பரிகாரம்
— வைதேகி ரமணன்.
பரிகாரம் என்றால் பதில் உதவி மாதிரி சம்திங் என்றுதான் நான் விளங்கிக் கொண்டிருந்தேன். நமக்கு யாராவது ஏதாவது உதவி செய்திருந்தால் பரிகாரமாக அவர்களுக்கு ஏதேனும் பதிலுக்கு செய்வது நல்லது என்பது உலக வழக்கு. ஆனால் இப்போதெல்லாம் ஜோசியம் பார்ப்பதும் ஜோசியர்கள் சொல்லும் பரிகாரங்களைச் செய்வது என்பதையும் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் சொற்பொழிவாளர் ஒருவர் நான் சொல்வதைக் கேளுங்கள் பரிகாரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொன்னார்.
அது முதல் நானும் அவர் சொன்னதைப் பலரிடம் சொல்லி நானும் நம்பி பிறரையும் நம்ப வைத்தேன். அந்தச் சொற்பொழிவாளரையும் அவரது சொற்பொழிவுகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்லாது பலரையும் கேட்கவும் வைத்துள்ளேன். அவ்வளவு அழகாகப் பேசுவார். மிகவும் கருத்தான விஷயங்களாகவும் இருக்கும். கிட்டத்தட்ட அவருடைய எல்லாப் பொழிவுகளையும் வாங்கி விட்டேன். வீடியோக்களை ஆடியோக்களாக மாற்றி நடக்கும் போதும் உறங்கும் முன்னரும் கேட்பேன். பலருக்கும் பரிசாகவும் கொடுத்துள்ளேன். அப்படிப் பட்ட ஒருவர் பரிகாரம் பற்றிச் சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா? எனவே நானும் அவரையே பின்பற்றத் தொடங்கினேன்.
வெளிநாட்டில் நான் வேலை பார்த்த போது அங்கு ஒரு நல்ல நண்பர் எனக்குண்டு. தம்பி மாதிரி. மிகவும் பாசமாக இருப்பார். நான் இங்கு வந்த பிறகும் அந்த நட்பும் உறவும் நீடிக்கிறது. அவரது மனைவி மிகவும் அன்பானவர். குடும்பமே நல்ல குடும்பம், அவர்களுடனும் அவர்களது குடும்பத்துடனும் சுற்றுப்பயணம் எல்லாம் சென்றிருக்கிறேன். பேருந்து வைத்து போகுமளவிற்குப் பெரிய குடும்பம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த உடன்பிறவா தம்பிக்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு, நுரையீரலில் சளி. எப்படியோ மருத்துவர்களின் திறமையால் தப்பித்தார். எல்லோருடைய பிரார்த்தனையும் ஒரு காரணம்.
அவரது வேண்டுகோளின்படி உடனே அருகில் உள்ள ஒரு ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்தேன். இரண்டுவாரம் காலையில் குளித்து அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகரை 21 முறை சுற்றி வரும்படி வேண்டினார். நல்ல வேளை என் வீட்டிற்கு முன்புறமே அதே மாதிரி ஒரு விநாயகர் இருந்தார். அரசமரமும், வேப்ப மரமும் இருந்தன. நானும் தொடர்ந்து இருவாரமும் அங்குள்ள சாலையில் ஏற்படும் சாலை நெரிசலையும் பொருட்படுத்தாது செய்து வந்தேன். என்னுடன் என் பேரனும் வருவான்.
வீட்டில் யாரும் இல்லாததால் நான் அவனைக் கூட்டியே செல்ல வேண்டிய நிலை. சில சுற்றுகள் வருவான். பிறகு ஓரிடத்தில் நிறுத்தி வைப்பேன். என் உருவம் மறையும்போது பாட்டி …பாட்டி … என்று கூவுவான். சின்ன பையன் கைபிடித்து வரும்போது வாட்ச்சுக்கு இடையில் கைவிட்டு இழுப்பான். கையில் போட்டிருக்கும் ப்ரேஸ்லெட்டுக்கு இடையில் கைவிட்டு இழுப்பான். சொன்னாலும் கேட்க மாட்டான். அப்படியே இழுத்து கோவில் சுற்றும்போது என்னுடைய ப்ரேஸ்லெட்டும் விழுந்துவிட்டது. அது 12ஆ அல்லது 16 கிராமா என்பது நினைவில்லை. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சரி விநாயகருக்கு காணிக்கையாகத் தந்ததாக நினைத்துக் கொண்டு இரண்டு வாரங்களையும் வெற்றிகரமாக முடித்தேன்.
நண்பரும் மருத்துவ மனையில் இருந்து இல்லம் திரும்பினார். சாதுவான மனிதர், ஆறு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மனைவியும் சம்பளமில்லாத விடுப்பு எடுத்து கணவரது உடல்நலம் பேணினார். பிறகு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். இருந்தாலும் மீண்டும் என்னை நச்சரித்து ஒரு நல்ல ஜோசியரைப் பார்க்கும்படி வேண்டினார். நானும் பல புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஒருவரைப் பார்க்க முடிவு செய்தேன். எனக்கு இதிலெல்லாம் பிரமாதமான நம்பிக்கை இல்லை என்றாலும் மற்றவர்களின் உணர்வுகளை மிகவும் மதிப்பேன்.
கார் எடுத்துக் கொண்டு என்னுடைய இரண்டாவது மகனுடன் பாண்டிச்சேரி என்ற புதுச்சேரிக்குச் சென்றேன். ஜோசியர் மூன்றுமணி நேரம் என்னென்னவோ கணக்குப் போட்டு, கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட ரெஃபர் செய்து அற்புதமாகப் பார்த்துச் சொல்லி எழுதியும் தந்தார். அதன்படி செய்தால் பிரச்சனைகள் குறையும் என்றும் கூறினார். திரும்பி வந்த உடனே ‘வாட்ஸ் அப்’செய்து மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பிவிட்டேன். அத்துடன் முடியவில்லையே கதை.
அவரும் எல்லாப் பரிகாரங்களையும் செய்தார். வயதான தம்பதிகளுக்குப் புதுத் துணிமணிகளை வாங்கித் தந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது; படிக்கும் பிள்ளைகளுக்கு நோட்டுப்புத்தகம் வாங்கித்தருவது என எல்லாம் செய்தும், தாலி வாங்கித்தரும் பரிகாரம் செய்ய முடியலை. அந்த நாட்டில் உள்ளவர்கள் யாரும் இதை ஏற்க மறுத்ததால் என்னை அணுகினார்.
தமிழ்நாட்டில் அது ஒன்றும் பெரிய சிக்கலில்லை. எனக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் விதவைத் தங்கையின் மகனுக்குத் திருமணம் பேசியிருந்தார்கள். பையனுக்கு வயது 28, பெண்ணுக்கு வயது 18. பையன் கையில் ஒரு முழை (கொஞ்சம் வீக்கம் அதாவது மாம்பழ சைசில்) இருக்கும். பெண் ஏழை. எல்லோரும் செய்த உதவியால் திருமணம் நடந்தது. தாலி, மணமக்கள் பட்டு வேட்டி, துண்டு, பட்டுப்புடவை எல்லாம் என்வழியில். சென்றமாதம் திருமணநாளும் கொண்டாடினார்கள்.
சென்றவாரம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று நடந்த கார் விபத்தில் பையனுக்கு தலையில் அடிபட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்று. இப்பொழுது அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பம் என்று. அசைவற்ற நிலையில் நான் !!! யாரிடம் சொல்ல !!!.
கடவுளேன்னு தலையில் கைவைப்பதைதவிர என்ன செய்ய. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
அடக்கடவுளே!! அதிர்ச்சி!!
அப்பெண்ணுக்கு மனதைர்யம் கிடைக்கட்டும்!
உடன்பிறவாத் தம்பிக்கான பரிகார விளைவு இந்தப் பையனுக்கு வந்துவிட்டதோ.