ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.
நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.
அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.
நிறைகுடங்கள் அவர்கள்.
அவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. இலக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.
அவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில் ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.
‘பெகெய்னாஃப்’ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
இது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.
எங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவிட்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)’ என்கிற குசுவிசைக்கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
இப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).
அறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.
ஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
“ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.
அவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.
இன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும், இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” என்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.
// பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார்//
என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்டுக்கொண்டே “என்ன? என்ன?” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.
I’ll miss you, Gnani.
இப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.
“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஞாநியின் மறைவு, தமிழ் அறிவுலகிற்குப் பேரிழப்பு. இளையோர், பெரியோர் என்ற பேதமின்றி, எதையும் மனம் திறந்து விவாதிக்கும் அன்புள்ளம், அவருக்கு உண்டு. அவர் முன்வைத்த கருத்துகளுக்காகவும் அவர் சார்ந்த சாதிக்காகவும் கடுமையான வசைகளைச் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், எப்போதும் புன்னகையை இழக்காது இருந்தார். என்னுடனும் நல்ல நட்பு கொண்டிருந்தார். எத்தனையோ முறைகள் சந்தித்திருந்தும் முறையாகப் படங்கள் எடுக்காமல் விட்டேன். அவர் என் உள்ளத்துக்குள் வாழ்கிறார்.
ஞாநியின் மறைவு, தமிழ் அறிவுலகிற்குப் பேரிழப்பு. இளையோர், பெரியோர் என்ற பேதமின்றி, எதையும் மனம் திறந்து விவாதிக்கும் அன்புள்ளம், அவருக்கு உண்டு. அவர் முன்வைத்த கருத்துகளுக்காகவும் அவர் சார்ந்த சாதிக்காகவும் கடுமையான வசைகளைச் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், எப்போதும் புன்னகையை இழக்காது இருந்தார். என்னுடனும் நல்ல நட்பு கொண்டிருந்தார். எத்தனையோ முறைகள் சந்தித்திருந்தும் முறையாகப் படங்கள் எடுக்காமல் விட்டேன். அவர் என் உள்ளத்துக்குள் வாழ்கிறார்.