க. பாலசுப்பிரமணியன்

இறைவன் என்றும் மனத்துணையே வழித்துணையே

திருமூலர்-1-1-2

சிந்தையிலே பராசக்தியை நிறுத்தி அவள் திருவருளை முழுநிலவாய் தன் அகக்கண்ணில் கண்ட அபிராமி பட்டர் பக்தியின் பரவச நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார். எப்படி நம்மால் இவ்வாறு இறையோடு ஒன்றிய நிலையை அடைய முடியும்? இதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் ? இந்த நிலையை அடைவதற்கு முன்னால் நாம் இந்த உலகின் பற்று பாசங்களிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மனமோ மரம் விட்டு மரம் தாவும் ஒரு குரங்கினைப் போல் ஒரு எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடுகின்றதே ! என் செய்ய?

அடியார்கள் பலரும் “இறைவா! இந்தத் துயர வலையிலிருந்து உன்னால் தான் என்னைக் காக்க முடியும்” என்று கூறி எப்படியெல்லாம் இறைவனால் நம்மைக் காக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்கின்றனர் ‘

பட்டினத்தார் பாடுகின்றார்:

மந்திக் குருளையொத் தேனில் நாயேன் வழக்கறிந்துஞ்

சிந்திக்குஞ் சிந்தையை யானென்செய் வேனெனைத் தீதகற்றிப்

புத்திப் பரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்

எந்தை கூறியவன் காணத்த னேகையி லாயத்தனே.

இறைவன் என்றும் நமக்குத் துணையாக உள்ளான். அவன் துணையில்லையெனில் நாம் தனியாக நின்று வினைகளில் விழுந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளுவது மிகக் கடினம் என்று உணர்ந்த மாணிக்கவாசகரோ  இவ்வாறு கூறுகின்றார்:

தனித் துணை நீ நிற்க யான் தருக்கித்

தலையால் நடந்த

வினைத் துணையேனை விடுதி கண்டாய்

வினையேனுடைய

மனத் துணையே என்தன் வாழ்முதலே

எனக்கு எய்ப்பில் வைப்பே

தினைத் துணையேனும் பொறேன்

துயர் ஆக்கையின் திண் வலையே

மனத்துணையே என்று அழைத்து இறைவனிடம் தான் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிசெய்கின்றார். “வழிமுதலே” என்று அழைக்கும் பொழுது பிறப்பிலிருந்து இறைவனுடன் தான் கொண்டுள்ள உறவுக்கும் வாழ்வின் வழியெல்லாம் அவன் துணையைப் போற்றி வளர்ப்பதற்கும் உள்ள அவர் சிந்தனை வெளிப்படுகின்றது

அப்பர் பெருமானோ இதற்கும் மேலான ஒரு நிலைக்குச் சென்று தன்னுள் இருந்து தன்னை ஆட்டிவைப்பதே அந்த இறைவன் என்று இரண்டறக்கலந்த நிலையை விளக்குகின்றார்.

எம்பிரான் என்றதே கொண்டு என்னுள்ளே புகுந்து நின்றிங்கு

எம்பிரான் ஆட்ட ஆடி என்னுள்ளே உழிதர் வேளை

எம்பிரான் என்னைப்பின்னைத் தன்னுள்ளே சுரக்கும்

எம்பிரான் என்னில் அல்லால் என்செய்கேன் ஏழையேனே.

திருமூலரோ அவனை ஒரு முறை நினைத்தாலே போதும். நினைத்த மாத்திரத்தில் நம்முள் வந்து அமர்ந்து நம்மோடு ஒன்றாகி நமக்கு அருள்புரிபவனாக இறைவன் ஆகிவிடுகின்றார் என்பதை உணர்த்தும் வகையில் கூறுகின்றார் :

நினைக்கின் நினைக்க நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விலைமலர் சோதியி னானைத்

தினைப் பிளந்து அன்னசிறுமைய ரேனும்

கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தவரே

சிந்தையிலே எப்படி சிவனை நிறுத்த முடியும்? அவ்வளவு சக்தி வாய்ந்த அவனை ஒரு கோயிலில் தானே வைக்க முடியும் ? கோவிலில் அவனை வைத்தல் நம் சிந்தையிலே அவன் எப்படி வருவான் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல் “

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்து கால மணிவிளக்கே.

உள்ளத்தில் அவனை நிறுத்தி உடலையே கோயிலாக்கி அவனை ஆராதித்து வந்தால் நமக்குத் துயர் எவ்வாறு வரும்? நெஞ்சில் அமைதிக்கு அதை விடச் சிறந்த வழி ஏது?

இந்த அமைதியைத் தன் அறிவாலும் தவப்பயனாலும் கண்டறிந்த திருமூலர் நமக்கு என்ன அறிவுரை அளிக்கின்றார் ?

இல்லனு மல்லன் உளனல்லன் எம்பிறை

கள்ளது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்

தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

சொல்லாருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *