மாதவன் இளங்கோ

thalys

 

இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாம்.

என்ன செய்வது? சரவண பவனில் நான் கேட்டிருந்த கொத்துப் பராட்டாவையும், ரோஸ்மில்கையும் கொண்டுவருவதற்கு, கொஞ்சமல்ல நிறையவே தாமதம் செய்துவிட்டார்கள். நானோ அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இந்த பாரீஸ் நகரத்தை விட்டுச் செல்வது என்கிற உறுதியோடு இருந்தேன். ஆசை யாரை விட்டது? பெல்கியத்தில் ஒரு சரவண பவன் இருந்தால் நான் இந்த அற்ப கொத்துப் பராட்டாவிற்கு ஆசைப்பட்டிருப்பேனா? இருந்தாலும் தாலிஸ் இரயில் இன்னும் அரைமணியில் கிளம்பவிருந்த நிலையில், என் தாயாருக்கு வேகமாக நடப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், உருண்டையான மனைவியையும், ஐந்து வயது மகனையும், மூன்று பெரிய பயணப்பெட்டிகளை வைத்திருந்த நிலையில், இந்தக் கொத்துப் பரோட்டா ஆசை தேவையற்ற ஒன்று!

இன்னும் இருபது நிமிடங்கள்தான். தாலிஸ் கிளம்பிவிடும். அவர்களை இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து போகச் சொல்லிவிட்டேன்.

இறுதியில் கொத்துப் பரோட்டா வந்து சேர்ந்தது. அதிவிரைவாக ஒரு வாய் பரோட்டா, ஒரு வாய் ரோஸ்மில்கென்று மருந்து விழுங்குவது போல் விழுங்கிவிட்டு, பெட்டியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

இன்னும் ஐந்தே நிமிடங்கள்…

பாரீஸ் வடக்கு இரயில் நிலையம் சரவண பவனிலிருந்து அத்தனை தூரமொன்றுமில்லை. நடக்கும் தூரமே. இருந்தாலும், தாலிஸ் ஆயிற்றே! அதுதான் இந்த ஓட்டம். எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்ப்பது தெரிந்தது. இவர்களோடு இது ஒரு பெருந்தொல்லை! இந்த ஊர்க்காரர்கள் ஓடினால், “பாவம், ஏதோ அவசரம் போலிருக்கு!” என்று பரிதாபத்துடன் பார்ப்பார்கள் அல்லது கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் நான் அவசரத்துக்கு ஓடினால், “இந்தியன் ஓடுகிறான்”, “அநாகரிகமானவன்!” என்பது போன்ற பார்வையை வீசுவார்கள். அவர்கள் நினைப்பது எனக்கு எப்படித் தெரியுமா? அந்த முகத்தைப் பார்த்தாலே போதும். ஏதோ ஐந்து நாட்களுக்கு முன்பே அழுகிப்போன மாம்பழத்தை தெரியாமல் தொட்டுவிட்டது போன்று முகத்தை சுளிப்பார்கள். சிலர் ஏளனமாகச் சிரிக்கவும் செய்வார்கள்.

பிரசல்சு நகரம் செல்லும் தாலிஸ் இரயில் எட்டாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பும் என்று பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி வந்த அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே எட்டாவது பிளாட்பாரத்திற்கு ஓடினேன்.

தொலைவில் முதல் வகுப்புப் பெட்டிக்கு முன்பு அதிகாரியுடன் என் குடும்பம் நின்று கொண்டிருந்தது. முதல் வகுப்பு என்று கூறினேன். நான் வாங்கும் சம்பளத்திற்கு அத்தனை பேரையும் முதல் வகுப்புப் பெட்டியில் எல்லாம் அழைத்துப் போகவே முடியாது. முடிந்தாலும், தேவையற்ற ஒன்று. ஏதோ எங்கள் அதிர்ஷ்டம், நான் முன்பதிவு செய்த தினத்தன்று இரண்டாம் வகுப்பு விலைக்கே முதல் வகுப்பு பயணச்சீட்டு கிடைத்தது. அதுவும் தாலிசில்! அது என்ன தாலிஸ்? மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் வண்டி அது. நான் வசிக்கும் பிரசல்சு நகரத்திற்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம்.

அந்த இரயில் வண்டியைப் பிடிக்காமல் விட்டால் என்னவாகிவிடப் போகிறது? என் மனைவிக்கு தாலிசில் முதன்முதலாக முதல்வகுப்பில் செல்லும் பாக்கியம் கிட்டாமல் போகும். வரும்போது இரண்டாம் வகுப்பே விமானத்தை விடப் பிரமாதமாக இருக்கிறது என்று கூறிய என் தாயாருக்கு அதைவிடப் பிரமாதம் என்ன என்பது தெரியாமல் போகும். எனக்கு? ஒன்றுமில்லை. நான் நேராக நிலா சலூனிற்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

பாரீசில் நிலா சலூனா? அந்நகரின் வடக்கு இரயில் நிலையம் அருகே உள்ள லா சாப்பல் பகுதி ஒரு குட்டித் தமிழ் தேசம். முனியாண்டி விலாசு, மாணிக்க விநாகர் ஆலயம் உட்பட பல தமிழ் விஷயங்களை, விசேஷங்களை அங்கு காணலாம். எனக்கு தமிழகத்தின் நினைவு அழுத்தும் போதெல்லாம் ஒரு வார இறுதியில் கிளம்பி பாரீஸ் நகரம் சென்று விடுவேன். நம் மக்களைப் பார்க்கலாம். நிறைய தமிழ் கேட்கலாம். ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை கணபதி அங்காடியில் வாங்கி வந்து விடலாம். முக்கியமாக முருங்கைக்காய்!

இந்த முறை கணபதி அங்காடி மூடியிருந்தது. வி.எஸ்&கோ ட்ரேடர்ஸ் பேரங்காடியில் வாங்கிய முருங்கைக்காய் நிரம்பிய பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பயணப்பெட்டியை இழுத்துக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை சென்றடைந்தேன். ஏற்கனவே எங்கள் அனைவருடைய பயணச்சீட்டுகளையும் அதிகாரியிடம் கொடுத்திருந்தாள் என் மனைவி. விதிப்படி 2 நிமிடங்களுக்கு முன்னதாகவே பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்து விட்டதால், அவர் எதுவும் சொல்லவில்லை. புன்னகைக்கவும் இல்லை.சுளித்துக்கொண்டு பார்ப்பதற்கு இந்தப் பார்வை பரவாயில்லை என்று தோன்றியது. எனக்குப் பிறகு மூன்று ஐரோப்பியர்கள் ஏறினார்கள். என்னிடம் காண்பிக்காமல் சேமிக்கப்பட்ட புன்னகை அவர்களுக்கு பரிமாறப்பட்டதைக் கண்டேன். இதெல்லாம் பழகிவிட்டது.

பயணப்பெட்டிகளை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. முருங்கைக்காய் பையையும் என் மகனுக்கு தேவையான தின்பண்டங்கள் நிறைந்த பையையும் மட்டும் எடுத்துக்கொண்டேன். அதில் தான் அவனுக்குத் தேவையான தற்காப்பு வாந்தி உறையும் இருந்தது. இல்லையென்றால் தாலிஸ் நாறிவிடும் அபாயமிருந்தது. அந்த விசேஷ கைப்பையிலுள்ள பல சமாச்சாரங்கள் எதற்கு என்பது என் மனைவி மட்டுமே அறிந்த விஷயம். சில தாய்மார்கள் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது.

அந்தப் பெரிய மூன்று பயணப்பெட்டிகளை அவற்றிக்கான இடத்தில் அடுக்கி வைக்க அந்த அழகான பணிஞை உதவி செய்தாள். ‘மெர்சி’ என்று பிரெஞ்சு மொழியில் நன்றி தெரிவித்தவுடன். ‘நோ ப்ராப்ளம்’ என்று ஆங்கிலத்தில் அழகிய புன்னைகையுடன் பதிலளித்தாள். அது அவள் வேலை. அவள் டச்சுக்காரியாகவோ அல்லது பிளம்மியப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். உள்ளே இருந்து என் மனைவி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு சிரிக்கும் போது என் மகனைப் போலவே கன்னத்தில் அழகாக குழி விழுந்தது எனக்குப் பிடித்திருந்தது.

உள்ளே நுழைந்து என்னுடைய இருக்கையை அடைவதற்குள் தாலிஸ் கிளம்ப ஆரம்பித்தது. பெரும்பாலும் அத்தனை இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட இங்கு இருக்கைகள் அகலமானவை, எண்ணிக்கையும் குறைவு தான்.

இருக்கையில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்த என் மகன், ‘கம்பர்ட் 1 சூப்பரா இருக்குப்பா!’ என்றான். ஆமாம். முதல்வகுப்புப் பெட்டியை தாலிசில் அப்படித்தான் அழைத்தார்கள். என் தாயும் அவள் தரப்புக்கு, ‘என்னடாது ப்ளைட்டவிட அசத்தரது! அறுபது வயசில நேக்கடிசிருக்கற யோகத்தப் பாரு!” என்று வரும்போது இரண்டாம் வகுப்புக்கு கூறியதையே மீண்டும் கூறினாள், சற்றே கூடுதலான பிரமிப்புடன்.

“உக்காரு பாட்டி! அப்பா உக்காரு பா! ஜாலியா இருக்கும்” என்று கத்தினான் என் மகன். திடீரென ஏதோ தோன்றியவனாய் சுற்றி நோட்டம் விட்டேன். கிட்டத்தட்ட அத்தனைக் கனவான்களும், சீமாட்டிகளும் எங்களை சிறுத்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் என் மகனுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த அம்மணி மூக்குக் கண்ணாடியினூடே பார்த்த பார்வை அழுகிய மாம்பழத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

பாரீசுக்கு வரும்போது நால்வரும் இருவேறு வரிசைகளில் அமர்ந்திருந்தோம். நல்லவேளை. கம்போர்ட் 1-ல் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. இரண்டு பேர் வண்டி செல்லும் திசைக்கு எதிராக அமர்ந்து சென்றாக வேண்டும். என் மனைவிக்கு இது அறவே பிடிக்காது. அதுவும் தாலிசில் – முடியவே முடியாது. அதனால் எனக்குப் பக்கத்தில் என் தாயார். எனக்கு எதிரே ஜன்னலோர இருக்கையில் என் மகன், அவனருகே என் மனைவி. எங்களுக்கு இடையே பெரிய தொரு மேஜை. கம்போர்ட் 1-ல் உணவு இலவசமாகத் தருவார்களாம். என்ன பெரியதாய் இருக்கப் போகிறது அந்த உணவில். பரோட்டாவிற்கும் குருமாவிற்கும் ஈடாகப்போவதில்லை.

எங்களுக்கு எதிர்புற ஜன்னலருகே இரண்டு எதிரெதிர் இருக்கைகளில் ஒரு கனவானும் சீமாட்டியும் அமர்ந்திருந்தார்கள். இளம் வயதுதான். அநேகமாக கணவன் மனைவியாக இருக்கவேண்டும். நண்பர்களாகக் கூட இருக்கலாம். அந்தப் பெண் அவனுடைய கைவிரல்கள் ஒவ்வொன்றாக தடவி விட்டுக்கொண்டே டச்சு மொழியில் அவனிடம் என் மகன் காலைத் தூக்கி மேசைமீது வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தாள். அதைப் புரிந்துகொண்ட என் மனைவி என் மகனை அதட்டி கால்களைக் கீழே போடச் சொன்னாள்.

சிறிது நேரத்தில் எப்போதும் போல் என் மகன், ‘மெர்குரி, வீனஸ்…’ என்று கோள்களின் பாட்டை உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் மெதுவாக அந்தப் பெண்ணை பார்த்தேன். அழுகிய மாம்பழம்! அதற்கு முன்பே அதை கவனித்துவிட்ட என் மனைவி, ‘அமைதியாக இருக்கப் போகிறாயா? இல்லையா?’ என்று அவனை அதட்டினாள்.

நான் என் மகனுடன் மெதுவாகப் பேசினேன்.

“காலை மேசையின் மேல் தூக்கி வைத்து அசுத்தப்படுத்தக் கூடாது. நாமும், அடுத்து இங்கு வந்து அமர்பவர்களும் சாப்பிடும் இடமலல்லவா? மேலும் அது அநாகரிகமான செயலும் கூட! பொது இடங்களில் நாம் சத்தம் போட்டு பேசவோ பாடவோ கூடாது! அதுவும் கம்போர்ட் 1-ல் கூடவே கூடாது. இங்கிருக்கும் கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் அது பிடிக்காது. நாம் அவர்களுக்கு தொல்லை தருகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பொருத்தவரை, நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! ஒலி மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று அறிவுரைத்துக்கொண்டே அவன் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தேன்.

கம்பர்ட் 1-ல் அமைதி பரவ ஆரம்பித்திருந்தது. மேஜையும் அப்படி ஒன்றும் அழுக்கடையவில்லை.

ஜன்னலினூடே வெளியே நோக்கினேன். வண்டி போகும் வேகத்தில் வெளியில் இருந்த எதுவும் தெரியவில்லை. மாறாக வண்டிக்குள் நடப்பதெல்லாம் திரைப்படமாய் தெரிந்துகொண்டிருந்தது. குறிப்பாக எங்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த அந்த சீமாட்டியின் இதழ்கள் அந்த கனவானின் வாய்க்குள் அடைபட்டுக் கிடந்தது தெரிந்தது. அவை ஏற்படுத்தும் சத்தமும் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வலதுகை அவள் மார்பின் மீது எதையோ தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

என் மனைவி முகத்தை சுளித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டிருந்தாள். திரும்பி எனக்கருகே இருந்த என் தாயைப் பார்த்தேன். அவள் முகத்திலும் அதே பாவம். அவளும் என் மனைவிக்கு முன்பே கண்களை மூடியிருக்கவேண்டும். இருவரும் தூங்கிவிட்டதாய் தெரியவில்லை.

என் மகன் கால்களைத் தொங்கபோட்டபடி, கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடியபடி ஜன்னலின் மீது சாய்ந்துகொண்டிருந்தான். அநேகமாக தூங்கியிருக்கவேண்டும். அவனை அப்போது எழுப்பவேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அந்த முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிந்தது. என் மீதான கோபத்துடனேயே தூங்கிப் போயிருக்கிறான்.

என் அறிவுரை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும், “நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று நான் கூறியது அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

oOo

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அத்துமீறல்

 1. ஆம். மேஜையில் கால் வைத்தால் அநாகரீகம். கண்ணுக்கே எதிரே  ஆணும் பெண்ணும் இப்படி நடந்துகொண்டால் அது நாகரீகம். எனக்குத்தான் புரியவில்லை.பதினாறு வயது சிறார்களிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை  இப்படித்தான் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இதைக் கடக்க ஆரம்பித்துவிட்டேன். தங்கள் சரவணபவன்  அனுபவமும் ரயில் பயணமும் சுவையாக இர்யுந்தன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 2. அத்து மீறல்! அருமை!
  என்னுடைய நான்கு வருட அனுபவத்திலும்
  அது போன்ற ஏராளமான
  அத்து மீறல்களை அனுபவித்துவிட்டேன்.
  பல கேள்விகள் என்னுள்ளே
  இன்னும் விடை தெரியாமல்
  என் எண்ணச் சுவர்களை
  முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
  இவர்கள் சிரிப்பதற்கும்,
  இவர்களோடு சிரிப்பதற்கும் கூட
  நாம் முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.
  இவர்களுக்கென்னவோ
  “அர்த்தமற்ற அமைதியின்” மீது
  அப்படி ஒரு அலாதி பிரியம்.
  புரியாத புதிர்.
  வெறும் பதர்.

 3. அன்புள்ள ரேவதி நரசிம்மன் அவர்களுக்கு, வணக்கம். 

  //இப்போதெல்லாம் இதைக் கடக்க ஆரம்பித்துவிட்டேன்.//
  உண்மை. வேறு வழியில்லை. 

  தங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!! 

 4. Fr.Mahesh, வணக்கம். தங்களை வல்லமையில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது! 

  //இவர்களுக்கென்னவோ “அர்த்தமற்ற அமைதியின்” மீது அப்படி ஒரு அலாதி பிரியம்.//

  அர்த்தமற்ற அமைதி! ஆஹா! அருமை! 

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. விரைவில் இல்லத்தில் சந்திப்போம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *