இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (172)

— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மடல் மூலம் பேச விழைகிறேன்.

“என்னப்பா, உன்னைக் கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் பார்க்கவே முடியலையே!“ என்கிறார் ஒருவர்.

“சும்மா போப்பா, நேரமேயில்லையே! வேலை, வீட்டில அது இது என்னு சும்மா ஒரே பிஸியப்பா” என்கிறார் மற்றவர்.

இது சமீபத்தில் எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோவிலில் நான் செவிமடுத்த சிறிய சம்பாஷணை.

புலம்பெயர் மக்கள் மத்தியில் கோவில்கள், அதுவும் இந்துக் கோவில்கள் வகிக்கும் பங்கு அதீதமானது. இது எதனால்?

அவர்கள் ஆன்மீக ஞானம் அதிகமாகக் கொண்டவர்களா? இல்லை, அன்னை நாட்டை விட்டு அதிக தூரம் விலகி இருக்கிறோம் எனும் ஆதங்கமா? இல்லை, ஆலயம் செல்வது என்பது ஒரு இந்துவின் கடமை எனும் சராசரிக் கடமையாக எண்ணுகிறார்களா?

ஓ! நானும் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் ஒருவன் தானோ?

ஆன்மீகம் எனும் சொல்லைத் தொடர்ந்து “ஆத்திகம்” “நாத்திகம்” என்பன அதன் பின்னே வருவது வழக்கம். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள் எனும் பட்டியல் எங்கும் உள்ளது போல, புலம் பெயர்ந்த மக்களிடையேயும் அதே விகிதாசாரத்தில் காணப்படுகிறது என்பதுவே யதார்த்தம்.

ஏனோ பல சமயங்களில் இறை நம்பிக்கையையும், மூட நம்பிக்கையையும் இணைத்துப் பார்ப்பது பலரிடையே சகஜமாக நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் தான் என்ன? இறை நம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் தாம் கொண்ட நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளும் உதாரணங்கள் மூட நம்பிக்கையின் ஆதாரம் கொண்டவையாக இருப்பதா? அன்றி எம்மிடையே நிலவி வரும் இதிகாச, புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளவற்றை விஞ்ஞானரீதியில் ஆராயத் தலைப்பட்டதால் ஏற்பட்டதொரு நிலைமையா?

பல கேள்விகள் என் நெஞ்சைத் துருவ ஆரம்பித்தன. இவற்றிற்கு விடை காண விழையும் முன்னால் ஆத்திகம், நாத்திகம் எனும் இந்தத் தராசுத் தட்டுகளில் என் எடை எங்கேயுள்ளது எனும் கேள்வி எழுகிறது. இறை நம்பிக்கை என்பது மதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது எனது நிலைப்பாடு. ஆன்மீகம் என்பது விஞ்ஞானம் போன்று அனைத்துக்கும், அனைவர்க்கும் பொதுவான ஞானமேயன்றி அதற்கு மதச்சாயம் பூச விழைவது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

எனது வாலிப வயதில் அந்நாளைய நாகரீகம் என்று எண்ணி வாலிப முறுக்கோடு என்னை ஒரு நாத்திகனாகக் காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொண்டவன் நான். 18 வயதிலேயே தாய்நாட்டின் சூழலை விட்டு வெளியேறியவன். எனக்கு ராஜாவும் நானே மந்திரியும் நானே என்பதுவே சுதந்திரம் என்று சுதந்திரத்தின் வரைவிலக்கணத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு வேளையது.

வாழ்வின் ஒவ்வொரு வளைவுகளும் நான் எதிர்பாராத திருப்பங்களால் என்னை எடுத்துச் சென்றபோது, என்மீது விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் என்னை வாழ்வில் செப்பனிடத் தொடங்கியதால் எனது உள்ளத்தில் ஏதோ எனக்கு அப்பாற்பட்டது ஒன்றின் முக்கியத்துவம் புரிந்தது. நாம் எங்கே பிறக்கிறோம் என்பதும், யாருக்கு பிள்ளையாகப் பிறக்கிறோம் என்பதும் நாம் வகுத்ததல்ல.

மதம் என்பது மக்களைப் பிரிக்கும் ஒரு சக்தியாக தன்னலமிக்கவர்களால் உருவகிக்கப்பட்டு விட்டது என்பதே என் கருத்து. நான் ஒரு இந்துவாகப் பிறக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அதே சமயம் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக வளர்ந்தேன், இன்று இந்துவாக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எதுவித தயக்கமுமில்லை. ஏனெனில் “இந்து” என்பதை மதமாகப் பார்த்து அதனை மதவெறிக்கு அத்திவாரமாக்குவோர்களைச் சார்ந்தவனில்லை நான்.

ஒரு நல்ல “இந்து” ஒரு நல்ல “மனிதன்” என்பதே எனது மதத்தின் வரைவிலக்கணம். நான் எனது மதத்தின் மீது கொண்டுள்ள மதிப்பைப் போலவே அடுத்தவர்களும் அவர்கள் மதத்தை மதிப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வளர்வதே மத நல்லிணக்கத்திற்கு அடையாளம். இந்து மதத்தின் சாரங்களை அறிவதில் எனக்குள்ள ஆர்வம் போன்றே மற்றைய மதங்களின் நல்ல கோட்பாடுகளை அறிந்து கொள்வதிலும் அதனை உள்வாங்கிக் கொள்வதிலும் நான் மிக்க ஈடுபாடு கொண்டவன்.

“இதிகாசம்”, “புராணம்” என்பன நிஜமானவையோ அன்றி புனையப்பட்டவையோ என்பதை ஆராய்வதை விட, அது எவ்வகையாயினும் அதில் கூறப்பட்டுள்ள நல்ல மனிதராக வாழ்வதற்குரிய கோட்பாடுகளை வகுத்தவர்களை எண்ணி வியப்பதிலேயே எனக்கு ஆர்வம். இன்றைய புலம்பெயர் சூழலில் பல்லினங்கள் சேர்ந்து வாழும் ஒரி பல்லினக் கலாச்சார சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒன்றே குலம்பொதுவாகப் பலர் கூடியிருக்கும் ஒரு நிகழ்விலே மத சம்பந்தமான கருத்துக்களை முன்வைப்பதே மிகவும் சங்கடமான ஒரு நிலை. எங்கே அது ஓர் தேவையற்ற மத சம்பந்தமான கடுமையான விவாதமாக மாறி விடுமோ எனும் அச்சமே இதற்குக் காரணம். இந்நிலையில் தான் அன்று அந்த இந்துக் கோவிலிலே அவ்விருவர்களுக்கிடையில் நடந்த அந்த சம்பாஷணையை நோக்க விழைகிறேன். கோவிலுக்குச் செல்வது என்பது ஒரு கலாச்சாரக் கட்டாயமாக்கப் பட்டு விட்டதோ? கோவிலுக்குச் செல்லாத அன்றி, செல்ல முடியாத ஒருவன் தன் மனதையே கோவிலாக்கி மனசாட்சியைத் தெய்வமாக்கி வணங்குவதில் தவறேதும் இருக்கிறதா?

நாம் படிக்கும் நூல்களில் ஆண்டவன் தனக்கு விலையுயர்ந்த காணிக்கைகள் தேவையில்லை, ஒரு மலரைக் கையிலெடுத்து தூய உள்ளத்துடன் தன்னை வணங்கினாலே போதுமானது என்று கூறுவதாக அறிகிறோம். “ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்று கவியரசரின் பாடல் வரிகள் கூறுகின்றன.

ஒரு ஊரைச் சென்றடைவதற்குப் பல பாதைகள் இருப்பதைப் போல எம்முள் அனைத்தையும் கடந்து உள்ளே இருக்கும் கடவுளைக் காண்பதற்கு வெவ்வேறு பாதைகளே வெவ்வேறு மதங்களாகும். இவற்றிலே ஒன்று மற்றதை விடச் சிறந்தது என்று விரோத மனப்பான்மையை வளர்ப்பவர்கள் சுயநலவாதிகள். காலச்சார அடையாளங்கள், கலாச்சார விழுமியங்களைக் காத்துக் கொள்வதற்கான வழி சுயநலமிக்க குழுநிலைவாதிகளாக மாறுவதில்லை, அனைத்தையும் ஏற்று சகிப்புத்தன்மை கொண்ட பொதுநலவாதிகளாக வாழ்வதே!

“நான் ஒரு இந்து” என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சரியான கோஷம், “ஒன்றே குலம் என்று சொல்லுவோம் , ஒருவனே தேவன் என்று கூறுவோம்” என்பதுவே.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.