எல்லை என்பது
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (49)
எல்லை என்பது
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4/[/mixcloud]
எல்லை என்பது
இல்லை! இதற்கு மேல்
இன்னொன்று இருக்க முடியாது
இப்படிச்
சொல்லிச் சொல்லித்தான்
எல்லைகள் சொள்ளையாகிப் போயின
சிறகின்றிப் பறந்த மனிதன்
கால்முளைத்து மலினப்பட்டான்
பரந்து கிடக்கிறது வானம்! அதைப்
பருகிப் பாடுகிறது பறவை!
எல்லையற்ற பிரபஞ்சத்தில்
எங்கேநாம்? எவ்வளவு நாம்?
ஆனால் நம் உள்ளேதான்
அண்டமும் பிண்டமும்
வீடும் வீதியும் வீணாகும் தேகமும்
கூடாகுமோ என்று கூரையைப் பிளந்துகொண்டு
கொக்கரிப்பது ஒருவகை
படைகளும் அம்புகளும் பரபரத்து வந்தாலும்
முன்னே யோகதண்டம் நட்டு
முகவாய் சற்றே தூக்கிப்
பதறாமல் அமர்ந்து பார்த்திருப்பது ஒருவகை
ஏறி இறங்குமொரு மலைவெளியில்
யாரோ எறிந்த மாராப்பு போல
வளைந்து நெளிகின்ற சிற்றோடையால்தான்
வனப்பு விகசிக்கிறது
பாறையில் தலைகாட்டும்
பசும்புல்தான் அதற்குப்
பதவி கொடுக்கிறது
பொட்டுவைத்த நெற்றி
முத்தமிட்ட கன்னம்
கூட்டக் களேபரத்தில் முறுவலிக்கும் குழந்தை
வானைத் தின்றபடி வளையவரும் வெண்ணிலா
இப்படி
பெரிதுகளுக்குச் சிறிதுகள்தான்
பெருமை சேர்க்கின்றன
அவற்றுள்ளும்
சின்னஞ் சிறுசுகள்
இன்னும் கவர்கின்றன
ஓடையில் துள்ளும் கெண்டை
ஒசிந்த புல்லில் சிரிக்கும் சிறுமலர்
பொட்டைச் சுற்றியொரு வியர்வை அரும்பு
கன்னத்தில் காயாத ஈரம்
குழந்தையின் வாயில் தின்பண்டத் துகள்
வெண்ணிலவின் தங்கக் கவசம்
எது பெரிது? எதுதான் சிறிது?
எல்லையென்று ஒன்று ஏது?
என்ன பார்க்கிறாய் நீ?
உன்னைவிட உயர்ந்தவன் என்றோ
உன்னை உயர்த்துபவன் என்றோ
என்றும் நான் நினைப்பதற்கு
எதுவுமில்லை கண்மணி
நிலவாய் இருந்த நீ
நிலத்திற்கு இறங்கிவந்தாய்
முகம் துடைக்கும் முகிலாகச்
சற்று
முன்பு வந்து காத்திருந்தேன்
ஒருமுறை துடைத்துவிட்டுத்
தூர எறிந்துவிடு
வையத்தில் அப்படித்தான்
வற்றாத சுனைகள் தோன்றின.