Tag: ரோஷான் ஏ. ஜிப்ரி

  • உன்னிலிருந்து தொடங்கு

    ரோஷான் ஏ. ஜிப்ரி

     

    மழையை வரவேற்க பழகிய நாம்

    மழையை வழியனுப்ப பழகவே இல்லை,

    மழை குறைந்தால்

    வயிற்றுக்கு அரிசி இல்லை ஏங்குகிறோம்

    மழை கூடினால் வாய்க்கு அரிசி என்கிறோம்

    குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியபடி

    வெகுளியாய் விளங்கிக் கொண்டு

    நீ என்ன நினைக்கிறாயோ

    நான் நினைக்கிறேன்.

     

    இது பற்றி எதுவும்

    உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை

    ஆயினும்;

    ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது.

     

    நம் தெருவில்தான் கிடக்கின்றன

    அந்த குப்பைகள் பற்றியாவது

    எதையேனும் சொல்லியாக வேண்டிய

    தேவை உள்ளது.

     

    உடைந்த போத்தல்களாகவும்,

    கிழிந்த காகிதங்களாகவும்

    நுணி கருகிய “பில்டர்”துண்டுகளாகவும்

    தேர்தல் கால கூட்டணிபோல்

    அது கூடி விடுகின்றன.

     

    நீ நுகர்ந்த “நப்கீனோ”

    அல்லது….,

    பழைய காதல் கடிதமாகவோ இருக்கலாம்

    நீ அருந்தி வீசிய

    மருந்து குப்பியாகவோ,

    மது போத்தலாகவும் இருக்கலாம்

    நீ சூப்பி எறிந்த பீடித்துண்டோ

    ”சிகரட் பில்டர்”ஆகவும் இருக்கலாம்

    வீட்டை பெருக்குகிறாய்

    வாசலை பெருக்குகிறாய்

    உன் வீட்டு முன்னாலுள்ள

    வீதியை என்றாவது பெருக்கியிருக்கிறாயா?

    இனியாகிலும்

    எச்சிலை கூட

    பாத்திரத்தில் எடுக்க பழகு

    உன் பிள்ளையையும் பழக்கு

    பூமியை சுத்தமாக வை

    மழை உன்னை மதித்து நடக்கும்

    நீருக்கு பாதை தெரியும்

    நீ மறித்துக் கட்டாமல் விட்டால்

    பூமி சொர்க்கம்

    நீ நரக வாதியாய் நடமாடதவரை!

    Share
  • முகமூடிக்காரன்

     

    ரோஷான் ஏ.ஜிப்ரி 

    காலத்தின் வழியே
    தொலைத்த சுயத்தை
    தெருத்தெருவாய் தேடியலையும் நான்
    அண்மையிலிருந்து
    காசுக்காகவும்,கடமைக்காகவும்
    முழுநேர முகமூடிக்காரன்


    என்னிடம் ஒரு முகமும்
    சில..முகமூடிகளும் இருக்கின்றன
    குழந்தைகள்முன் ஒருமுக மூடியையும்
    மனைவியிடம் ஒரு முக மூடியையும்
    உறவினர்களிடம் ஒரு முகமூடியையும்
    நண்பர்கள் முன் ஒரு முக மூடியையும்
    வேலை தளத்தில்
    வேறொரு முகமூடியையும்
    அணிய வேண்டியது அவசியமாகி விட்டது

    எத்தனை நேர்த்தியாக இருப்பினும்
    மாறி,மாறி மாட்டிக் கொள்ளும்
    ஒவ்வொரு முகமூடியையும்
    களற்றி வைக்கையில்
    மாட்டிக் கொள்ளவும்  நேர்கிறது

    நிம்மதியை தொலைத்தவன்
    துயிலற்று அலைவதுபோல் ஆயிற்று
    வாழ்க்கையில் வசித்தல்

    முகமூடிகளற்ற
    என்னுடைய பழைய முகத்தை
    யாரிடம் பறிகொடுத்தேன்
    என்பதைத்தான் இன்னும்
    தெரியாமல்
    தேடி அலைகிறேன்.

     

    Share
  • இது அவளின்…, தெருவாய் இருக்கலாம்.

     ரோஷான் ஏ.ஜிப்ரி 

    துயர் செறிந்த மண்ணெங்கும்
    தேவை இல்லாமல் ஒரு தெரு
    வரம்பை மீறி வழியாகிறது
    ஒரு கொத்து சொப்பனங்களுடன்
    தனித்து நிற்கிறாள் மரமாய்
    பச்சாதாபமற்ற ஊராயிருந்திருக்கும்
    அவளது வெளியும்

    பரீட்சயங்களின் தெளிவற்ற ஊகங்கள்
    சரியும் பாகங்களில்
    கண்குத்தி விரிய
    முள்முருங்கை போல்
    முறிப்பதற்கான முன்னெடுப்புகள்
    முடக்கி விடப் படுகின்றன

    அண்மிக்கும் கணங்கள்
    விரசலில் உரச
    கிலிகொள்ள கிழிபடுகிறது பூமனசு
    நம்பிக்கைக்குரிய பாத்திரம்
    தேடியலைகிறேன் அள்ளி எடுக்க
    அவளுக்கு ஒரு சொட்டு
    மருந்தாகவேனும் இருக்கட்டுமென்று

    சிறிதளவு மனிதம் இருப்பதாக
    நம்பத்தக்கவர்களும்
    வீடுகளை உள்ளே வைத்து
    சுவர்களை வெளியே கட்டுகிறார்கள்


    குடில் தெரு முற்றத்தில்
    வேலிகளை தாண்ட இயலாத
    அவளது வேர்கள்
    ஈரமற்று காய்ந்த நிலத்தில்
    சுருண்டு ஒடுங்குகின்றன
    கிளைகளற்ற மரங்கள்
    விறகாவது இப்படித்தான்!
     

    Share
  • எடுத்தெறிய வேண்டிய சாத்தான்கள் பற்றிய கனவு!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    என் உறுதிகளைப் பறித்தவனிடமிருந்து
    காப்பாற்ற முடியாமல் போன
    வாழ்வின் இருப்பை நொந்தபடி
    நேற்றின் அவமானத்தோடான
    அலைச்சலிலிருந்து மீள அயர்கிறேன்!

    இன்றும் ஒரு கனவு
    விழிமடல் மூட விரிகிறது முன்…

    முதற் பரிமாணத்தில் தந்திரம் மிக்க நரியாகிப்
    பின் மெல்லச் சாத்தான்களாவது
    விடாமுயற்சியின் பலன்களிலொன்று!

    என் கனவுக்குள் வருபவர்களுக்கு
    எடுத்தெறிய வேண்டிய
    சாத்தான்களின் சபையை
    நிறைத்திருந்தன நரிக்கூட்டம்!

    நரிகள் ஓதிய வேதங்கள் ஏதும்
    பலிக்கவில்லை செவிடென இருந்த
    அரசக் கடவுளின்முன்!

    பின் இன்னொரு காட்சி
    தொடர் கனவின் பிரதியாய் விரிகிறது…

    ஒருபக்கம்
    வாலுயர்த்திக் கொம்புகளை ஆட்டியவாறு
    விஷத்துடன் கொடுக்ககலக்
    கருந்தேள்கள் வாசலெங்கும்
    மண்மேய்ந்து உலாவ
    மறுபக்கம் நாக்கிழும் புழுக்கள்
    திரிந்தன எம் நிலமெங்கும்
    புனித மண்தேடி…

    தாவிக் கழித்துக் குருத்துப்புல் கொறித்த
    முயல் குட்டிகள் இல்லிடமற்றுக்
    கறியாடுகளாய் உலையேறுகின்ற
    கனவிலிருந்து விழித்தபோது
    கட்சி இலச்சினையோடு பல்லிளித்தபடி
    நரிமுகத்துடன் ஒரு சாத்தான் என் முன் நின்றது
    இம்முறையும் அவனது தேவையொன்றின் நிமித்தம்!

     

    Share
  • என் குடியிருப்புக்கு உன்னை அழைக்கிறேன்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    வேர் அறுந்த வலியுடன்
    வசித்தல் என்பது எனக்கு
    வாழ்வாகிற்று…

    உறவற்ற அன்றில் நான்
    ரணங்களின் குறிப்புகளோடு
    அழித்து அழித்து எழுதப்பட்டிருக்கின்றன
    எனது நாட்கள்!

    சொப்பனங்களில் லயித்து
    வெகுமதிகளில் சுகித்து
    ஒரு பறவையாய்ச் சிறகடிக்க
    இறக்கைகள் கத்தரிக்கப்படுவதற்கு முன்
    எனக்கும் இருந்ததொரு எண்ணம்!

    மன்னிக்க…
    வசீகரங்களைத் தூவி நீ வாழ்த்த
    ஏற்று வணங்கி வரவேற்கும் நிலையில்
    இப்போது என் இருப்பு இல்லை!

    உன் பூங்கொத்துகளைச் சுமக்க
    மனசின் கை
    ஆசையோடு அணுகுகிற போதும்,
    வலிமை இழந்த தகிப்பில்
    மீள்கிறேன் பழைய இடத்திற்கே!

    என் இரவுகளைப் பருகிப்பருகித்
    தனிமைப் பூதமாகும் இனி…
    வாசலே வீடாயிருக்கும்
    என் இல்லிடத்திற்கு வா!

    காதலோடு அல்ல…
    ஒரு கூடைக் கைக்குட்டைகளோடு !

     

    Share
  • அமைதி இழந்த பொழுது!

    -ரோஷான் .ஜிப்ரி

    நடைமுறையிலுள்ள எல்லாம்
    முறைமைகளாக மாறிப்
    பெரும் பயத்தைத் தோற்றுவிக்கின்றன!        roshan

    வாழ்வு பற்றிய கனவில்
    இழப்பைத் தவிர
    எதையும் யோசிக்க முடியாதபடி
    ஆதிக்கத்தைக் கூர்மையாக்கி
    வைத்திருக்கிறது காலம்!

    மொழிகளாலும்,சாதி பேதங்களாலும்
    ஆஸ்தி, அந்தஸ்து என்று
    மனிதத்தைக் கூறுபோடும்
    நடைமுறைச் சிக்கல்கள்!

    பணத்தால் மட்டுமே
    ஓரளவேனும்
    வாழ்வைத் தக்கவைக்கலாம்
    என்றாகிப்போனதோர்
    பொதி செய்யப்பட்ட ஜீவிதம்!

    செம்மையாக்கப்படாத
    இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
    ஆசைகளோடு மனசு
    இறுகி இருக்கிறது பாறையென!

    அச்சுறுத்தலுக்குள்ளான இக்கணங்களில்
    இழக்கவென்று
    உயிர் தவிர
    ஒன்றும் இல்லா நிலையிலும்
    இயல்பான விடயங்கள் கூடப்
    பாரிய அழுத்தம் தந்து
    பயம் காட்டுகின்றன!

    எதற்கும்
    முன்நின்று முகம் காட்டி
    எதிர்க்கத் திராணியற்ற இயலாமைக்
    குறிப்பாக…
    நிறைவேறாது என அறிந்தும்
    நீ என்மேல்
    வலிந்து திணித்துவிட்டுப்போன
    காதலும்தான்!

     

    Share
  • எங்கிருந்தும் தொடங்க முடியாத தெரு!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    நேர்க்கோட்டில் வந்த ஊர்தியைக்
    குறுக்குக்கோட்டில் வைத்து
    விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்
    அவர்களுக்கான வசூல் வந்து சேரும் வரை
    போக்குவரத்தில் என்னிடமும் உங்களிடமும்
    கறந்த,தெரிந்த சில புள்ளிகள்!

    இத் தெருவில்
    வெற்று மதுக் குப்பிகள்
    வீசிக் கிடப்பது காண்கையில்
    ஊகிக்க முடிகிறது
    தறி கெட்டலையும் தவறணைப் பிசாசுகள்
    புகைந்தபடி நிலத்தில் கால்
    பட்டும், படாமலும் சற்றுமுன்
    காற்றையும் மாசுபடுத்திக்
    கடந்திருக்க வேண்டும் என!

    வெத்திலை, பாக்கு சாப்பிட்ட
    சில… சுண்ணாம்புகள்
    போறம்போக்கு இடம் என்ற போக்கில்
    காவி படிந்த பற்களைக் கழற்றி விட்டுப்
    போயிருந்தார்கள்!

    யாரோ ஒருத்தி
    வாசலைக் கூட்டிவந்து
    வீதிக்கு விட்டிருந்தாள்!

    அழகாய் இருந்த சுவர்
    அசிங்கமாகித் தெரிகையிலே தெரிகிறது
    கோதுமைக் கரைசலுடன்
    கட்சி ’போஸ்ட்டர்கள்’ஒட்ட
    இருவேறு கூட்டம்
    ஒன்றின் மேல் ஒன்றை ஒட்டியபடி
    இவ்வழி கடந்திருக்கின்றன என்று!

    பிச்சைக்காரன் மட்டுமல்ல,
    பஸ்ஸைத் தவறவிட்ட பயணியும் கூடப்
    படுத்துறங்கிப் பசியாறும் மடமான
    நிழல் வாகை நிழலில்
    சிற்றெறும்பின் யோசனையேனும்
    தோன்றாத ஒரு ‘பரதேசி’
    சிறுநீர் கழித்திருக்கிறான்!

    சுத்தப்படுத்துவதாயின்
    எங்கிருந்து தொடங்குவது
    என்ற கேள்வியுடன்
    முற்றுப் பெறுகிறது தெரு!

     

    Share
  • அப்பாவின் பேய்க் கதைகள்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    சிறுபிராயம் முதல் எனக்குக்
    கதைகளில் கொள்ளைப் பிரியம் என்பதால்
    எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினைச்
    சொல்லிக்கொண்டிருப்பார்!

    முதலில் பயங்காட்டுவதாய் வரும்
    ’பேய்’க்கதையில் தொடங்கி
    அரச கதை, பின் நரிக்கதை
    சிங்கம் புலிக்கதை, ’கிரீஸ்’ மனிதன் கதை
    மொழிகடந்த தெருக்கதைகள் என
    அது ஒவ்வொன்றும்
    நீண்ட கதைகளால் ஆன கதைகள்!

    அவற்றைக் கேட்க
    இனிமையாகவும், சுவரஸ்யமாகவும்,
    பயங்கரமானதாகவும் இருந்தன
    கற்பனையில் கதைகளைக்
    கட்டிச் சமைத்துக் கதைப்பது கேட்க
    அப்போது பிடித்தமானதாய் இருந்தது!

    ஆனால் பின்வந்த காலங்களில்
    அப்பாவின் கதைகள்
    சப்பையாகவும், குப்பையாகவும்
    சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க!

    பொய்க்குக் கூட பொருந்தவுமில்லை
    எனக்குப் புத்தி பிடிபட்ட விடயம்
    அப்பாவுக்குப் பிடிபடாமல் இருந்திருக்கலாம்
    அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
    என்பதற்காக
    எல்லாக் கதைகளையும்
    கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

    இன்றும் அப்படித்தான்
    அப்பா கதை சொல்லத் தொடங்கினார்
    குறுக்கிட்ட நான்
    அப்பாவிடம் சொன்னேன்
    ”இது எனது முறை”
    நான் ஒரு கதை சொல்கிறேன் என்று!

    அப்பா காதுகளைக் கூர்மையாக்கினார்
    என் கதை கேட்க
    நான் சொன்னேன்
    அப்பாவுக்குரிய மரியாதையுடன்
    ”நீங்கள் ஓய்வெடுங்கள்!” என்று!

     

    Share
  • அதுவரும்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    ஒரு பறைவையின் இறகு உதிர்வது போல்
    ஒரு பூவின் இதழ் விரிவதுபோல்
    சிறு பசியில் குழந்தை அழுவதுபோல்
    பெரும் நிசியில் மௌனம் நுழைவதுபோல்
    அதுவரும்…

    இருண்ட வானம் கலைவதுபோல்
    மிரண்டகாளை அலைவதுபோல்
    மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
    பார்க்க இயலாப் பரபரப்போடும்
    அதுவரும்…

    தவணை கேட்க மறுத்த நொடியாய்த்
    தலையணையோடு சரித்தபடியாய்த்
    தாலாட்டுக் கேட்டுச் சிரித்தவடிவாய்த்
    தாயவள் வயிற்றில் தரித்தபடியாய்
    அதுவரும்…

    துயரத்தின் உயரத்தையும்
    நீளத்தின் ஆழத்தையும்
    வாழ்க்கையின் கோலத்தையும்
    அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
    அதுவரவேண்டும்!

    அது வந்தால்தான்
    வாழ்க்கையின் மெய், பொய்
    இரண்டையும் இனம்பிரிக்க ஏதுவாகும்!

    இங்கு இருப்பவனுக்கும்,
    மண்ணைப் பிரிப்பவனுக்கும்
    அடுத்தவனுக்குக் குழியைப் பறிப்பவனுக்கும்
    அவனவனின் அனுமதியின்றியே
    அதுவரும்…

    அவனோ நீங்களோ நானோ அழைக்காமல்
    மரணம் என்னும்
    மலர்ச்செண்டு கொண்டு
    நம்மை நாடி அடைய
    அதுவரும்!

     

    Share
  • அறிவு

    -ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை

    படைத்தவன் அளித்த பரிசது செறிவு
    பகுத்தறிவென்றோர் பெறுமதி அறிவு
    மனிதனாய் ஆனாய் என்பதை அறியா
    மண்ணதில் வீணாய்ப் போவது சரியா?

    படித்தரம் உள்ள வெகுமதி தெரிவு நீ
    பாரினில் அறிவு உயர்வெனக் கருதினி
    தேர்வுகள் வந்தால் எழுதிட வினை
    திறமைக்கு அறிவு இருக்குது துணை!

    தேடலை நன்று திறம்படச் சொல்லு
    திறனது கொண்டு எழுந்து நீ நில்லு
    நெருக்கடி நேர்ந்திட நிமிர்த்திடும் ஏணி
    நீந்தி நீ சேர்ந்திட அறிவது தோணி!

    அறிவது சேர்ந்தால் உனக்கது கைவாள்
    ஆற்றலில் தேர்ந்தால் உலகினில் மெய்யாள்
    எதிரிக்கும் வாய்ப்பை அறிவினால் கொடுத்து
    ஏழ்மையின் வாழ்வை ஏற்றத்தில் நிறுத்து
    அறிவதைக் கொண்டு வாழ்வதைத் துலக்கு
    ஆளுமை வென்று பூமியைப்  பெருக்கு!

    அறிவைக் கூட்டு ஆணவம் கழிபடும்
    அறிவைத் தீட்டு பாறையும் வழிவிடும்
    அறிவது சமுத்திரம் பரந்ததோர் ஆழி
    அறிந்திடு சரித்திரம் படிப்பதால் தேடி
    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – இதைத்
    தெரிந்தபின் உண்டா உனக்கொரு கேடு?

    பொறுமையைக் கொஞ்சம் மனதினில் அள்ளி வை
    பொய், புறம் நஞ்சு எரித்திடக் கொள்ளி வை
    கர்வத்தை மெல்லக் கடைசியில் தள்ளி வை
    கருணையை வெல்ல ஆளில்லை சொல்லி வை
    அடுத்ததோர் இலக்கு அறிந்திடப் புள்ளி வை
    அறிவென்ற கணக்குப் படிப்பென்று பள்ளி வை!

     

    Share
  • எனது மரணம்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.

    உடைவாளை
    இறுக்காத சரணாகதியும்
    உயிர்வாழக் கேட்கின்ற
    இறுதி நிலையுமாய்
    அமையும் அத்தருணம்
    நிகழ்கால நிரலொன்றின்
    நிச்சிலப் பொழுதொன்றில்
    நிமிடத்திற்கும்
    வினாடிக்கும் இடையில்
    கண்காணிப்பை மீறிக்
    கணிக்கப்பட்டிருக்கும் அந்நொடி
    யார் பிடித்து வைத்திருப்பாரோ
    யாருக்கும் தெரியாது!

    உள்ளிழுத்த காற்றை
    வெளியேறவிடாத வேளையாய்ச்
    சம்பவிக்கும் அச்சடங்கு!
     
    உடன்கட்டையேற என்னுடன்
    ஒப்புக்கொண்டவள்
    உயிர்க்கட்டை இறங்கத்
    தப்பிக் கொண்டவளாய்த் தள்ளிநின்று
    ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு!
     
    பிள்ளைப் பாத்திரங்கள்
    பிரிந்த மாத்திரத்தில்
    கண்கள் பனிப்பார்கள் – கொஞ்சம்
    கவலை தொனிக்க!
     
    சக சொந்தங்கள் – என்
    சாமுன் குறைமெழுகி
    அனுதாபப் பூச்சுகளால்
    அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர்!
     
    பெயர்மறந்த ஊர்ப்பிரியத்தின் பேரால்
    “மையத்து”அல்லது பிணம் என்று
    மகுடம் சூட்டுவர்!
     
    ஊர்வலமாய் வரும் – என்
    உடல்வளம் கைம்மாற
    நான் ஆக்கிரமித்த மண்
    என்னை ஆக்கிரமிக்க
    வாய்பிளந்து
    வழிபார்த்துக் காத்திருக்கும்!

     

    Share
  • ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து…

    -ரோஷான் .ஜிப்ரி, இலங்கை

    நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி
    நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்
    அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த
    வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று
    வாசித்து முடித்திருந்தது காலம்

    பரிச்சயங்களை மீறிய பரபரப்பாய்ப்
    பெரும் பரப்பைத் தன் பிடிக்குள் வைத்து
    கோலோச்சியவனால்
    மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை
    அது வென்றுபோனது அவனை வீழ்த்தி
    இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை
    கொழுகொம்பு இன்றி குலை முறிந்து
    ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி

    ஒரு காலத்தில் குகைகள் ஏகி
    சிங்கத்தைக் கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்
    இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்
    உருகி உருகிக் கரைந்தன அவனை சுற்றியிருந்த
    மலைகளும்,கூழாங்கற்களும்

    ஊர்க் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்
    இலாப நஷ்டங்கள் பற்றிச் சிலாகித்தன
    பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு
    உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்

    அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து
    முதலாவது, இரண்டாவது எனப்
    பின் குறிப்புகள் தலை நீட்ட
    நிசப்தம் கலைய வேண்டும் என்றே
    பிரளயம் முடுக்கி விடப் படுகின்றது

    அவன் உள்ளவரை
    தேவதூதர்களைப் போலும்,
    தாசில்தார்கள் போலும் இருந்தவர்கள்
    ஆனால்; இப்போது
    மேல் சொன்ன எதிலும் இல்லாத
    “கழிசடைகளாய்” வசைகளால் வாழ்த்த
    அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன
    சொத்தைப் பங்கிடும் பச்சா தாபங்களில்!

    ஏலவே தெரிந்திருப்பின்
    எப்போதோ அவன்
    இவர்களை விட்டும்
    இறந்திருக்கலாம்!!

     

    Share
  • வஞ்சித்தல்!

    -ரோஷான் ஏ. ஜிப்ரி, இலங்கை

    கண்கொத்திப் பாம்பின்
    சாயல் ஒத்த
    உன் பார்வைவிழ
    என் கிளை பிரிகிறது!

    தனித்த தண்டவாளமாய்
    இழுபட்டுப் போயிற்று
    வாழ்வின் இருப்பு!

    கூட்டுப் பிரார்த்தனையின்
    அதிஉச்ச நம்பிக்கையை
    நீ வீசிய சிறுகல் சிதைத்திற்று!

    இந்த வதைகளில்
    எந்த ரசமும் இருப்பதற்கான
    சாத்தியமும் இல்லை இனி…
    அது வெறும் மெழுகுச் சிலையாய்
    உருகி வடிந்து உறைகிறது
    என்பதைத் தவிர!

    தவத்தின் உச்சகட்டங்களைத் தாண்டி
    மனம் விரும்பியதென்று மார்தட்டிப்
    பசி மறந்து, துயில் துறந்து
    பெருக்கிய முற்றம்
    இன்றுன் ஆக்கிரமிப்பின்
    அத்துமீறல்களுக்குள் அகப்பட்டுச்
    சீர்குலைந்து சிதறிய வாசலாய்!

    பொறிகலங்க வைக்கும் அறங்களைப்
    புகட்டவும், போதிக்கவும்
    சாத்தியமாகும் உன்னால் என்பதைச்
    சாட்சி பகிர்ந்திற்று
    சமகால நடவடிக்கைகள்!

    வார்த்தைகளால் தீயிட்டுக் கொளுத்தவும்
    வஞ்சித்தலால் கூந்தல்கட்டி விரட்டவும்
    அறியுமாயிருந்த உனக்கு
    இழப்பு, தவிப்பு எதையும் நீ
    அறிந்துணர அவகாசம் எடுக்கவில்லை!

    சுவைமிகு என் மனசின் துணுக்குகளைப்
    படித்துப் பார்க்கத் தவறும் எல்லாக்காலத்திலும்
    ரசம் வடியும் தேனீயாய்
    இறுதிக்கணம்வரை
    நான் சுற்றி அலைவேன்
    நீ கலைத்துவிட்ட இவ்வெளியில்!

     

    Share