-றியாஸ் முஹமட்

எங்கக் களிமண் வீடு
மழையினால் கரைந்தோடுகிறது
எங்க மூத்த ராத்தாவின்
கண்ணீர் போல…

சூடு கண்ட பூனையொன்று
எழுந்தோட வழியில்லாது
எங்க வீட்டு அடுப்பங்கரையிலே
படுத்துக் கிடக்கிறது

திண்ணையில் சுருண்டு
படுத்துக் கிடக்கும்
என் தம்பியின் முகத்தில்
தின்ன ஏதாவது கிடைக்குமா என்ற
ஏக்கப் பார்வை எனக்கு புரிகிறது…

தேநீராவது
வைத்துக் கொடுக்கலாம் என்று
எனக்குள் எழுந்த தெம்பு
அங்கே நனைந்து போன
கொள்ளிக் கம்பு கண்டு
கலைந்து போகிறது…

பலத்த காற்றில்
முற்றத்திலிருக்கும்
முருங்கை மரம்
முறிந்து கிடக்கிறது

முரட்டுக் காற்றில்
முறுக்கேறி நின்று போராட
அதுயென்ன முதுரை மரமா?

அடித்து இழுத்துச் செல்லும் வெள்ளத்திற்கு எங்கே தெரியப் போகிறது…
எங்கள் மூன்று நேர உணவும்
இந்த முருங்கை இலைக்கறிதான் என்று!

காண் நீர் வழிந்தோட
வாசற்படி நின்ற வெள்ளம்
எங்கள் குடிசைக்குள்
குடிகொண்டு விட்டது

நோய்வாய்ப்பட்டுப்
படுத்த படுக்கையாக் கிடக்கும்
உம்மாவுக்கு
இனி பாய் விரிக்க இடமில்லை

வெள்ள நிவாரண அறிவிப்பு
எங்கள் ஊர்
பள்ளியில் முழங்க…
சோர்ந்து போன
எங்க  ராத்தாவின் முகத்தில் எத்தனை மின்வெட்டுக்கள்!

விறைத்துப்போன
உம்மாவின் கை
நிவாரண அறிவிப்புக் கேட்டு
சற்று உசும்பியது என்னவோ உண்மைதான்…

பசி மயக்கத்தில்
உறங்கிப் போன தம்பி
பீக்கர் சத்தம் கேட்டு
எழும்பிக் குந்தி விட்டான்
ரொட்டி  தின்னப் போகும்
மகிழ்ச்சி அவன் முகத்தில்

சாய்மனைக் கட்டிலில் இருந்து
ஒரு வேகத்தில் எழும்பிய வாப்பா
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
இனி அவருக்குப் பொறுமையில்லை

மழை என்றும் பாராத வாப்பா
பள்ளியை நோக்கி  நடையைக் கட்ட
மழையோ ஊரை வெளுத்துக் கட்ட

ஊரெல்லாம் வெள்ள ஓட்டம்
பள்ளிக்குள்ளே மக்கள் கூட்டம்

அங்கே மாவுக்காக
மக்களோடு மக்களாக
மல்லுக் கட்டிக்கிடக்குது
பள்ளி நிர்வாகக் கூட்டம்

சுருட்டுவோர் சுருட்டிக் கொண்டு போனதுபோக
மிகுதி மாவாவது கையில் கிடைக்குமா என்ற பெரும்  ஏக்கத்துடன்

கையிலே உரப் பையை
இறுக்கிப் பிடித்தவாறே
பள்ளிச் சுவரில் சாய்ந்து
கிடக்கிறார் எங்கள் வாப்பா!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *