(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 37

காதலிலே கவிதையுண்டாம்

அவனுக்கு ஒன்றுவிட்ட அத்தையின் மகளை அவன் விரும்பினான். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு அவர்கள் கல்லிடைக்குறிச்சிக்கு வருவார்கள். அவனுடைய வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி அவனுக்கு அத்தையின் வீடு இருந்தது. அந்த வருடமும் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த “மே” மாதத்தில்தான் அவன் P. U .C. பெயிலாகி “டைப்ரைட்டிங்” வகுப்புக்குச் சேர்ந்திருந்தான். அவள் பெயர் சீதாலட்சுமி. சீதா என்று அழைப்பார்கள். அவனது வீட்டிற்கு சீதா வருவாள். அவனுக்கு அக்கா, அம்மா இருவருடனும் அவள் பேசிக்கொண்டிருப்பாள். அவனுடனும் பேசுவாள். அவனுக்கு சீதாவைப் பிடித்திருந்தது. அதை அவளிடமே நேரிடையாகச் சொன்னான். அவள் மெல்லிய புன்னகையைக் காட்டி அவளது வீட்டிற்குள் ஓடிவிட்டாள். அதன் பிறகு அவள் ஊருக்குச் சென்றாலும், அவனுக்குக் கடிதம் எழுதுவாள். அதற்கு அவன் எப்போதாவதுதான் பதில் எழுதுவான். அவளது கடிதம் இலக்கிய மேற்கோள் களோடு அழகான கையெழுத்தில் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

காதலித்தவளையே அவன் 14.06.1985ல் கல்யாணம் செய்து கொண்டான். அதுவும் பெரியோர்கள் ஆசியோடு அவனுடைய கிராமத்திலேயே நடந்தது. அவனுடைய அந்தக் காதல் அனுபவத்தை பின்னாளில் எந்தக் கலப்பும் இன்றி “அந்த அவள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதையாக, நடைச் சித்திரம்போல எழுதினான். அது 8.6.2014 தினமணிக் கதிரில் வெளியானது. அதை அப்படியே இங்கே தருகிறேன்.

“அந்த அவள்”

பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம் என்று அனைத்திலும் தன் திறமையைக் காட்டி மற்றவர்களைத் தன்பக்கம் திருப்பும் சாமர்த்தியம் இருந்தது. அவன் எப்போதும் வேடிக்கையாகவே பேசுவான். ஆற்றிலும், குளத்திலும் மிக அழகாக நீந்துவான். அதனால் அவனை அவனது நண்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு என்னவோ சுமார் ரகம்தான். ஆனால் விளையாட்டு, நீச்சல், உபகாரம் என்று அவன் தனது இருப்பை மிகத் தெளிவாகவே பதித்திருந்தான். அவனுக்கென்று ஒரு சைக்கிள் கிடையாது. நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது இவனும் குரங்குப் பெடல் போட்டே மிக எளிதாகச் சைக்கிளும் கற்றுக் கொண்டு அதிலும் தன்னைச் சூரனாக்கிக் கொண்டான். சைக்கிளை மிக வேகமாக ஓட்டிக் கொண்டே தன் இரு கால்களையும் ஹேண்டில் பாரில் நீட்டி வைத்து சீட்டின் மீது படுத்துக் கொண்டு சாகசம் செய்வான். அதைப் பார்த்து அவனது நண்பர்கள் கைதட்டி “”ஹே” என்று சத்தம் போட்டு உற்சாகப்படுத்துவார்கள். அவளும் அதைப் பார்த்துப் பிரமிப்பாள். அவனுக்கும் அதுதானே வேண்டும்.

ஆனால் அவனது அம்மா, “”வேண்டாம்… இப்படி எல்லாம் ஓட்டாதே” என்று பயத்துடன் கத்துவாள். அவன் வீட்டிற்குத் திரும்பியவுடன் கம்பால் அடிப்பாள் அவனது அம்மா. இவனும் அழுவதுபோல அழுதுவிட்டு ஓடி விடுவான். சிலசமயம் இப்படி இவன் அம்மாவிடம் அடிவாங்கும்பொழுது அவளும் பார்ப்பாள். அது இவனுக்கு வெட்கமாக இருக்கும். ஒருவித “ஸ்டெயிலாக’ச் சிரித்துக்கொண்டே தெருவில் ஓடிவிடுவான். அதை அவனது அம்மா “”என்ன அசட்டுச் சிரிப்பு” என்று கத்துவாள். ஆனால் விடுமுறைக்காக அவன் கிராமத்திற்கு வந்திருக்கும் அவளுக்கு மட்டும் இவனுடைய சாகசம், பேச்சு, ஓட்டம், சாட்டம் எல்லாம் பிடித்திருந்தது.

தினமும் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்து கொண்டோ, நின்றபடியோ அவன் விளையாடுவதை அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். சில நேரங்களில் அவளும் தன் வயதுச் சிறுமியர்களுடன் தெருவில் பாண்டியும் விளையாடுவதை இவனும் பார்த்து ரசித்திருக்கிறான். அவளது நீலப் பாவாடையும், அதற்குத் தோதாகப் போட்டிருக்கும் சட்டையும், தாவணியும் அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளது அழகான அகன்ற கண்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை அவளுக்கருகில் அவன் சென்றபொழுது அந்த அழகான கண்களுக்குள் தன் பிம்பத்தைப் பார்த்து அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளையே பார்த்தபடி இருந்தான். அப்போது தெருவில் ஓடி வந்த கன்றுக்குட்டி அவன் பின்னால் செல்லமாக முட்ட, அவன் அவள்மீது விழுவதுபோலச் சாய்ந்து பக்கத்தில் ஓடிவிட்டான். அவள் சிரித்தாள். கன்றுக்குட்டியைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தாள். அவன் பக்கத்து வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டு தன் தலைமுடியைச் சரிசெய்து கொண்டே அவளைப் பார்த்துச் சிரித்தான். அது காமமில்லை. வயதின் ஈர்ப்பு. காதலின் துவக்கம் என்றுகூட அவன் நினைத்துக் கொண்டான். அவளது பண்பும், கண்களும் அவனைக் கட்டிப் போட்டன.

அவன் கவிதை எழுதுவான். ஒருமுறை அதை அவளிடம் காட்டினான். அப்போது அவளருகில் யாருமே இல்லை. அவள் தனக்குக் கவிதையும் பிடிக்கும், தமிழும் பிடிக்கும் என்றாள். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியுள்ளதாகவும் அவனிடம் சொல்லி, மெலிதாகத் தன் கண்களைச் சிமிட்டினாள்.

உடனே “”என்னைப் பிடிக்குமா?” என்றான் இவன். “”உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்” என்றாள். இவன் மேல் ஆலங்கட்டி மழை பெய்வதுபோலக் குளிர்ந்தான். “உங்களை’ வேண்டாம் “உன்னை’ என்றே என்னைச் சொல் என்றான். அவள் தென்னங்குருத்தாய் மெலிதாகச் சிரித்தாள். அக்கணம் மல்லிகைப்பூ தோட்டத்து வாசம் மொத்தமும் அவன் முகத்தில் வீசியதுபோல ஒரு குஷி அவனுக்குள் வந்தது. அப்போது அவள் தனது அம்மாவின் குரலைக் கேட்டு வீட்டிற்குள் ஓடினாள். அவன் அவள் ஓடிய திசையைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான்.

“டேய்… “டைப் கிளாசு’க்குப் போக வேண்டாமா… இப்படியே எப்போதும் பித்து பிடிச்ச மாதிரி நிக்கணும்… இல்லைன்னா தெருவுலயே சுத்தணும்… முன்னுக்கு வரணும்னு எண்ணமே இல்லையா?” என்று அவனது அம்மா திட்டியபோதுதான் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் தன் வீட்டிற்குள்ளே வேகமாக நடந்து சென்றான். அவளது முகமும், கண்களும், தலைபின்னிய அழகும், பாவாடை தாவணி அழகும் அவனை எங்கே படிக்கவிட்டது? வீட்டிற்குள் வருவான். கொல்லைப் பக்கம் சென்று மரத்தடியில் அமர்ந்துகொண்டு தன் கையில் உள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஆகாசத்தையும், பூமியையும், மரங்களையும், பறவைகளையும் பார்த்துப் பார்த்து ஏதேதோ எழுதுவான். அவளை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொள்வான். அது காதல் உணர்வு என்று அவன் நினைத்துக் கொண்டான். அவளிடம் அவன் ஏதும் சொல்லவில்லை.

அடுத்த நாள் அவள் இவனிடம் பேச வேண்டும் என்ற உணர்விலேயே இருப்பதை இவன் தெரிந்து கொண்டான். அப்போது அவள் தனது வீட்டின் வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவன் தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசல் தெளித்தாள். புள்ளி வைத்த கோலம் போட்டுவிட்டு அவன் நிற்கும் திசையைப் பார்த்துத் தன் கண்களால் பேசினாள். அவன் கவிஞனானான். யோசித்தான். ஏதோ எழுதினான். ஒரு சிறிய தாளில் நான்கு வரிகளில் அவளது கண்களைக் கவிதையாக்கினான். அதை அவள் பார்க்கும்படி அவள் போட்ட கோலத்தில் வீசினான். கோலத்தை அந்தத் தாள் ஏதும் செய்யவில்லை. அந்தத் தாளை அவள் எடுக்கும் முன்பாகக் காற்று வீசியதால் அது பறந்து பறந்து போனது. அவளும் விடாமல் அதைப் பிடிக்க ஓடினாள். ஆனால், அது பறந்துபோய் தெருவோரச் சாக்கடை நீரில் மிதந்தது. இவள் வெட்கமில்லாமல் தன் வலது கையாலேயே அதை மெதுவாக எடுத்து விரித்துப் பார்த்தாள். நீர்பட்டுக் கவிதை சிறிது அழிந்திருந்தது. அதை அவள் அப்படியே எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே ஓடிச்சென்றாள்.

“என்னடி… இந்த ஓட்டம்.. பொம்பளைக்கு இந்த ஓட்டம் ஆகாது” என்று அவளது பாட்டி கத்தியது வெளியில் கேட்டது. அவள் அந்தக் கவிதைத் தாளை மெல்ல நல்ல தண்ணீரினால் கழுவினாள். அதில் அவனைக் கண்டாள். மெல்ல முத்தமிட்டாள். அந்த ஈரமான கவிதைத் தாளைத் தன் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

விடுமுறை நாள்கள் முடிந்து அவள் கிராமத்தைவிட்டு தன் பெற்றோருடன் நகரத்திற்குப் புறப்பட்டாள். அன்றுதான் இவனுக்கு பி.யூ.சி. தேர்வின் முடிவு செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. இவன் பெயில். அவன் கவலைப்படவில்லை. தன் தலைமுடியை மிக அழகாக “நிறைகுடம்’ சிவாஜியைப்போல அழகு செய்து கொண்டிருந்தான். மஞ்சள் பனியனால் தன் கழுத்து மூடியபடியும், ஒரு நாலு முழ வேட்டியால் தன்னை மன்மதனாக்கிக் கொண்டும் தன் வீட்டு வாசலில் வந்து நின்றான். அப்பொழுதுதான் அவள் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளது பாட்டிக்குக் கை அசைப்பதுபோல அவனுக்குக் கை அசைத்தாள். “”ஹய் ஹய்” என்ற வண்டிக்காரனின் சத்தத்துடனும், மாடுகளின் கழுத்து மணி அசைவுடனும் வண்டி புகை வண்டி நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளது “கண்களையே’ கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி தெருவின் கடைசிக்குப் போய்விட்டது.

“போதும் தூங்கினது… எழுந்திருங்க… தூக்கத்துல தனக்குத் தானே சிரிச்சுண்டு… இந்த வயசுல “ரிட்டையர்டு’ ஆனப்புறமும் என்ன கனவு அப்படி… எழுந்திருங்க… பால் வாங்கிண்டு வாங்க…” என்று அவனது மனைவி போட்ட கூச்சலில் அவன் படபடக்க எழுந்துகொண்டு மனைவியின் கண்களைப் பார்த்தான். கோபமும், கடுகடுப்பும் அதில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் “அந்த அவளது கண்களையே’ நினைத்துக்கொண்டு மெல்ல எழுந்து குளியலறையை நோக்கி நடந்தான்.

௦௦௦௦ ௦௦௦௦ ௦௦௦௦

மதராஸ் பட்டணத்திற்குப் பயணம்

“மே” மாதம் 1973ம் வருடம் அவனுக்குப் பெற்றோர் அவனை வேலைக்காக “திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்” ரயில் வண்டியில் “மெட்ராஸ்”சுக்கு (இப்பொழுது சென்னை) அவனுக்குத் தாய்மாமா சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு நல்வாழ்த்துக்களுடன் அனுப்பி வைத்தனர். அப்பொழுது திருநெல்வேலியில் இருந்து “மெட்ராஸ்”சுக்கு ரயில் கட்டணம் பதினெட்டு ரூபாய்கள். அதற்கே பெரும்பாடு. அவனுக்கு, ரயில் கட்டணம் போகக் கையில் ஐம்பது ரூபாய்கள் தந்திருந்தனர் பெற்றோர்.

அவன் ஊருக்குப் புறப்படும் பொழுது பெற்றோரை வணங்கினான். அப்பொழுது அவனைக் கட்டிக்கொண்டு அவனுக்கு அம்மா சொன்னதுதான் அவனை இன்றுவரை சரியான பாதையில் செல்லும்படியாக வைத்திருக்கிறது.

” நீ…மெட்ராசுக்குப் போய் நல்ல பேரோடிரு..யார்கூடவும் சண்டை போடாதே..நிறையப் படி…எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம இரு. அப்படி ஏதேனும் கெட்ட பழக்கம் வந்தா என்ன அம்மான்னு கூப்பிடாதே”

அவனை வழியனுப்ப திருநெல்வேலிக்கு அவனுக்கு அப்பாவும், அக்கா பாலாவும் வந்திருந்தனர். அவன் ஒரு மஞ்சள் நிறத்தில் பனியனும், நாலுமுழ வேட்டியும் அணிந்திருந்தான். சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்ட பொழுது ரயில் அவனையும், அவனது எதிர்காலத்தையும் சேர்த்துச் சுமந்து கொண்டு மதராஸ் பட்டினத்தை நோக்கிப் புறப்பட்டது. அவனுக்கு அக்கா, “திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்” ரயில் தன் கண்களை விட்டு மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தாள். அவனும் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். ரயில் மதுரைக்கு இரவில் வந்தது. மதுரை ரயில் நிலையத்தில் அவனுக்கு ஒன்றுவிட்ட “ரமணிச் சித்தப்பா” வந்திருந்தார். ரமணிச் சித்தப்பாவுக்கு அவன்மீது எப்பொழுதுமே தனி அன்புண்டு. அவனுக்கு பிஸ்கட், பழங்கள் வாங்கித் தந்து,” நீ ..நன்னா முன்னுக்கு வருவாய் கண்ணா” என்று ஆசிதந்தார். மதுரையை விட்டு ரயில் புறப்பட்டது.

அம்மா தந்த சாப்பாடுப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு உருண்டை தயிர் சாதத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அதன் ஒவ்வொரு பருக்கையிலும் அவனுக்கு அம்மா அதில் சுவையாக இருப்பது தெரிந்தது. அவன் கண்களில் நீர்கோர்த்துக் கொண்டது. அம்மா சொன்னது அவன் நெஞ்சுள் மிக ஆழமாகப் பதிந்திருந்தது. இரவில் ரயிலில் அவன் தூங்கவே இல்லை. காலையில் எட்டரை மணிக்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் அவன் இறங்கினான். அவனை அழைத்துச் செல்ல அவனுக்கு மாமா சிவராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவன் இதற்கு முன்பு விடுமுறைக்கு மதராஸ் வந்திருந்தாலும், இப்பொழுது பார்க்கும் மதராஸ் பட்டணம் அவனை அன்போடு அன்று வரவேற்றது.

05.11.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.