மணமகளே உன் மணவறைக்கோலம் – 3

கடவுள் அமைத்து வைத்த மேடை …

— வைதேகி ரமணன்.

எனது பேராசிரியரின் மகள் மனோன்மணி … நல்ல தமிழிலக்கிய நாயகனின் அருமை மகளின் பெயர். தனது அக்கா கணவரின் தம்பியைத் திருமணம் செய்ய விரும்பினார். அவர் ஒரு அக்கவுண்டென்ட். இவளது அப்பவோ, டாக்டர் வேணுமா? இஞ்சினியர் வேணுமா? பேராசிரியர் வேணுமான்னு சொல்லு … ஆனா இவன்தான் வேணுமின்னு கேக்காதே என்றார். பிறகு என்னவெல்லாமோ தில்லு முல்லு செய்து அவரைச் சம்மதிக்க வைத்தோம். ஒரு வழியாகக் கல்யாண நாளும் வந்தது. நாங்களும் போனோம். விருந்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, புளி கூட நாங்க போய்தான் வாங்கினோம்.

திருமணம் சிறப்பாக நடந்தது. இன்றளவில் ஒற்றுமையான தம்பதிகளாக சீரும் சிறப்புமாக வாழ்ந்தபோதும் அவர்களின் ஒரே மகளுக்குத் தப்பான ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவளையும் அவளது ஒரே மகளையும் லண்டனில் உள்ள கணவனிடம் இருந்து பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள். அவள் பிறகு வேறொருவனைத் தேர்ந்தெடுத்து, மேலும் வாழ்க்கை சிக்கலாகி என் தோழி மிகுந்த வருத்தத்தில் இப்போது இருக்கிறார்.

இனி எழுதப் போவது இன்னும் சுவராசியமான திருமணம். அப்ப நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். அந்த அனுபவம்தான் நான் வெளிநாட்டில் ஆசிரியப்பணி செய்ய உதவியாக இருந்தது. அப்போ என் மற்றொரு தோழி நிர்மலா காரைக்குடி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருந்தார். அவரது அம்மாவின் சொந்த தம்பியையே மணம் செய்ய விரும்பினார். ஆனால் அவரது அப்பா ஒத்துக் கொள்ளவே இல்லை. ஒரு வார இறுதியில் நானும் அவரும் அவரது சொந்த ஊருக்குப் போனோம். அது எண்பதுகளில் இறுதியில் ஏதோ ஒரு ஆண்டு. சரியாக நினைவில்லை.

இவரானால் சூழ்நிலை புரியாமல், நிஜமாக ஒரு தோழியின் திருமணத்திற்குப் போவது மாதிரி நிதானமாக உடைகளைப் பெட்டியில் அடுக்கி, நகையெல்லாம் போடுகிறார். அவரது அப்பாவானால் காசு போதுமாம்மா? இன்னும் வேணுமா என்று வெகு அக்கரையாகக் கேட்கிறார். எனக்கோ அதைப்பார்த்து கண்ணீர் பெருகுகிறது, இவர் இப்படியும் தனது அப்பாவுக்கு ஒரு துரோகம் செய்யலாமான்னு… அப்பல்லாம் எனக்குப் பொய் பேசுவது கோழைத்தனம் என்ற அசைக்க முடியாத கருத்து இருந்தது. ஆனால் தோழிக்கோ எந்த வருத்தமும் இல்லை. நாங்கள் திருச்சிக்கு அவளது மாமாவின் நண்பர்களால் கடத்தப் பட்டோம். நெல்லையிலிருந்து மற்றொரு தோழியும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள மூவரும் பாதுகாப்பாக ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டோம். வெளியில் சென்று வர எங்களுக்கு அனுமதியில்லை.

தோழியோ எங்கள் இருவரையும் வெளியில் போய் சில சாமான்களை வாங்கி வரச் சொல்கிறார். அவளது தாய் மாமாவின் நண்பர்களோ குளியல் அரை தவிர வேறெங்கும் போக அனுமதிக்க மறுக்கிறார்கள். மறுநாள் காரில் உத்தமர் கோவில் சென்றோம். திருட்டுக் கல்யாணம் செய்ய அந்த ஊர்தான் உகந்த ஊர் என்று எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். அது போலவே குன்றத்தூரும், திருத்தணியும் திருட்டுக் கல்யாணம் செய்ய உகந்த ஊர்கள் என்று பின்னாளில் கேள்விப்பட்டேன்.

எனக்கோ உள்ளூர நடுக்கம். நான் வேலை பார்க்கும் தனியார் பள்ளியில் அவரது அப்பா புகார் செய்தால் உடனே எனக்கு வேலை போகும். என் பிஹெச்டி கைட் பரிந்துரைத்து கிடைத்த கிடைத்த வேலை அது. ஆய்வுக் கட்டுரையை நான் இன்னமும் டிஃபென்ட் செய்து முடித்திராத நிலையில் கைடும் என்ன செய்வாரோ என்ற பயம் எனக்கு.

திருமணத்தில் ஐயரோ மூன்று சுமங்கலிப் பெண்களைக் கொண்டு வரச் சொல்கிறார். நல்ல வேளையாகத் தோழியின் மாமாவின் நண்பர் ஒருவர் மனைவியுடன் வர, ஒரு சுமங்கலியும் இரண்டு கன்னிப்பெண்களும் சேர மூவராக நின்று, மூங்கில் கழி போன்ற ஒன்றினை நட்டு திருமணச் சடங்குகள் இனிதே முடிந்தது. கல்யாணச் சாப்பாட்டிற்குப் பிறகு எல்லோரும் பிரிய, பெண்ணும் மாப்பிள்ளையும் பெண்ணின் தாய்வீட்டிற்குச் சென்றார்கள்.

அடுத்த வாரமே தோழியின் அப்பா பெரிய ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்தார். என்னையும் வரச் சொல்லி அவரது அப்பா பலமுறை வற்புறுத்தியும் நான் ஏன் போகிறேன்? அவங்கப்பா முகத்தில் முழிக்கவே எனக்கு அவமானமாக இருந்தது. நேருக்கு நேர் எதிர்ப்பதுதான் வீரம் என்ற எண்ணம் எனக்கு இருந்த வயது அது.

கடைசியாக அந்தத் தோழியைப் பார்த்தது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்ற நினைவு. பிள்ளை குட்டிகளுடன் இனிய இல்லறம் பேணினார். ஒருமுறை அவருடன் தங்கி சினிமா பார்த்த நினைவுண்டு. மாமா… மாமா… என்று கணவரிடம் மிகவும் பாசமாக இருந்தார். நன்கு குடும்பம் பராமரிக்கக் கூடிய திறமைகளைப் பெற்றவர். நல்லதொரு இல்லத்தரசியாக இருந்தார்… இப்போது எப்படியோ தெரியலை. ஒருமுறை அவரைப் பார்க்க விருப்பமுண்டு.

________________________

1 thought on “மணமகளே உன் மணவறைக்கோலம் – 3

  1. சினிமாவைப்போல பரபரப்பாக நடந்த திருமணங்களை அறியும்போது வியப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது. இப்போது எழுத்தாளர் அவைகளைத் திரும்பிப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு சிறந்த வாழ்வியல் அனுபவம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் எழுத்தாளருக்கு!!

Leave a Reply

Your email address will not be published.