க. பாலசுப்பிரமணியன்

education

கருவும் கற்றலும்சில உண்மைகள்

தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். ” ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் ”

“மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் நினைக்கின்றனர்.”

தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது  இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின்   ஒலிகளையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் காட்டியதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்.  அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள்  போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து  பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

பல நுண் கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *