புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையா?
பவள சங்கரி
தலையங்கம்
தொழில்நுட்பங்கள் முன்னேறி வருவதும், அதனால் தக்கவாறு பயன் பெறுதலும் பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவை யார் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கக் கூடியது என்பதை நன்கு ஆய்ந்தறிந்த பின்பே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவசியம். இல்லையென்றால் அவை தேவையற்ற விரயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரமே இந்தத் திட்டம். காரணம் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்புடையது அனைத்தும் இந்தியாவிற்கு ஏற்புடையதன்று. சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள அனைத்து வாகனங்களும் நிரந்தர ஒளியேற்றப்பட்டு (ஹெட் லைட் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பது) வருகின்றன. இவை நமக்குத் தேவையா, இதனால் நமக்கு என்ன பயன் என்ற ஆய்வு நடத்தப்பட்டதா? மேலை நாடுகளில் அதிக நேரங்கள் பனியால் அல்லது இருட்டினால் சூழப்பட்டுள்ள சூழ்நிலைகள் இருக்கின்றன என்பதால் அங்கு இதுபோன்ற வடிவமைப்புடன் தயாரிக்கப்படும் வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். வருடத்திற்கு சுமாராகப் பத்து மாதங்கள், இரவு நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் பிரகாசமாக, சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருக்கிற இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இது போன்ற வடிவமைப்புகளுடனான வாகனங்கள் நிச்சயம் பயனற்றது. இதனால் தேவையற்ற செலவுகளும், தேய்மானங்களும் ஏற்படும் வாய்ப்புதான் அதிகம். உற்பத்தியாளர்களின் இலாபம் கருதி மட்டுமே செய்யப்படும் செயல் திட்டம் இது. இதனால் வாகன உபயோகிப்பாளர்களுக்கு பணம் விரயமே தவிர வேறு எந்த பயனும் இல்லை. வாகன உற்பத்தியாளர்களும், அரசும் இது குறித்து தகுந்த ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.