தாகம் ……
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பேயே
நீராதாரத்தைப் பாதுகாக்க அல்லும்பகலும்
பாராதுழைத்து அழகியவோர் கல்லணையை
பார்போற்ற கட்டினான் கரிகாலன்!
இத்தகு வரலாறு நமக்கிருந்தும்
மெத்தனப்போக்காய் வாழ்ந்ததனால் திணை
யத்தனையளவு நீருக்கும் நித்தம்
எத்தனை எத்தனை போராட்டம்!
தான் வாழ்ந்தால் போதுமென்று
எண்ணுமிம்ம(மா)க்களாலே கழிவுகள் கலக்கும்
தேன்சுவை நீர்நிலைக ளெல்லாம்
வீணில் போவது அவலமன்றோ!
பொழிகின்ற வான்மழையும் சேமிக்க
வழியின்றி கடலில்போய் கலக்கிறது!
விழிபிதுங்கும் பல மாசுக்களால்
வாழ்வாதாரம் மெல்ல அழிகிறது!
தடுப்பணை பலவும் கட்டிடுவோம் – நீர்
கடலில் கலப்பதை குறைத்திடுவோம்!
ஏரி குளங்கள் அனைத்தையுமே
தூர்வாரி நீரை சேமிப்போம்!
நாடெங்கும் மரங்களை நட்டிடுவோம்!
தடையயற்ற மழையைப் பெற்றிடுவோம்!
வீடுகளில் மழைநீர் சேகரித்து
நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடுவோம்!
நீர் சூழ்ந்த இவ்வுலகினிலே
பருகும் நிலையில் இருக்கின்ற
ஒரு சதவீதத்திற்கும் குறைவான
நீரைப் பொன்னெனப்போற்றி காத்திடுவோம்!
நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு
(குறள்: 20