”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”

 

பவள சங்கரி

 

பொலிகையூர் ரேகா அவர்களை முதன் முதலில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் (சென்னை – 2017) சந்தித்தபோது பெயர் அறிமுகமின்றியே அவர்தம் எழுத்தின் வாயிலாகவேக் கவரப்பட்டேன். மிக யதார்த்தமான எழுத்து நடையுடன், இலங்கையின் கருமையான நாட்களையும், மக்களின் அவல நிலையையும், தற்கால முன்னேற்றத்தின் அகண்ட பாதைகளின் சுவடுகளையும் மிகவும் யதார்த்தமாக, துளியும் மிகைப்படாமல் எடுத்துரைத்த விதம் சிறப்பாக அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அவர்தம் கருத்தரங்க உரை அனைவரையும் கவர்ந்திருந்தது.


”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே பல கதைகளை உருவாக்கக்கூடியது. ஆசிரியர் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையின் பாத்திரப் படைப்பையும் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதோடு கதை மாந்தர்களின் பெயர் சூட்டுவதிலும் ஒரு அழகியலைக் கடைபிடித்திருக்கிறார். சிற்பிகா, சங்கழகிப் பாட்டி, தமிழினி , இலக்கியா, இசையரசி, இனியா, அறிவழகன், தமிழேந்தி என்பன போன்ற மிக அழகான தமிழ் பெயர்கள் இவர்தம் படைப்புகளுக்கு அணிகலன் ஆகியுள்ளன.
இத்தொகுப்பின்முதற்படைப்பான,“மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற கதை முத்தான முதல் கதையாகியுள்ளது. முதியோர் இல்லம் என்பது இன்றைய நாட்களில் மலிந்து கொண்டு வருவதாக உள்ளது.

“கண்ணகிப் பாட்டியைப் போல இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த பின்புலம் உள்ளது. உறவினர்கள், பிள்ளைகள்,  அயலவர்கள் என யாரேனும் ஒருவர் கொண்டுவந்து சேர்த்தவர்களாகவோ அல்லது தாமாகவோ வந்து சேர்ந்தவர்களாக இருந்தனர்”

இயந்திர உலகத்தில்  பணம் சேர்ப்பதற்காய், வேறு சிக்கல்களுக்காய் பெற்றவர்களை இங்கு விடும் பிள்ளைகளை என்ன செய்வது என அவள் எண்ணம் வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள். அன்புக்காக, அரவணைப்புக்காக, அக்கறையான சில வார்த்தைகளுக்காக எல்லா இடங்களிலும் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்.

உணர்வைத் தீண்டிய உன்னத படைப்பு இது!

2. கானல் நீரும் கலைந்த கனவுகளும்

செடி கொடிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பெரும்பாலும் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கதை நாயகியும் தனக்கும் அவற்றிற்குமிடையேயான பாசப் பிணைப்பு சிறிய அளவில் ஆரம்பித்துச் சிறிது காலப் பகுதிக்குள் பெருமளவில் பரவியதால் மாடிப் பகுதியையே ஒரு பசுமைத் தோட்டமாக மாற்றி வைத்திருந்த தனக்கு வேதனை ஏற்பட்ட காரணத்தைச் சொன்ன விதம் ஒரு தேர்ந்த விவசாயி தம் பயிர் பாதுகாப்பு குறித்து எடுக்கும் முயற்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் உரம் போடுவது குறித்தும், பூச்சி மருந்து அடிப்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் என்றே பாராட்ட வேண்டியுள்ளது. ‘அமிர்த கரைசல்’ உருவாக்கப்பட்ட விதமும், மீன் அமிலம் எனப்படும் இயற்கை உர உருவாக்க முறைமையும் ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளதை மறுக்கவியலாது.

துருக்கறைகளையே நீக்கும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி நீர் கலக்காமல் அப்படியே தெளிக்கும் கருவி கொண்டு தெளித்துவிட்டால் மறுநாள் காலையில் பெரும்பாலும் பூச்சிகளற்ற நிலையில் இருந்த அவரைச் செடிகளையும் கண்டு வியந்து நிற்க இயலுமாம்.

“எல்லோருடைய கனவுகளையும், ஆசைகளையும் குழப்புவதற்கு அனைத்து இடங்களிலும், பலவிதமான குரங்குகள் இருக்கும் போல என்று நினைத்தபடியே விழுந்து கிடந்த மரங்களையும், செடி வளர்ப்புப் பைகளையும், பார்த்தேன். குரங்குகளின் தாக்குதலுக்குப் பின்னரும் சில செடிகள் கம்பீரமாக நிற்பதாகவே இப்போது தோன்றியது” என்ற ஆசிரியரின் சிந்தைகள் வியந்து போற்றத்தக்கது.
மனித வாழ்வும் மரம், செடி கொடிகளைப்போன்று நிலையற்றது. பிறந்தவை அனைத்தும் ஓர்நாள் அழியக்கூடியவை. இருப்பினும் இடையிலேயே பூத்துக்குலுங்க வேண்டிய தருணத்தில் உருத்தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையின் வலியை உணர்வுப்பூர்வமாக வடித்தெடுத்திருக்கும் அருமையான புனைவு இது!

3. ‘மண் மணம்’ பழங்கதைகளை மணமும், சுவையும் மாறாமல் அழகாக வரையப்பட்ட ஓவியம்.

