மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 10

 

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

 

அந்தப் பெண்ணும் சிறுமிகளும் போன பின்பு மைக்கேல் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி சைமனையும், மெட்ரீனாவையும் வணங்கி, “நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இறைவன் என்னை மன்னித்து விட்டார். இத்தனை ஆண்டுகளும் எனக்கு உணவு, உடை, தங்க இடம் கொடுத்ததற்காக மிகவும் நன்றி. நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

மைக்கேல் மேலிருந்து வெளிச்சம் பிரகாசிப்பதை கண்ட சைமன் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி, “மைக்கேல், நீ சாதாரண மனிதனல்ல. இங்கு உன்னைத் தங்க வைப்பதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ என்னால் முடியாது. ஆனால் இதை மட்டும் சொல். உன்னை நான் சந்தித்த போதும், வீட்டிற்கு அழைத்து வந்த நேரத்திலும் உன் முகம் மிகவும் இருண்டு போயிருந்தது. ஆனால் என் மனைவி, உனக்கு உணவு கொடுத்த போது முதல் தடவையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தாய். அதன் பின் அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், இன்று மூன்றாவது தடவையாக அந்தப் பெண்ணும், சிறுமிகளும் வந்த போதும் புன்னகை புரிந்தாய். மூன்று முறைகளும் உன் முகம் பிரகாசித்தது. இன்று உன் முகம் பகல் வெளிச்சம் போலிருக்கிறது. ஏன் உன் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? ஏன் மூன்று தடவைகள் மாத்திரம்தான் புன்னகைத்தாய்? சொல்லமாட்டாயா?” என்று கேட்டான்.

அதற்கு மைக்கேல், “வெளிச்சம் என் மேல் பிரகாசிப்பதின் காரணம், இறைவன் என் தண்டனையை மன்னித்து விட்டார். மூன்று தடவைகள் புன்னகைத்ததின் காரணம், இறைவன் மூன்று உண்மைகளை அறிந்து கொள்ள என்னை இங்கு அனுப்பினார். நான் மூன்று உண்மைகளையும் அறிந்து கொண்டேன். உன் மனைவி உணவு கொடுத்த போது முதல் உண்மையை அறிந்து கொண்டேன். இரண்டாவது உண்மை, அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், மூன்றாவது உண்மையை அந்தச் சிறுமிகளைக் கண்ட போது புரிந்து கொண்டேன். ஒவ்வொரு உண்மையும் தெரிய வந்த போது புன்னகைத்தேன்” என்றான்.

“மைக்கேல், இறைவன் ஏன் உன்னைத் தண்டித்தார்? அந்த மூன்று உண்மைகளும் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சைமன் கேட்டான்.

“நான் பரலோகத்திலுள்ள தூதன். இறைவனுக்கு நான் கீழ்ப்படியாததால் தண்டிக்கப் பட்டேன். அவர் என்னைப் பூலோகத்திற்குச் சென்று ஒரு பெண்ணின் ஆத்துமாவை எடுத்துக் கொண்டு போக அனுப்பினார். நான் பூலோகத்திற்கு வந்து அவளைப் பார்த்த போது, அவள் அப்போதுதான் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அவளால் இரண்டு குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுக்கச் சக்தியற்றவளாகக் காணப்பட்டாள். அவள் என்னைப் பார்த்த போது தன் ஆத்துமாவை எடுத்துச் செல்ல இறைவன் என்னை அனுப்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு “இறைவனின் தூதனே, தயவு செய்து என் ஆத்துமாவைக் கொண்டு போகாதே. என் கணவனும் மரம் மேல் விழுந்து நசுங்கி இறந்து விட்டார். எனக்கு உற்றார், உறவினர் எவரும் கிடையாது. நான் இறப்பதற்கு முன்னால் இந்தக் குழந்தைகளுக்குப் பாலுட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகள் தாயும், தந்தையுமில்லாமல் வாழ முடியாது” என்று கூறி அழுதாள்.

என் மனம் அவளுக்காக உருகியது. நான் ஒரு குழந்தையைத் தூக்கி அவள் பால் கொடுக்கப் படுக்க வைத்து விட்டு, மற்ற குழந்தையை அவள் கரங்களில் கொடுத்து விட்டுப் பரலோகம் சென்றேன். நான் இறைவனிடம் சென்று “அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை. அவள் கணவன் மேல் மரம் விழுந்து நசுங்கி இறந்து விட்டான். அவளுக்கு இப்போதுதான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவள் என்னிடம், குழந்தைகள் வளர்ந்து தங்கள் கால்கள் ஊன்றி நிற்கும் வரைக்கும் நான் உயிர் வாழ வேண்டும். பிள்ளைகள் தாயும் தந்தையுமில்லாமல் வாழ முடியாதென்று சொல்லி அழுதாள். ஆகையால் அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை”, என்றேன்.

அதற்கு இறைவன், ”நீ திரும்பிப் போய், அந்தத் தாயின் உயிரை எடு. அதன் பிறகு மூன்று உண்மைகளைத் தெரிந்த பின் பரலோகம் திரும்பி வா” என்றார். முதல் உண்மை மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது என்ன?” மூன்றாவது “மனிதர்கள் எதினால் வாழ்கிறார்கள்?”.

தொடரும்

“நான் திரும்பி பூமிக்கு வந்து அந்தத் தாயின் ஆத்மாவை எடுத்தேன். அந்தக் குழந்தைகள் அவள் மார்பிலிருந்து விழுந்தன. அவள் சடலம் படுக்கையில் உருண்டு விழுந்ததால் ஒரு குழந்தையின் கால் நசுங்கி விட்டது. நான் அவள் ஆத்துமாவை இறைவனிடம் கொண்டு செல்லப் பறந்த போது பெருங் காற்று அடித்த வேகத்தில் என் சிறகுகள் தொய்ந்து கீழே விழுந்து விட்டன. அவள் ஆத்துமா தனியாக இறைவனிடம் சென்று விட்டது. நான் பாதையோரம் விழுந்து விட்டேன்”.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.