-மலர் சபா

மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

கள்வன் ஒருவனின் செய்தி

முன்னொரு நாளில் கள்வன் ஒருவன்
பகல்பொழுதில் தூதுவன் வேடம் தரித்து
அரண்மனையில் தங்கியிருந்து,
இரவு நேரத்தில் பெண்வேடம் பூண்டு
விளக்கின் இருளிலே பள்ளியறை புகுந்தான்.

தூங்கிக் கொண்டிருந்த இளவரசன் மார்பில் அணிந்த

வெயில்போல ஒளிவீசிக் கொண்டிருந்த வைரமாலையை
அதனின்று வீசிய ஒளியின் வெளிச்சத்தின் துணை கொண்டு,
மின்னலெனச் செயல்பட்டுக் களவாடிச் சென்றான்.

உறக்கத்திலிருந்து விழித்த இளவரசன்,
தன் மாலையைக் காணாது
உடனே தன் வாளை உருவினான்.
கள்வன் இளவரசனின் வாளின் உறையைத்
தன் கையில் பற்றிக் கொண்டு,
வாள்வீச்சு வரும் போதெல்லாம்
உறையை வாளினுள் திணித்துத்
தன்மீது குத்து வராதபடி
கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

அதனால் கோபமுற்ற இளவரசன்
மற்போர் மூலம் அவனைத் தாக்க முயன்றான்.
அங்கே இருந்த மணித்தூண் ஒன்றைத்
தன்னைப் போலக் காட்டிக் கொண்டு
தான் கற்ற களவுநூலின் பயிற்சியால்
அங்கே இருந்து மறைந்து தப்பித்தான்.
அங்ஙனம் மறைந்த அவனை
இன்றுவரை யாராலும் காண முடியவில்லை.
அப்படிக் கண்டவர் உளராயின்
நீங்கள் எனக்குக் காட்டுங்கள்.
இத்தகைய கள்வருக்கு ஒப்பானவர்
உலகில் யாரும் இல்லை..
இங்ஙனம் பொற்கொல்லன் கூறினான்.

காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய செய்தி

அப்போது திருத்தமான வேலைத்
தன் பெரிய கையில் ஏந்திய
காவல் இளைஞன் ஒருவன்
இங்ஙனம் கூறலானான்.

“முன்னொரு நாள் கள்வன் ஒருவன்
அணிகலன்களைத் திருடும் வேட்கையால்
இருள் அடர்ந்த நள்ளிரவு யாமத்தில்
உணவினைத் தேடிப் பசியால் அலையும் புலிபோல்
என் முன்னால் தோன்றினான்.
நிலம் தோண்டும் உளியைக் கையில் கொண்டு
நீல நிற ஆடை உடுத்தியிருந்தான்.

அவனைக் கொல்ல என் கைவாளை உருவிய போது,
உடனே அவ்வாளைப் பறித்துக் கொண்டு மறைந்து விட்டான்.
அதன் பின் அவனை யான் எவ்விடத்தும் காணவில்லை.
இது போன்ற களவரின் செயல் யாராலும் அறிய முடியாதது.

இவனைக் கொல்லாமல் நாம் விட்டுவிட்டால்
அரசனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
எனவே, கொல்லும் கருவிகளைக் கையில் ஏந்தியவர்களே!
நாம் இப்போது என்ன செய்யலாம்என்று
சிந்தித்துச் சொல்லுங்கள்”என்று
பிற காவலரிடம் கூறினான்.

 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 190 – 211

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *