Tag: வைதேகி ரமணன்

  • பரிகாரம்

    வைதேகி ரமணன்.

    பரிகாரம் என்றால் பதில் உதவி மாதிரி சம்திங் என்றுதான் நான் விளங்கிக் கொண்டிருந்தேன். நமக்கு யாராவது ஏதாவது உதவி செய்திருந்தால் பரிகாரமாக அவர்களுக்கு ஏதேனும் பதிலுக்கு செய்வது நல்லது என்பது உலக வழக்கு. ஆனால் இப்போதெல்லாம் ஜோசியம் பார்ப்பதும் ஜோசியர்கள் சொல்லும் பரிகாரங்களைச் செய்வது என்பதையும் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் சொற்பொழிவாளர் ஒருவர் நான் சொல்வதைக் கேளுங்கள் பரிகாரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொன்னார்.

    அது முதல் நானும் அவர் சொன்னதைப் பலரிடம் சொல்லி நானும் நம்பி பிறரையும் நம்ப வைத்தேன். அந்தச் சொற்பொழிவாளரையும் அவரது சொற்பொழிவுகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்லாது பலரையும் கேட்கவும் வைத்துள்ளேன். அவ்வளவு அழகாகப் பேசுவார். மிகவும் கருத்தான விஷயங்களாகவும் இருக்கும். கிட்டத்தட்ட அவருடைய எல்லாப் பொழிவுகளையும் வாங்கி விட்டேன். வீடியோக்களை ஆடியோக்களாக மாற்றி நடக்கும் போதும் உறங்கும் முன்னரும் கேட்பேன். பலருக்கும் பரிசாகவும் கொடுத்துள்ளேன். அப்படிப் பட்ட ஒருவர் பரிகாரம் பற்றிச் சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா? எனவே நானும் அவரையே பின்பற்றத் தொடங்கினேன்.

    வெளிநாட்டில் நான் வேலை பார்த்த போது அங்கு ஒரு நல்ல நண்பர் எனக்குண்டு. தம்பி மாதிரி. மிகவும் பாசமாக இருப்பார். நான் இங்கு வந்த பிறகும் அந்த நட்பும் உறவும் நீடிக்கிறது. அவரது மனைவி மிகவும் அன்பானவர். குடும்பமே நல்ல குடும்பம், அவர்களுடனும் அவர்களது குடும்பத்துடனும் சுற்றுப்பயணம் எல்லாம் சென்றிருக்கிறேன். பேருந்து வைத்து போகுமளவிற்குப் பெரிய குடும்பம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த உடன்பிறவா தம்பிக்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு, நுரையீரலில் சளி. எப்படியோ மருத்துவர்களின் திறமையால் தப்பித்தார். எல்லோருடைய பிரார்த்தனையும் ஒரு காரணம்.

    அவரது வேண்டுகோளின்படி உடனே அருகில் உள்ள ஒரு ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்தேன். இரண்டுவாரம் காலையில் குளித்து அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகரை 21 முறை சுற்றி வரும்படி வேண்டினார். நல்ல வேளை என் வீட்டிற்கு முன்புறமே அதே மாதிரி ஒரு விநாயகர் இருந்தார். அரசமரமும், வேப்ப மரமும் இருந்தன. நானும் தொடர்ந்து இருவாரமும் அங்குள்ள சாலையில் ஏற்படும் சாலை நெரிசலையும் பொருட்படுத்தாது செய்து வந்தேன். என்னுடன் என் பேரனும் வருவான்.

    வீட்டில் யாரும் இல்லாததால் நான் அவனைக் கூட்டியே செல்ல வேண்டிய நிலை. சில சுற்றுகள் வருவான். பிறகு ஓரிடத்தில் நிறுத்தி வைப்பேன். என் உருவம் மறையும்போது பாட்டி …பாட்டி … என்று கூவுவான். சின்ன பையன் கைபிடித்து வரும்போது வாட்ச்சுக்கு இடையில் கைவிட்டு இழுப்பான். கையில் போட்டிருக்கும் ப்ரேஸ்லெட்டுக்கு இடையில் கைவிட்டு இழுப்பான். சொன்னாலும் கேட்க மாட்டான். அப்படியே இழுத்து கோவில் சுற்றும்போது என்னுடைய ப்ரேஸ்லெட்டும் விழுந்துவிட்டது. அது 12ஆ அல்லது 16 கிராமா என்பது நினைவில்லை. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சரி விநாயகருக்கு காணிக்கையாகத் தந்ததாக நினைத்துக் கொண்டு இரண்டு வாரங்களையும் வெற்றிகரமாக முடித்தேன்.

    நண்பரும் மருத்துவ மனையில் இருந்து இல்லம் திரும்பினார். சாதுவான மனிதர், ஆறு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மனைவியும் சம்பளமில்லாத விடுப்பு எடுத்து கணவரது உடல்நலம் பேணினார். பிறகு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். இருந்தாலும் மீண்டும் என்னை நச்சரித்து ஒரு நல்ல ஜோசியரைப் பார்க்கும்படி வேண்டினார். நானும் பல புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஒருவரைப் பார்க்க முடிவு செய்தேன். எனக்கு இதிலெல்லாம் பிரமாதமான நம்பிக்கை இல்லை என்றாலும் மற்றவர்களின் உணர்வுகளை மிகவும் மதிப்பேன்.

    கார் எடுத்துக் கொண்டு என்னுடைய இரண்டாவது மகனுடன் பாண்டிச்சேரி என்ற புதுச்சேரிக்குச் சென்றேன். ஜோசியர் மூன்றுமணி நேரம் என்னென்னவோ கணக்குப் போட்டு, கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட ரெஃபர் செய்து அற்புதமாகப் பார்த்துச் சொல்லி எழுதியும் தந்தார். அதன்படி செய்தால் பிரச்சனைகள் குறையும் என்றும் கூறினார். திரும்பி வந்த உடனே ‘வாட்ஸ் அப்’செய்து மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பிவிட்டேன். அத்துடன் முடியவில்லையே கதை.

    பரிகாரம்அவரும் எல்லாப் பரிகாரங்களையும் செய்தார். வயதான தம்பதிகளுக்குப் புதுத் துணிமணிகளை வாங்கித் தந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது; படிக்கும் பிள்ளைகளுக்கு நோட்டுப்புத்தகம் வாங்கித்தருவது என எல்லாம் செய்தும், தாலி வாங்கித்தரும் பரிகாரம் செய்ய முடியலை. அந்த நாட்டில் உள்ளவர்கள் யாரும் இதை ஏற்க மறுத்ததால் என்னை அணுகினார்.

    தமிழ்நாட்டில் அது ஒன்றும் பெரிய சிக்கலில்லை. எனக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் விதவைத் தங்கையின் மகனுக்குத் திருமணம் பேசியிருந்தார்கள். பையனுக்கு வயது 28, பெண்ணுக்கு வயது 18. பையன் கையில் ஒரு முழை (கொஞ்சம் வீக்கம் அதாவது மாம்பழ சைசில்) இருக்கும். பெண் ஏழை. எல்லோரும் செய்த உதவியால் திருமணம் நடந்தது. தாலி, மணமக்கள் பட்டு வேட்டி, துண்டு, பட்டுப்புடவை எல்லாம் என்வழியில். சென்றமாதம் திருமணநாளும் கொண்டாடினார்கள்.

    சென்றவாரம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று நடந்த கார் விபத்தில் பையனுக்கு தலையில் அடிபட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்று. இப்பொழுது அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பம் என்று. அசைவற்ற நிலையில் நான் !!! யாரிடம் சொல்ல !!!.

    Share
  • சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே …

    — வைதேகி ரமணன்.

    எனக்கு இரண்டு மருமகள்கள்.

    மூத்தவனுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதாலும்; வெளிநாட்டில் வாழ்வதால் உதவிக்கு ஆள் இல்லை என்பதாலும் குழந்தைகள் (???) இருவருமே இயல்பாகவே விஷமம் அதிகம் என்பதாலும் எப்போதும் சண்டைதான்.

    இரண்டாவது மகன் சென்னைவாசி. மனைவி இல்லத்தரசி. அவர்களுக்கு ஒரே மகள். பெற்றோரைப் போலவே நல்ல உயரமும் உடல்வாகும் கொண்டவள், அவளுக்கு 10 வயது முடியப் போகிறது.

    பிரச்சனை என்னவென்றால் … புதிதாக ஒன்றும் இல்லை. உலகளவில் பேசப்படும் விஷயம்தான். ஒபீசிட்டி .. உடல்பருமன். 10 வயதிலேயே உடல் பருமனாகாமல் இருக்கச் சிலபல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. என்றாலும் எங்கு நோக்கினும் கிராண்ட் சுவீட்ஸ், ஆனந்தபவன், கிருஷ்ணா சுவீட்ஸ் … சென்னையின் மூளை முடுக்குகளில் எல்லாம் கடைகளும் கிடைகளும் தொடங்கியுள்ளன. எனவே பிரச்சனை பெரிய அளவில்தான்.

    பேதாதற்கு ஜன்க்ஃபுட் ஆன மக்டானல்ட், கே எஃப் சி, ஹாட் சிப்ஸ் போன்ற பல வெளிநாட்டு இறக்குமதிகளும், பலவகையான ‘கோக் ஷாப்” போன்ற பேக்கரி , பாஸ்ட்ரி வகைகளும் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவதில்லை. எம் காலத்தில் ஒரு பொரிவிளங்காய் உருண்டையை ஒருவாரம் தின்றாலும் தீராது. இப்போதைய பிள்ளைகளுக்குச் சுலபமாக வாயில் போட்டதும் நழுவி வயிற்றில் போகும் பண்டங்கள்தான் பிடிக்கிறது என்ன செய்ய …

    Arguingசொல்ல வந்ததே வேறு … நான் இப்போது வெளிநாட்டில் மூத்த மகனுடன் இருக்கிறேன். தினமும் ‘ஸ்கைப்பில்’ பேத்தியுடன் பேசுவேன். சின்னவன் தன மகளுக்கு முதல் தோசை தரும்போதே போதும்…போதும்… பருமனாகிவிடுவாய் என அச்சுறுத்தி 2 அல்லது 3 இல் எழுப்பிவிடுவான். அவன் சைசுக்கு அவன் சாப்பிடவே கூடாது. இருந்த போதும் மகள் மேல் அக்கறை அதைவிட எதிர்காலத்தில் அவள் அழகான உடைகள் அணிய வடிவம் அவசியம் என்ற கவலையும் ஒரு காரணம். நேற்றைய முன்தினம் பேத்தி கூப்பிட்டாள். வழக்கம் போல அம்மா அப்பா இருவரும் எதற்கெல்லாம் வாக்குவாதம் செய்தார்கள், ஆட்டம் டிராவில் முடித்ததா? யாருக்கு வெற்றி என்றெல்லாம் ஒலிபரப்பு செய்தாள். முத்தாய்ப்பாக இன்று இருவரின் சண்டையில் நான் நாலு தோசை சாப்பிட்டதை இருவருமே கவனிக்கவில்லை என்றாளே … பார்க்கலாம். சிரித்துச் சிரித்து வயிறுதான் வலித்தது.

    இங்கோ நேற்றிரவு இட்லி சாம்பார். கடையில் வாங்கிய மாவுதான். குக்கர் தட்டு இட்லி வேறு. மகனும் பேரனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சுடச்சுட இட்லியும் சாம்பாரும் நல்ல மணத்துடன் வந்தன.

    மகன் டயட்டில் இருப்பதாக அடிக்கடி சொல்லிக்கொண்டே தட்டில் நாலு இட்லி வைத்தான். அம்மாவோ மகனுக்கு 6 இட்லி வைத்தாள்.

    உடனே பேரனுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. “நான் பருமனாகி கேலிக்கு உள்ளாக்கப் பட வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா? எடுங்கள் 4 போதும்” என்று கத்தினான்…

    மருமகளோ “பரவாயில்லை இன்று ஒருநாள் சாப்பிடு” என்றாள் …

    மகனுக்கு வந்ததே கோபம். “அதெப்படி நீ அப்படிச் செய்ய முடியும். அவனே வேண்டாம் என்று கூறும்போது” என்று வாக்குவாதத்தைத் தொடக்கி வைத்தான்.

    இருவருமே பேசுவதில் குறைந்தவர்கள் அல்லர். தொடர்ந்தது சண்டை… குரலும் உயர்ந்தது… இதற்கிடையில் பேரனோ 6 இட்லியும் முடித்துவிட்டு எழுந்துவிட்டான்.

    இரண்டும் அடுத்தடுத்து நடக்கவே எனக்குச் சிரிப்பிற்குத் தடைபோட முடியலை. சண்டை போட திருமணம் செய்தார்களா? அல்லது திருமணம் செய்ததால் சண்டை போட்டார்களா என்று தெரியலை…

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 4

    பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி …

    — வைதேகி ரமணன்.

    ராஜேஸ்வரியின் திருமணம்… ராஜேஸ்வரி தாயில்லாத பெண் மட்டுமல்ல கருப்பை இல்லாத பெண்ணும்கூட. அதை அறியாத அவளது கிராமிய குடும்பம் மல்லிகைப்பூவை விழுங்கச் சொல்லி தொல்லை செய்த கதை பெருங்கதை. அது இங்கு அவசியமில்லை. அவளும் ஒருவழியாக வேலைக்குப் போன பிறகு ஒருவரிடம் சிக்கினாள். உண்மையறிந்தும் அவர் அவளை மணம் செய்து கொள்ளவே விரும்பினார். பிறகென்ன உடன்போக்குதான்.

    வந்துவிட்டார்கள் அவளது இரு சகோதரர்களும், ஒரு அம்பாசிடர் காரில், நேரே நாங்கள் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கே. அவளது தோழியான நான் விடுதியில் அவளை மறைத்து வைத்திருப்பேன் என்ற சந்தேகம் அவர்களுக்கு. விடுதி வாசலில் ரசாபாசத்தை விரும்பாத நான் அருகில் உள்ள டீக்கடை மரத்தடியில் துணையாக ஐவர் சூழ நின்றேன். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தாயில்லாத பெண்ணை இப்படியொரு முடிவெடுக்க வைத்து விட்டீர்களே என்று திரும்பத் தாக்கினேன்.

    என்னை நம்பாமல் விடுதியின் ஃபோன் பாயிடம் சொல்லி எனது அறையைச் சோதனை செய்தார்கள் அவளது அண்ணன்மார்கள். உண்மையில் நடந்தது எதுவும் எனக்கும் தெரியாது. மறுநாள் மிக நீண்ட கடிதம் வந்தபின்தான் உண்மை அறிந்தேன். இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். காலமும் ஓடிவிட்டது. இன்றும் இருவரும் நல்லமுறையில் ஒன்றாக இல்லறம் பேணுகிறார்கள். அவளது கணவரும் பணி ஓய்வு பெற்று விட்டார்.

    அவர்கள் ஒரு மகளைத் தத்தெடுத்து வளர்த்து, அவள் இப்போது பள்ளிப் படிப்பும் முடித்துவிட்டாள். அவளுக்கே தான் ஒரு தத்து மகள் எனத்தெரியாமல் அன்புடன் வளர்கிறாள். ராஜேஸ்வரியும் நல்லாசிரியராகப் பணிபுரிந்து நல்ல அம்மாவாக இருக்கிறாள். கஷ்டப்பட்டுத் தேடி பலவருடங்களுக்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு முன் அவளைக் கண்டுபிடித்தேன். இப்போது அடிக்கடி தொலைபேசி வழியே மீண்டும் நட்பைத் தொடர்கிறோம்.

    நான் வெளிநாட்டிற்குப் பணிபுரிய செல்லும் முன், என் வீட்டருகில் வசித்த, என் தம்பியுடன் படித்த ஒருவன் எங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வேலை பார்த்தான். அவனும் அந்தப் பாழாப் போன காதலில் சிக்கி …. வேறு யார்? … அவனது மாமன் மகள்தான், ஆனால் பதினைந்து வயது வித்தியாசம்…. மாமாவோ சும்மா … கவுண்டமணி கணக்கில் எகிறுபவர். அவர்கிட்ட என்னைத் தூதனுப்பினான். அப்பொழுது எனக்கு முப்பத்தைந்து வயது. விட்டாரு பாருங்க …. டோஸ்… செம்ம டோஸ்… மறக்க முடியாது. இவனோ அழுவறான். என் கல்யாணத்த முடிக்காம வெளிநாடு போறீங்களேன்னு அழுவறான். இன்னைக்கும் அவன் அழுகை நினைவில் இருக்கு. அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. அதே பொண்ணை மணம் செய்து இப்போது சென்னையில் எங்கோ இருக்கான்.

    வெளிநாட்டில் பணிபுரிந்த பொழுது, ஒரு இலக்கிய விழாவில் ஓர் எழுத்தாளன் ஒருவன், என்னைவிடப் பலவயது இளையவன், எனக்கு அறிமுகமானான். எழுச்சி மிக்க; இலக்கிய ஆர்வம் மிக்க நல்லவனாக அறிமுகமாகியிருந்தான். திருமணமானவனாக இருந்தான். உழைப்பால் உயர்ந்தவனாக சில பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தான். நான் இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு தொடர்பு கொண்டு, இந்தியாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகவும், அதற்காகத் தாலி வாங்க கடையில் இருப்பதாகவும் சொல்லவே அதிர்ந்து போனேன். மறுநாள் இந்தியா வருவதாகவும் கூறினான்.

    அறிவுரை பல எடுத்துக்கூறி இருதாரம் குற்றம் எனவும்; சான்றுகள் பல கூறியும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினேன். எல்லாம் நிறுத்திவிட்டதாகப் பலமுறை சத்தியம் செய்தான். நானும் அவனை நம்பினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோடையில் வேலை ஒன்றின் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு இருபத்தைந்து நாள்தான். இந்தியா திரும்பினேன். இந்த இடைவெளியில் இந்தியா வந்து அதே பெண்ணைத் திருமணம் செய்துவிட்டான். கேட்டால் தடுக்க நீங்கள்தான் ஊரில் இல்லையே என்கிறான்.

    இப்பொழுது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரு குடும்பங்களையும் சமாளிக்க முடியாமல் கோர்ட், கேஸ் என அலைகிறான். இது மாதிரி ஆட்களை எப்படித் திருத்த? … என்ன செய்ய? … ஒருமுறை மணம் முடித்தவன் மறுமணம் பற்றி யோசிக்கலாமா? எவ்வளவு பெரிய முட்டாள் இவன் …இல்லையா?

    அண்மையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் நண்பரின் மகனின் திருமணத்திற்குச் சென்றேன். வெளிநாட்டில் பணிபுரியும் அவன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது, அவனது மாமா தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்பி ஒரு சபை நடுவே அவனிடம் நேரடியாகக் கேட்டு விட்டிருக்கிறார். அவனோ தங்கை மாதிரியான அவளிடம் தனக்கு வேறுவிதமான எண்ணம் எதுவுமில்லை என்று மறுத்துவிட்டான். அவனது அம்மாவிற்கோ பாசமலர் அண்ணன் சென்டிமெண்ட். கணவன் மனைவி இருவரும் ஒப்புக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று இந்தக்கால பிள்ளைகளின் மனோபாவம் புரியாமல் மிரட்ட, மிரண்டு போன பையன் என்வீட்டிற்கு வந்தான்.

    வேறு யாரிடமாவது சிக்கியிருப்பானோ என்ற என் சந்தேகத்திற்கு முற்றிலுமாக மறுத்து விட்டான். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயதிலும், இவ்வளவு அனுபவத்திற்குப் பிறகும் அவனை நம்பிய என்னை என்ன சொல்வது …. அதன் பிறகு மீண்டும் அவனை அயல்நாட்டில் சந்திக்க நேர்ந்தபொழுது உண்மையை ஒப்புக் கொண்டான். அவனுடைய தங்கையுடன் இருவரையும் டின்னரில் சந்தித்து, எல்லாக் கதைகளையும் கேட்டு, காதலை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனது அப்பாவிடம் தனியே உரையாடி அவரைப் புரிந்து கொள்ள வைத்தேன். அவனது தங்கையிடம் பேசி அவனது தாயை இளக வைத்தேன், அவனிடம் பேசி விரைவு படுத்தினேன். கடந்த இரண்டு வருடத்தில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று மூவரிடமும் பேசிப் பேசி ஒரு வழியாக இந்த ஆண்டு திருமணம் முடிந்தது.

    இதுதான் இப்போதைக்கு நான் சென்ற கடைசித் திருமணம். இப்போது புரியும் நான் ஏன் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று. மலரும் நினைவுகள் என திரும்பிப் பார்க்கும் பொழுது….எனது பேராசிரியர் ஒருவரது மகன் செந்திலின் திருமணம் செட்டி நாட்டில் மிகச் சிறப்பாக நடந்தது. வித்தியாசமான திருமணம். போனதும் வந்ததுமான பயணம் சிறப்பாக இருந்தது. இடையிடையே என் அண்ணன், தம்பி, அக்கா என எனது உடன்பிறப்புகளின் மகள்கள், மகன்கள் என குடும்பத் திருமணங்கள் நடந்தேறின. அதில் ஏதும் சுவராசியமும் இல்லை. அவற்றில் என் பங்கு ஏதும் இல்லை, அத்திருமணங்கள் ஒரு சிலவற்றுக்கு நிதி உதவி செய்தது தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி என் பங்களிப்பு ஏதும் இல்லை. அதனால் அவற்றைப் பற்றி எழுதவும் ஏதும் இல்லை. பரிசளிப்பதற்காகப் போன பல திருமணங்கள் எனது மாணவர்களின் திருமணங்கள்; தோழிகளுக்குத் துணையாகச் சென்ற திருமணங்கள்; தோழர்கள் தோழிகளின் பிள்ளைகளின் திருமணங்கள் எனப் பல்வேறு திருமணங்களுக்குப் போயிருந்த போதும் நினைவில் நிற்பவை மேற் சொன்னவைதான்.

    ________________________

    முன்பதிவுகள்:

    ________________________

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 3

    கடவுள் அமைத்து வைத்த மேடை …

    — வைதேகி ரமணன்.

    எனது பேராசிரியரின் மகள் மனோன்மணி … நல்ல தமிழிலக்கிய நாயகனின் அருமை மகளின் பெயர். தனது அக்கா கணவரின் தம்பியைத் திருமணம் செய்ய விரும்பினார். அவர் ஒரு அக்கவுண்டென்ட். இவளது அப்பவோ, டாக்டர் வேணுமா? இஞ்சினியர் வேணுமா? பேராசிரியர் வேணுமான்னு சொல்லு … ஆனா இவன்தான் வேணுமின்னு கேக்காதே என்றார். பிறகு என்னவெல்லாமோ தில்லு முல்லு செய்து அவரைச் சம்மதிக்க வைத்தோம். ஒரு வழியாகக் கல்யாண நாளும் வந்தது. நாங்களும் போனோம். விருந்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, புளி கூட நாங்க போய்தான் வாங்கினோம்.

    திருமணம் சிறப்பாக நடந்தது. இன்றளவில் ஒற்றுமையான தம்பதிகளாக சீரும் சிறப்புமாக வாழ்ந்தபோதும் அவர்களின் ஒரே மகளுக்குத் தப்பான ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவளையும் அவளது ஒரே மகளையும் லண்டனில் உள்ள கணவனிடம் இருந்து பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள். அவள் பிறகு வேறொருவனைத் தேர்ந்தெடுத்து, மேலும் வாழ்க்கை சிக்கலாகி என் தோழி மிகுந்த வருத்தத்தில் இப்போது இருக்கிறார்.

    இனி எழுதப் போவது இன்னும் சுவராசியமான திருமணம். அப்ப நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். அந்த அனுபவம்தான் நான் வெளிநாட்டில் ஆசிரியப்பணி செய்ய உதவியாக இருந்தது. அப்போ என் மற்றொரு தோழி நிர்மலா காரைக்குடி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருந்தார். அவரது அம்மாவின் சொந்த தம்பியையே மணம் செய்ய விரும்பினார். ஆனால் அவரது அப்பா ஒத்துக் கொள்ளவே இல்லை. ஒரு வார இறுதியில் நானும் அவரும் அவரது சொந்த ஊருக்குப் போனோம். அது எண்பதுகளில் இறுதியில் ஏதோ ஒரு ஆண்டு. சரியாக நினைவில்லை.

    இவரானால் சூழ்நிலை புரியாமல், நிஜமாக ஒரு தோழியின் திருமணத்திற்குப் போவது மாதிரி நிதானமாக உடைகளைப் பெட்டியில் அடுக்கி, நகையெல்லாம் போடுகிறார். அவரது அப்பாவானால் காசு போதுமாம்மா? இன்னும் வேணுமா என்று வெகு அக்கரையாகக் கேட்கிறார். எனக்கோ அதைப்பார்த்து கண்ணீர் பெருகுகிறது, இவர் இப்படியும் தனது அப்பாவுக்கு ஒரு துரோகம் செய்யலாமான்னு… அப்பல்லாம் எனக்குப் பொய் பேசுவது கோழைத்தனம் என்ற அசைக்க முடியாத கருத்து இருந்தது. ஆனால் தோழிக்கோ எந்த வருத்தமும் இல்லை. நாங்கள் திருச்சிக்கு அவளது மாமாவின் நண்பர்களால் கடத்தப் பட்டோம். நெல்லையிலிருந்து மற்றொரு தோழியும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள மூவரும் பாதுகாப்பாக ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டோம். வெளியில் சென்று வர எங்களுக்கு அனுமதியில்லை.

    தோழியோ எங்கள் இருவரையும் வெளியில் போய் சில சாமான்களை வாங்கி வரச் சொல்கிறார். அவளது தாய் மாமாவின் நண்பர்களோ குளியல் அரை தவிர வேறெங்கும் போக அனுமதிக்க மறுக்கிறார்கள். மறுநாள் காரில் உத்தமர் கோவில் சென்றோம். திருட்டுக் கல்யாணம் செய்ய அந்த ஊர்தான் உகந்த ஊர் என்று எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். அது போலவே குன்றத்தூரும், திருத்தணியும் திருட்டுக் கல்யாணம் செய்ய உகந்த ஊர்கள் என்று பின்னாளில் கேள்விப்பட்டேன்.

    எனக்கோ உள்ளூர நடுக்கம். நான் வேலை பார்க்கும் தனியார் பள்ளியில் அவரது அப்பா புகார் செய்தால் உடனே எனக்கு வேலை போகும். என் பிஹெச்டி கைட் பரிந்துரைத்து கிடைத்த கிடைத்த வேலை அது. ஆய்வுக் கட்டுரையை நான் இன்னமும் டிஃபென்ட் செய்து முடித்திராத நிலையில் கைடும் என்ன செய்வாரோ என்ற பயம் எனக்கு.

    திருமணத்தில் ஐயரோ மூன்று சுமங்கலிப் பெண்களைக் கொண்டு வரச் சொல்கிறார். நல்ல வேளையாகத் தோழியின் மாமாவின் நண்பர் ஒருவர் மனைவியுடன் வர, ஒரு சுமங்கலியும் இரண்டு கன்னிப்பெண்களும் சேர மூவராக நின்று, மூங்கில் கழி போன்ற ஒன்றினை நட்டு திருமணச் சடங்குகள் இனிதே முடிந்தது. கல்யாணச் சாப்பாட்டிற்குப் பிறகு எல்லோரும் பிரிய, பெண்ணும் மாப்பிள்ளையும் பெண்ணின் தாய்வீட்டிற்குச் சென்றார்கள்.

    அடுத்த வாரமே தோழியின் அப்பா பெரிய ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்தார். என்னையும் வரச் சொல்லி அவரது அப்பா பலமுறை வற்புறுத்தியும் நான் ஏன் போகிறேன்? அவங்கப்பா முகத்தில் முழிக்கவே எனக்கு அவமானமாக இருந்தது. நேருக்கு நேர் எதிர்ப்பதுதான் வீரம் என்ற எண்ணம் எனக்கு இருந்த வயது அது.

    கடைசியாக அந்தத் தோழியைப் பார்த்தது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்ற நினைவு. பிள்ளை குட்டிகளுடன் இனிய இல்லறம் பேணினார். ஒருமுறை அவருடன் தங்கி சினிமா பார்த்த நினைவுண்டு. மாமா… மாமா… என்று கணவரிடம் மிகவும் பாசமாக இருந்தார். நன்கு குடும்பம் பராமரிக்கக் கூடிய திறமைகளைப் பெற்றவர். நல்லதொரு இல்லத்தரசியாக இருந்தார்… இப்போது எப்படியோ தெரியலை. ஒருமுறை அவரைப் பார்க்க விருப்பமுண்டு.

    ________________________

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 2

    வாராயென் தோழி வாராயோ…

    — வைதேகி ரமணன்.

    சரண்யாவின் திருமணம், அவளே தேடிக்கொண்ட பையன்தான். அவருக்கு வேறுமொழி என்றாலும் அவரும் இந்து மதம்தான். அவரது தோற்றமும் வெகு சுமார்தான். வேலையில்லாத பட்டதாரி; பார்க்கச் சிறிய உருவம். என்ன காதலோ!!! சரண்யாவிற்குத் தந்தையில்லை, அவளது தாய்க்கும் வேறு வழியில்லை, அவளது தம்பிகளுக்கோ முடிவெடுக்கும் வயதுமில்லை. எனக்கும் இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை, ஆனால் வேறு வழியில்லை. இவளின் பிஹெச்டி படிப்பும் முடிந்தபாடில்லை. இதைப் பேசி முடித்தவர்கள் யார் தெரியுமா? வியக்காதீர்கள்… நான்தான்.

    எனது வலது பக்கத்தில் என்னைவிட ஏழு வயது குறைந்த வேதியியலில் ஆராய்ச்சி செய்யும் மாணவன் மாதவன், இடதுபக்கம் சரண்யாவின் இரண்டு தம்பிகள். தோழியோ மாடிப்படியில், அறைக்கு வெளியே அவளின் அம்மா! கணவர் இல்லாததால் அவர் உள்ளே உட்கார அனுமதிக்கப்படவில்லை. அதைவிட நகைச்சுவை என்னவென்றால், என் முன்னே ஜோடி ஜோடியாக இருபது பெரியவர்கள். ஒரே விவாதம்தான்.

    முதல் கேள்வியே எனக்குப் பிடிக்கவில்லை. எங்க பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர சம்மதமா என்பதுதான் அது. நான் சொன்னேன் சம்மதிக்காமலா உங்களின் வருகைக்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம். அதெல்லாம் பேச்சில்லை. சம்மதம் என்றால்தான் அடுத்த கட்டம் என்றார்கள். நான் முரண்பட்டேன். பிறகு சரண்யாவின் அம்மா சொல்லும்மா என்றதால் சம்மதம் என்ற சொல் என் சம்மதம் இல்லாமலே வந்தது.

    அதன் பிறகு, என்ன செய்வீர்கள்? என்ற சம்பிரதாயமான கேள்வி. இதிலும் எனக்கு உடன்பாடில்லை. இருவரும் ஒருமனமாகி நடக்கப் போகும் திருமணத்தில் ஏன் இந்த வேண்டாத பேச்சு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகுதான் பிரச்சனையே!!! திருமணச் செலவில் பாதி ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நான் எகிறிவிட்டேன் … முடியவே முடியாதென்றும் … எங்களிடம் பைசா இல்லை … வேலையும் இல்லை… கடன் தருவாரும் இல்லை… பின் எப்படி நடத்துவது??? என விவாதம் தொடர்ந்தது. பேச்சு ஒரு முடிவுக்கே வரவில்லை.

    பிறகு ஆளுக்குப் பாதி என ஒப்புக்கொண்டு செலவைப் பற்றிய திட்டம் போடப்பட்டது. எனக்கோ எரிச்சல். சரண்யாவின் தம்பிகளோ விவரம் புரியாமல் மற்றவர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி அக்காவின் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். என்ன செய்ய? சரண்யாவிடம் தேவையான நகைகள் இருந்தன, ஆனால் கல்யாணச் செலவை யார் செய்வார்கள்?

    தோழிகளில் ஒருவரின் நகைகளை அடகு வைத்து பணம் கிடைத்தது. அவர் வங்கியில் பணி புரியவே நகை பத்திரமாகவும் இருந்தது; எங்கள் செலவுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. ஒரு வழியாகத் தோழிகளின் தலைமையில் திருமணம் இனிதே முடிந்தது. திருமண நிகழ்ச்சிகள் படம் எடுக்கப்பட்ட போது நான் ஒரு படத்திலும் நிற்க மறுத்துவிட்டேன். எவ்வளவு கட்டாயப் படுத்தியும் மறுத்துவிட்டேன். இரவு பெண் வீட்டில்தான் மணமக்கள் தங்கினார்கள். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் மொட்டை மாடியில் அரட்டைக் கச்சேரி செய்து விட்டுத் தூங்க ஏற்பாடு செய்யப்பட்டு, வீட்டின் கீழே இருந்த ஒரே அறை மணமக்களுக்குத் தரப்பட்டது.

    அவர்களின் குடும்ப வாழ்க்கை கொல்கத்தாவில் துவங்கியது. ஊர் போய் சேர்ந்ததும் பெரிய கடிதம்… ஆளுக்கு ஒன்று என, இருவரும் தனித்தனியே எனக்குத்தான் முதலில் எழுதினார்கள். எனக்கு பெரிய மகிழ்ச்சி ஏதும் அதனால் இருக்கவில்லை.

    அந்தத் திருமணத்தால் எனக்கு வருத்தம் உண்டு. சரண்யாவின் பி ஹெச் டி ஆராய்ச்சி இன்றுவரை முடியவில்லை. அவளின் குடும்பம் அவளை ராணி போல வளர்த்தது. அதற்குக் கைமாறாக அவள் எதுவுமே அவர்களுக்குச் செய்யவில்லை. தந்தை இல்லாத குடும்பத்திற்கு அவள் தலைமை ஏற்க வேண்டும் என நான் விரும்பினேன். அவளும் அதைச் செய்யவில்லை, அவளது கணவரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. மேலும், அந்த மனிதரும் குடித்து குடித்தே ஐந்து வருடங்களுக்கு முன்னர் போய்ச் சேர்ந்தார்.

    அதற்கு முன்னர் சிலமுறை அவர் என்னைப் பார்த்தபோதுதான் அவர் மேலிருந்த என் கோபம் தணிந்திருந்தது. எனக்கும் வயதானதாலோ அல்லது இனிமேல் என்னதான் செய்ய முடியும் என்பதாலோ, ஆணொன்று பெண்ணொன்று என அவர்களின் இரண்டு நல்ல பிள்ளைகளைப் பார்த்ததாலோ என்னவோ … அவரை மனம் ஏற்கத் தொடங்கியது. இப்பொழுது அவரை என்மனம் ஒப்புக்கொள்ளத் துவங்கிய நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்ற வருத்தமும் உண்டு.

    சரண்யாவைப் போன்ற தோழி இதுவரை எனக்கு அமையவில்லை. இனியும் அமைய மாட்டார்கள். அவளுடைய இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் எனது மற்றொரு தோழியான விசாலிதான். சரண்யாவின் ஆங்கிலத்தில் அவர்கள் மயங்கி, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆய்வில் அவளை ஈடுபட வைத்ததுதான் பெரிய தவறு என்பது எனது கருத்து. அவர்கள், அழகாக ஆங்கிலத்தில் உரையாடும் சரண்யாவின் திறமையை வைத்து, அவள் ஒரு பெரிய அறிவாளி என்றும், உடனே வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கப் போகிறாள் என்றும் மனமார நம்பினார்கள். நம் மக்களுக்குத்தான் மொழிக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளி பற்றிய ஞானம் கொஞ்சமும் இருப்பதில்லையே.

    ஆனால் இதையெல்லாம் நான் செய்தேன். வெளிநாடு சென்றேன். வாழ்க்கையை வளமாக்கினேன். உடன் பிறந்தவர்களுக்கும், என் நண்பர்களுக்கும், படிக்க உதவி கேட்டவர்களுக்கும், திருமண உதவி கேட்டவர்களுக்கும் இன்றளவில் கை நிறைய, மனம் நிறையச் செய்கிறேன். இதை யாரிடமும் இதுவரை நான் சொன்னதில்லை. முதன்முறையாக இப்பொழுதுதான் பதிவு செய்கிறேன். இதே மாதிரி சரண்யாவும் அவளின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். அது தவறான கருத்தாக பிறருக்குத் தெரியலாம். ஆனால், என் எதிர்பார்ப்பில் தவறில்லை என்பது எனது உறுதியான எண்ணம்.

    ________________________

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 1

    கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே …

     

    — வைதேகி ரமணன்.

     

    எதைப்பற்றி எழுத என்று யோசித்தபோது, ஏன் திருமணத்தைப் பற்றி எழுதக்கூடாது என்ற சிந்தனைதான் முதலில் தோன்றியது. திருமணம் செய்யாதவள் எப்படி திருமணம் பற்றி எழுதலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் கூடாது?

    நான் பார்த்த, செய்து வைத்த திருமணங்களைப் பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் எழுதத் துணிந்துவிட்டேன்.

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த அக்காவின் திருமணம் நடந்தது நான் பிறந்து வளர்ந்து இப்போது பிரிந்திருக்கும் ஊரில்தான். அதன் பேர் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது எதுக்கு இப்ப??? பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுதானே!!!

    விடிய காலையில் சூரியோதயத்திற்கு முன்னர் நடந்தது. புதுச்சட்டை போட்டிருந்ததும், அக்கா மணவறையில் உட்கார்ந்திருந்ததும் லேசாக நினைவில் இருக்கு. அதன் பின்னர் பக்கத்து வீடு மாமா பெரிய அண்டாவில் சோறு, குழம்பு, காய்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கையில் பெரிய கரண்டியும் மறுகையில் பெரிய கழியும் வைத்து குறவன், குறத்தி, பிச்சைக்காரர்களை வரிசைப்படுத்தியும், அடித்தும் அந்தச் சோறு முழுவதையும் பகிர்ந்து அளித்ததும் லேசாக நினைவில் வருது.

    அந்த மாமாவின் திருமணம்தான் அடுத்து நான் பார்த்தது. அது எதுவும் நினைவில் இல்லை. அதில் மீந்து போன சாம்பாரை மறுநாள் சூடாக்கியது மட்டும் நினைவில் இருக்கு. அதன் சுவை இன்னும் நாவில் இருக்கு. நாங்கள், சிறுவர்கள் எல்லாம் புதுச்சட்டை போட்டு நேரம் காலம் தெரியாமல் விளையாண்டதும் நினைவில் இருக்கு.

    அப்படியே பதினோராம் வகுப்பிற்கு வந்துவிட்டேன். என் தோழிக்குத் திருமணம் பேசினார்கள். பள்ளியில் செய்தி பரவத் தொடங்கியது. ஆசிரியர்கள் அவளைக் கேட்டால் உடனே அழத் தொடங்கிவிடுவாள். நாங்கள் கேட்டாலும் அப்படித்தான். இத்தனைக்கும் நானும் அவளும் ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், பிறகு ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியிலும் ஒன்றாகவே படித்தோம். நான்கு தெரு தள்ளியிருந்தாலும் ஒன்றாகவே பள்ளி முடிந்து திரும்புவோம். மதிய சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் வீட்டிற்கு வருவோம். அத்தனை நெருக்கமான நான் கேட்டாலும் கூட உடனே அழுது விடுவாள். நானும் அவளும் ‘திக்’ தோழிகள் என்றாலும் பக்கத்தில் உட்கார முடியாது. அவள் நல்ல உயரம். அந்தக் காலத்தில் உயரப்படிதான் வரிசையாக வகுப்பில் உட்கார வைப்பார்கள்.

    அவளின் திருமண நாளும் வந்தது. பக்கத்துத் தெருவில் என் அக்காவிற்கு நடந்த அதே கல்யாண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. விடுமுறை நாள்தான் அது. நாங்களும் போகலை. அவளும் கூப்பிடலை. வீட்டில் ஒருமுறை, ஒரே ஒருமுறை அம்மாவிடம் அவள் திருமணம் பற்றிக் கூறியபோது… ம்ம்… ம்ம்… போதும் போதும்… திருமணம் பற்றியெல்லாம் சிறுவர்கள் பேசக்கூடாது என்று கூறிவிட்டார்கள். பிறகெங்கே வீட்டில் வாயைத் திறப்பது. அதே வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணமே நடக்கிறது. ஒருத்திக்கு அதைப்பற்றிப் பேசக்கூட அனுமதியில்லை. எதிர்த்து பேசத் தெரியாத சூழலில் வாழ்ந்த காலகட்டம் அது.

    திருமணம் முடிந்து பள்ளி திரும்பினாள். கழுத்தில் கறுப்பு மணி இருந்தது தவிர வேறு மாற்றம் ஏதும் இல்லை. அப்போதும் ஏதாவது சிறிய கேள்வி கேட்டால் உடனே அழுவாள். திருமணம் ஏன் செய்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வயது, சூழல், குடும்பம் இப்படிப் பல காரணங்கள்.

    ஐந்து வருடங்களுக்கு முன்னர் அக்கா அவளைப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள். அவள் மகளை அவளது தம்பிக்கே கொடுத்ததாகவும், அவளது கணவர் இறந்துவிட்டதாகவும், நான் சென்னை வந்தபிறகு அவளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நானும் வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் சந்திக்க நேரம் வரவில்லை.

    அவள் தம்பியும் என் தம்பியும் ஒரே வகுப்பு. அவள் தம்பி அவனுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டிச் சொல்லுவான். காரணம், அவன் பெயர் நாலே எழுத்து R–A–V–I. என் தம்பியால் முடியாது. அந்தக் காலத்தில் ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் ‘ரவி’ அல்லது ‘ராமா’ என்ற பெயர்தான் அதிகம் இருக்கும். என் தம்பியின் நீளமான பெயரெல்லாம் புத்தகத்தில் வராது. எனக்கு என் பெற்றோரின் பெயரில் கோவமாக வரும். ஏன் இப்படி இவனுக்குப் பெரிய பெயர் வைத்தார்கள் என்று. பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி உச்சரிப்பதெல்லாம் , பெரிய ….. திறமையாக மதிக்கப்பட்ட காலம் அது.

    அதன் பிறகு கல்லூரி. அப்போதெல்லாம் யார் திருமணத்திற்கும் போக வீட்டில் அனுமதியில்லை. எனவே போனதாக நினைவுமில்லை. பிறகு, பல்கலைக்கழகம். அப்போதும் போனதில்லை. நான் மாஸ்டர்ஸ் டிகிரிக்குப் படிக்கும் போது என் இரண்டாவது அக்காவின் திருமணம் நடந்தது. நானும் என் தம்பியும் போகலை. அதனால் எப்படியிருந்தது என்று சொல்ல முடியலை. ஆனால் அவர்களுக்கு நடந்த ரிசப்ஷனுக்கு என் தோழிகள் எல்லாம் வந்தார்கள். பரிசளித்தார்கள். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

    பின் ஆராய்ச்சிப் படிப்பில் என் தோழியாக ஒரு ‘டுயூட்டர்’ வந்தார். அவரும் அதே வகுப்பில் ஒன்றாகப் படிக்கவே, ‘கம்பைன் ஸ்டடி’ என்று இருவரும் நெருங்கிப் பழகினோம். அவருக்குத் திருமணமாகவில்லை என்பது அவருடைய பெரிய கவலையாக இருந்தது. உண்மையாகவே மிகவும் கவலைப்பட்டார்கள். யார் யாரெல்லாமோ மாப்பிள்ளை பார்த்தும் கடைசியாக எங்கள் பேராசிரியரின் மாணவன் ஒருவரைத் திருமணம் செய்தார்கள்.

    அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். கொஞ்சம் நஞ்சமல்ல. என் சகோதரிகள் இருவரும், அவருடைய பழைய நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோவைக்குப் பயணப்பட்டு சிலபல பிரச்சனைகளை மணமகன் வீட்டாரோடு பேசி சரிசெய்த பிறகு நடந்த திருமணம் அது. அதற்குப் போக வீட்டில் அனுமதி கிடைத்தது. திருமண மேடையிலேயே மணமகனும் மணமகளும் நண்பர்களும் அரட்டை. திருமணமே ஏதோ டிப்பார்ட்மென்ட் மீட்டிங் போல நடந்தது. பதினைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற பிறகு, இப்பொழுது பதினைந்து ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இன்னமும் அவர்கள் இருவருக்கும் தோழி நம்பர் ஒண்ணு நான்தான்.

    அதன்பிறகு எனக்கு சீனியரான தோழி சாந்தியின் திருமணம் நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தஞ்சைக்குப் போனோம். அதிகாலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எனவே இடையில் கல்லணை, கோவில் என்று செம்ம சுற்றல். நன்றாக என்ஜாய் செய்தோம். மற்றதெல்லாம் அவ்வளவாக நினைவில் இல்லை. எப்படிப் போனோம்; வந்தோம் என்பதெல்லாம் தெரியவில்லை.

    அதன்பிறகு, எங்கள் துறை டைப்பிஸ்ட் அலமேலு திருமணம் உள்ளூரில் நடந்தது. அதற்கும் கும்பலாகப் போய் மகிழ்ச்சியாக இருந்தோம். இவ்வாறு தோழிகளின் திருமணங்களில் கொண்டாட்டம் போட்டதற்கும் ஒருபடி மேலே சென்று எனது தோழிகளின் திருமணங்களை நானே நடத்தி வைத்த அனுபவங்களும் உண்டு.

    ________________________

    Share