4. வாய்மையின் வாயாடிகள்

திருமணம் என்ற ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகையத் திருப்பு முனையாக அமைந்துவிடுகின்றது என்பதை அந்தப் பெண்ணின் பார்வையிலும், ஒரு தாயின் பார்வையிலும் மாறி மாறி பேசவைத்து இறுதியாக மிக யதார்த்தமான வசனங்களுடன் இயல்பாக முடித்திருக்கும் பாங்கு இந்தக் கதையாசிரியரின் பார்வையைத் தெளிவுற விளக்குவதாக அமைந்துள்ளது சிறப்பு.
வாழ்க்கையில், சக மனிதரின் தர்மசங்கடங்களைப் புரிந்துகொள்ளாத சில நிரந்தரமான விசாரிப்புகள் எத்தகைய காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவைகளை உணராதவர்கள் மட்டுமல்ல, உணர்ந்தவர்களும்கூட உதாசீனப்படுத்துகின்றனர் என்பதை உள்ளம் நோக உரித்துக்காட்டியுள்ள உயர்ந்த படைப்பு.

5. “விதி(னை)யின் தீர்ப்புகள்”

புறம் பேசும் பெண்களைச் சாடியுள்ள நல்லதொரு போக்கு இக்கதையின் சிறப்பம்சம் எனலாம்.
“எல்லாருடைய வாழ்விலும் ஒரு முன்னாள் காதல் இருக்கலாம் அதனால் எனக்கு வருகின்றவர் என்னைப்போல யாரையும் காதலிக்காமல் தன் துணைவிக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” .
ஆக்கப்பூர்வமான எண்ணங்களின் ஊற்றாக வெளிப்படும் படைப்பு!

“ஒரு பெண் ஏமாற்றினால் அங்கே பாதிக்கப்படுவது ஒரு ஆணின் வாழ்க்கை மட்டுமல்ல எந்தத் தவறும் செய்யாத இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும்தான் என்பது பலரின் பார்வையிலிருந்து மறை(ற)ந்து கிடப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டவாறு விதியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.” – முத்தாய்ப்பு!

6. தேயாத நிலவுகள்

குடும்பச் சுமைக்காகவும்,  பெற்றோரது கடமையை  முடிக்கும் நோக்கத்திற்காகவும் திருமணம் செய்து கொண்டு தங்கள் கனவுகளைத் தொலைத்துவிடுகின்ற பெண்களைப் பற்றிய ஆதங்கத்தைத் தெளிவுற விளக்கும் கதை.

7. வழக்காடும் வழக்கங்கள்

பெண்களின் இயற்கை உபாதைகளையும்கூட ஆண்களிடம் மறைக்கப்படுவதாலேயே இரு பாலருக்குமிடையே மனித இனம் என்பதையும் கடந்து வேறுபாடுகள் உருவாகி அதனால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே பெருமளவில் சமுதாயத்தில் பரவுகின்றன என்றதொரு சரியான கோணத்தை தெளிவாக உணர்த்தும் அனுபவங்களின் தொகுப்பாகவே உள்ளது இக்கதை.
“மறைத்து மறைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் சமூகப் பொறுப்பற்றவர்களாக, அவர்களும் நம் போன்றவர்கள் என்று எண்ணாது பெண்களை போகப் பொருளாக எண்ணும் மனநிலைக்கு  ஆளாகின்றனர்.  இது ஆண்களிடம் இருந்து மறைக்க வேண்டியதல்ல ஆண்கள் உணர வேண்டிய பெண்களின் உடல் நிலை ” என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

8. களையிழந்த காகிதங்கள்

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னோடு உறவாடியப் புத்தகங்களை இழக்க நேரிடும்போது ஒரு உயிர் படும் வேதனையைத் துல்லியமாக உணர்த்தியிருக்கும் இனிய படைப்பு. இழந்துவிட்ட காகிதங்களால் களையிழந்த முகங்கள்!

9. நிம்மதி

மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை உபாதைகளைத் தீர்க்கும் தளமான கழிவறை. அதுவும் பொது இடங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவோரின் அசூசையான மன நிலையைப் பிரதிபலிக்கும் குறுங்கதை இது.
சில சந்தர்ப்பங்களில் இல்லை என்பதை விடவும் இந்த நிலைமையிலாவது இருக்கின்றது என்னும் நினைப்பே நிம்மதியானதுதான்போல என்ற எண்ணம் கழிவறைக்கு மட்டுமல்ல, களைத்துப்போய் நொந்த மேனிக்கும் கூடத்தான் என்கிறாரோ?

10. தனிமைப் பறவைகள்

தனிமை என்பது ஒரு சிலருக்கே, ஒரு சில காலங்களில் மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு கூட்டுப் பறவைகள் பிரிந்து தனிக்குடும்பம் ஏற்படுத்திக் கொள்வதென்பது இயல்பான ஒன்று என்றாலும், ஒரு தாய்ப்பறவைக்கு அது மகிழ்ச்சி கலந்த வேதனை என்றே கொள்ளமுடியும். தம்மை விட்டு விலகிச்செல்லும் பந்தங்களைக் காண உள்ளம் நோகத்தான் செய்யும். உள்ளம் தொட்ட உணர்வுப்பூர்வமான புனைவு!

இந்த வகையில், கதை ஆசிரியர் பொலிகையூர் ரேகா அவர்களின் ஒவ்வொரு கதையும் வாழ்வியலின் அடிப்படையில் ஒவ்வொரு முகமாக அமைந்திருப்பது வாசிப்பவருக்கு சுவை கூட்டக்கூடியது. சிறந்த நடையும், எளிமையான மொழியும், சுவையான களங்களும் ஆசிரியரின் எழுத்தாற்றலை பறை சாற்றக்கூடியதாகவே உள்ளன. வரும் காலங்களில் பொலிகையூர் ரேகா மிகச்சிறந்த படைப்பாளர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *