சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை அடிக்கடி சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
“நீ எப்போது இங்கு வந்தாய்?” என்று கேட்டார்.
“நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்” என்றேன்.
“இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?” என்றார்.
“வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்.” என்றேன்.
“இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?”
“நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம்பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையைக் கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.” என்றேன்.
சிரித்துக்கொண்டே, “இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது.” என்றார்.
“உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?” என்று கேட்டேன்.
“என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, ‘அது பணக்காரர்களுக்கான தேசம்!’.” என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்! உன்னுடைய தேசமும் அப்படித்தான்.” என்று அவர் மேலும் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.
அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன்.
“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.