இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(94)

செண்பக ஜெகதீசன்

குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.  (திருக்குறள்-965: மானம்) 

புதுக் கவிதையில்… 

மலைபோல உயர்ந்த
நிலையில் உள்ளோரும்,
இழிசெயலொன்றைக்
குன்றிமணியளவு செய்தாலும்
நிலை தாழ்ந்திடுவர்
புகழிழந்தே…! 

குறும்பாவில்… 

குன்றிமணியளவு இழிசெயலும்
குறைத்தழிக்கும் புகழை,
மலையளவு உயர்ந்தோர் செய்தால்! 

மரபுக் கவிதையில்… 

மலைபோல் உயர்ந்த மானமுள்ள
  மனிதர் சிலரும் வாழ்வினிலே
நிலையில் திரிந்து சிலநேரம்,
     நோக்கச் சிறிய உருவினிலே
குலையாய்க் காய்த்திடும் குன்றிமணி
  காய்ந்து சிதறும் விதையளவு
விலைபெறா இழிசெயல் செய்தாலும்
  வீழ்ச்சி வாழ்வில் நிரந்தரமே…! 

லிமரைக்கூ… 

மானமுள்ள மனிதர் உயர்வினிலே மலை,
உருவில் சிறிய குன்றிமணியளவு
இழிசெயல் இவர்செய்தால் தாழ்வார் நிலை…! 

கிராமிய பாணியில்… 

மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி
மலபோல் மனுசன் ஒயரணுண்ணா
மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி… 

மலபோல் ஒசந்த மனுசனுமே
சின்னக் குன்னி முத்தளவு
கெட்ட செயலச் செய்தாலும்,
நெலம தாந்து போவாரே
பேருங் கெட்டுப் போயிருமே… 

மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி
மலபோல் மனுசன் ஒயரணுண்ணா
மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி…!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க