ஒருங்கே பெற்று…
  ஐயத்திற் கிடமில்லா ஆற்றலும் பெற்று…
  கைகளும் கால்களும் உறுதியைப் பெற்று…
  கையாளும் வினைகளில் வல்லமை பெற்று…
  சுட்டும் அறிவாம் பகுத்தறி வுடனே…
  சிந்திக்கும் திறமை எல்லாம் பெற்று…
  இலங்கும் இனிய மானிடப் பிறப்பே…
  இத்தனை இத்தனை ஆற்றல் இருந்தும்…
  இரந்து வாழ்தல் என்பது நலமா…?

  ஓரறிவு முதலாய் ஐந்தறிவு வரையுள்ள…
  ஓர்மம் கொண்ட உயிர்கள் யாவும்…
  தனக்கென் றேதும் கேட்ப தில்லை…
  தனக்கென் றேதும் கொள்வ தில்லை…
  இருப்பதைக் கொண்டு மகிழா விட்டால்..
  இதயம் அமைதி பெற இயன்றிடுமா…?

 3. உழைத்து வாழ்வோம்@@@@@@@@@@@@@@@@ “ஏற்பது இகழ்ச்சி”!
  இது ஔவையின் அமுத மொழி!
  இதை உணர்ந்தோர் வாழ்க்கை!
  என்றும் மகிழ்ச்சி வழி!
  இலவசம் என்ற ஒன்று உலகில் இல்லை!
  இலவசத்தின் முடிவு என்றும் தொல்லை!
  தூண்டில் புழு,மீனுக்கு எமனாகும்!
  இலவசம், நம் வளர்ச்சிக்கு எமனாகும்!
  இதை உணர்ந்தவர் வாழ்வு என்றும் இனிதாகும்!
  வாங்கும் கைகள் தாழ்ந்திருக்கும்!
  உழைப்பை நாளும் மறந்திருக்கும்!
  சோம்பல் தானே துணையிருக்கும்!
  உழைப்பை இன்றே விதைத்திடுவோம்!
  பலனை உரிமையுடன் அனுபவிப்போம்!
  உழைப்பின்றி கிடைக்கும் பயனெல்லாம்!
  களவில் வந்ததாய் புறக்கணிப்போம்!

 4. பரிசாய்…

  பரிசுகள் வேண்டும் வெற்றிக்கு
  பார்க்கும் இலவசம் பரிசில்லை,
  பெரிதாய்க் குடமும் குத்துவிளக்கும்
  கொடுப்ப தில்லை வெற்றியையே,
  அரசியல் அவலமாய் வந்ததிதுவே
  ஆசை அதன்மேல் வேண்டாமே,
  உரிய பரிசினைப் பெற்றிடவே
  உழைத்திடு உண்மையாய் வாழ்வினிலே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. இலவசங்களில் தடம்புரளும் உள்ளங்கள்
  இரண்டு கரங்கள் இருந்தென்ன
  இரத்தல் இழிவென புரியாதா
  உழைப்பின் உயர்வறியா மூடர்களே !
  உயர்த்தும் கரங்களில் கறை காணீர் !
  இலவசம் வழங்கியே பிழைப்போரும்
  இலவசம் வாங்கியே பிழைப்போரும்
  மனிதர்களில் பிழைகளாக……
  உடல் களைக்க உழைப்பவரும்
  உடல் ஊனம் மறந்து உழைப்பவரும்
  உணர்த்தும் நியதி புரியாது
  உண்டுறங்கும் மானிடமே
  இருக்கிறவர் இல்லாதவர் பேதமின்றி ……..
  இலவசத்தின் வசமானவரே !
  இளமையின் வேகம் இது தானா
  இலட்சியம் தொலைப்பது சரி தானா
  ஈயென இரத்தல் இழிவாகும்
  ஈயாய் மொய்ப்பது அவமானம்
  இல்லாமை ஒழிக்க இலவசமா
  பிழைப்பற்ற மானுடரே !
  பிழைத்தெழுவீர் இப்போது

 6. வருகின்ற தேர்தலில்..!
  ================

  வருகின்ற தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க
  .
  ……….வாரிக் கொடுக்கிறோம் பெற்றுச் செல்லுங்கள்..!
  .
  தருகின்ற இனாமெல்லாம் போதா தென்றால்
  .
  ……….தராசுக் கிணையாய் மேலும்பலவும் தருவோம்..!
  .
  பொருத்திருந்து பாரும்!நாங்கள் ஆட்சியைப்
  .
  ……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!
  .
  தருமிந்த இனாமுக்கு வெகுமதியாக உங்கள்
  .
  ……….தங்கமான ஓட்டை எங்களுக்குத் தந்திடுவீரே..!
   

  இப்போது பெற்றிடுவீர் ஈதொரு அடையாளம்
  .
  ……….இந்தச்சிறிய எவர்சில்வர் குடத்தை மட்டுமே..!
  .
  அப்போது கொடுத் திடுவோம் ஆளுக்கொரு
  .
  ……….அண்டா குண்டாவும் அரிதான வெள்ளியிலே..!
  .
  ஒப்பாகா உங்களுயர்ந்த வாக்குரிமையை வேறு
  .
  ……….ஒருவருக்கும் விற்று விடாதீர் வேண்டுகிறோம்..!
  .
  தப்பாது வாக்களியுங்கள் தாங்கள் மனசாட்சி
  .
  ……….தவறா தெங்களை வெற்றியுறச் செய்யுங்கள் ..!
   

 7. குடிமுழுக்கு

  குடமொழுக்கிக் குடமுயக்கில் குடமுழுக்கிக் குடிப்பூட்டிக்
  குடி வழுத்தும் குடிமுழுக்கு

  பொருள்
  குடங்களைச் சொரிந்து, குடதானத்தால் மக்களை வசீகரித்தணைத்து, அவர்களை உச்சிகுளிரவைக்க, அதனால் (மது ஊட்டியதார்ப்போலொரு) போதை கொண்டவராய், மக்கள் (தம்மை வாகாய் அடிமைப் படுத்தி) ஆட்டுவிப்பவரை வாழ்த்தும் நிலையில் குடிமையே (குடாத்துள்) மூழ்கித்தொலைந்தது.

 8. எழுத்துப் பிழையை யாரும் கவனிக்க வில்லை போலும்…

  பொருத்திருந்து பாரும்!நாங்கள் ஆட்சியைப்
  .
  ……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!
  .
  “ரு” என்பது “று” என்று வரவேண்டும், ஆதலால் இந்த வரியை மாற்றி அமைக்கிறேன்.

  பொருளற்றாரினி இல்லை!நாங்கள் ஆட்சியைப்
  ……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *