குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

0

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் “ஹோட்டல் காஸ்ஆனஸ்“.

ஹோட்டல் காஸானஸ்

“ஆனஸ்” என்பது ஆசனவாயேதான் (Anus). “என்னக் கொடுமை இது?” என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. “மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது” என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் ‘யூப் ஃபன் லீஸ்ஹௌட்’ என்கிற டச்சு வடிவமைப்பாளர்.

விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். ‘குதவறைக்குள் முதலிரவு’. கேட்பதற்கே கவித்துவமாக இருக்கிறதுதானே? சில சமயங்களில் சாகசச் சுற்றுலா பயணிகளும் வந்து தாங்குவார்களாம். மலத்துவாரத்தின் உட்புறத்துக்கு அருகே இரண்டு பேருக்கான படுக்கையுடன் கூடிய அந்த அறையில் ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் அறையில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். பெருங்குடலைப் போன்ற அறையின் வெளிப்புறத்தில் வீங்கியிருக்கும் நரம்புகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது. அதில் தங்கி இரவு தூங்குபவர்களுக்கு கண்டிப்பாக ஒரு இராட்சத பாலியஸ்டர் குடலுக்குள் உறங்குவது போன்றதொரு புதுமையான அனுபவம் கிடைக்கும்.

அறையின் வெளிப்புறம்

படுக்கை அறை

குளத்தின் மறுபுறமிருந்து ஆசனவாய் காட்சி

ஒரு கலைப்பூங்காவின் அழகிய இயற்கைக் சூழலில், அமைதியான குளத்தருகே கிடத்தி வைக்கப்பட்டுள்ள அந்த மாபெரும் தசைக் குழாய் விடுதி அறையில் ஓர் இரவு தங்குவதற்கு விலை என்ன தெரியுமா?

ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் மட்டுமே.

Jokes apart, இதற்குப் பின்புலத்தில் இருக்கும் கதையை, கனவை உங்களுக்கு விவரிக்க விழைகிறேன். அது ஒரு ‘சோளக் களம் கலைத் தளமான’ கதை.

கலா ரசிகர்களான ‘ஹியர்ட்  ஃபெர்பேகெ’ மற்றும் ‘கார்லா ஃபெர்பேகெ-லென்ஸ்’ ஆகிய இருவரும் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப் நகருக்கு அருகே ‘கெம்ஸேகெ’ என்ற இடத்தில்  கிட்டத்தட்ட முப்பது ஏக்கர் பரப்பளவில் கலைப் படைப்புகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு தளத்தை ஏற்படுத்தி அங்கு வித்தியாசமான, சுவாரசியமான நவீன கலைப் படைப்புகளை சேகரம் செய்து வருகிறார்கள். ஐரோப்பாவில் சமகால கலைகளுக்கான மிகப்பெரிய தனியார் முயற்சிகளில் ஒன்றாக ‘ஃபெர்பேகெ அறக்கட்டளையைச்’ சுட்டலாம்.

பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் இந்த அறக்கட்டளை, கலைஞர்களுக்கென்றே ஒரு குடியிருப்பை அமைத்து, அவர்கள் அங்கேயே வந்து தங்கி படைப்புகளைத் தளத்திலேயே உருவாக்கவும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தளத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஏ4 பக்கங்கள், அறக்கட்டளையின் பத்து ஆண்டு வரலாற்றைச் சொல்கின்றன. இது போன்ற கலைப்படைப்புகளை சேகரிப்பதற்கு ஒருவகையான வெறி இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதை ஆமோதிப்பது போலவே, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.” என்று கூறியிருக்கிறார் ஃபெர்பேகெ.

இயற்கை, கலாச்சாரம், சூழலியல் இவை அனைத்தும் ஒன்றாக இணையும் அந்த நிலப்பரப்பு, கடந்த காலத்தில் ஒரு பெரிய கோழிக் கொட்டகையுடன் கூடிய வயல்வெளியாக இருந்திருக்கிறது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை அமைத்துத் தானே அதற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நடத்தி வந்திருக்கிறார் ஹியர்ட்  ஃபெர்பேகெ. ஆனால், கலையின் மீதான காதலால் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தைக் கலைக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் செவ்வனே நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார். இந்த எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதே ஒரு வித்தியாசமான கதை. ஒருமுறை ஒரு எஃகுச் சிற்பத்தைச் சரக்கேற்றிக் கொண்டுசெல்வதற்காக யாரோ இவரை அணுகியிருக்கிறார்கள். அங்கு ஆரம்பித்த அந்தக் கலைப் பயணம் இப்போது ஆயிரக்கணக்கான படைப்புகளின் கலைத் தொகுப்பாக வளர்ந்து நிற்பதைப் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பெல்ஜிய நாட்டு ஒவியக் கலைஞர்களின் படைப்புகளில் தொடங்கிய அவருடைய சேகரப் பணி, சமீபத்திய ஆண்டுகளில் சமகால படைப்புகள், உயிர்க் கலை என்று விரிவடைந்திருக்கிறது. அவர் சேகரித்துள்ள இருபதாம் நூற்றாண்டு கொலாஷ்கள் மட்டுமே கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் அதிகம். உண்மையில் இது ஒரு அசாதாரணப் பணி. இந்தத் தொகுப்பின் ஒரு பகுதிக்காகவே பெரியதொரு தனி அறையை ஒதுக்கி அங்கு நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார். தனித்துவமான இந்த இடத்துக்கு ஒவ்வொரு வருடமும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள்.

கண்காட்சி

யோஸ் டெல்ஹாயேவின் கலைப் படைப்பு

ஆன்னி டி பீயின் கலைப் படைப்பு

“எதையும் எடுக்காதீர்கள்; நிச்சயமாகப் பால் இல்லை” (புரிகிறதா? கீழே சிவப்பு விளக்கு!)

அறக்கட்டளையின் பத்தாமாண்டு நிறைவை ஒட்டி எழுநூறு பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஃபெர்பேகெ. அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய ‘வாழ்க்கையின் நீட்சியாகக்’ காண்பவர், “இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையே அதிலுள்ள ஒரு கொலாஷைப் போன்றதுதான், என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும், கொலாஷில் உள்ள ஒரு துண்டைப் போன்றது. முதல் பார்வையில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பில்லாதது போலத்தான் தெரியும்” என்று தன் வாழ்க்கையை கொலாஷோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தப் பார்வை எனக்கு சுவாரசியமாகப் பட்டாலும், எல்லோருடைய வாழ்வும் அப்படித்தானே என்கிற எண்ணம் உதித்தது. மற்றவர்களுக்கு எப்படியோ, என்னுடைய வாழ்க்கை  நிச்சயமாக ஒரு கொலாஷ்தான்.

கொலாஷ் தொகுப்புப் புத்தகம்

ஒவ்வொரு வார இறுதியிலும் ஏலத்தில் பங்குபெறுவதும், கண்காட்சிகளுக்குச் சென்று பார்வையிடுவதும் என்று மிகவும் கடினப்பட்டு கலைப் படைப்புகளைத் தொகுத்ததாகக் கூறும் ஃபெர்பேகெ, அவற்றை வாங்குவாரின் மனநிலையைப் கோபத்துடன் விமர்சிக்கிறார், “கலைப் படைப்புகளை வாங்கும் பெரும்பாலானவர்கள் ஒரு நன்கு அறியப்பட்ட கலைஞனின் மோசமான படைப்பைக்கூட வாங்கிக்கொள்ள முனைகிறார்களே தவிர, அறியப்படாத கலைஞனின் நல்ல படைப்பை வாங்க மறுக்கிறார்கள். எனக்குத் தரமான படைப்புதான் முக்கியம். கலைஞன் யார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.” என்று தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்.

 

வாங்குவதில் மட்டுமல்ல ரசிப்பதிலும் உலகெங்கும் இதே நிலைமைதானே. அவ்வளவு ஏன் எழுத்துச் சூழலிலும் இதே கதைத்தான். படைப்புகளை அனுப்பினால் நிறைய பத்திரிகைகளிலிருந்து பதில் கடிதம்கூட வருவதில்லை என்று நிறைய பேர் குமுறுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஹியர்ட்  ஃபெர்பேகெ

இது போன்ற கலை சார்ந்த முயற்சிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகைகளைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் என்னை வியப்பிலாழ்த்தியது; அவர் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது. “இதுபோன்ற அறிய செயல்களைச் செய்வதற்கு அரசாங்கத்தின் சிறு ஊக்க உதவித் தொகைகளை எதிர்பார்த்திருப்பது என்பது ‘அற்ப உயிரினத்தின் இயல்பு’.” என்று கூறிவிட்டு கலைஞனுக்கே உரிய கம்பீரத்துடன் சிரிப்பவர், “எனக்கு அது தேவையில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் சுயதொழில் செய்துவந்தவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டுமே. எனக்கான திட்டத்தை நானே வரைந்துகொள்ளவே விரும்புகிறேன்.” என்று அவர் கூறுவதில் ஒளிரும் அவரது தன்னம்பிக்கை ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும், “அரசாங்கம் இன்றைக்கு ஒன்று சொல்லும். நாளைக்கு ஒன்று செய்யும். அரசாங்கத்தை நம்பி இதுபோன்ற அறிய காரியங்களில் இறங்கினால், ஐந்து வருடங்கள் கழித்து நம்மைக் கையேந்த வைத்துவிடுவார்கள். நான் தன்னிறைவுடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த இடத்தின் உட்புறப் பகுதிகள் சிலவற்றையும், கலைப் படைப்புகளில் தங்க விரும்புபவர்களுக்கும் வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து நான் விரும்பியதையெல்லாம் செய்து வருகிறேன். இவ்விதம் எனக்கும் பணம் கிடைக்கிறது; கலைஞர்களுக்கும் உதவ முடிகிறது; அதே சமயம், பார்வையாளர்களுக்கும் பயணிகளுக்கும், கலையுடனும் கலைஞர்களுடனும் இயற்கையுடனும் தொடர்பு வைத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார். உண்மைதான். இயற்கை சூழலில் ஒரு கலைப்படைப்புக்குள் தனியாக ஒரு இரவைக் கடத்துவது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவமாகவே இருக்கும்.

தண்ணீர் மீது அமைக்கப்பட்ட இன்னொரு தங்குமிடம்

நான்கடுக்கு குடியிருப்பு – ஒவ்வொரு அடுக்கிலும் செயற்கை புல்வெளி மீதமைந்த கூடாரங்கள்

“கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற பாரதியின் கட்டளைக்கு, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை மீசைக்காரரே!” என்று ஃபெர்பேகெ பதிலுரை தருவது போலவே எனக்குத் தோன்றுகிறது. இப்போது எனக்கு அந்த மலத்துவாரத்துக்குள் சென்று ஓரிரவு தங்குவது தவறில்லை என்றும் தோன்றுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *