“பொய்யே மெய், மெய்யே பொய்”

–இரா. ஞானசேகரன்.

“பொய்யே மெய், மெய்யே பொய்”
«Les paroles redictes ont, comme autre son, autre sens. » Montaigne.
«La structure symbolique pluri-dimensionnelle» Derrida, De la Grammatologie.

“பொய்யே மெய், மெய்யே பொய்”……..
என்ன இது? அட என்னதான் இது?

இவை என்ன சொல்ல வருகின்றன? இவை என்னதான் அப்படி புதிதாக சொல்லிவிடப்போகின்றன? மெய் என்றால் என்ன? பொய் என்றால் என்ன? ‘இருத்தல்’ என்பது மெய்யா? அல்லது இல்லாமல் இருப்பது பொய்யா? இந்த இரண்டில் எது மெய்? எது பொய்? நேற்று மெய்யாக இருந்தது இன்று மெய்யாகவே மெய்யாக இருக்கிறதா? அல்லது பொய்யாகிப்போனதா? எதனால் அந்த மெய் இன்று பொய்யாகிப்போனது? அது மெய்யாகவே பொய்யாக இருக்கிறதா? அல்லது பொய் போல் தோற்றமளித்து மறைமுகமாக மெய்யாக இருக்கிறதா? எது எப்படியோ, இறுதியாக மெய் மெய்யாகவும், பொய் பொய்யாகவும், மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் உள்ளது.

உண்மை என்றால் என்ன? உண்மையில் ‘உண்மை’ என்ற ஒன்று உள்ளதா? ‘உண்மை’ என்பது மொழி அடிப்படியில் ஒரு சொல். இதற்கு ‘மெய்’ என்று வேறொரு அர்த்தமும் உண்டு. மெய் என்றால் இருத்தல் என்று பொருள். ‘ஒன்று’ இருக்கிறது, அதனை மனிதன் தன் ஐம்புலன்களினால் ஆராய்ந்து பார்க்கிறான். அதாவது கண், காது, மூக்கு, நா, மற்றும் தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களினால் அந்த ஏதோ ‘ஒன்றை’ பற்றி உணர்கின்றோமா இல்லையா? ‘உணர்தல்’ என்பது அனைவராலும் உணர்தலான ஒன்றாக இருத்தலே உண்மையான இருத்தல் அல்லது ‘உணர்தல்’ என்பதாகும். நான் ஒன்றைப் பார்க்கிறேன், அது அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைக் கேட்கிறேன், அது அனைவராலும் கேட்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றை நுகர்கிறேன், அது அனைவராலும் நுகரக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைச் சுவைக்கிறேன், அது அனைவராலும் சுவைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைத் தொடுகிறேன், அது அனைவராலும் தொட்டுப்பார்த்து உணரக்கூடியதாக இருத்தல் வேண்டும். இந்த ‘இருத்தல்’ என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதனின் ‘இருத்தல்’ என்பது அவன் அவனாக இருத்தலின் பொருட்டே கட்டமைக்கப்படுகின்றது. இங்கு ‘இருத்தல்’ என்பது உணர்தல், உணர்ச்சி, மெய் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக கருதலாம். உண்மையில் ‘இருத்தல்’ என்பது ‘ஒன்று’ அதுவாகவே இருத்தல், அதன் தனித்தன்மையில் இருத்தல். அதாவது ‘ஒன்று’ அதுவாகவே இருத்தல் என்பது ‘அதன்’ உண்மையான இருத்தலை உணர்த்துகின்றது. மாறாக ‘ஒன்று’ அதுவாக இல்லாமல் ‘மற்றொன்றாக’ இருத்தல் என்பது தன் ‘இருத்தலை’ விட்டுவிட்டு வேறொன்றின் ‘இருத்தலை’ இருப்பிடமாகக்கொள்வது. அதாவது தன் சுய அடையாளங்களைத் தானே தொலைப்பதும், தன் இருத்தலைத் தானே அழிப்பதும் ஆகிய இரண்டினையும் இரு வேறாகக் கருத முடியாது. உண்மையில் அவை இரண்டும் ஒன்றே.

சரி ‘உண்மைக்கு’ திரும்புவோம். ‘உண்மை’ என்பது ஒரு சொல். அந்தச் சொல்லானது ஆங்கிலத்தில் ‘abstract noun’ என்ற பகுதியில் இருக்கக்கூடியது. ‘Abstract’ என்பது ஐம்புலன்களிற்கு அப்பாற்பட்டது. அது தன்னுடைய ஐம்புலன்களின் துணைகொண்டு ஆறாவதாக உள்ள ‘மனம்’ என்ற ஒன்றினோடு பொருத்திப்பார்த்து அதன் மூலமாக மீண்டும் தன் ஐம்புலன்களின் ஒன்றின் உதவியோடு வெளிவரும் ‘ஒன்றே’ ஆகும். அவ்வாறு வெளிவரும் ஒன்றானது தற்போது ‘abstract’ஆக இல்லாமல் ‘concrete’ஆக மாற்றம் பெறுகின்றது. அதாவது முன்பு ‘abstract’ஆக இருந்தது தற்போது ‘concrete’ஆக மாற்றம் பெற்றுள்ளது. எனவே ‘உண்மை’ என்பது தன்னுடைய மெய்யால் மட்டுமே அறிந்து ஆராயும் ‘ஒன்று’ என்று பொருள் தரலாம்.

இன்னும் மேலே சொல்லப்போனால் இந்த ‘abstract’ மற்றும் ‘concrete’ என்ற இரண்டையுமே சந்தேகமாக சந்தேகிக்கும் நிலை ஏற்படலாம். ஒரு ‘abstract’ஆன ஒன்றை தன்னுடைய ஐம்புலன்களின் மூலம் ‘concrete’ஆக உணரும்போது அது எப்படி ‘abstract’ஆக இருக்க முடியும்? உதாரணத்திற்கு ‘கடவுள்’ என்பது ஒரு சொல். மொழியில் உள்ள எண்ணற்ற சொற்களில் அதுவும் ஒன்று. இந்த ‘கடவுள்’ என்ற சொல்லிற்கு இணையான பல சொற்கள் உலக மொழியில் உள்ளன. அதை யாவற்றையும் எடுத்துச் சொன்னோமானால் ஒரு புத்தகமே போடலாம். சரி நாம் நம் விஷயத்திற்கு வருவோம். கடவுள் என்பது மனிதனை விட சக்தி படைத்தது என்று வைத்துக்கொள்வோம். அது ‘abstract’ நிலையில் இருந்து இயங்கக்கூடியதாக உள்ளது. காரணம் ஐம்புலன்களினால் ஆராய்ந்து அறிய முடியாதது தான் இந்த ‘கடவுள்’ என்ற ஒன்று. இறுதியாக ‘மனம்’ என்ற ஒன்றின் மூலமாக {மனம்- என்பது மொழி சார்ந்தது, மொழியின் உதவியோடு சரி/தவறு என்பதைப் பின்பற்றி நடக்கக்கூடியது} அந்தக் கடவுள் என்ற ஒரு சொல்லிற்கு பொருள் தேட முயல்கிறான் மனிதன். அதற்கு அவன் தன் ஐம்புலன்களையும் சிறப்பாக உபயோகிக்கிறான். அதாவது எப்படி எப்படியெல்லாம் அதைப்பற்றி சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் அதைப்பற்றி சிந்தித்து அதற்கான பொருளைத் தேட முற்படுகிறான். அவ்வாறான மனித சக்திக்கு மீறிய அந்த ஒன்றினை மனிதனாகவும் அல்லது மனுஷியாகவும் மட்டுமே உருவப்படுத்துவது, அல்லது பொருள்கொள்வதெல்லாம் முற்றிலும் முரணாக உள்ளது. காரணம் கடவுள் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டவன். அப்படி மனிதனுக்கு அப்பாற்பட்டவன் எப்படி மனித உருவில் இருக்க முடியும்?

சிங்கம், புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காளை, எருது இன்னும் பல… ஆகியவை எல்லாம் மனித சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டவை. எனவே அவற்றை எல்லாம் கடவுள்கள் என்று சொன்னாலாவது சற்றே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. காரணம் இவை எல்லாம் மனிதனை எளிதில் வீழ்த்தக்கூடியவை, அதுமட்டுமின்றி மனிதனை விட உடல் வலிமை உள்ளதாகவும் இருக்கின்றன. மனிதன் எந்த வித விஞ்ஞானமும் இன்றி, வேறு எந்தக் கருவியின் துணையும் இல்லாமல் இந்த விலங்குகளுடன் மோதினால் அவன் உயிரை இழப்பது நிச்சயம். அதுதான் ‘உண்மை’. இந்த விலங்குகளெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை, அதுமட்டுமின்றி மனிதனால் “உருவாக்கப்படாதவை”.

அதாவது மனிதன் எப்படி இந்த உலகிற்கு வந்து தொலைத்தானோ அப்படியே அவையும் வந்து தொலைந்து, திரிந்து ஊர் ஊராகச் சென்று, காடு காடாக அலைந்து கிடந்து இருக்கின்றன. மனிதன் என்பவனும் ஒரு விலங்கு தான். Aristotle முதல் Paul de Man வரை உள்ள அனைத்துத் தத்துவ ஞானிகளும் அப்படிதான் மனிதனை வரையறுத்துள்ளனர். இவன் தன்னுடைய மொழியாளுமை மற்றும் தன் மனத்தின் உதவியோடு இவன் தன்னை மிருகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறான். அவ்வளவுதான். ஆதிமனிதன் உடை இல்லாமலே இருந்திருக்கிறான். மிருகங்களுக்கு இயற்கையிலேயே அடர்த்தியான தோல் மற்றும் முடிகள் உண்டு. எனவே அவை தன்னை வெயிலில் இருந்தும் குளிரில் இருந்தும் தன்னை காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல. எனவே அவன் ஆரம்பக்காலத்தில் குகைகளிலும், பின்னர் மரப்பட்டைகளையும் அணிந்து தன்னை இயற்கையின் இடர்பாடுகளிலிருந்து தன்னை காத்துக்கொண்டான். அவனுக்கு “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற பேதமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவன் கண் முன்னர் எவள் தென்படுகின்றாளோ அவளைப் புணர்ந்து தன்னுடையவளாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தான். பின்னர் இவன் வயதாகி இறக்கும் தருவாயில் உள்ள நேரத்தில் இவனிடமிருந்த பொருள்கள் (வேட்டைக்குப் பயன்படுத்திய கூரான கற்கள், நீளமான குச்சிகள்) போன்றவற்றை எந்த மகனுக்குக் கொடுப்பதென்பதில் சண்டை வந்தது. உடனே புதிதாக சட்டம் ஒன்றை இயற்றினார்கள். அதுதான் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற ஒன்று. இதன் மூலம்தான் முதன் முதலாக தன் தந்தையின் சொத்துக்கு மகன் உரிமை கொண்டாட ஆரம்பித்தான். ஒரு பழங்குடி இனத்தவருக்கும் மற்ற பழங்குடி இனத்தவருக்கும் ஆரம்பக் காலத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் இருந்து வந்தன. முதல் காரணம் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதே ஆகும். வேறொன்று இவர் பேசும் மொழி அவர்களுக்குப் புரியாமலும், அவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாமல் போனதுமே ஆகும். இங்கு மொழி என்பது ‘ஒலி’வடிவமாகிய சத்தத்தை தான் சொல்ல வருகிறேன்.

“Early men spoke to his men in grunts and growls.” -B .V. Rao, World history from early times to A D 2000 page: 12.

எழுத்து எழுதத் தெரியாத காலம் … முதலில் கண்களால் கண்டதை இலை, தழை, மண், சாணி, போன்றவற்றை வைத்து தான் வசித்த குகைகளில் வரையத்தொடங்கினான். பின்னர் இவன் மிகவும் வலிமைமிக்க ‘Flint’ வகை கற்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டு பின்னர் அதன் மூலமாகவே அவன் நெருப்பை உருவாக்கவும் அறிந்து கொண்டான். பின்னர் நெருப்பின் வருகைக்குப் பின்னர் கரித்துண்டின் மூலம் அவனுக்கு வரைதல் என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.

அப்படியாக இருந்த ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி உட்கார்ந்து நெருப்பை மூட்டி அனைவரும் பொதுவாக அமர்ந்து வேட்டையாடியதை உண்டு மகிழ்வர். உண்ட உடன் தூங்குவதை தவிர்க்க அந்தக் கூட்டத்தின் தலைவனாகிய அந்த வயதான கிழட்டு மனிதன் தான் கனவில் கண்டதை எல்லாம் அனைவருக்கும் சொல்லி மகிழ்வான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ‘கனவு’ என்ற சொல்லைத்தான். ‘கனவு’ என்பது ‘நனவு’ இல்லை. அது ஒருவன் சார்ந்தது. அவ்வாறு ஒரு கிழட்டு தலைவன் அவன் தலைமை தாங்கிய கூட்டமே அழியப் போகிறதாக கனவு கண்டான். உண்மையில் அவன் அப்படி கனவே காணவில்லை. அப்படி கனவு கண்டதாக அவன் தன கூட்டத்தாரிடம் சொல்லுகிறான். உடனே அங்கு இருந்த அனைவரும் பயத்தால் நடுங்கி இதற்கு என்ன பரிகாரம் என்பதைக் கேட்க தொடங்கினர். அதற்கு அந்தக் கிழட்டு தலைவன், “இந்த அழிவில் இருந்து நம்மைக் காப்பாற்ற எனக்கு ஒரு இளம்பெண்ணையும், சுட்ட பன்றி ஒன்றினையும், விருந்தாக அளிக்க வேண்டும்” என்றான் அந்தக் கிழட்டு மனிதன். இந்தக் கூட்டமும் இவனை நம்பி அனைத்தையும் விருந்தாகப் படைத்தளித்தனர். இந்தக் கிழட்டு மனிதன் பிறரின் பயத்தையே தன்னுடைய முதலாகக் கொண்டு நன்றாக உழைக்காமல் வெறுமனே ‘பேசிப் பேசியே’ ஏமாற்றிக் கொண்டிருந்தான். ‘பேசுதல்’ என்பது தான் ‘லோகோஸ்’இன் ஆரம்பம். பேச்சே ‘லோகோஸ்’. இப்படிக் காணாத ஒன்றைக் கண்டதாக சொல்லிச் சொல்லியே, அல்லது பேசி பேசியே, மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான் அந்தக் கிழட்டு கோமாளி. பின்னாளில் இந்தக் கிழவனும் இறக்கும் முன்னர் தன் மகனுக்கு இந்த ஏமாற்றும் வித்தையைக் கற்றுக்கொடுத்துவிட்டு இறந்தான். இவன் தன் தந்தையைக் கடவுளாகவும், தன்னை அந்தக் கடவுளின் வாரிசாகவும் இவனே அறிவித்துக்கொண்டான். இந்த மகனும் பிற்காலத்தில் அந்தக் கூட்டத்திற்கு தலைவனாகி உழைக்காமல் ஏமாற்றி ஏமாற்றியே நன்றாக உண்டு, பெண்கள் பலரை புணர்ந்து, கொழுத்து வளர்ந்தான். இவன் சொல்வதுதான் ‘வாக்கு’ லோகோஸ். இவன் மீது அனைவருக்கும் பயம் இருந்தது. காரணம் இவன் சொல்படி நடந்தால் அந்தக் கூட்டத்தில் வாழலாம். இல்லையென்றால் இவன் சொல் கேட்டு நடப்பவனை வைத்து, இவன் சொல்கேளாத பிறரின் மீது ஏவி விட்டு அடித்துத் துரத்துவது போன்ற செயல்களை செய்தான். இப்படித்தான் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை மக்களாகிய மூடர்கள் நாமெல்லாம் இந்தக் கிழட்டு மனிதர்களின் பேச்சை நம்பி நம்பியே நாசமாய் போனதுதான் மிச்சம். இந்த நிகழ்வுதான் ஆதி காலத்து கடவுள் தோன்றியதின் வரலாறு. அனைத்திற்கும் ஒன்றே ஒன்று தான் காரணம். ‘பயம்’ அந்த ஒன்றுதான் எல்லாத் தீங்கிற்கும் காரணம். உண்மையில் இங்கு நல்லது என்று சொல்லப்படுகின்ற அந்தக் கடவுள்தான் அனைத்துத் தீங்கிற்கும் முழுமுதலான ஒன்றாக இருக்கிறது.

ஆங்கில தத்துவ பேராசிரியர் Bertrand Russell அவர்கள் தன்னுடைய Dreams and Facts என்ற புத்தகத்தில் அருமையாகச் சொல்வார், “No man is liberated from fear who dare not see his place in the world as it is; no man can achieve the greatness of which he is capable until he has allowed himself to see his own littleness.”

அவன் ஒரு கிழவன், உழைக்க முடியாதவன், அதனால் ஏனோ ஏமாற்றித் திரிந்தான், காணாததைக் கண்டதாக சொல்லி நன்றாக வாழ்ந்துவிட்டு இறந்தான். ஆனால் இவன் மகனுக்கு என்ன கேடு? ஆகச் சோம்பேறியாய் வாழத் திட்டமிட்டே இவர்கள் செய்யும் நாடகம்தான் இந்த புதிய கடவுள்களின் தோற்றம். புதிய கடவுள்கள் என்பது, ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படியாக ஒரு தலைவன் இருக்கத்தான் செய்வான். அவன் உருவாக்கும் புதிய புதிய கதைகளுக்கெல்லாம் மனிதன் உருவம் கொடுக்க ஆரம்பித்தான். அப்படியாக உருவானதுதான் ‘கடவுள்களின்’ தோற்றம். எப்படி மனிதன் குரங்கின் ஒரு இனத்தில் இருந்து வந்து ‘தொலைந்தானோ’ அப்படியே மனிதக்கடவுள்களும் பல பல உருவமெடுக்க ஆரம்பித்தனர். யானைத்தலை, பன்றித்தலை, குரங்குத்தலை… என எண்ணிலடங்கா தலைகள்.

“It is better to note that we hardly come across any ethnically pure race or races in view of constant migration of people from one region to the other. Further, it is to be mentioned here that no single culture at present could be associated to any particular race.” -B .V. Rao., World history from early times to A D 2000 page:15.

அப்படியே இங்கேயே சற்று வேறு ஒரு பாதையில் பயணிப்போம். பொய்யைப் பற்றி ஆராய்வோம். பொய் என்பது மெய்யால் சொல்லப்படுவது. சொல்லப்படுவதால் தான் அது பொய் எனப்படுகிறது. ‘சொல்லப்படுதல்’ என்ற ஒரு செயல் இங்கே முக்கிய பங்காற்றுகிறது. அவ்வாறான ‘சொல்’ எனப்படுவது இங்கே பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் விளங்குகின்றது. எனவே பொய் என்பது ஆங்கிலத்தில் ‘speech act ‘ என்ற விதியின் கீழ் வருகின்றது. பேசப்படுதல் மற்றும் சொல்லப்படுதல் ஆகிய இரண்டின் கீழே இந்தப் பொய் என்பது தன்னுடைய வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. நடித்தல், நிழல், மாதிரி, போல, எனப் பலவாறு இந்தப் பொய்யை வகைப்படுத்தலாம். எனவே இந்தப் பொய் என்பது ஒரு பொருளின் இருத்தலை அப்படியே அப்பட்டமாக வெளிப்படுத்தாமல் வேறு மாதிரியாகவோ அல்லது தன் நிலையை மாற்றி வெளிப்படுத்தினாலோ அது பொய் ஆகிறது. இதை உருசிய இலக்கிய கோட்பாட்டாளர் Viktor Shklovskiĭ அவர்கள் தன்னுடைய “Art as Technique” என்ற கட்டுரையில் ‘Defamiliarization’ என்ற கலைப்பயன்பாடு பற்றி எடுத்துரைப்பார். இங்கு Defamiliarization என்பது யாதெனில், “கலை என்பது யாதெனில் தன்னுடைய உண்மையான இருத்தலைத் தவிர்த்து புதிதாக அல்லது அறிமுகமில்லாத ஒன்றை மக்களுக்கு புதிய முறையில் எடுத்துக்கூறுவது ஆகும்.” இதுதான் கலை, அந்தக் கலையை பயன்படுத்த ‘Defamiliarization’ என்ற ஒரு உக்தி தேவைப்படுகின்றது. எனவே கலை கூட ஒரு வகை பொய்தான். இதைத்தான் அந்தகாலத்திலே பிளாட்டோ அவர்கள் தன்னுடைய ‘Republic’ என்ற புத்தகத்தில் ‘MIMESIS’ = Imitation (ஒன்றைப் போன்று நடித்தல், போலித்தோற்றம், பார்த்துப் பின்பற்றுதல்…) என்ற ஒரு கோட்பாட்டை பற்றிச் சிறப்பாக எடுத்துக்கூறினார்.
எனவே இந்தப் பொய்யான கலை என்பது மக்களை நல்வழிப்படுத்தவில்லை என்பதே பிளாட்டோ அவர்களின் கருத்து. அதற்கு மாற்றாக அரிஸ்டாட்டில் வேறொரு கோட்பாட்டை முன்வைக்கிறார், நாம் அதைப்பற்றி இங்கே ஆராய வரவில்லை. மாறாகப் பொய்யை பற்றி சிலவாறு சிந்திப்போம். எனவே பொய் என்பது ‘தான் தானாக இல்லாமலிருப்பது’ என்று கூட சொல்லலாம். தன் நிலையை இழந்து வேறொரு நிலையில் இருந்து பேசுவது. தன்னுடைய ‘தன்னை’ தவறவிடுவது. ஆக மொத்தத்தில் சொல்லப்போனால் வேறொரு மனநிலையில் இருத்தல். வேறொரு என்றாலே இங்கு ‘தன்’ என்பதன் இருத்தல் இல்லாமல் இருப்பதே ஆகும். நடக்காதை நடந்ததாகச் சொல்வது, இல்லாததை இருப்பதாகச் சொல்வது, பார்க்காததைப் பார்த்ததாக சொல்வது,… போன்றவற்றை பொய்கள் என்று சொல்லலாம். அதாவது முன்னர் நாம் பார்த்த அந்தக் கிழட்டு கிழவனின் கனவுக்கதை போல. சரி, எதனால் இந்த மனிதன் என்பவன் பொய் சொல்லித்தொலைக்கிறான்? இதனால் அவனுக்கு என்ன பயன் நடக்கப்போகிறது? என்ன தேவைக்காக பொய் சொல்கிறான்? என்ன நன்மை, என்ன கேடு வரப்போகின்றது? சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.

இங்கு நாம் பொய்யை பற்றி உண்மையாகச் சிந்திப்போம். ஒரு மனிதன் எதற்காகப் பொய் சொல்கிறான் என்றால் ‘தப்பித்துக்கொள்ள’ அவ்வளவுதான். எங்கு இருந்து ‘தப்பித்துக்கொள்ள’ அதில் தான் பொய்யை பற்றியான உண்மை அடங்கியுள்ளது. நிஜத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த நிழலான பொய் என்பது மனிதனுக்கு உதவுகின்றது.

“I’m not upset that you lied to me, I’m upset that from now on I can’t believe you.” –Nietzsche
“Experience is the source that is standard not only for art appreciation and enjoyment, but also for artistic creation. Everything is an experience.” –Heidegger.

சில நேரங்களில் பொய் பேசுவதென்பதே சிலருக்கு அன்றாட பழக்கமாகிப்போகின்றது. அவர்கள் எல்லாம் பொய்யையே மீண்டும் மீண்டும் பேசி மெய்யாக்கிக் காட்டக்கூடியவர்கள். அவர்களுக்கு மெய், பொய் என்ற வேறுபாடில்லை. உதாரணத்திற்கு வியாபாரிகள். இவர்கள் மெய் பேசினால் இவர்களுக்கு ஏற்படக்கூடியதென்பதோ வெறும் நஷ்டம் மட்டும்தான். பொய் என்பது மனித வாழ்வில் ஒரு இன்றி அமையா பங்காற்றுகின்றது. உண்மையில் உலக மக்கள் அனைவருமே பொய் பேசுகின்றனர். ஆனால் எதற்காகப் பேசுகின்றனர் என்பதில் சில வேறுபாடுகள் உள்ளது. நன்மையான பொய்கள், தீமையான பொய்கள் என்று இவற்றை இரண்டாகப் பகுக்கலாம். தீமையான பொய் என்பது சிலநேரங்களில் பெருத்த சிக்கல்களை விளைவிக்கக்கூடியது. ஆனால் நன்மையான பொய்கள் யாவையும் தீமைகளை விளைவிக்காமல் வெறும் அன்பை பகிர்வதற்காகவே சொல்லப்படுகின்றது. (எ.கா. ‘நீ அழகாக இருக்கிறாய்’ ‘உன் குரல் குயில் போன்று உள்ளது’)… சரி நாம் இந்தப் பொய்களுக்கான காரணங்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

முதலில்: பயம். இந்தப் பயம் ஒன்று தான் அனைத்துப் பொய்கள், மற்றும் போலிகளுக்கான ஆரம்பம் ஆகும். எனவே இன்றைய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அவன் பொய் சொல்கிறான். அவனுக்குத் தேவையற்ற என்ற ஒன்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நாளை என்ற ஒன்றைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. அது மட்டுமின்றி அந்தப் பொய்யானது அவனை சில நேரங்களில் காத்தருள்கிறது, சிலநேரங்களில் அந்தப் பொய்யே அவனை அழிக்கவும் செய்கிறது. எனவே பொய் சிலநேரங்களில் காக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். இவன் சொல்லும் பொய்யைவிட வேறொருவன் சொல்லும் சிறப்பான பொய், முன்னர் சொன்ன பொய்யனைத் தோற்கடித்து அவனை அதலபாதாளத்தில் தள்ளுகிறது. பொய்க்கு எதிரி பொய்யே. எனவே உலக யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவே மனிதன் பொய் சொல்லுகிறான். அதனால் அவன் மகிழ்ச்சியாக வாழ்வதாக அவன் நினைத்துக்கொள்கிறான். காரணம் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி அவனுக்கு வேண்டியது பாதுகாப்பு. அதனால் பொய் சொல்கிறான். அளவுடன் சொல்லும் பொய் என்பது அவனுக்குப் பாதுகாப்பு, ஆனால் அளவில்லா பொய்கள் என்பது அவனுக்கே ஆப்பு.

இரண்டாவதாக நாம் பார்ப்பது ‘மோதல்’, முரண்பாடு மற்றும் சச்சரவுகள் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக சொல்லும் பொய்கள். இவ்வாறான மோதல் போக்கு என்பது பல நேரங்களில் வாதத்தில் முடியலாம். அவ்வாறாக முடியும் வாதமானது சண்டையில் முடியலாம். எனவே அதை தவிர்ப்பதற்காகத்தான் சிலர் பொய் சொல்கின்றனர். இங்கு நாம் பார்த்தால் ‘ஆமாம் சாமி’ என்று முழக்கமிடும் கும்பலை சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். இது போன்ற பொய் சொல்லும் மக்களுக்கு உடல்வலிமை என்பது மிக மிகக் குறைவே. எனவே தான் அவர்கள் பொய்யுரைக்கின்றனர். அதுமட்டுமின்றி வாதத்திறமை இல்லாத மனிதன் இந்த வகையான பொய்யை சாதாரணமாக மெய் போல பேசி அடுத்தவரை நம்ப வைப்பான். இது அவர்களின் பண்பாக மாறிப்போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை. காரணம் அவன் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

மூன்றாவதாக நாம் பார்ப்பது ‘தண்டனை’ என்ற காரணத்தினால் ஆகும். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளிடம் நாம் இதைக் காணலாம். காரணம் ஒரு சில குழந்தைகள் தவிர இன்ன பிற குழந்தைகள் யாவும் படிப்பில் சற்றே கவனம் குறைந்தவர்களாகத்தான் உள்ளார்கள். எனவே வாத்தியார் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். அதாவது ‘சார் நான் வீட்டுப்பாடங்களை எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். ஆனால் நோட்டு புத்தகத்தை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.’ இதுதான் உலக மகாப்பொய். இதைப் பல மாணவர்கள் சொல்லி நான் கேட்டுள்ளேன். 99 சதவிகிதம் இப்படிச் சொல்பவர் யாவரும் பொய்யரே ஆவர்.

நான்காவதாக ஒதுக்குதல் அல்லது நிராகரித்தல் போன்றவற்றுக்காக பொய் சொல்லுதல். இந்த வகையான பொய்கள் எல்லாம் பெரும் தீமைகளை விளைவிக்காதது ஆகும். இந்த மாதிரியான பொய்களை பேசக்கூடிய மக்கள் பெரும்பாலும் பெரும் பணக்கார மற்றும் பகட்டான வாழ்க்கையை வாழக்கூடிய மக்களே ஆவர். உதாரணத்திற்கு, ‘உன் பையன் என்ன ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குகிறானா? என் பையன் மாதம் மூன்று லட்சம் வரை சம்பாதிக்கிறான் தெரியுமா?’ இப்படியாக சில பல பொய்களை அடுக்கி வைத்தல். அவனுக்கு இவன் சொல்லும் பொய் மெய்யாகத் தோன்றலாம். இவனுக்கு அவன் சொல்லும் பொய் மெய்யாகத் தோன்றலாம். ஆனால் இருவரும் சொல்வதென்பதே பொய்தான். காரணம் வீண் பெருமை அவ்வளவே. சமுதாயத்தில் இருந்து ஓரங்கட்டப்படாமல் இருப்பதற்காகவே இந்தப் பொய்கள். நான் எதற்காகவும் உனக்குக் கீழ் அடிபணிய மாட்டேன் என்ற எண்ணம் கொள்வது. அல்லது, சமுதாயத்தில் ஒரு பெரும் சீமாட்டி போல தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது போன்றவற்றால் தான். அது மட்டுமின்றி இந்த மாதிரியான பொய்கள் என்பது பெரும் தீமைகளை ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவர்களுக்கு வேண்டியது ‘புகழ்’ என்ற ஒன்று தான்.

ஐந்தாவதாக இழப்பு, இழப்பு ஏதும் நேராமலிருக்க சிலர் பொய்களைச் சொல்கின்றனர். சிலர் அந்த நேரத்தில் அந்தப் பொய்யை சொல்லாமல் விட்டு விட்டால் சிலவற்றை இழப்பர், அதனால் பொய் சொல்லக்கூடும். உதாரணமாக: அரசாங்க அதிகாரிகள் சிலர் வீடு வீடாக வந்து குடும்ப நபர்களைப் பற்றி விசாரித்து அரசாங்கத்திற்கு ஒரு தொகுப்பாக சமர்ப்பிப்பார்கள். அப்படியாக விசாரிக்கும் போது குடும்ப நபர்களின் உண்மை நிலவரங்களைப் பற்றி குடும்பத்தார் சொல்வதில்லை. அவன் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தால் இவர்கள் அவன் வெறும் ஐந்தாயிரம் தான் சம்பாதிக்கிறான் என்று சொல்வது உண்மையில் நடக்கிறது. காரணம் அப்படி உண்மை நிலவரங்களைச் சொல்வதினால் அரசு தன் குடும்பத்திற்குக் கொடுக்கும் இலவசங்களை எங்கே நிறு த்திவிடப் போகிறார்களோ என்ற ஒரு வித பயத்தினால்தான்.

வேறு சில காரணங்கள்: இறுதியாக மக்கள் வேறு சில காரணங்களுக்காகப் பொய் சொல்லுகின்றனர். இந்தப் பொய்களானது இருவருக்குள் தனிமையில் ரகசியமாக நடைபெறுவது. இது காதலர்களுக்குள்ளே நடப்பது. உதாரணமாக மேலே சொன்னது போல, ‘நீ அழகாக இருக்கிறாய்’ ‘உன் குரல் குயில் போன்று உள்ளது’ போன்றவற்றைச் சொல்லி தன் துணையை சந்தோஷப்படுத்துவதற்கே ஆகும். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறாகச் சொல்லும் பொய் என்பது உண்மையில் ‘பொய்யே’ என்பது அந்த எதிர்பாலுக்கு முன்னரே தெரியும். இருந்த போதிலும் இந்தப் பொய்களெல்லாம் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளவே தவிர இந்தப் பொய்களால் பெரும் தீமைகள் ஏற்படுவதில்லை. இவ்வாறாகப் பொய் பேசுவதற்குப் பல காரணங்களை நாம் ஆராயலாம்.

“Every sign is a sign for something, but not every sign has ‘meaning’, a ‘sense’ that the sign ‘expresses’.” –Husserl.

இன்றைய தேதியில் இளைஞர்கள் யாவரும் தன்னுடைய எதிர்பாலினத்தவர்களிடம் கூறும் பொய்களைப்பற்றியும் அதற்கான உள்ளார்ந்த அர்த்தங்களைப்பற்றியும் சற்றே ஆராய்வோம். அதாவது தன் வாழ்க்கையில் புதிதாக சந்திக்கும் ஒரு பெண்ணிடம் இவன் எப்படி நடந்து கொள்கிறான், இவன் எப்படி எப்படியெல்லாம் அவளிடம் பொய் சொல்லுகிறான் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நகரத்து இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் மகளிரின் உளவியலை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். அதில் அவர்கள் கைதேர்ந்த வித்தகராகவும் விளங்குகின்றனர். அவர்கள் யாவரும் தன் வாழ்வில் புதிதாக சந்திக்கும் பெண்களிடம் உபயோகப்படுத்துவதற்காகவே சில பல ‘உடனடி’ வாக்கியங்களை தன்னிடம் வைத்துள்ளனர். அவை மேலோட்டமாக ஒரு அர்த்தத்திலும், உள்ளார்ந்து பார்த்ததில் வேறொரு அர்த்தத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இப்போது அவற்றைப்பற்றி பேசுவோம்.

சில நேரங்களில் அவ்வாறான வாக்கியங்கள் யாவும் அந்த எதிர்பாலின மகளிரைச் சற்று நேரத்திற்குச் சந்தோஷமாக வைத்துக்கொண்டாலும், உண்மையில் அவை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதில் பல ஐயங்கள் உண்டு. அந்த வாக்கியங்கள் யாவும் மிகவும் தெளிவாக, சில நேரங்களில் நகைச்சுவையாகவும், அறிவாளித்தனமாகவும், இருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறான வாக்கியங்களை இந்த ஆண்மகனானவன், எந்த இடத்தில் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிகத் தெளிவாகவும், கவனமாகவும் இருப்பான். அதுமட்டுமின்றி அந்த வாக்கியங்கள் யாவும் பல கட்டமைப்புகளை எல்லாம் கடந்து கவனத்துடன் உருவாக்கப்பட்டவை. இன்றைய இளைஞர்கள் யாவும் பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். சில பெண்கள் அந்த இளைஞனின் வெளி மற்றும் உள்நோக்கத்தை அறிவர், சிலர் அறியார்.

1. இளைஞன்: “அன்பே, நீ மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் உள்ளாய்.” இந்த வாக்கியத்தின் உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில், “பெண்ணே உன்னுடைய இளமை ததும்பும் உடலானது என்னை உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கின்றது. அதனால் உன்னுடன் உடனடியாக நான் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
2. இளைஞன்: “நான் உன்னைக் காதலிக்கிறேன்”. அர்த்தம் யாதெனில், “நான் உண்மையில் உன்னை காதலிக்கவெல்லாம் செய்யவில்லை, மாறாக உன் ‘மெய்’ மீது எனக்கு ஒரு வித காம உணர்வு ஏற்படுகின்றது. எனவே உன் ‘மெய்யை’ அடைய நான் இப்போது ‘பொய்யை’ மெய்போல சொல்கிறேன். நீ விரும்பினால் நாம் இருவரும் ‘DATING’ செய்து நம்மைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.” என்பதே ஆகும்.
3. இளைஞன்: “என்னால முடியல” அர்த்தம் யாதெனில், “பெண்ணே நான் சொல்வதை கேள். நான் பல பெண்கள் பின்னால் சுற்றிச் சுற்றி அலைந்து ஓய்ந்துவிட்டேன். இனியும் என்னால் எவள் பின்னாலும் சுற்றித் திரிய முடியாது. எனவே நான் உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
4. இளைஞன்: “நான் உன்னிடம் மேலும் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்.” உண்மையான அர்த்தம் யாதெனில், “பெண்ணே என் சொல்லை கேள். நான் உன்னிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் நான் விரும்பிய நேரமெல்லாம் உன்னிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும்.”
5. இளைஞன்: “நான் உன்னை பிறகு அழைக்கிறேன்.” அர்த்தம் யாதெனில், “இப்போதைக்கு எனக்கு உன் மீது எந்த ஒரு ஆசையும் இல்லை. அப்படித் தோன்றும்போது நானே உன்னை அழைக்கிறேன்.”
6. இளைஞன்: “வாழ்நாளில் உன்னைத்தவிர வேறெந்த பெண்ணையும் இதுவரை நான் கண்டதுமில்லை, கடந்து வந்ததுமில்லை.” அர்த்தம் யாதெனில், “தற்போதைய சூழ்நிலையில் உன்னைத் தவிர்த்து எந்த ஒரு பெண்ணிடமும் எனக்குத் தொடர்பு இல்லை. காரணம் என்னுடைய அதீத காம புத்தியினால் என் காதலை அவர்கள் கேவலப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர்.”
7. இளைஞன்: “நான் உன்னை அதிகம் ‘மிஸ்’ பண்ணுகிறேன்.” அர்த்தம் யாதெனில், “எந்த ஒரு பெண்ணும் என்னை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை.”
ஆண்கள் தான் இப்படிப் பொய் சொல்லுகிறார்கள் என்றால் பெண்களும் அவர்களுக்கு ஏற்றவாறு வேறுமாதிரி எல்லாம் மாறி மாறிப் பொய் சொல்லுகிறார்கள். மன்னிக்கவும் மன்னிக்கவும், உண்மை சொல்லுகிற மாதிரி பொய் சொல்லுகிறார்கள்.

1. பெண்: “எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. நீ தான் எனக்கு அதைப்பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.” உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில், “உண்மையில் அந்தப் பெண்ணுக்கு அதைப்பற்றி நல்லதொரு அறிவு உண்டு. இருப்பினும் இவள் சொல்லும் பொய்க்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால்: அந்த ஒன்றினைப்பற்றி ஆண் என்பவன் என்ன நினைக்கிறான், அவனின் நிலைப்பதென்பது அதன் மீது எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதைப் பற்றி அறியவே இவள் இப்படிச் செய்கிறாள்.” இதில் ஒன்றும் தவறில்லை. ஆணின் பொய்யை விட இவளின் பொய் எவ்வளவோ மேல். அதாவது தீமை தருவதென்பது ஆணின் பொய்யை விட இவளின் பொய் சற்றே சிறிது என்று பொருள் கொள்ளலாம்.
2. பெண்: “நீ மிகவும் உயரியவன் (புத்திசாலி, சிறப்பானவன்,…)” இதன் உள்ளார்ந்த பொருள், “இவனிடம் இருந்து அவளுக்கு எதோ ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது.”
சரி இறுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுவோம். மனிதன் என்பவன் பேசக்கூடிய விலங்கு. எனவே அவன் பொய் பேசுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவனால் பொய் பேசாமல் வாழ்வதென்பதும் சாதாரணமான செயல் அல்ல. உலக மக்கள் அனைவரும் பொய் பேசினர், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். நமக்கே அவர்களைப்பற்றி உண்மையான நிலவரம் தெரியும் வரையில் அவர்கள் பேசும் பொய் என்பது மெய்யாகத்தான் தெரியும். ஒரு திருடன் என்பவன் மாட்டிக்கொள்ளாத வரை அவன் சமூகத்தில் ஒரு வள்ளலாகவும், தயாள மனப்பான்மை கொண்டவனாகவும் தான் தெரிவான். ஒரு மனிதன் தான் செய்யும் செயல் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தமும் பின்னணியும் உள்ளது. அதை உணர அவனை மறுவாசிப்பு செய்தே ஆக வேண்டும்.

ஆகப் பேச்சு/சொல் என்பது மெய்யுடன் தொடர்புடையதாகும். மெய்யால் மட்டும் தான் ஒலி எழுப்பிப் பேச முடியும். அவ்வாறு பேசும் சொல்/பேச்சு உண்மையில் உண்மையா அல்லது பொய்யா என்று எவருக்குத் தெரியும்? எங்குப் பார்த்தாலும் பொய், கடைக்குப்போனால் பொய், வேலை செய்யுமிடத்தில் பொய், மாணவர்களிடத்தில் வீட்டுப்பாடம் செய்தாயா என்று கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பொய், வீட்டுக்குப் போனால் அங்கே ஒரு பொய், சொந்தக்காரனிடம் பல பொய், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு பொய், அரசியல்காரர்களிடம் பல பொய், வானமும் மழை பெய்யாமல் பொய்த்துத் தொலைக்கிறது,… பொய், பொய், பொய், பேசாமல் மனிதன் எவரும் இல்லாத இடத்திற்குச் சென்று அங்கே போய் பொய் பேசாமல் வாழலாம். மனிதர் இல்லாத இடம் என்று ஒன்று உண்டா? இதுவும் ஒரு ‘பொய்’. பொய்யிடமிருந்து மனிதன் தப்பிக்க வழியே இல்லை. காரணம் பொய்தான் அவனை மெய்யாகக் காப்பாற்றுகிறது.

______________________________
இரா.ஞானசேகரன்,
துணைப்பேராசிரியர்,
ஆங்கிலத்துறை,
IFET பொறியியல் கல்லூரி,
விழுப்புரம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *