என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 22
–சு.கோதண்டராமன்.
மருத்துகளும் வாயுவும்
மருத்துகள்
மருத்துகள் என்பது ஒரு தெய்வக் கூட்டம். இதில் மொத்தம் 49 பேர் — ஏழு ஏழு பேர் கொண்ட ஏழு குழுக்கள்- இருப்பதாக ரிக் 5.52.17 கூறுகிறது. இவர்களது எண்ணிக்கை த்ரிஷஷ்டி என்று ரிக் 8.96.8 கூறுகிறது. இதன் நேர்ப் பொருள் 3X60=180 ஆனால் சாயணர் இதை 3+60= 63 என்று பொருள் கொள்கிறார். மொத்தத்தில் இவர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் என்பது அறியப்படுகிறது.
இவர்களது தந்தை ருத்ரன். தாயின் பெயர் ப்ருச்னி. இதற்குப் புள்ளிகள் கொண்டவள் என்று பொருள். இது ஒரு பசு என்று கூறும் குறிப்புகள் உள்ளன.
இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையர். இவர்களில் மூத்தவர் இளையவர் என்று எவரையும் கூற முடியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. இவர்கள் இளைஞர்கள், களைப்பு அறியாதவர்கள். ரிஷபம் போலக் கொம்புகளையும், சூரியன் போலக் கண்களையும், குதிரை போல அழகிய தோற்றத்தையும், மாப்பிள்ளை போலக் கம்பீரத்தையும் கொண்டவர்கள்.
இவர்கள் விண்ணில் வாழ்பவர்கள். இவர்களது வாகனம் கிலாஸ்ய, அதாவது, வெண்புள்ளிகள் கொண்ட மான். அது ப்ருஷத் அச்வா (புள்ளிகளுள்ள குதிரை) என்றும் அழைக்கப்படுகிறது.
காட்டைக் கலக்கி, மலையைப் பிளக்க வல்ல இவர்களின் உதவியோடுதான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நதிகளை விடுவித்தார். வலிமையானவர்களும் விரைந்து செல்பவர்களுமான இவர்களை மலைகளோ நதிகளோ தடுக்க முடியாது. விண்ணையும் மண்ணையும் நடுங்க வைப்பவர்கள். மருத்துகளால் உதவப்பட்டோரை எவரும் வீழ்த்த முடியாது. இவர்கள் இந்திரனின் படை வீரர்கள். இந்திரனுக்கு அவருடைய அருஞ் செயல்களில் உதவியதால்தான் இவர்கள் யக்ஞியமான பெயர்களைப் (தேவத் தன்மை) பெற்றார்கள் என்கிறது வேதம்.
உரத்த குரலில் பாடுபவர்கள், மழையின் சோதரர்கள், வர்ஷ நிர்ணிஜ (மழையை உடையாகத் தரித்தவர்கள்), மேகத்தை விடுவிக்கிறவர்கள், மறைந்த செல்வத்தை வெளிப்படுத்துபவர்கள், தெய்வீக செல்வத்தைக் கீழே இறக்கித் தருபவர்கள், மூவுலகிலும் நதிகளின் சுழல்களிலும் இருப்பவர்கள் என்று கூறப்படுவதிலிருந்து மருத்துகள் என்பது புயற் காற்றைக் குறிக்கும் என அறிகிறோம்.
புயற் காற்று கண்ணுக்குத் தெரியாது என்றாலும் இவர்கள் கண்ணுக்குத் தெரிகின்றவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தங்க ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள், தங்க ரதத்தில் செல்கிறார்கள், தங்க நகை அணிந்துள்ளார்கள். ஒளி உடை தரித்தவர்கள். இவர்கள் செல்லுமிடத்தில் எல்லாம் ஒரு ஒளி பின் தொடர்கிறது. மின்னலை ஆயுதமாக உடையவர்கள் என்ற வர்ணனைகள் அவர்கள் புகழ் ஒளி பெற்றவர்கள் என்பதையே குறிப்பிடுகிறது.
தெய்வ பூஜையில் ராட்சசர்களை அழைக்கும் மனிதர்களைச் சக்கரமில்லாத தேரில் வைத்துக் கீழே தள்ளுவது இவர்களது திறமை. இவர்கள் பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களிடம் வருகிறார்கள், அவர்கள் அளிக்கும் உணவை ஏற்று மகிழ்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக செல்வம், மக்கட்பேறு, உணவு, நீண்ட ஆயுள் முதலியன கொடுத்து அருள் புரிகிறார்கள். மக்களைக் காப்பாற்றுகிறார்கள். ஸுதானவ: (மிகுதியாகத் தானம் கொடுப்பவர்கள்) என்ற அடைமொழி இவர்களுக்குப் பல முறை அளிக்கப்படுகிறது.
எல்லாத் தேவர்களுக்கும் வழங்கப்படும் அடைமொழிகளான கவி, அறிவாளி, நர, ருதாவ்ருத, ஸ்வதாவின் படி நடப்பவர்கள், சூரி என்பவை இவர்களுக்கும் கொடுக்கப்- பட்டுள்ளன.
வழிபாட்டுக்கு உரிய பெருமை உடையவர்கள் என்பதால் யஜத என்று சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்திரனையும் வருணனையும் வர்ணித்தது போல் இவர்களையும் சூரியன் பயணிக்க ஒரு ஒளிமயமான பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் என்று கூறி பரம்பொருளாகவே காண்கிறார்கள். 8.7.8
வாயு
மருத் என்பது மழை தரும் காற்றையும் வாயு என்பது சாதாரணக் காற்றையும் குறிப்பிடுகின்றன. மருத்துகள் பற்றி விரிவாகப் புகழும் வேதம் வாயுவுக்கு அவ்வளவு சிறப்பிடம் தரவில்லை.
மற்ற தேவர்களைப் போல வாயுவும் அசுரர், மயோபு மகிழ்ச்சி தருபவர், த்ரவிணோதா செல்வம் கொடுப்பவர், நரர் என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்-படுகிறார். வாயுவின் தனித்தன்மைகளாவன- இவர் ப்ருஷத் யோனி (பல நிறமுள்ள ஆகாயத்தில் தோன்றியவர்). பஞ்சஹோதா (ஐந்து வகையான வாயுக்களையும் அழைப்பவர்). அதூர்த்த பந்தா (தடைபடாத வழியை உடைவர்). சோமபானம் வடிக்கப்பட்டால் அதை முதலில் பருகும் உரிமை வாயுவுக்கே உள்ளது.
வாயு பூஷனுடன் சேர்ந்து பிரார்த்தனைகளைத் தூண்டுகிறார். இவருடைய குதிரைகளின் பெயர் நியுத். குளிர்ந்த இடத்திலிருந்து வெப்பமாக உள்ள இடத்தை நோக்கி வீசுவது வாயுவின் இயல்பு. அதை ரிஷி, வறுமை உள்ள இடத்துக்கு செல்வம் கொடுக்கப் போகிறார் என்று வர்ணிக்கிறார்.
படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா – http://upload.wikimedia.org/wikipedia/commons/1/19/Vayu_Deva.jpg