நிர்மலா ராகவன்

நட்பும் அதிகாரமும்

 உனையறிந்தால்

கேள்வி: விளையாடும்போது குழந்தைகள் ஏன் ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? தம் குழந்தைகளுடன் தோழமையுடன் பழகுவது பெற்றோரால் முடிந்த காரியமா?

குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது பிற்காலத்தில் பிறருடன் பழக ஒரு பயிற்சி. வெற்றி, தோல்வி இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தம்மை வீட்டில் நடத்தும் விதத்தில் பிறரை நடத்துவார்கள். ஏழு வயதுவரை சுயநலம் மிகுந்திருக்கும். அதனால், பிறருக்கு விட்டுக்கொடுப்பது அவர்களுக்குக் கைவராத கலை.

கதை: திருமணமாகி பல வருடங்களுக்குப்பின் பிறந்த குழந்தை என்பதால், ஏஞ்சல் என்று பெயரிட்டு, தம் பெண்ணை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் அவளுடைய பெற்றோர். அவள் கேட்ட எதையும் மறுத்ததில்லை.

தான் ஓர் அற்புதமான பிறவி என்று தோன்றிப் போயிருக்கவேண்டும். எட்டு வயதில், தான் பிற சிறுமிகளுடன் விளையாடும்போது, அதே அதிகாரத்தை மற்றவர்களிடம் பிரயோகித்தாள் ஏஞ்சல்.

அவள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ள அவர்கள் மறுக்க, தெருவின் குறுக்கே நின்றுகொண்டு, `நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கேட்காவிட்டால், காரில் அடிபட்டு சாகப்போகிறேன்!’ என்று மிரட்டியிருக்கிறாள். சில குழந்தைகள் பயந்து, வீட்டில் தெரிவித்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதற்குப்பின் அவளுடன் விளையாடத் துணியவில்லை.

`என்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று தனிமையில் அழத்தான் முடிந்தது அவளால். அவளால் மாறவும் முடியவில்லை. ஏனெனில், வீட்டில் தொடர்ந்து ராஜபோகம்தான்.

குழந்தைகள் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டால், பெரியவர்கள் கண்டும் காணாததுமாதிரி இருந்து விட வேண்டும். ஏனெனில், சிறிது நேரத்தில் அதை மறந்து, நட்பாகப் பழகுவார்கள். அதேபோல், குழந்தைகள் விளையாட்டில் தோல்வி அடைந்தால், அது பெற்றோருக்குத் தலைகுனிவு என்பதில்லை. குழந்தைகள் தம் வயதுக்கேற்ப நடக்கும்போது, அதற்காக ஏன் வெட்கப்பட்டு, அவர்கள் நடத்தைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும்? அவர்கள் தவறிழைக்கும்போதெல்லாம் தாமே சிறுமைப்பட்டு விட்டதைப்போல் குறுகி, குழந்தைகளைப் பழிப்பது தகாது.

தம் அறிவையெல்லாம் குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குப் புகட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள்போல, `இப்படி விளையாடு,’ `இந்தச் சாமானை வைத்து விளையாடு,’ என்று தொணதொணப்பது ஒழுக்கம் கற்பிக்கும் வழியில்லை. ஒன்றுமே சொல்லாமல் குழந்தையை அதன் போக்கில் விளையாடவிட்டால் போதும். அதன் சிந்தனைத்திறன், ஆர்வம், தன்னம்பிக்கை எல்லாம் வளரும்.

அப்படியின்றி, தாயின் மறு உரு குழந்தை என்பதுபோல் நடத்தினால், `அம்மா சொற்படி நடந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். வசவும் கிடைக்காது!’ என்று நினைக்கத் தலைப்படுவார்கள் குழந்தைகள்.

அறியாப் பருவத்தில் அடக்கு முறையை அன்பு என்று நினைத்து கீழ்ப்படிந்தவர்கள், வயது ஏறியதும், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கின்றனர். தாம் ஏதோ விதத்தில் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள். பிறர் சொற்படி நடந்தே பழகிவிட்டவர்களுக்கு சுயமாக எதையும் செய்யத் துணிவிருப்பதில்லை. அப்படியே செய்தாலும், அதிகாரமான பாவனை.
தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்ட தாய், தந்தை, அல்லது இருவர்மேலும் தீராத ஆத்திரம் கொள்கிறார்கள். அந்த பரிதாபத்துக்குரியவர்களின் மறைவுக்குப் பின்னரும் ஆத்திரம் என்னவோ மறைவதில்லை.

தான் இன்னும் விவரம் அறியாப்பிள்ளை இல்லை, நல்லது, கெட்டது அறியும் வயதாகிவிட்டது, எதுவானாலும் பொறுப்பு தன்னுடையதுதானே என்றெல்லாம் சிந்தனை போக, பதின்ம வயதினர் பெற்றோரை எதிர்க்கிறார்கள். அறிவோ, அனுபவமோ அதிகம் இல்லாத நண்பர்களுடன் கூடிப் பழகுகிறார்கள்.

`நாம் இவ்வளவு விரட்டும்போதே கெட்ட பழக்கங்களும், கூடா நட்பும் ஏற்பட்டு விடுகின்றன. ஒன்றுமே சொல்லக்கூடாதா?’ என்று சிலர் யோசிக்கலாம்.

`உன் ஃப்ரெண்ட்ஸ்கூடப்போறபோது, எப்படியோ டிரெஸ் பண்ணிக்க. என்கூட வரபோது, அதுவும் கோயிலுக்கோ, கச்சேரிக்கோ வர்றபோது சூடிதார், இல்ல புடவைதான்! பெரியவங்க பேசறபோது குறுக்கே பேசக்கூடாது!’ — இப்படி சற்று விட்டுக்கொடுத்து, ஆனால் அதே சமயம் கண்டிப்பையும் விடாது கூறுங்கள். உரத்த குரலில், அதிகாரமாக இல்லை. சாதாரணமாகப் பேசுவதுபோல்.

அதைக்கூடப் பொறுக்காது, பிள்ளைகள் கத்தினால், ` நான் நல்ல விதமாகச் சொன்னேனே!’ என்று பொறுமையாகச் சுட்டிக் காட்டுங்கள். இருவரும் சேர்ந்து கத்தினாலோ, அல்லது ஒருவர் பயந்து வாயை மூடிக்கொண்டாலோ, மனக்கசப்புதான் மிஞ்சும். இந்த நியதி எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

எந்த வயதுக் குழந்தையானாலும், பொறுமையோடு அணுக வேண்டும்.

கதை: `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று எரிச்சலுடன் அடிக்கடி கூறிவந்தாள் ஒரு தாய். குழந்தை விஷமம் பண்ணினால் தன் பொறுமை மீறி, படபடப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆறு வயதான பின்னரும், `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அடி!’ என்று மகனைப் பழக்கியிருந்தாள். தாய் கவனிக்காதபோது, நெருப்புக்குச்சியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பான் சிறுவன்! அவனுக்கும்தான் பொழுது போக வேண்டாமா?

குழந்தை விழுந்தால் அதன் உயிரே போய்விடும் என்பதுபோல், `ஓடாதே! விழுந்துடுவே!’ என்று பல பெற்றோர் எச்சரிக்கிறார்கள். நடக்கப் பழகும்போது, கீழே விழாதவர்கள் யார்?

அவர்கள் கீழே விழுந்தால், அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுங்கள். தாய் பதட்டப்படும்போதுதான் அது குழந்தைகளையும் தொற்றிக் கொள்கிறது. பரிவுக்காக அதிகமாக நடிப்பார்கள்.

குழந்தைகள் விளையாடப் போகுமுன், `நீ சமர்த்து! சண்டை போடாம விளையாடுவே!’ என்று முன்னெச்சரிக்கையாக, ஆனால் புகழ்ச்சிபோல சொல்வது, `மற்ற குழந்தைகளை அடிக்கக்கூடாது!’ என்ற எதிர்மறையான அறிவுரையைவிட நல்ல பயனளிக்கும்.

அன்பாக இருக்கும் தாயிடம் குழந்தைகள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். (`ஒரு பையன் என்னைக் கேலி செய்தான். நான் அவனை உதைச்சேன்!’) அவனுக்குத் தெரிந்த வகையில் எதிர்த்திருக்கிறான். அது புரிந்து, அவனுடைய மனநிலையில் உங்களை வைத்துப்பாருங்கள். ஒரேயடியாக புத்தி சொல்ல வேண்டாம்.

அதுபோல், `உங்கள் செவிகளுக்கு மட்டும்!’ என்று பகிர்ந்துகொள்வதைப் பிறரிடம் கூறுவது அவனை அவமானப்படுத்துவதாகும்.

உங்கள் அறிவுரையைப் புரிந்துகொள்ளாது மீறி, தவறிழைக்கிறான். மனம் வருந்தி, அதை உங்களிடமும் சொல்கிறான். அப்போது, `நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இப்படி ஆகியிருக்குமா?’ என்று இடித்துரைக்கவும் வேண்டாம்.

அவர்களே குழம்பிக் கொண்டிருக்கும்போது, எதுவும் பேசாது, கேட்டுக்கொள்வதே அன்பின் அடையாளம். நட்பும் வளரும்.
வீட்டில் காட்டும் நட்புதான் வெளியுலகத்திலும்

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *