மணமகளே உன் மணவறைக்கோலம் – 4

பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி …

— வைதேகி ரமணன்.

ராஜேஸ்வரியின் திருமணம்… ராஜேஸ்வரி தாயில்லாத பெண் மட்டுமல்ல கருப்பை இல்லாத பெண்ணும்கூட. அதை அறியாத அவளது கிராமிய குடும்பம் மல்லிகைப்பூவை விழுங்கச் சொல்லி தொல்லை செய்த கதை பெருங்கதை. அது இங்கு அவசியமில்லை. அவளும் ஒருவழியாக வேலைக்குப் போன பிறகு ஒருவரிடம் சிக்கினாள். உண்மையறிந்தும் அவர் அவளை மணம் செய்து கொள்ளவே விரும்பினார். பிறகென்ன உடன்போக்குதான்.

வந்துவிட்டார்கள் அவளது இரு சகோதரர்களும், ஒரு அம்பாசிடர் காரில், நேரே நாங்கள் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கே. அவளது தோழியான நான் விடுதியில் அவளை மறைத்து வைத்திருப்பேன் என்ற சந்தேகம் அவர்களுக்கு. விடுதி வாசலில் ரசாபாசத்தை விரும்பாத நான் அருகில் உள்ள டீக்கடை மரத்தடியில் துணையாக ஐவர் சூழ நின்றேன். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தாயில்லாத பெண்ணை இப்படியொரு முடிவெடுக்க வைத்து விட்டீர்களே என்று திரும்பத் தாக்கினேன்.

என்னை நம்பாமல் விடுதியின் ஃபோன் பாயிடம் சொல்லி எனது அறையைச் சோதனை செய்தார்கள் அவளது அண்ணன்மார்கள். உண்மையில் நடந்தது எதுவும் எனக்கும் தெரியாது. மறுநாள் மிக நீண்ட கடிதம் வந்தபின்தான் உண்மை அறிந்தேன். இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். காலமும் ஓடிவிட்டது. இன்றும் இருவரும் நல்லமுறையில் ஒன்றாக இல்லறம் பேணுகிறார்கள். அவளது கணவரும் பணி ஓய்வு பெற்று விட்டார்.

அவர்கள் ஒரு மகளைத் தத்தெடுத்து வளர்த்து, அவள் இப்போது பள்ளிப் படிப்பும் முடித்துவிட்டாள். அவளுக்கே தான் ஒரு தத்து மகள் எனத்தெரியாமல் அன்புடன் வளர்கிறாள். ராஜேஸ்வரியும் நல்லாசிரியராகப் பணிபுரிந்து நல்ல அம்மாவாக இருக்கிறாள். கஷ்டப்பட்டுத் தேடி பலவருடங்களுக்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு முன் அவளைக் கண்டுபிடித்தேன். இப்போது அடிக்கடி தொலைபேசி வழியே மீண்டும் நட்பைத் தொடர்கிறோம்.

நான் வெளிநாட்டிற்குப் பணிபுரிய செல்லும் முன், என் வீட்டருகில் வசித்த, என் தம்பியுடன் படித்த ஒருவன் எங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வேலை பார்த்தான். அவனும் அந்தப் பாழாப் போன காதலில் சிக்கி …. வேறு யார்? … அவனது மாமன் மகள்தான், ஆனால் பதினைந்து வயது வித்தியாசம்…. மாமாவோ சும்மா … கவுண்டமணி கணக்கில் எகிறுபவர். அவர்கிட்ட என்னைத் தூதனுப்பினான். அப்பொழுது எனக்கு முப்பத்தைந்து வயது. விட்டாரு பாருங்க …. டோஸ்… செம்ம டோஸ்… மறக்க முடியாது. இவனோ அழுவறான். என் கல்யாணத்த முடிக்காம வெளிநாடு போறீங்களேன்னு அழுவறான். இன்னைக்கும் அவன் அழுகை நினைவில் இருக்கு. அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. அதே பொண்ணை மணம் செய்து இப்போது சென்னையில் எங்கோ இருக்கான்.

வெளிநாட்டில் பணிபுரிந்த பொழுது, ஒரு இலக்கிய விழாவில் ஓர் எழுத்தாளன் ஒருவன், என்னைவிடப் பலவயது இளையவன், எனக்கு அறிமுகமானான். எழுச்சி மிக்க; இலக்கிய ஆர்வம் மிக்க நல்லவனாக அறிமுகமாகியிருந்தான். திருமணமானவனாக இருந்தான். உழைப்பால் உயர்ந்தவனாக சில பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தான். நான் இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு தொடர்பு கொண்டு, இந்தியாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகவும், அதற்காகத் தாலி வாங்க கடையில் இருப்பதாகவும் சொல்லவே அதிர்ந்து போனேன். மறுநாள் இந்தியா வருவதாகவும் கூறினான்.

அறிவுரை பல எடுத்துக்கூறி இருதாரம் குற்றம் எனவும்; சான்றுகள் பல கூறியும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினேன். எல்லாம் நிறுத்திவிட்டதாகப் பலமுறை சத்தியம் செய்தான். நானும் அவனை நம்பினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோடையில் வேலை ஒன்றின் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு இருபத்தைந்து நாள்தான். இந்தியா திரும்பினேன். இந்த இடைவெளியில் இந்தியா வந்து அதே பெண்ணைத் திருமணம் செய்துவிட்டான். கேட்டால் தடுக்க நீங்கள்தான் ஊரில் இல்லையே என்கிறான்.

இப்பொழுது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரு குடும்பங்களையும் சமாளிக்க முடியாமல் கோர்ட், கேஸ் என அலைகிறான். இது மாதிரி ஆட்களை எப்படித் திருத்த? … என்ன செய்ய? … ஒருமுறை மணம் முடித்தவன் மறுமணம் பற்றி யோசிக்கலாமா? எவ்வளவு பெரிய முட்டாள் இவன் …இல்லையா?

அண்மையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் நண்பரின் மகனின் திருமணத்திற்குச் சென்றேன். வெளிநாட்டில் பணிபுரியும் அவன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது, அவனது மாமா தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்பி ஒரு சபை நடுவே அவனிடம் நேரடியாகக் கேட்டு விட்டிருக்கிறார். அவனோ தங்கை மாதிரியான அவளிடம் தனக்கு வேறுவிதமான எண்ணம் எதுவுமில்லை என்று மறுத்துவிட்டான். அவனது அம்மாவிற்கோ பாசமலர் அண்ணன் சென்டிமெண்ட். கணவன் மனைவி இருவரும் ஒப்புக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று இந்தக்கால பிள்ளைகளின் மனோபாவம் புரியாமல் மிரட்ட, மிரண்டு போன பையன் என்வீட்டிற்கு வந்தான்.

வேறு யாரிடமாவது சிக்கியிருப்பானோ என்ற என் சந்தேகத்திற்கு முற்றிலுமாக மறுத்து விட்டான். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயதிலும், இவ்வளவு அனுபவத்திற்குப் பிறகும் அவனை நம்பிய என்னை என்ன சொல்வது …. அதன் பிறகு மீண்டும் அவனை அயல்நாட்டில் சந்திக்க நேர்ந்தபொழுது உண்மையை ஒப்புக் கொண்டான். அவனுடைய தங்கையுடன் இருவரையும் டின்னரில் சந்தித்து, எல்லாக் கதைகளையும் கேட்டு, காதலை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனது அப்பாவிடம் தனியே உரையாடி அவரைப் புரிந்து கொள்ள வைத்தேன். அவனது தங்கையிடம் பேசி அவனது தாயை இளக வைத்தேன், அவனிடம் பேசி விரைவு படுத்தினேன். கடந்த இரண்டு வருடத்தில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று மூவரிடமும் பேசிப் பேசி ஒரு வழியாக இந்த ஆண்டு திருமணம் முடிந்தது.

இதுதான் இப்போதைக்கு நான் சென்ற கடைசித் திருமணம். இப்போது புரியும் நான் ஏன் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று. மலரும் நினைவுகள் என திரும்பிப் பார்க்கும் பொழுது….எனது பேராசிரியர் ஒருவரது மகன் செந்திலின் திருமணம் செட்டி நாட்டில் மிகச் சிறப்பாக நடந்தது. வித்தியாசமான திருமணம். போனதும் வந்ததுமான பயணம் சிறப்பாக இருந்தது. இடையிடையே என் அண்ணன், தம்பி, அக்கா என எனது உடன்பிறப்புகளின் மகள்கள், மகன்கள் என குடும்பத் திருமணங்கள் நடந்தேறின. அதில் ஏதும் சுவராசியமும் இல்லை. அவற்றில் என் பங்கு ஏதும் இல்லை, அத்திருமணங்கள் ஒரு சிலவற்றுக்கு நிதி உதவி செய்தது தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி என் பங்களிப்பு ஏதும் இல்லை. அதனால் அவற்றைப் பற்றி எழுதவும் ஏதும் இல்லை. பரிசளிப்பதற்காகப் போன பல திருமணங்கள் எனது மாணவர்களின் திருமணங்கள்; தோழிகளுக்குத் துணையாகச் சென்ற திருமணங்கள்; தோழர்கள் தோழிகளின் பிள்ளைகளின் திருமணங்கள் எனப் பல்வேறு திருமணங்களுக்குப் போயிருந்த போதும் நினைவில் நிற்பவை மேற் சொன்னவைதான்.

________________________

முன்பதிவுகள்:

________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணமகளே உன் மணவறைக்கோலம் – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *